ஆராய்ச்சிக் குறிப்புகள் - உரைநடை நூல்கள் - தவத்திரு. ஊரன் அடிகள்
 
ஆராய்ச்சிக் குறிப்புகள்

1. உரைநடை நூல்கள்

1. மனு முறைகண்ட வாசகம்

இது மனுச்சோழர் முறை செய்த வரலாற்றைக் கூறுவது. பெரிய புராணத்திலுள்ள மனு நீதி கண்ட புராணத்தை முதல்நூலாகக் கொண்டு அதன் வழி நூலாக அடிகள் இதனை எழுதியருளினார். இதனை எழுதும்படி அடிகளைக் கேட்டுக் கொண்டவர்கள் சென்னை சாஸ்திர விளக்க சங்கத்தார். எழுதப் பெற்ற காலம் அடிகள் இளம் போதில் சென்னையில் உறைந்த காலம். சென்னையிலிருந்த காலத்திலேயே 1854 வருடம் ஜூன் மாதம் இது அச்சிடப் பெற்றது. அம்முதற் பதிப்பின் முகப்பேடு வருமாறு:

உ - சிவமயம் - திருச்சிற்றம்பலம் - மனுமுறை கண்ட வாசகம் - இஃது பலருக்குமுப யோகமாகச் சாஸ்திர
விளக்கச் சங்கத்தார் கேட்டுக் கொண்ட படி சிதம்பரம் இராமலிங்கப் பிள்ளை யவர்களால் இயற்றப்பட்டு
பாளையம் சுப்பராயச் செட்டியா ரவர்களால் மேற்படி சங்கத்தா ரவர்களது வித்தியானந்த அச்சுக் கூடத்தில்
பதிப்பிக்கப் பட்டது. ஆனந்த வருடம் ஆனி மாதம்.

2. ஜீவகாருண்ய ஒழுக்கம்

அடிகளின் சமரச சுத்த சன்மார்க்கத்தை இரண்டே சொற்களிற் கூற வேண்டுமானால், 1. ஜீவகாருணியம், 2. மரணமிலாப் பெருவாழ்வு என்று சொல்லலாம். ஜீவகாருண்யம் சன்மார்க்கத்தின் முதல். மரணமிலாப் பெருவாழ்வு சன்மார்க்கத்தின் முடிபு. ஜீவகாருண்யம் ஆன்ம நேயம். மரணமிலாப் பெருவாழ்வு ஆன்ம லாபம். ஆன்மநேயமாகிய ஜீவகாருண்ய ஒழுக்கத்தால் ஆன்மலாபமாகிய மரணமிலாப் பெருவாழ்வு சாத்தியம். ஜீவகாருண்யமாகிய சாதனத்தைக் கொண்டு மரணமிலாப் பெருவாழ்வாகிய சாத்தியத்தை அடைய வேண்டும். இதுவே அடிகளின் முடிந்த முடிபான கொள்கை. ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு என்பது அடிகள் வாக்கு; அடிகள் எழுத்து. ஜீவகாருண்யத்தை அடிகள் இருவகையிற் கூறுவர். 1. அற்றார் அழி பசி தீர்த்தல். 2. புலால் மறுத்தல். இவ்விரண்டையும் வற்புறுத்தி எழுதியருளப் பெற்றதே "ஜீவகாருண்ய ஒழுக்கம்" என்னும் நூல்.

1867-ல் வடலூரில் சத்திய தருமசாலையைத் தொடங்குவதற்கு முன்னமேயே, கருங்குழியில் உறைந்த காலத்திலேயே, அடிகள் இந்நூலை எழுதத் தொடங்கினார். 23-5-1867 பிரபவ வருடம் வைகாசி மாதம் 11தேதி வியாழக்கிழமையன்று வடலூரில் நிகழ்ந்த தருமசாலைத் தொடக்க விழாவில் இந்நூல் எழுதப்பெற்றிருந்த வரையிற் படித்து விளக்கப்பெற்றது. 1869ஆம் ஆண்டிலும் இந்நூல் எழுதி முற்றுப் பெறவில்லை என்பது இறுக்கம் இரத்தின முதலியார், சாலை சண்முகம் பிள்ளைக்கு எழுதிய இரு கடிதங்களால் (483; 485) அறியப்படுகிறது.

ஜீவகாருண்ய ஒழுக்கத்தின் முதற்பதிப்பு அடிகள் சித்தி பெற்ற ஐந்தாண்டுகளுக்குப்பின் 1879ல் புதுச்சேரியில் பு.பெ. கிருஷ்ணசாமி நாயகரால் அச்சிடப் பெற்றது. பூல்ஸ்கேப் (Fools cap) 1/2 அளவில் 58 பக்கங்களைக் கொண்ட அதன் முகப்பேடு வருமாறு:

உ - அருட்பெருஞ்சோதி - திருவருட் பிரகாச வள்ள லாரென்னும் சிதம்பரம் இராமலிங்க பிள்ளை யவர்கள்
திருவாய் மலர்ந் தருளிய சீவகாருண்ய ஒழுக்கம் - இஃது கூடலூர் டிஸ்ட்ரீக்ட் இஸ்கூல் இனிஸ்பெக்டர்
சீ. இரங்கசாமி பிள்ளை புதுவைக் கடுத்த வைத்திகுப்பம் மே. அப்பாசாமி நாயகர் இவர்கள் கேட்டுக்
கொள்ள கலவை முத்தியாலு செட்டியார் குமாரர் சங்கர செட்டியார் முயற்சியில் பு.பெ. கிருஷ்ணசாமி
நாயகரால் சபா. மாணிக்க பிள்ளை அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது.

ஜீவகாருண்ய ஒழுக்கம் மூன்று பிரிவுகளாக உள்ளது. மூன்றாவது பிரிவு முற்றுப் பெறவில்லை. 1879 முதற்பதிப்பிலும், ஆறாந்திருமுறை முதற்பதிப்பிலும் (1885), பொன்னேரி சுந்தம் பிள்ளை பதிப்பித்த ஆறு திருமுறைகளுஞ் சேர்ந்த முதற் பதிப்பிலும் (1892), பிருங்கிமாநகரம் இராமசாமி முதலியாரின் திருவருட்பாப் பதிப்பிலும் (1896), ஜீவகாருண்ய ஒழுக்கத்தின் முதற்பிரிவு மட்டுமே உள்ளது. ச.மு. கந்தசாமி பிள்ளையின் திருவருட்பாப் பதிப்பில் (1924) முதலிரண்டு பிரிவுகளும் மூன்றாம் பிரிவின் ஒரு பகுதியும் உள்ளன. மூன்றாம் பிரிவு இப்போது வழங்கும் வரை உள்ளது, ஆ. பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பிலேயேயாகும். "சுவாமிகள் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை மிக்க விரிவாக ஏழுபிரிவில் எழுதி உபதேசித்ததாகக் கேள்வி. அது முற்றிலும் உண்மையானால் மூன்றாவது பிரிவின் தொடர்ச்சியும் மற்ற நான்கு பிரிவுகளும் இதுகாறும் கிடைக்காதிருப்பது தமிழ்நாட்டின் தவக்குறையே என்றே கொண்டு வருந்திப் பிரார்த்திக்க வேண்டியிருக்கிறது" என்று ஆ.பா. அடிக்குறிப்பெழுதியுள்ளார்.

முதல் அச்சிலும், ஆறாந்திருமுறை முதற்பதிப்பிலும் பொ.சு., ச.மு.க. பதிப்புகளிலும் நூலின் தலைப்பு 'சுத்த சன்மார்க்கத்தின் முதற் சாதனமாகிய ஜீவகாருண்ய ஒழுக்கம்' எனக் காணப்படுகிறது. பி.இரா. பதிப்பில் 'சுத்த சன்மார்க்க விளக்கத்தின் முதற்பிரிவாகிய ஜீவகாருண்ய ஒழுக்கம்' என்றும், ஆ.பா பதிப்பில் 'சன்மார்க்க விளக்கத்தின் முதற்பிரிவாகிய ஜீவகாருண்ய ஒழுக்கம்' என்றும் காணப்படுகிறது. 'சன்மார்க்க விளக்கம்' அடிகள் எழுதத் திட்டமிட்டிருந்த நூல்களுள் ஒன்று. அது எழுதாது தவிர்ந்ததுபோலும். அல்லது அதன் முதற்பிரிவாக ஜீவகாருண்ய ஒழுக்கம் அருளப் பெற்றது போலும். 'சன்மார்க்க விளக்கத்தின் முதற் பிரிவாகிய' என்பதினும், 'சுத்த சன்மார்க்கத்தின் முதற் சாதனமாகிய' என்பதே பொருத்தமாகத் தோன்றுதலின் முதல் அச்சிலும் ஆறாந் திருமுறை முதற்பதிப்பிலும் ச.மு.க. பதிப்பிலும் காணப்பெறும் அத்தலைப்பே இங்கு இப்பதிப்பிற் கொள்ளப் பெற்றது.

2. வியாக்கியானங்கள்

1. ஒழிவிலொடுக்கப் பாயிரவிருத்தி

ஒழிவிலொடுக்கம் காழிக் கண்ணுடைய வள்ளலாரால் அருளப்பெற்ற சிறந்த ஞானநூல். அதற்கு உரை செய்தவர் திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள். அதனை முதன் முதலிற் பதிப்பித்தவர் நம் அடிகள். நூலின் சிறப்புப் பாயிரச் செய்யுளுக்கு ஒரு விருத்தியுரையும், சிதம்பர சுவாமிகளின் உரையிற் காணும் அருஞ்சொற்கள் சிலவற்றிற்குப் பொருளும், நூலின் ஆங்காங்கே சில அடிக்குறிப்புகளும். நூலிறுதியில் அமைத்துக்கொளல் என்ற தலைப்பிற் சில குறிப்புகளும் எழுதி 1851-ல் ஒழிவிலொடுக்கத்தைச் சிதம்பர சுவாமிகள் உரையுடன் அடிகள் பதிப்பித்தருளினார்.

