திருஅருட்பிரகாச வள்ளலார்
 

ன்ம நேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்க, இவ்வுலகமெல்லாம் உண்மை நெறி பெற்றிட, எவருக்கும் ஆண்டவர் ஒருவரே, எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்கு சிவம் ஒன்றே, அவரே அருட்பெருஞ்ஜோதி என்று கூறி மற்றும், அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்திடை செலுத்த இவ்வுலகில் இறைவனால் வருவுவிக்க வுற்ற அருளாளர் தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் சிதம்பரம் இராமலிங்க அடிகள். அவர்கள் 1823 ஆம் ஆண்டு October மாதம் 5 ஆம் நாள் மாலை 5:30 மணி அளவில் இராமையா பிள்ளை சின்னம்மையார் என்ற தம்பதியாருக்கு ஐந்தாவது மகவாக இறைவனால் வருவிக்க உற்றார். சிறுவயதில் இருந்தே இறைவனால் ஆட்கொள்ளப்பெற்று பல நூற்றுக் கணக்கான அருட்பாடல்களை அருளினார்கள். அவ்வாறு நமக்காக அருளிய பாடல்களே திருவருட்பா என்று போற்றப் படுகிறது.

 

 

 


திருவருட்பா அனைத்தும் அடங்கிய ஒர் அருள் ஞானக்களஞ்சியம். திருவருட்பா என்பது உண்மை உரைக்க வந்த இறை நூலாகும். இதில் பற்பல சாதன ரகசியங்களும், சிவ ரகசியங்களையும், சித்துகளையும் உள்ளடக்கி பாடப்பெற்றுள்ளது. எந்த ஒரு சித்த புருஷரும் வெளிப்டையாக பகிரங்கமாக எடுத்துரைக்காத விசயங்களை எல்லாம் தெள்ளம் தெளிவாக எடுத்துரைக்கப் பெற்ற ஒரே ஒரு நூல் என்று சொன்னால் அதுவே திருவருட்பாவாகும்.

நாம் யார்? நம் நிலை எப்படிப் பட்டது? கடவுள் நிலை என்ன? நாம் கடவுளை விரைந்து எவ்வாறு அடைவது? எங்கனம் அழியாத தேகத்தை பெற்று நித்திய வாழ்வு பெறலாம் என்று ஆராய்ந்து அதனை அடையும் வழியினை கண்டறிந்தார்கள் வள்ளலார். தான் கண்டு அடைந்த அந்த வழியை நாம் எல்லாரும் பெறவே வள்ளல் பெருமானால் எற்படுதப்பட்டதே சமரச சுத்த சன்மார்க்கமாகும். பல கோடி யுகங்கள் கழிந்தாலும், வேதங்கள் பல கற்றலும் மற்றும் எவ்வகையாலும் கண்டுகொள்ள முடியாத ண்டவரை மிகவும் சுலபமாக அனைவரும் அடைதற்பொருட்டு வள்ளல் பெருமானால் எற்படுதப்பட்டதே சமரச சுத்த சன்மார்க்கமாகும். இவ்வாறு சன்மார்க்க வழி புகுந்தால் நாம் பெறவேண்டிய அனைத்து ஆன்ம லாபமும் பெறலாம், அது மட்டுமல்ல ஏன் இந்த ஊன் உடம்பும் ஒளி உடம்பாகி ஒளிரும் என்கின்றார் ஒரு பாடலில்,

பொத்திய மலப்பிணிப் புழுக்கு ரம்பைதான் சித்தியல் சுத்தசன் மார்க்கச் சேர்ப்பினால்
நித்திய மாகியே நிகழும் என்பது சத்தியம் சத்தியம் சகத்து ளீர்களே

என்று மலப்பிணியால் பொத்திய இந்த உடம்பை என்று என்றும் உள்ளவாறு அழியாத உடம்பைப் பெற்று நித்தயமாகலாம் என்று வள்ளலார் கூறுகிறார். அன்று தொட்டு இன்று வரை மனிதன் பல வழிகளிலே தெய்வங்களை தேடினான். பல தெய்வங்களை வணங்கிணான், வணங்கிக் கொண்டும் ள்ளான். இப்படி மனிதன் பல பல தெய்வங்களை கூறியும் சேர்கதி பல வற்றில் புகுந்தும் முடிவில் தெய்வத்தின் நிலையறியாது மாண்டுபோனன். இப்படி இருட்டுலகில் மடிந்து கொண்டுருக்கும் மனிதனை ஒளி நெறி பெற்றிட வள்ளல் பெருமானால் எற்படுத்தியதே சுத்த சன்மார்க்கம் ஆகும். அவர் ஒரு பாடலில் பாடுகிறார்,

தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும் சேர்கதி பலபல செப்புகின் றாரும்
பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும் பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்
மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார் மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்
எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்

ஆக மனிதனை துன்பத்தில் இருந்து மீட்டு ஜீவகாருண்ய வழி நடத்தி மனிதனுக்கு தெய்வநிலையை அடையச் செய்விப்பதே சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய நோக்குமாகும். சாதியிலே மதங்களிலே பேதமுற்று அலைந்து வீணே அழியும் இந்த உலகத்தவர்களுக்கு ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை என்னும் சாதனத்தை கொண்டு வந்தார்கள், ஒரு படலில் பாடுகிறார்கள்,

 

சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே

ஆக பேதமற்று, கலவரங்கள் இல்லாத அமைதியான இயற்கை ஒட்டிய வாழ்வு பெறவும், என்றென்றும் தடைபடாது அழியாத மெய்வாழ்வு பெறவும் நமக்கு வள்ளல் பெருமான் வழிவகுத்துக் கொடுத்துள்ளார்கள். ஆதாவது, நமது ஆன்மாவின் கண் பல திரைகளால் முடப்பட்டுருப்பதாகவும் அவற்றை நீக்கி கொண்டு, ஏமசித்தி, சாகக்கல்வி, தத்துவநிக்கிரஹம் செய்தல், கடவுள் நிலையறிந்து அம்மயமாதல் ஆகிய நான்கு புருஷார்த்தங்களை நாம் பெறுமாறு நமக்கு எடுத்து அருளியுள்ளார்கள். இவ்வாறு முடிந்த முடவாகிய சிவானந்த அனுபவமே தவிர மற்றுவேரில்லை என்றும் அவ்வனுபத்தை எல்லோரும் தன்னைப் போல் பெற ஒரு மார்க்கத்தை கண்டார்கள், அது தான் சமரச சுத்த சன்மார்க்கம் என்னும் ஓளி நெறி மார்க்கமாகும்.

ஆக,சுத்த சன்மார்கத்தின் முக்கிய சாதனம் என்னவென்றால்: எல்லா ஜீவர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்து அன்பும் முக்கியமானவை. ஆதலால் காலந் தாழ்க்காது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போல் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம். இந்தக் குணம் வந்தவன் எவனோ அவன்தான் இறந்தவரை எழுப்புகிறவன்: அவனே ஆணடவனு மாவான்.


வாடிய பயிரைக் கண்ட போதல்லாம் வாடினேன் என்ற வள்ளல் பெருமான், நாம் உண்மையையும் புனிதமும் பெறும் பொருட்டு அருளியதே திருவருட்பாவாகும். திருவருட்பா பாடல்கள் முழுவதும் உள்ளத்தை உருக்குவன. ஆழ்ந்த கருத்துகளை கொண்டன. ஊன் உருக்கி உள்ளெளி பெருக்கும். இத்திருவருட்பாவில் அமைந்துள்ள 6000 மேற்பட்ட பாடல்களை இசைத்தட்டு mp3 வடிவமாக கடந்த 2004 ஆண்டு முதல் திருவருட்பா இசையமுதம் திட்டதின் மூலமாக Vallalar.Org செயல்படுத்தி கொண்டு வருகின்றது.

 

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை
நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்
வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே

தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்
தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்

ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே

ஆக இந்த பாடலில் தான் பெற்ற இந்த சுகத்தினை , இந்த ஆன்ம லாபத்தை, அருட்பெருஞ்ஜோதியை உலகில் உள்ள எல்லா உயிர்களும் பெற வேண்டும் என்பதே வள்ளல் பெருமானுடைய ஆசையும் வேண்டுதலுமாகும்.  ஆதலால் நாமும் நன்முயற்சியுடன் இருந்து பெற வேண்டிய புருஷார்த்தங்களை காலம் தாழ்த்தாது விரைந்து பெறுவோமாக!


VallalarOrg Sanmarga Foundation - All the contents and mp3 songs on this website are copyrighted and belongs to respective owners. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the audio or documents without our permission is prohibited.
First Launched on Apr-16-1998. Last updated:Aug.04.2013