2. தொண்டமண்டல சதகம் - நூற்பெயர் இலக்கணம்;
வழிபடு கடவுள் வணக்கப்பாட்டுரை

அடிகள் பதிப்பித்த நூல்களுள் இரண்டாவது தொண்டமண்டல சதகம். நூலின் பெயராகிய தொண்டமண்டல சதகம் என்பதற்கு இலக்கணமும் நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலுக்கு உரையும் எழுதித் தொண்டமண்டல சதகத்தை அடிகள் 1855-ல் பதிப்பித்தார். தொண்ட மண்டலம் என்பது சரியா தொண்டைமண்டலம் என்பது சரியா என்ற வாதம் அக்காலத்தில் சென்னையிலிருந்த புலவர் சிலரிடையே எழுந்தது. 'டகரமா' அல்லது டகர ஐகாரமா' என்ற அவ்வாதம் இறுதியில் அடிகளிடம் வந்து சேர்ந்தது. அடிகள் இரு கூற்றையும் ஆராய்ந்து இலக்கணம், இலக்கியம், வரலாறு, வழக்கு, கல்வெட்டு ஆகிய சான்றுகளுடன் நூற்பெயரிலக்கணத்தை வரைந்து தொண்டமண்டலம் என்பதே சரியென்று நிறுவினார். நூற்பெயரிலக்கணத்தின் ஈற்றில் அடிகள் திருவலிதாயம் திருமுல்லைவாயிற் கல்வெட்டுகளைச் சான்று காட்டி முடிக்கிறார். அக்காலத்தில் தமிழ்ப்புலவர்கள் கல்வெட்டுகளைப் பற்றிக் கருதியதேயில்லை. சாசன ஆராய்ச்சி (Epigraphy) யும் தொல்பொருளாராய்ச்சி (Archaeology) யும் மேலைநாட்டரறிஞர்கள் நமக்களித்தவை. தமிழ்ப் புலவர்களெல்லாம் கல்வெட்டுகளில் கவனஞ் செலுத்தாத காலத்தில் அடிகள் கல்வெட்டுகளை ஆராய்ந்திருப்பது அடிகளின் பல்கலைப் புலமைக்குச் சான்றாகும். அடிகள் தமிழ்நாட்டின் முதற் கல்வெட்டாராய்ச்சியாளர் ஆவார்.

3. உலகெலாம் என்னும் மெய்ம்மொழிப்பொருள் விளக்கம்

மெய்ம்மொழிப் பொருள் விளக்கம் என்று ஒரு நூலை அடிகள் செய்யக் கருதியிருந்தனரென்பது இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த இரு திருமுகங்களால் அறியப்பெறுகிறது.
திருவருட்பாப் பாடலொன்றில் மூன்று மெய்ம்மொழிப் பொருள்கள் குறிக்கப்பெறுகின்றன.
திருவளர் திருஅம் பலத்திலே அந்நாள்
செப்பிய மெய்ம்மொழிப் பொருளும்
உருவளர் திருமந் திரத்திரு முறையால்
உணர்த்திய மெய்ம்மொழிப் பொருளும்
கருவளர் அடியேன் உளத்திலே நின்று
காட்டிய மெய்ம்மொழிப் பொருளும்
மருவிஎன் உளத்தே நம்பிநான் இருக்கும்
வண்ணமும் திருவுளம் அறியும் 3527

திருவளர் திருஅம்பலத்திலே அந்நாள் செப்பிய மெய்ம்மொழிப் பொருள் சேக்கிழார்க்கு உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுத்தது. திருமந்திரத் திருமுறையால் உணர்த்திய மெய்ம்மொழிப் பொருளும் அடிகளின் உளத்திலே நின்று காட்டிய மெய்ம்மொழிப் பொருளும் இன்னதெனத் தெரியவில்லை. இம்மூன்று மெய்ம்மொழிப் பொருள்களையும் விளக்கியே அடிகள் 'மெய்ம்மொழிப்பொருள் விளக்க'த்தை எழுதத் திட்டமிட்டிருக்கக் கூடும். முதல் மெய்ம்மொழிப் பொருள் விளக்கம் எழுதப் பெற்றது. ஏனைய இரு மெய்ம்மொழிப் பொருள்களின் விளக்கங்கள் எழுதப் பெறாது தவிர்ந்தன போலும். உலகெலாம் என்னும் மெய்ம்மொழிப்பொருள் விளக்கம் "திருவருட்பா உட்கிடை" என்ற தலைப்புடன் ஆறாந் திருமுறை முதற் பதிப்பில் முதன் முதலாக அச்சாயிற்று. பொ.சு. பதிப்பிலும் திருவருட்பா உட்கிடை என்பதே தலைப்பு. பி.இரா. பதிப்பில் மெய்ம்மொழிப் பொருள் விளக்கம் என்று மாறிற்று. ச.மு.க. பதிப்பில் உலகெலாம் என்னும் மெய்ம்மொழிப்பொருள் விளக்கம் என்ற தலைப்பைப் பெற்றது.

4. "தமிழ்" என்னும் சொல்லுக்கிட்ட உரை

அடிகள் சென்னையிலுறைந்த காலத்தில் சங்கராசாரிய சுவாமிகளுடன் அளவளாவ நேரிட்ட போது அச்சுவாமிகள் சமஸ்கிருதமே "மாத்ரு பாஷை" எனக் கூறிச் சமஸ்கிருதத்தைச் சிறப்பித்துப் பேசினராம். அப்படியாயின் "தமிழ் பித்ரு பாஷை" என அடிகள் கூறித் தமிழின் ஞானச் சிறப்பை விளக்கி ஓர் உரையுஞ் செய்து சங்கராசாரியர்க்குத் தமிழருமையை விளக்கினராம். அடிகள் செய்த அவ்வுரை "உண்மை விளக்கம் அல்லது சித்தாந்த தீபிகை" என்னும் திங்களிதழில் 21-8-1897-ல் "தமிழ்-ஸ்ரீ ராமலிங்க சுவாமிகளால் எழுதப்பட்டது" என்னும் தலைப்போடு முதன் முத்லாக அச்சாயிற்று. பின்னர் சைவ சித்தாந்த மகாசமாஜத்தின் சித்தாந்தம் - தொகுதி 2 பகுதி 7-1913 ஜுன் இதழில் "தமிழ் - இராமலிங்க சுவாமி யெழுதியது" எனச் சித்தாந்த தீபிகையிலிருந்து எடுத்து அச்சிடப் பெற்றது. திருவருட்பாப் பதிப்பில் முதன் முதலாகச் சேர்ந்தது ச.மு.க. பதிப்பிலாம்.

3. மருத்துவக் குறிப்புகள்

1. மூலிகை குண அட்டவணை
இதற்கு மூலம் ஆ. சபாபதி சிவாசாரியரின் நோட்டுப் புத்தகமாகும். இது முதன் முதலில் ச.மு.க திருவருட்பாப் பதிப்பில் (1924) அச்சாயிற்று.

2. சஞ்சீவி மூலிகைகள்
அடிகளின் உபதேசங்களைக் கேட்ட அன்பர்கள் எழுதி வைத்துள்ள குறிப்புகளிற் காண்பன. 'வேறு குறிப்பு' என்பது வேறொருவரால் எழுதப் பெற்றது.

3. மருத்துவக் குறிப்புகள்
இவையும் அன்பர்கள் எழுதி வைத்துள்ள குறிப்புகளே. இவற்றுள் முதல் நான்கும் ஆ.பா. பதிப்பிற் காண்பவை. 5,6-வது குறிப்புகள் சென்னை சன்மார்க்க சங்கப் பதிப்பிற் காண்பன.

4. உபதேசங்கள்

1. நித்திய கரும விதி

1893-ல் ச.மு. கந்தசாமி பிள்ளை, ஆ. சபாபதி சிவாசாரியரின் விருப்பத்தின் வண்ணம் ஜீவகாருண்ய ஒழுக்கத்தைச் சிறு நூலாக வெளியிட்ட போது அதனுடன் நித்திய கரும விதியையும் இன்னும் சில உபதேசக் குறிப்புகளையும் சேர்த்துப் பதிப்பித்திருக்கிறார். அஃதே இதன் முதன் முதல் அச்சு ஆகலாம். திருவருட்பாப் பதிப்பில் முதன் முதலாகச் சேர்க்கப் பெற்றது. பிருங்கி மாநகரம் இராமசாமி முதலியார் பதிப்பிலாம் (1896).

2. உபதேசக் குறிப்புகள்

இவை அடிகளின் உபதேசங்களைக் கேட்ட அன்பர்கள் எழுதி வைத்த குறிப்புகள். இவற்றுட் சில 1893-ல் ச.மு.க. பதிப்பித்ததாக முற்கூறிய ஜீவகாருண்ய ஒழுக்கம் கையடக்கப் பதிப்பில் அச்சாகியுள்ளன. சில பி.இரா. திருவருட்பாப் பதிப்பிற் சேர்ந்துள்ளன. அவற்றுடன் மற்றும் சில ச.மு.க. திருவருட்பாப் பதிப்பிற் சேர்ந்துள்ளன. இப்போது வழங்குமளவு முழுமையாக வெளிவந்தது ஆ.பா பதிப்பிலேயேயாகும். சன்மார்க்க சங்க விவகாரத் திருவார்த்தைக் குறிப்புகள், சன்மார்க்க சங்க விவகாரத் திருவார்த்தைச் சிறு குறிப்புகள், சுத்த சன்மார்க்க சங்க விவகாரத் திருவார்த்தைத் தனிக்குறிப்புகள் என மூன்று தொகுதியாக இவற்றை ஆ.பா. அச்சிட்டிருக்கிறார். அடிகளது உபதேசங்களைக் கேட்ட அன்பர் சிலர் நீண்ட குறிப்புகளாகக் குறித்து வைத்தனர். இவை (பெருங்) குறிப்புகள். வேறு சிலர் அவற்றையே துண்டு துண்டாகச் சிறு குறிப்புகளாகக் குறித்து வைத்தனர். இவை சிறுகுறிப்புகள். ஒரு விஷயமே ஒருவரால் பெருங்குறிப்பாகவும் மற்றொருவரால் சிறு குறிப்புகளாகவும் குறித்து வைக்கப் பெற்றுள்ளது. ஒரு பெருங்குறிப்பிற் காணப் பெறும் விஷயமே பல சிறுகுறிப்புகளாகக் குறித்து வைக்கப் பெற்றுள்ளது. பல சிறு குறிப்புகளிற் காணும் விஷயங்கள் ஒரு பெருங்குறிப்பில் அடங்குகின்றன. பெருங்குறிப்பில் காணப்பெறும் ஒரு விஷயம் சிறுகுறிப்பில் அதைவிடத் தெளிவாக உள்ளது. சுருங்கச் சொல்லி விளங்கவைத்தற்கு உதாரணமாகப் பல சிறுகுறிப்புகள் திகழ்கின்றன. சிறு குறிப்புகள், அவை பெருங் குறிப்புகளில் அடங்கி விடுகின்றன என்ற காரணத்திற்காகப் புறக்கணிக்க இயலாதவாறுள்ளன. பெருங்குறிப்புகளிலும் சிறுகுறிப்புகளிலும் சேராதவற்றைத் தனிக்குறிப்புகள் என்ற தலைப்பில் ஆ.பா. அச்சிட்டிருக்கிறார்.

யாம் இப்பதிப்பில் (பெருங்) குறிப்புகள், சிறு குறிப்புகள், தனிக்குறிப்புகள் ஆகிய மூன்றையுமே ஒன்றுபடுத்தி யுள்ளோம். பெருங்குறிப்பைத் தொடர்ந்தே அதைச் சேர்ந்த - அதனுள் அடங்கும் - சிறு குறிப்புகளை வைத்துள்ளோம். பெருங்குறிப்புகளுக்கு எண்கொடுத்து அவற்றின் தலைப்பைப் பெரிய எழுத்தில் அச்சிட்டுள்ளோம். சிறு குறிப்புகளுக்கு எண் கொடாது பெருங்குறிப்பின் கீழேயே வைத்து அவற்றின் தலைப்பைச் சிறிய எழுத்தில் அச்சிட்டுள்ளோம். தனிக் குறிப்புகளை, அவை சிறுகுறிப்புகளிற் சேராத போது பெருங்குறிப்புப் போன்றே எண் கொடுத்துப் பெரிய எழுத்தில் தலைப்பிட்டுள்ளோம். இவ்வாறு மூவகைக் குறிப்புகளையும் யாம் ஒன்றுபடுத்தியிருப்பது. ஒரு விஷயத்தைப் பற்றிய பல குறிப்புகளையும் ஒரே இடத்திற் காண்பதற்கு ஏதுவாகும். பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பிற் பல இடங்களிற் காணப் பெறுவது இப்பதிப்பில் ஒரே இடத்திற் காணப்பெறும்.

எடுத்துக்காட்டாக ஒன்றிரண்டைக் காட்டுவோம். ஆ.பா. பதிப்பில் நினைப்பு மறைப்பு என்ற தலைப்பில் பெருங்குறிப்பு ஒன்றும் சிறு குறிப்புகள் இரண்டும் முறையே 27,67,81- ஆம் பக்கங்களில் உள்ளன. இப்பதிப்பில் இவை மூன்றும் ஒரே பக்கத்திற் காணப்படும் பக்கம் - 289. காவி வேஷ்டியைப் பற்றி மூன்று குறிப்புகள் ஆ.பா. பதிப்பில் மூன்று இடங்களில் உள்ளன. பக்கம் 22,61,64 அவை மூன்றும் இப்பதிப்பில் ஒரே இடத்தில் காணப்பெறும். பிண்ட இலக்கணம் என்பது ஒரு பெருங்குறிப்பு. இப் பெருங்குறிப்பிலுள்ள விஷயங்களே பிண்டநியாயம், ஜீவஸ்தானம், சுவர்க்க நரகம், ஆன்மாவும் ஜீவனும், பூர்வோத்தரம், பெருங்கோயில், ஆதி அநாதி, காட்சி என்ற எட்டுச் சிறுகுறிப்புகளாகவும் உள்ளன. இவ்வெட்டுச் சிறு குறிப்புகளும் ஆ.பா. பதிப்பில் வெவ்வேறு இடங்களில் - பக்கங்களில் - உள்ளன. அங்கும் இங்கும் புரட்டிப் பார்க்கவேண்டும். இப்பதிப்பில் இவை அனைத்தும் ஒரே இடத்தில் வைக்கப்பெற்றுள்ளன. பிண்ட இலக்கணம் என்னும் பெருங்குறிப்பின் கீழேயே பிண்ட நியாயம் முதலிய சிறு குறிப்புகள் எட்டும் வைக்கப் பெற்றுள்ளன. பாலகிருஷ்ணபிள்ளை பதிப்பில் (பெருங்) குறிப்புகள் 58, சிறுகுறிப்புகள் 144, தனிக்குறிப்புகள் 50, ஆக 252. இவற்றுள் சஞ்சீவி மூலிகைகளைக் குறித்தவற்றை யாம் மருத்துவக் குறிப்புகளிற் சேர்த்துள்ளோம். ஏனைய அனைத்தையும் 133 பெருந் தலைப்புகளில் நிரவியுள்ளோம்.இப்பதிப்பில் காணப்படும் கற்பமும் பிரளயமும் என்னும் குறிப்பும் ஆ.பா. பதிப்பிற் காணாதது. சென்னை சன்மார்க்க சங்கப் பதிப்பிற் காண்பது.

3. சுப்பிரமணியம்.

4. அருள்நெறி

அடிகளின் உபதேசத்தைக் கேட்ட அன்பர் ஒருவர் எழுதிவைத்த குறிப்பு.

5. திருவருண் மெய்ம்மொழி
சித்திவளாகத்திற் செய்த உபதேசம், கேட்ட அன்பர் ஒருவரின் குறிப்பு.

6. பேருபதேசம்
சித்திவளாகத் திருமாளிகையில் 22-10-1873-ல் முதன் முதலாகச் சன்மார்க்கக் கொடியைக் கட்டி அடிகள் செய்த உபதேசம். அடிகளின் முடிந்த முடிவான கொள்கைகள் கருத்துகள் பலவற்றை இதனுட் காணலாம்.

5. திருமுகங்கள்

இளமையில் சென்னையில் உறைந்த அடிகள் தம் முப்பந்தைந்தாம் அகவையில் 1858-ல் சென்னை வாழ்வை நீத்துச் சிதம்பரம் பக்கம் வந்தார். 1858 முதல் 1867-ல் வடலூரில் சத்திய தருமசாலையைத் தொடங்கும் வரை கருங்குழியில் உறைந்தார். 1867-ல் வடலூரில் சாலை தொடங்கியது முதல் 1870 வரை சாலையே அடிகள் உறைவிடமாயிற்று. 1870-ல் அடிகள் மேட்டுக்குப்பம் நோக்கினார். சென்னையை நீத்த 1858 முதல், மேட்டுக்குப்பம் சென்ற 1870 வரை, அதாவது கருங்குழியிலும் வடலூரிலும் இருந்த காலங்களில் அடிகள் அன்பர் சிலர்க்குத் திருமுகங்கள் வரைந்தனர். 1870-ல் மேட்டுக்குப்பம் சென்ற பின் யாருக்கும் திருமுகங்கள் வரைந்ததாகத் தெரியவில்லை. தாமே கடிதம் எழுதல், தமக்கு வரும் கடிதங்களுக்கு விடை எழுதுதல் ஆகிய விவகாரங்களுங் கடந்த மேல்நிலையில் அடிகள் இருந்தனராதலின் மேட்டுக்குப்ப நாள்களில் நேரிடைக் கடிதத் தொடர்பில்லை. இந்தக் காலங்களில் அடிகளிடமிருந்து கடிதங்கள் இல்லையெனினும் கட்டளைகள் பிறந்தன. அறிவிப்புகள் வெளியாயின.

அடிகள் எழுதியருளிய கடிதங்கள் பெரும்பாலும் டெம்மி 1/2 அளவு நான்கு பக்கங்கள் உள்ள கடிதத் தாள்களில் (லட்டர் பேப்பரில்) எழுதப் பெற்றவை. சில கடிதங்கள் சற்றுச் சிறிய அளவுள்ள கடிதத் தாள்கள். நான்கு பக்கங்களில் மூன்று பக்கம் கடிதம். நான்காம் பக்கம் முகவரி, தபால் தலை, தபால் முத்திரைகள், கடிதங்களையே மடித்து அதன்மேல் முகவரி எழுதித் தபாலில் சேர்க்கப்பெற்றுள்ளன. உறையில் (கவரில்) வைத்து அனுப்பும் வழக்கம் பிற்காலத்திலேயே ஏற்பட்டது. தபாலில் அனுப்பிய எல்லாக் கடிதங்களும் அரை அணா தபால் தலை (Half Anna Postage Stamp) ஒட்டியே அனுப்பப்பெற்றுள்ளன. நான்காம் பக்கம் முகவரி எழுதி, தபால் தலை ஒட்டப் பெறாத சில கடிதங்கள் நேரில் அன்பர் மூலம் அனுப்பப்பெற்றவை. தபாலில் சென்றவை யன்று.

1. இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்தவை

அடிகள் இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த 37 திருமுகங்களை முதன் முதலாகத் தமது பதிப்பில் ஆ.பா. வெளியிட்டிருக்கிறார். இப்பதிப்பில் 38 திருமுகங்கள் இடம்பெறுகின்றன. ஆ.பா பதிப்பில் திருமுகக் குறிப்புகள் என்ற தலைப்பில் முதற் குறிப்பாக உள்ள "பற்ற வேண்டியவை" என்பது இரத்தின முதலியார்க்கு வரைந்த ஒரு திருமுகத்தின் பகுதி. அத்திருமுகம் முழுவதையும் இடையில் (இடையில் சில வரிகள் நீங்கலாக) ஏழாவது திருமுகமாகச் "சாதுக்கள் சார்பு" என்ற தலைப்புடன் அதற்குரிய இடத்தில் சேர்த்திருப்பதால் இப்பதிப்பில் இஇ. முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள் 38 ஆயின. 38 திருமுகங்களுக்கும் அடிகள் கைப்பட எழுதியருளிய மூலங்களே ஆதாரம். இவையனைத்தையும் யாம் பார்த்திருக்கிறோம். பார்த்ததன் பயனாக முற்பதிப்பின் எழுத்துப் பிழைகள் சில திருந்தின. குறைகள் சில நிரம்பின. 6,8,24,29 ஆகிய நான்கு திருமுகங்களின், அடிகள் திருக்கரஞ் சாத்திய மூலவடிவம் இப்பதிப்பில் அச்சிடப் பெற்றுள்ளது.

2. புதுவை வேலு முதலியார்க்கு வரைந்தவை

ஆறு திருமுகங்கள் ஆ.பா. பதிப்பில் முதன் முதலாக வெளியாயின,. ஆதாரம் அடிகள் திருக்கரத்தா லெழுதிய மூலங்களே. ஏழாவது திருமுகமாக இப்பதிப்பில் அச்சிடப் பெற்றிருப்பது ஆ.பா. பதிப்பிற் காணாதது; சென்னை சன்மார்க்க சங்கப் பதிப்பிற் காண்பது. முதல் திருமுகத்தின் மூலத்தை மட்டும் யாம் பார்த்திருக்கிறோம்.

3. மற்றைய அன்பர்களுக்கு வரைந்தவை

திருநறுங்குன்றம் ராமசாமி நயினார், பொன்னுசாமி பிள்ளை ஆடூர் சபாபதி சிவாசாரியர் ஆகிய மூவர்க்கு வரைந்த முதல் மூன்று திருமுகங்களுக்கும் அடிகள் கைப்பட எழுதப் பெற்ற மூலங்களே ஆதாரம். இவற்றை யாம் பார்த்திருக்கிறோம்.

பொன்னுசாமி பிள்ளைக்கு வரைந்த திருமுகம் யோசனைக் குறிப்பும் மருத்துவக் குறிப்பும் கொண்டதாக உள்ளது. அடிகட்குப் பொன்னுசாமி பிள்ளை எழுதிய கடிதத்துடன் நாகவல்லியும் சம்பீர பலங்களும் அனுப்பியிருக்கிறார். நாகவல்லி - வெற்றிலை, சம்பீர பலம் - எலுமிச்சம்பழம். கடிதத்துடன் மங்கலப் பொருள்களான இவற்றை மரியாதைக்காக அனுப்புவது இவருக்கு வழக்கமென்பது, 'இவ்விடம் கடிதம் அனுப்புந்தோறும் இந்தப் பிரகாரம் அனுப்புவது பிரயாசம் என்று என் மனம் என்னை வருத்துகின்றது' என்று அடிகள் பதிலெழுதுவதால் தெரிகிறது. பொன்னுசாமிபிள்ளைக்கும் அடிகட்கும் கடிதத் தொடர்பு அதிகம் இருந்திருக்கிறது. எனினும் அடிகள் வரைந்த ஒரு திருமுகமே வெளிப்பட்டிருக்கிறது. வெளிப்படாத பலவோ சிலவோ வெளிப்படத் திருவருள் துணைசெய்ய வேண்டும்.

இலக்கண நுண்மாண் இயல் என்னும் நான்காம் திருமுகத்தின் வரலாறு:

கருங்குழியில் அடிகள் உறைந்த வீட்டிலிருந்த புருஷோத்தம ரெட்டியார் ஒரு சமயம் வீட்டில் கோபித்துக் கொண்டு வெளியேறி விட்டார் அவர் மதுரைக்குச் சென்று திருஞானசம்பந்தர் மடத்தில் திருச்சிற்றம்பல ஞானிகளுடன் இருப்பதாகக் கேள்வியுற்ற குடும்பத்தினர் மதுரை மடத்திற்குக் கடிதமொன்றெழுதி அவரை வருவித்துதவுமாறு அடிகளை வேண்டினர். அடிகளும் மடத்துச் சுவாமிகளுக்கு ஒரு திருமுகம் அனுப்பினார். அத்திருமுகத்தை மடத்திலிருந்த சிலர் பார்க்க நேரிட்டது. கணக்கிலவதானி தேவி பட்டினம் முத்துசாமி பிள்ளை என்பவர் அப்போது அங்கிருந்தார். அடிகளின் திருமுகத்தைப் பார்த்த அவர், 'வள்ளலாரைப் பெரிய வித்துவான்' என்று சொல்கிறார்களே, அவருடைய படிப்பு இலக்கணமில்லாப் படிப்பு' என்றார். திருச்சிற்றம்பல ஞானிகள் அதனைக் கேட்டு வருந்தியவராய், வள்ளற் பெருமான் விவகரிக்குங் காலத்தில் சிதறிய இலக்கணத்தில் கோடியிலொரு கூறே இவ்வுலகில் வழங்குகின்றது என்றார். அப்படியாயின் இலக்கணச் சிறப்புடன் வள்ளலாரிடமிருந்து ஒரு கடிதம் வருவித்து அனைவருக்கும் காட்டுமாறு மடத்துச் சுவாமிகள் கூறினார். ஞானிகள் அடிகட்கு ஒரு கடிதமெழுதி, அவ்விடத்திய செய்திகளை இலக்கண வகையால் தனக்குத் தெரிவிக்க வேண்டுமென விண்ணப்பித்தார். தொழுவூர் வேலாயுத முதலியாரும் ச. ஆறுமுகமுதலியாரும் குடியிருந்த வீட்டின் முகப்பில் அடிகள் இருந்தபோது அந்தக் கடிதம் வந்தது. கடிதத்தைக் கண்ட அடிகள் 'பிச்' என்று சொல்லி எறிந்து விட்டார் உடனிருந்த தொழுவூர் வேலாயுத முதலியாரும் மற்ற அன்பர்களும் இலக்கணப் புலமையுடன் திருமுகம் எழுதியனுப்ப வேண்டுமென்று வற்புறுத்தினர். அடிகளும் மறுக்க வொட்டாது இரண்டொரு வரிகள் மட்டும் எழுதி வேலாயுதனாரிடம் கொடுத்துக் கடிதத்தை முடித்தனுப்பக் கட்டளையிட்டார். அவ்வாறே வேலாயுதனார் இவ்விலக்கணத் திருமுகத்தை எழுதிய னுப்பினார்.

ச.மு.க. பிரபந்தத் திரட்டில் (1923) உள்ள இராமலிங்க சுவாமிகள் சரித்திரக் குறிப்புகளிலும், திருவருட்பா, ச.மு.க. பதிப்பில் (1924) உள்ள இராமலிங்க சுவாமிகள் சரித்திரக் குறிப்புகளிலும் இதன் தலைப்பு 'இலக்கணவியநடை வழக்கப்பாடுறுத்துவிக்கும் பத்திரிகை' என்றிருக்கிறது. இதன் கீழுள்ள கையொப்பம்' இங்ஙனம், 'நங்கோச் சோழன் வீரமணிச்சூடியார் திருவாணைப்படிக்கு அடிமை தொழுவூர் வேலாயுதம்' என்றிருக்கிறது. 'பார்வதிபுரம், சுக்கில வருடம் துலாரவி**' என இடமும் காலமும் குறிக்கப்பட்டுள்ளன. ஆ.பா. வியாக்கியானப்பகுதி முதற் பதிப்பிலும் (1931-ல் உரைப்பகுதி என்ற பெயருடன் வெளிவந்தது) மேற்குறித்தவாறே தலைப்பு, கையெழுத்து, இடம், காலம் ஆகியவற்றைப் பதிப்பித்திருக்கிறார். வியாக்கியானப் பகுதி இரண்டு (1935) மூன்றாம் (1961) பதிப்புகளில் தலைப்பு 'இலக்கணப் பத்திரிகை' என்று காணப்படுகிறது. கையெழுத்து 'இங்ஙனம் நங்காச் சோழன் வீரமணி சூடியார் திருவாணைப்படிக்கு' என்று மட்டுமே இருக்கிறது. 'அடிமை தொழுவூர் வேலாயுதம்' என்பது இல்லை. இடம், காலம், குறிப்புகளும் இல்லை. இவ்விலக்கணத் திருமுகத்தின் வரலாறு அடியில் கண்டபடி ஓர் பிரதியில் காணப்படுகிறது' என ஆ. பாலகிருஷ்ண பிள்ளை குறிப்பிடுகிறார்.

மதுரை திருஞானசம்பந்த சுவாமிகள் மடத்தில் திருவருட்பிரகாச வள்ளலார் ஜக சகாப்தம் 2-ல் நிகழாநின்ற விபவ வருடம் ஆவணி மாதத்தில் திருக்கழுக்குன்றம் திருச்சிற்றம்பல ஞானிகள் போயிருந்த தருணத்தில், கடந்த அக்ஷய வருடத்தில் கருங்குழி புருஷோத்தம ரெட்டியார் தன் வீட்டிலிருந்து கோபத்தால் மதுரைக்குப் போயிருந்த தருணத்தில் மேற்படியாரை யுபசரித்து இவ்விடம் அனுப்ப வேண்டுமென்று மேற்படி மடத்து சுவாமி களுக்கு சி. இராமலிங்கம் பிள்ளை யவர்களால் அனுப்பட்ட கடிதத்தால் - ஒரு தருணம் நாவலர் விசேஷ வித்வானென்று சொல்கிறார்களே யவருடைய படிப்பு இலக்கணமில்லாப் படிப்பு - என்று சொல்லக் கேட்ட திருச்சிற்றம்பல ஞானியார் புகன்றது. அவர்களால் விவகரிக்கும் விவகாரத்திற் சிதறிய இலக்கணத்தின் மொழிகளில் கோடியிலொரு கூறிவ்வுலகி லிருக்கிறதென்று வாதிக்க அம்மடத்து சுவாமிக ளப்படியாகி லந்த சுவாமிகளா லிலக்கண விதிப்படியொரு கடிதமனுப்பும்படி கேட்டு வருவிக்க வேணு மென்று கேட்டுக் கொண்டபடி - மேற்படி ஞானி யிவைகளைக் குறியாமல் சன்னிதானத்திற்கு ஒரு கடிதம் அனுப்பினார். மேற்படி கடிதத்தினால் இவ்விடத்திய சுகுணங்களையும் அற்புதங்களையும் இலக்கண வகையாற் றனக்குத் தெரிவிக்க வேண்டுமென்று பிரார்த்தித்ததால் - அதன் பொருட்டெழுதி விடுத்த குசல பத்திரிகை பின்புறங் காண்க.

இலக்கணப் பத்திரிகை

ச. ஆறுமுக முதலியார் வேலாயுத முதலியாரிவர்கள் குடியிருந்த முகப்பிலிருந்து அய்யா அவர்களாற் சில வரியும் மற்றவை ஆக்ஞையின் பேரில் வேலாயுத முதலியாராலும் எழுதியது.

இலக்கணத் திருமுகத்தைப் பெற்ற திருச்சிற்றம்பல ஞானிகள் மடத்திலுள்ள அனைவருக்கும் காட்டினார். அவதானியார் முத்துசாமிப் பிள்ளைக்குப் பொருள் விளங்காததால் "வேணுமென்றே ஒருவித்துவான் பூட்டுப் போட்டால் அந்த வித்துவான் தான் அதைத் திறக்க வேண்டும்" என்றார். 'ஞானியார் அப்படியாயின் நீர் ஒரு பூட்டுப் போடும்' என்றனர், அவதானியார்.

தகரவரிக் கூந்தலர்கா மாதிமுந்நீர் தாழும்
தகரவரி நாலைந்து சாடும் - தகரவரி
மூவொற்றி Êர்பொருளை மூன்றுமங்கை யேந்துமொரு
சேவொற்றி Êரானைச் செப்பு.

என்ற வெண்பாவை இயற்றி யனுப்பினார். இதற்கு அவதானியார் கருதிய உரையையும் அவர்க்கும் விளங்காத வேறு ஒரு விசேட உரையையும் அடிகள் செய்து விடுத்தனர். அவற்றைக் கண்ட அவதானியார் செருக்கொழிந்தவராகி வடலூருக்கு வந்து தெருக்கோடியிலேயே வண்டியை விட்டிறங்கி வீதியில் வீழ்ந்து வணங்கிக் கொண்டே வந்து அடிகளைக் கண்டு பணிந்து 'வித்துவான்' என மதித்திருந்தேன். பரிபூரண ஞானி, என்று உணர்ந்திலேன், மன்னிக்க வேண்டும், என வேண்டினார். அடிகளின் தோத்திரமாக ஒரு பாடலையும் பாடிப் பணிந்தார். அப்பாடல் கிடைக்கவில்லை - என்ற இவ்வரலாறு ச.மு. கந்தசாமி பிள்ளையவர்கள் பதிப்பினா லறியப்படுகிறது.

இவ்விலக்கணத் திருமுகத்திற்குச் சேலம் வேலூர் கண்டர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் திரு. ப.ரா. கந்தசாமி அவர்கள் ஓர் உரை எழுதினார். அது 1968-ல் இராமலிங்கர் பணிமன்ற முத்திங்களிதழில் இதழாசிரிய ராகிய எம்மால் வெளியிடப் பெற்றது. பின்பு உரை யெழுதியவரே தனி நூலாகவும் அச்சிட்டார்.

திருவருள் வல்லபம் என்னும் ஐந்தாம் திருமுகத்தின் வரலாறு "பிரமோதூத வருடம் தை மாசத்தில் புதுச்சேரி சுவாமிகள் சமாதி திருக்கோயில் புகுமுன்னர் சந்நிதானத்திற்கு விண்ணப்பித்துக் கொண்டதற்கு பதில் திருமுகக் குறிப்பு" என ஓர் படியில் காணப்படுவதாகப் பாலகிருஷ்ண பிள்ளை குறித்துள்ளார். பிரமோதூத, தை என்பது 1871 ஜனவரி, பிப்ரவரி.

4. திருமுகக் குறிப்புகள்

திருமுகக் குறிப்புகள் பதின்மூன்றில் முதல் ஒன்பது குறிப்புகள் ஆ.பா. பதிப்பிலுள்ளவை. 10;11;12;13 ஆம் குறிப்புகள் ஆ.பா. பதிப்பிலில்லாது சென்னை சன்மார்க்க சங்கப் பதிப்பி லுள்ளவை. பதினோராவது குறிப்பு மிக அரிய குறிப்பு.

6. அழைப்புகள், அறிவிப்புகள், கட்டளைகள்

அழைப்புகளும் அறிவிப்புகளும் கட்டளைகளுமாகக் கிடைத்துள்ளவை 18. இவை அடிகள் வடலூரிலும் மேட்டுக்குப்பத்திலும் எழுந்தருளியிருந்த காலத்தில் (வடலூரில் சத்திய தருமசாலை தொடங்கிய 1867 முதல் மேட்டுக்குப்பம் சித்திவளாகத்தில் சித்தி பெற்ற 1874 வரை எட்டாண்டுகளில்) அருளப் பெற்றவை. அடிகள் நிறுவிய ருளிய சன்மார்க்க சங்கம், சத்தியதருமசாலை, சத்திய ஞான சபை, சித்திவளாகம் ஆகிய நான்கு சன்மார்க்க நிலையங்களைக் குறித்தும் நிறுவத்திட்டமிட்டிருந்த மற்றும் சில நிலையங்களைக் குறித்தும் இவை அருளப் பெற்றனவாகலின், நிலையங்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் கொள்கை விளக்கங்கள் பற்பல இவற்றால் தெளிவாக அறியப்பெறுகின்றன. இவற்றுள் 'சபை விளம்பரம்' ஒன்று மட்டும் 'அற்புதப் பத்திரிகை' என்ற தலைப்புடன் 1885-ஆறாம் திருமுறை முதற்பதிப்பில் வெளியாயிற்று. ஏனைய பதினேழும் பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பில்தான் முதன் முதலாக அச்சாயின. இவற்றைப் பத்திரிகைகள், கட்டளைகள் என இருவகையாகப் பிரித்துப் பத்திரிகைகள் என்ற தலைப்பின் கீழ் ஐந்தையும் கட்டளைகள் என்ற தலைப்பின் கீழ் பத்தையும் காலவரிசைப்படி ஆ.பா. அமைத்திருக்கிறார். யாம் பதினெட்டையுமே ஒரு தொகுதியாக்கிக் காலவரிசைப்படி அமைத்துள்ளோம்.

1. சாலைத் தொடக்கவிழா அழைப்பு


(1) இது துறவிகளுக்கு அடிகளின் பெயரில் அனுப்பிய திருமுகம். "ஓர் அன்பரின் கையெழுத்துப் பிரதியில் இவ்வளவே காண்கிறது" என ஆ.பா குறித்துள்ளார்.
(2) இது சங்கத்தார் பெயரால் மற்ற அன்பர்களுக்கு அனுப்பப் பெற்ற அழைப்பிதழ். அச்சிடப் பெற்றும் உள்ளது. "அச்சுப் பத்திரிகையில் மாதமும் தேதியும் கையொப்பமும் இல்லை. ஓர் அன்பரது கையெழுத்துப் பிரதியில் இதில் கண்ட மாத தேதித் தகவலும் கையொப்பமும் இருக்கின்றன. ஆனால் அதில் 'ருஷப லக்கினத்தில்' என்பதற்குப் பதிலாக 'சிங்க லக்கினத்தில்' என்று இருக்கிறது. என்பது ஆ.பா. குறிப்பு.

2. சாலை விளம்பரம்
இது சத்திய தருமசாலைத் தொடக்க நாளில் வெளியிடப் பெற்ற அறிவிப்பு. கூடலூர் துரைசாமி என்பவர் அடிகளுக்கு எழுதிய கடிதத்தில் 'நோட்டிசு ஆயிரங் காப்பி தயாராகின்றது. அதில் புருபு காப்பி வொன்று சமுகத்துக்கு அனுப்பியிருக்குது' என்று குறிப்பிடும் நோட்டீஸ் இதுவாகவும் இருக்கலாம்.

3. கிளைச் சாலைகள்
இச் சிறுகுறிப்பு, இவ்வளவே, சாலைத் தொடக்க விழா அச்சிட்ட அழைப்பிதழைப் பிரதிசெய்து வைத்துள்ள மேற்குறிப்பிட்ட அன்பரால் அப்பிரதியின் பின்பக்கத்திலேயே எழுதப்பெற் றுள்ளதென்று ஆ.பா. குறிப்பிடுகிறார்.

4. சன்மார்க்க விவேக விருத்தி
இதில் தேதிக் குறிப்பு ஒன்றும் இல்லை என்றும் இதன்கண்ணுள்ள 49 வகைப்பட்ட எண் ஊர்ப்பேர் கையொப்பம் தொகை முதலியனவெல்லாம் அடிகள் உட்பட அவரவர்கள் கையெழுத்திலேயே இருக்கின்றன வென்றும் ஆ.பா. கூறுகின்றார். தொடங்கியதோடே நின்று போயிருந்த இச் சன்மார்க்க விவேக விருத்தி - திங்களிதழை 1969 முதல் யாம் நடத்தி வருகிறோம்.

5. சன்மார்க்க போதினி
"இவ்வளவே, முன்னுள்ள ஏடு கிழிபட்டும் இடையிலும் பின்னுமுள்ளவை எழுதப்படாமலும் ஓர் அன்பர் கையெழுத்தில் இருக்கிறது" என்று ஆ.பா குறிக்கிறார். இவ்வறிவிப்பு அரையும் குறையுமாகக் கிடைத்துள்ளதெனினும் இதன்மூலம் அருமையான செய்திகள் தெரிகின்றன. சன்மார்க்க போதினி தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளைப் போதிக்கும் மும்மொழிப் பாடசாலை. சிறுவர்க்கு மட்டுமின்றி முதியோர்க்கும் போதிக்கும் பாடசாலை. தமிழ்நாட்டில் முதியோர் கல்வியை முதன் முதலில் ஏற்படுத்தியவர் அடிகளே.

6. சன்மார்க்க சங்கம் விளங்கும் காலம்
"ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான தருமச்சாலையில் பிரமோதூத வருடம் சித்திரை மாதம் 16ஆம் நாள் புதவாரம் சுமார் பகல் 6 மணி நேரத்தில் வேலூர் ஆனந்த நாத ஷண்முக சரணாலய சுவாமிகள் பெருமானிடத்தில் சாதலைக் குறித்து விண்ணப்பித்த தருணத்தில் பெருமான் திருக்கரத்தால் எழுதித் தந்த பிரதம பத்திரிகை" என்று இதன் வரலாறு ஓர் பிரதியில் காண்கிறது என ஆ.பா குறித்துள்ளார்.

7. அன்பர்களுக்கு இட்ட சாலைக் கட்டளை
"இது பிரமோதூத வருடம் அற்பிசி மாதம் 11ஆம் நாள் சாலையிலுள்ளார்க்குப் பெருமான் மேட்டுக்குப்பமென்னும் சித்திவளாகத்திலிருந்து எழுதிய திருக்குறிப்பு" என்று ஒரு பிரதியிலும், "இது பிரமோதூத வருடம் ஐப்பசி மாதம் 11ஆம் நாள் சாலை நடத்தி வந்த புதுவை சதாசிவ செட்டியாருக்குப் பெருமான் திருக்கரத்தால் வரைந்தனுப்பியது" என்று மற்றொரு பிரதியிலும் இதன் வரலாறு காணப்படுகிறது என ஆ.பா. குறிப்பிடுகிறார்.

8. சாலை சம்பந்திகளுக்கு இட்ட சமாதிக் கட்டளை

இக்கட்டளைக்கு ஆ.பா. அடிக்குறிப்பு வருமாறு.
"பிரமோதூத வருடம் பங்குனி மாதம் 18ஆம் நாள் சாலை சம்பந்திகளுக்குப் பெருமான் மேல் விளையப் போகின்ற அற்புத விளக்கங்களின் திருக்குறிப்பைச் சாலை சம்பந்த முடையவர் வழிபட்டு உண்மை லாபத்தைப் பெற்று உய்யும் பொருட்டு தயவோடு சுயஹஸ்தலிகிதமாய் வெளிப்படுத்திய அற்புத மஹாபத்திரிகை" என்று இத் திருமுக வரலாறும், இத் திருமுகம் அனுப்பப்பட்ட அன்பர்க்கு ஓர் விசேஷக் குறிப்பாக "இந்தப் பத்திரிகையைச் சாலை சம்பந்திகள் தவிர மற்றவர்களுக்குக் காட்டொணாது. பணத்தாலாயினும் தேகத்தாலாயினும் உழைப்பெடுத்துக்கொண்டு உண்மை நம்பிக்கையுடன் இருக்கின்றவர்கள் விஷயத்தில் காட்டத் தடையில்லை. நான் சாலைக்கு வந்தவுடன் தெரிவிக்கின்றேன். அப்போது வரலாம், பெருங்களிப்பையடைவீர்கள். உண்மையுடனிருங்கள்" என்று மேல் கொண்டு எழுதப்பட்டிருப்பதும் ஓர் பிரதியில் காணப்படுகின்றன. இங்கு அச்சிட்டிருக்கும் இவ்வற்புத மஹாபத்திரிகை சுவாமிகள் திருவடிகளுக்கு மீளா ஆளெனத் தொண்டு பூண்ட பேரன்பர் சிலர்க்கே சுவாமிகள் சாலையை விட்டுத் தனித்து வேறிடத்திருந்த போது அருளிச் செய்யப்பட்டு, ஆவரவர்களாலும் அவரவர்க்குப்பின் அந்த அந்தக் குடும்பத்தினராலும் சன்மார்க்கப் பரம ரகசியம் ஒன்றாக இதுகாறும் போற்றி வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. கொஞ்ச நாளைக்குமுன் இஃது ஓர் துண்டுப் பிரசுரமாக வழங்கப்பட்டதாதலினாலும், பெரும்பாலும் சன்மார்க்க சாதகர்க்காகவே இப்பதிப்பு அச்சிட்டு வருவதாலும் ஓர் மெய்யன்பர் கையெழுத்தில் உள்ளபடி அச்சிடுவது ஒருவாறு அமையும் என்று கருதி இதை இங்கு சேர்த்திருக்கிறது. திருவருட்பிரகாச வள்ளலார் திருவடி வாழ்க. (ஆ.பா. அடிக்குறிப்பு)

ஓர் மெய்யன்பர் கையெழுத்தில் உள்ளபடி இக் கட்டளையை ஆ.பா. அச்சிட்டிருக்கிறார். அம் மெய்யன்பர் அடிகள் சுயஹஸ்த லிகிதமாய் எழுதியருளிய மூலத்திலிருந்து பிரதி செய்து வைத்திருக்கிறார்.
யாம் இக்கட்டளையின் மூன்று பிரதிகளைப் பார்த்திருக்கிறோம்.

1. அடிகளின் திருக்கரத்தால் எழுதியருளப் பெற்ற மூலப்பிரதி (original). 40 பக்க நோட்டு அளவுக் காகிதம் நான்கு பக்கங்கள். மூன்று பக்கங்களில் கட்டளை. நான்காம் பக்கம் எதுவும் எழுதப்படாத வெறும் பக்கம். அடிகள் கையெழுத்து. அடிகள் கையொப்பம். இந்த ஒரிஜினல் ஆள் மூலமாக ஆடூர் சபாபதி சிவாசாரியர்க்கு ஒரு உறையில் (கவரில்) வைத்து அனுப்பப் பெற்றது. உறையின் ஒரு பக்கம் 'தென்னார்க்காடு ஜில்லா சிதம்பரம் தாலுக்கா ஆடூரில் பிரம்ம ஸ்ரீ ஆ. சபாபதி சிவாசாரிய சுவாமிகளுக்கு. பார்வதிபுரத்தி லிருந்து வருவது' என்றும் 'பிரமோதூத வருடம் பங்குனி மாதம் 19-பகல் 5 மணிக்கு கூடலூர் அப்பாசாமி செட்டியார் காரியஸ்தன் அயில் செட்டியார் மூலமாய் வந்தது' என்றும் வேறு கையெழுத்தில் காணப்படுகிறது.

2. வேறு ஒருவரால் எழுதப்பெற்று அடிகளால் கையொப்பமிடப் பெற்று இறுக்கம் இரத்தின முதலியார்க்கு அவரது சென்னை முகவரிக்குத் தபாலில் சென்றது. வேறு ஒருவரால் எழுதப்பட்டு, அடிகளால் கையொப்பமிடப்பட்டிருக்கும் இதில் கையொப்பத்தைத் தொடர்ந்து வேறு சில செய்திகள் சில வரிகளில் அடிகளால் இறுக்கம் இரத்தின முதலியார்க்கு எழுதப் பட்டுள்ளன. இது கவரில் வைத்துத் தபாலிற் சென்றிருக்கிறது.

3. வேறு ஒருவரால் எழுதப்பெற்று அடிகளால் கையொப்பமிடப் பெற்றுப் பரமானந்த பிள்ளைக்கு அனுப்பப் பெற்றது. ராஜராஜ பரமானந்த பிள்ளையவர்கட்கு என்று தொடங்குகிறது. இஃது மகா ராஜராஜ ஸ்ரீ பிள்ளை அவர்கள் பரமானந்த பிள்ளை அவர்களுக்கு கொடுப்பது என்று 4ஆம் பக்கம் முகவரி எழுதப்பட்டுள்ளது.
சபாபதி சிவாசாரியருக்குச் சென்ற ஒரிஜினலில் காலக்குறிப்பு எதுவும் இல்லை. இ.இ.க்குச் சென்றதில் நான்காவது பக்கத்திலும் கவரிலும் வருடம் மாதம் உ இருக்கிறது. பரமானந்த பிள்ளைக்குச் சென்றதில் வருடமும் மாதமும் இருக்கிறது; தேதி இல்லை. பாலகிருஷ்ண பிள்ளை கொண்டுள்ள அன்பர் படியிற் காணப்படும் விசேடக் குறிப்பு இம்மூன்றில் ஒன்றிலுமே இல்லை.

அடிகளின் இக்கட்டளை ஒரு சுற்றறிக்கையாகச் சாலை சம்பந்திகள் (சாலைக்குச் சம்பந்தமுடையவர்கள்) பலருக்கும் அனுப்பப்பட்டதெனத் தெரிகிறது. அடிகளால் எழுதப் பெற்ற மூலம் ஒன்று. அதை அன்பர்கள் படிசெய்து அடிகளிடம் கையொப்பம் பெற்றுப் பலர்க்கு அனுப்பப் பெற்றுள்ளது. விசேஷக் குறிப்பைக் கொண்டது யாருக்குச் சென்றதென்று தெரியவில்லை. இது போல் ரகசியம் என்று அடிகளாற் குறிக்கப் பெற்ற வேறு சிலவும் உள. விசேடக் குறிப்பைக் கண்ட ஆ.பா எவ்வளவு அச்சத்தோடு இக்கட்டளையைப் பதிப்பித்திருக்கிறார் என்பது அவரது அடிக்குறிப்பாற் புலப்படுகிறது.

9. சன்மார்க்கப் பெரும்பதி வருகை

"ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சங்க சாதுக்களில் சிறந்த ஆனந்த நாத சண்முக சரணாலய சுவாமிகள் சந்நிதானத்திற் காலஹரண ஹேதுவைப் பற்றி விசாரிக்குங் காலத்தில் பத்திரிகை மூலமாய் தெரிவித்த சரிதம்" என்று இதன் வரலாறு ஒரு பிரதியில் குறித்திருக்கிறதென்பது ஆ.பா. குறிப்பு.

10. சமரச வேத பாடசாலை
இஃது மேட்டுக்குப்ப மென்னும் சித்திவளாகச் சந்நிதானத்தில் வெளியிட்ட பத்திரிகை என்பது ஓர் பிரதியிலுள்ள குறிப்பு என்று ஆ.பா. குறித்துள்ளார்.

11. சபை விளம்பரம்
ஞானசபையைப் பற்றிய இவ் வறிவிப்பு ஆறாத் திருமுறை முதற் பதிப்பில், 'அற்புதப் பத்திரிகை' என்ற தலைப்புடனும், இறுதியில் 'சென்னபட்டணம் இராஜதானியைச் சார்ந்த கூடலூர் ஜில்லா மேற்படி தாலுகா பார்வதிபுரம் அல்லது வடலூர், ஸ்ரீமுக வருடம் தை மாதம் 19ஆம் நாள் சுக்கிரவாரம்' என்ற இட, காலக்குறிப்புகளுடனும் காணப்படுகிறது. கையொப்பம் எதுவும் இல்லை. பொ.சு. பதிப்பிலும், ச.மு.க. பதிப்பிலும் 'அறுபுதப் பத்திரிகை' என்பதே தலைப்பு. ஆயின் இட, காலக் குறிப்புகள் இல்லை. ஆ.பா. பதிப்பில் 'இங்ஙனம் சிதம்பரம் இராமலிங்க பிள்ளை' என்று கையொப்பம் காணப்படுகிறது. அடியிற் குறித்த தருணந் தொடங்கி என அறிவிப்பிலேயே கூறப்படினும் இதனடியில் காலம் எதுவும் குறிப்பிடப்படவில்லை "வேறொருவரால் எழுதப்பட்டு சுவாமிகள் கையெழுத்திட்டிருக்கும் இதன் மூலத்தில் இந்தத் தருணத்தின் விபரம் எதுவும் குறிக்கப்பட்டிருக்கவில்லை. "மேற்படி பத்திரிகை பல பாஷையிலும் அச்சிட்டிருப்பதை அற்புதம் விளங்குங் காலத்தில் தினங் குறித்து மேற்படி பத்திரிகையைப் பிரசுரஞ் செய்யப்படும்' என்று ஓர் அன்பர் பிரதியிலுள்ள குறிப்பையும், கிடைத்த பழந்துண்டு ஒன்றில் தேதி வரிசையாக விஷயங்களைக் குறித்திருப்பதில் இதைச் சுவாமிகள் திருக்காப்பிட்டுக் கொண்ட தேதியாகிய ஸ்ரீமுகவருடம் தை மாதம் 19 ஆம் நாளுக்கு எதிராகக் குறித்திருப்பதையும் கருதி இந்நாட் குறிப்பை ஒருவாறு உய்த்துணர்க" என்று ஆ.பா. அடிக்குறிப்பெழுதுகிறார்.

பலவகையாலும் ஆராயுமிடத்து இவ்வறிவிப்பின் காலம் அடிகள் சித்திபெற்ற நாளாகிய ஸ்ரீமுக தை 19 (30-1-1874) என்பது பொருத்தமாகத் தோன்றவில்லை. சத்தியஞானசபையின் தொடக்க நாளாகிய (சபையில் முதன் முதலாக வழிபாடு தொடங்கிய நாளாகிய) 25 - 1 - 1872 பிரஜோத்பத்தி தை 13 வியாழன் பூசநாள் என்பதே பொருத்தமாம்.

12. சாலையிலுள்ளார்க்கு இட்ட ஒழுக்கக் கட்டளை

தருமசாலையில் இருந்தவர்களைக் கண்டித்து அடிகள் மேட்டுக் குப்பத்திலிருந்து விடுத்த கண்டனக் குறிப்பு.

13. சன்மார்க்கப் பிரார்த்தனை


அடிகளுக்கு ஆட்பட்ட அன்பர்களுள் கல்பட்டு இராமலிங்க சுவாமிகளும் ஒருவர். இப்பிரார்த்தனை அவருக்காக அடிகளே எழுதித் தந்ததாகும். "இந்த விண்ணப்பம் கல்பட்டு சுவாமிகளுக்காகச் சந்நிதானமே எழுதி வைத்தது" என்று ஓர் பிரதியில் இத்திருமுக வரலாறு காணப்படுகிறது' என்பது ஆ.பா. குறிப்பு.
யாம் பார்த்த ஒருபிரதி பூல்ஸ்கேப் 1/2 பேப்பரில் ஒரு பக்கம் வேறு ஒருவர் கையெழுத்தில் எழுதிக் கல்பட்டு இராமலிங்க சுவாமிகள் கையொப்பமிட்டது.

14. சபை வழிபாட்டு விதி

ஞானசபை வழிபாடு தம் கொள்கைப்படிச் செவ்வையாக நடைபெறாததை அறிந்த அடிகள் ஞான சபை வழிபாட்டையும் பராமரிப்பையும் குறித்துச் சில விதிகளை வகுத்து அருளிய கட்டளை. சங்கம், சாலை, சபை ஆகிய நிலையங்களின் பெயர் மாற்றம் இக்கட்டளையின் முதற் பத்தியில் அறிவிக்கப்பெறுகிறது. "ஞான சபைக் கதவை நேர்ந்த காலத்தில் திறந்து நேர்ந்தவர்களுக்குக் காட்டி மரியாதையில்லாது இருந்ததைப் பற்றி மேற்படி சங்க பிரபுக்களிலொருவராகிய உத்தரவாதமுடைய ஆறுமுக முதலியார் சன்னிதானத்தில் விண்ணப்பித்துக் கொண்டதற்கு வெளியான பத்திரிகை" என்பது ஓர் பிரதியில் கண்ட இத் தெய்வத் திருமுக வரலாறாகும் என்று இதன் வரலாற்றை ஆ.பா. குறிப்பிட்டுள்ளார்.

15. சன்மார்க்க சங்கத்தார் பழக்க விதி
மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையிலும் வடலூர் சத்திய தருமசாலையிலும் இருந்தவர்களை எச்சரித்து அடிகள் விடுத்த அறிவிப்பு.

16. சித்திவளாக விளம்பரம்

"மேற்குறித்த காலத்தில் விருதா வதந்தியால் விசேஷ கூட்டம் நேரப்போவதைப் பற்றி பெருங்கருணையால் சுயஹஸ்த லிகிதமாய் அறிவித்த அறிவிப்பு" என்று இதன் வரலாறு ஓர் பிரதியில் காணப்படுவதாக ஆ.பா. குறிக்கிறார். ஆ.பா. பதிப்பிற்குக் கொண்ட பிரதியில் தலைப்பு 'உலக அறிவிப்புப் பத்திரிகை' என்றும் கையொப்பம் 'சிதம்பரம் இராமலிங்க பிள்ளை' என்றும் இருக்கிறது. 'உ, அறிவிப்பு' என்ற தலைப்புடன் நாற்பது பக்க நோட்டு அளவு கெட்டித் தாளில் வேறு ஒருவர் எழுத்தில் எழுதி அடியில் சி. இராமலிங்கம் என்று கையொப்பமிட்ட ஒரு பிரதியை யாம் பார்த்திருக்கிறோம்.

17 சித்திவளாக வழிபாட்டு விதி

இஃது சுவாமிகளின் உபதேசத் தெய்வத் திருவாக்காக ஓர் பிரதியில் காணப்படுகிறது என்று ஆ.பா. குறிக்கிறார்.

18 சன்மார்க்க சங்கத்தார்க்கு இட்ட இறுதிக் கட்டளை

இது சுவாமிகள் (திருக்காப்பிட்டுக் கொண்ட காலத்தருளிய) பரமோபதேசத் திருவாக்காக ஓர் பிரதியில் காணப்படுகிறது என்று ஆ.பா. குறித்துள்ளார்.
அழைப்புகள், அறிவிப்புகள், கட்டளைகளாகிய இப்பதினெட்டினையும் எமது இராமலிங்க அடிகள் வரலாற்றில் விரிவாக ஆராய்ந்து விளக்கியுள்ளோம். விளக்கம் விரும்பும் அன்பர்கள் இராமலிங்க அடிகள் வரலாற்றைக் காண்க.

7. விண்ணப்பங்கள்

சன்மார்க்க விண்ணப்பங்கள் நான்கும் ஆறாந் திருமுறை முதற் பதிப்பில் முதன் முதலில் அச்சாயின. பின் வந்த பதிப்புகள் அனைத்திலும் சேர்ந்துள்ளன.

1. சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம்

"சுவாமிகளது தெய்வத் திருக்கரத்தால் எழுதிய மூலமே இங்கு ஆதாரம். இதற்காகக் கிடைத்த அன்பர்கள் கை எழுத்துப் பிரதிகள் ஆறு. இவற்றுள் இரண்டில் விண்ணப்பத்தின் இறுதியில் 'ஆங்கீரச வருடம் வைகாசி மாதம் 5 உ உத்தரஞான சித்திபுரம்' என்றும், வேறொன்றில் 'ஆங்கீரச வருடம் வைகாசி மாதம்' என்றும், மற்றொன்றில் 'ஆங்கீரச வருடம் சித்திரை மாதம் ஞானசித்திபுரம்' என்றும் குறித்திருக்கிறது. ஸ்ரீ மகாதேவ முதலியாரது நோட்டில் இவ்விண்ணப்பத்தைத் தொடர்ந்து "திருநிலைத்து நல்லருளொடும் அன்பொடும்" என்ற தனிப்பாடல் எழுதியிருக்கிறது. இவ்விண்ணப்பமே சுவாமிகள் எழுதிய முதல் வாசக விண்ணப்பமாக எல்லாப் பிரதிகளிலும் கொண்டிருக்கிறது. இவ்விண்ணப்பத்தின் தலைப்பு சுவாமிகளாலேயே 'திருச்சிற்றம்பலம்' என்பதன் பின் குறிக்கப்பட்டிருக்கிறது"- என்பது ஆ.பா. அடிக்குறிப்பு.

முதற்பதிப்பு, பொ.சு., இரா., ச.மு.க. பதிப்புகளில் இவ்விண்ணப்பம் நான்காவது விண்ணப்பமாக வைக்கப்பெற்றுள்ளது. முதற் பதிப்பில் இதன் பெயர் சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம். பொ.சு., ச.மு.க. பதிப்புகளில்: சமரச சுத்த சன்மார்க்க சத்திய விண்ணப்பம். பி.இரா. பதிப்பில்: சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்தியச் சிறு விண்ணப்பம் ஆ.பா. பதிப்பில் அடிகளது கையெழுத்து மூலத்தின் சுயவடிவம் போட்டோ எடுத்து பிளாக் செய்து அச்சிடப் பெற்றுள்ளது.

2. சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பெரு விண்ணப்பம்

"சுவாமிகளது தெய்வத் திருக்கரத்தால் எழுதிய மூலமே இதற்கு ஆதாரம். இதற்காகக் கிடைத்த அன்பர்கள் கை எழுத்துப் பிரதிகள் ஆறு. இது சுவாமிகளின் இரண்டாவது வாசக விண்ணப்பமாக எல்லாப் பிரதிகளிலும் கொண்டிருக்கிறது. இவ்விண்ணப்பத்தின் பெயர் மூலத்தில் சுவாமிகளால் குறிக்கப்படவில்லை"- என்பது ஆ.பா. அடிக்குறிப்பு. அடிகள் எழுதியருளிய மூலத்தை யாம் பார்த்திருக்கிறோம்.

3. சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம்

"இங்கு இதற்காதாரம் அன்பர்கள் கை எழுத்துப் பிரதிகள் ஆறு."மூன்றாவது அருளிச் செய்த விண்ணப்பம்" என்று ஸ்ரீ மகாதேவ முதலியாரது பிரதியிலும், 'திருவருட் சமுக விசேஷ விண்ணப்பம்' என்று ஸ்ரீ சுப்பிரமணிய பிள்ளை அவர்களது பிரதியிலும், 'ஞான விண்ணப்பம்' என்று வேறு இரண்டு பிரதிகளிலும், 'இஃது மூன்றாவது வாசக விண்ணப்பம், திருவருட் சமுகத் திருவண்ணத் தருமையினையும் அத் திருவருட் சமுகத்தையடைந்த உண்மை ஞானிகளின் சித்தி வல்லபத்தினது பேரருமையினையுங் கூறுகின்றது' என்று மற்றொன்றிலும் இவ்விண்ணப்பத்தின் தலைப்பில் எழுதியிருக்கிறது" என்பது ஆ.பா. அடிக்குறிப்பு. பி.இரா. பதிப்பில் இதன் பெயர் 'திருவருட் சமுக விசேஷ விண்ணப்ப மென்னும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம்' எனக் காணப்படுகிறது.

4. சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்

"இங்கு இதற்காதாரம் அன்பர்கள் கை எழுத்துப் பிரதிகள் நான்கு. இதன் பெயர் விண்ணப்பத்திலேயே கண்டிருக்கிறது. கிடைத்த பிரதிகளில் இது மின் போந்த மூன்று விண்ணப்பங்களோடு தொடர்ந்து எண்ணப்படாமலிருக்கிறது"- என்பது ஆ.பா. அடிக்குறிப்பு.

முதற் பதிப்பு, பொ.சு., பி.இரா., ச.மு.க. பதிப்புகளில் இது முதலாவது விண்ணப்பமாக வைக்கப் பெற்றுள்ளது. முதற் பதிப்பில் இதன் பெயர்: சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்தியச் சிறு விண்ணப்பம். பொ.சு., ச.மு.க. பதிப்புகளில் சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம். பி.இரா. பதிப்பில்: சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம். இதன் பெயர் சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம் என்று மூலத்திலேயே குறிப்பிடப் பட்டிருக்கிறது.

கையெழுத்துப் பிரதிகள் மூன்றில் விண்ணப்பத்தின் இறுதியில், 'இங்ஙனம் சிதம்பரம் இராமலிங்கம்' என்பது காணப்படுகிறதென ஆ.பா. குறிப்பிடுகிறார். பி.இரா. பதிப்பிலும் 'இங்ஙனம் சிதம்பரம் இராமலிங்கம்' என்று விண்ணப்பத்தின் ஈற்றில் இருக்கிறது.

பின் இணைப்புகள் 1

அடிகள் அருளியவை
வியாக்கியானங்கள்

1. பொன்வண்ணத் தந்தாதி 22-ம் செய்யுள் உரை

'இதற்குக் கிடைத்த பிரதி ஒன்றில் இவ்வியாக்கியானத்தின் தலைப்பில் "சைவ சித்தாந்தப் பெருநெறியோரால் வழங்கும் திருமுறை பன்னிரண்டனுள் பதினொரந் திருமுறைப் பிரபந்தங்களி லொன்றாகிய பொன்வண்ணத் தந்தாதி 22-ம் பாசுரத்திற்குத் திருவருட் பிரகாச வள்ளலா ரென்னும் சிதம்பரம் இராமலிங்க பிள்ளை அவர்களால் வரைந்துள்ள வியாக்கியானம்" என்றெழுதியிருக்கிறது' என்ற அடிக்குறிப்புடன் இதனை ஆ.பா. முதன் முதலாகப் பதிப்பித்திருக்கிறார்.

2. வேதாந்த தேசிகர் குறட்பா ஒன்றன் உரை

"இஃது உபதேசம் விரும்பிய ஓர் வடகலை வைஷ்ணவர்க்குச் சுவாமிகள் கூறிய வழி வந்ததாகத் தெரிகிறது. இதற்காகக் கிடைத்த பிரதிகள் மூன்று. உரையின் தலைப்பில், ஒன்றில் "திருவறங்கம், விசிட்டாத்துவித சித்தாந்தம்" என்றும் மற்றொன்றில் "விஷ்ணு பரவமான இந்தக் குறள் வெண்பாவுக்குத் திருவருட் பிரகாசப் பெருமானால் விசிஷ்டாத்வைதமாகவும், சிவாத்வைதமாகவும், பௌராணிக சித்தாந்த மாயும் செய்த வியாக்கியானம் என்றும் எழுதியிருக்கிறது" - எனபது ஆ.பா. அடிக்குறிப்பு. ச.மு. கந்தசாமி பிள்ளையின் திருவருட்பாப் பதிப்பில் இது முதன் முதல் அச்சாகியுள்ளது.

உபதேசங்கள்

அனுஷ்டான விதியும், கணபதி பூஜா விதியும் இறுக்கம் இரத்தின முதலியாருக்கு உபதேசித்தவை. செவ்வாய்க்கிழமை விரத முறை சென்னை ராயல் ஹோட்டல் புதுவை வேலு முதலியார்க்கு உபதேசித்தது.
பின்னிணைப்பாக அச்சிடப் பெற்றுள்ள இரு வியாக்கியானங்களும் மூன்று உபதேசங்களும் சமயஞ் சார்ந்தனவாயிருப்பதால் அடிகளின் ஏனைய சமரச சுத்த சன்மார்க்க உபதேசங்களினின்றும் இவற்றைத் தனிப்படுத்திப் பின்னிணைப்பாக அச்சிடலாம் என்ற எண்ணத்துடன் இவ்வாறு அச்சிடப் பெற்றன. ஆயின் இவற்றை நூலுள் உரிய இடங்களிற் சேர்ப்பதே நேரிதென்று இப்போது (முன்னுரையெழுதும் போது) தோன்றுகிறது. என்னை? அடிகளின் உபதேசங்களிற் சமயஞ் சார்ந்தவை என இவற்றைப் பின்னிணைப்பிற் றள்ளின், ஏனைய வியாக்கியானங்களிலும், உபதேசங்களிலும் ஆங்காங்கே விரவிக் கிடக்கும் சமயக் கருத்துக்களை என் செய்வது? எங்கே தள்ளுவது? இக்காரணம் பற்றியே முன்னுரையில் அடிகளின் உரைநடை அருளிச் செயல்களை வரிசையாகக் கூறும்போது இவற்றை உரிய இடங்களிற் குறிப்பிட்டதுமாம்.

பின் இணைப்புகள் 2

அன்பர்கள் எழுதியவை

இவையனைத்தும் அவ்வவற்றின் மூலங்களிலிருந்து முதன் முதலாகப் பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பில் அச்சிடப்பெற்றவை.

இப்பதிப்பைப் பற்றிய சில குறிப்புகள்

மநுச்சோழர் - மனுச்சோழர், அநேக - அனேக, சிநேக - சினேக, அநுக்கிரகம் - அனுக்கிரகம், தநுகரணங்கள் - தனு கரணங்கள், அநுபவம் - அனுபவம், ஆநந்தம் - ஆனந்தம் முதலிய சொற்கள் மூலங்களிலும் முற்பதிப்புகளிலும் பெரும்பாலும் தந்நகரத்துடனும் சிறுபான்மை றன்னகரத்துடனும் காணப்பெறுகின்றன. இப் பதிப்பில் வேறுபாடின்றி றன்னகரமே ஆளப்பெற்றுள்ளது. தந்நகர றன்னகர வேறுபாடு பற்றி அடிகளின் கருத்தை ஒழிவிலொடுக்கப் பதிப்பு, அமைத்துக் கொளலிற் காண்க.

ஒழிவிலொடுக்கப் பாயிரவிருத்தியிலும், மெய்ம்மொழிப்பொருள் விளக்கத்திலும், ஏனைய சில இடங்களிலும் கடினசந்திகள் பிரிக்கப் பெற்றுள்ளன. ஒழிவிலொடுக்கப்பாயிரவிருத்தியில், அருஞ்சொற் பொருள், அடிக் குறிப்புகள், அமைத்துக்கொளல் ஆகிய மூன்றிலும் கொடுக்கப் பெற்றுள்ள எண்கள், செய்யுள் எண்கள்.
மூலங்களிலும் முற்பதிப்புகளிலும் தமிழ் எண்களே உள்ளன. இக்காலத்திற் பலர் அவற்றை அறியார். ஆதலின் அவை இப்பதிப்பில் அரபி எண்களாக அச்சிடப் பெற்றுள்ளன. ஆயினும் அடிகள் எழுத்தாகிய திருமுகங்களில் இம்மாற்றம் செய்யப் பெறவில்லை. தமிழ் எண்களாகவே அச்சிட்டுள்ளோம். அழைப்பு, அறிவிப்பு, கட்டளைகளிலும் அவ்வாறே.

திருமுகங்களின் தலைப்பிற் கொடுக்கப் பெற்றுள்ள திருமுகப் பெயர்களும் ஆங்கிலத் தேதியும் பதிப்பாசிரியர் பாலகிருஷ்ண பிள்ளையாலும் இப்பதிப்பாசிரியராலும் கொடுக்கப் பெற்றவை.
........:- இவ்வாறு புள்ளியிட்ட இடங்களில் ஏடு சிதைவு என்று கொள்க.

உபதேசங்களைப் பற்றி ஒரு கருத்து
அனுஷ்டான விதி முதலாகப் பேருபதேசம் ஈறாக அடிகளின் உபதேசங்கள் அனைத்திற்கும் அன்பர்கள் எழுதி வைத்துள்ள குறிப்புகளே மூலங்களாகும். இவற்றிற் சில இடங்கள் ஐயந்திரிபுகளுக்கு இடனாக உள்ளன. ஆதலின் உபதேசங்களிற் காணப்படும் சொற்பொருள்களைக் கொள்ள வேண்டிய முறையைப் பற்றித் திருவருட்பாவின் சிறந்த பதிப்பாசிரியர் பாலகிருஷ்ண பிள்ளையவர்கள் கருத்தையும், நம்முடைய கருத்தையும் இங்குக் குறிப்பிடுதல் இன்றியமையாததாம்.

திருவருட்பா, உபதேசப்பகுதி, முன்னுரையில் பதிப்பாசிரியர் பாலகிருஷ்ண பிள்ளையவர்கள் "இப் பகுதியில் உள்ள சொற்பொருள்களைக் கொள்ள வேண்டிய முறை" என்ற தலைப்பில் எழுதுவது வருமாறு; "இந்த நூல் முழுவதற்கும் அன்பர்கள் எழுதி வைத்திருப்பனவே மூலமாகும். அடிகளார் ஒரு கால் எழுதியிருந்து, அவ்வெழுத்தினைப் பெயர்த்து எழுதியதாகக் கருதப்படக்கூடிய 1,2,9- ஆம் பிரிவுகளில்* பெருந்தவறுகள் குற்றங்கள் குறைகள் நுழைந்திருக்க முடியாது. 7-ம் பிரிவு அடிகளாரின் எழுத்தினின்றும், வாய் மொழியான் கேட்டதினின்றும், அன்பர்கள் நினைத்துக் கொண்டதினின்றும், தொகுத்து எழுதியிருப்பதால், குற்றங் குறைகள் நுழைந்து இடம்பெற வழி உண்டு. ஆனால் 3,4,5,6,8-ஆம் பிரிவுகளில் அடிகளார் வாய்மொழியான் உபதேசித்தவற்றை நேர்முகமாகக் கேட்டவர்களோ பிறரோ கேள்வி, ஞாபகம் கொண்டு அப்போதப்போதோ, சிலபோது கழித்தோ எழுதி வைத்திருப்பனவற்றில் மிகப் பெருந்தவறுகள், குற்றங் குறைகள் நுழைந்து இடம் பெற்றிருத்தல் இயல்பு. எடுத்துக்காட்டாக, மஹோபதேசத்தில், "இது போல் வியாகரணம் - தொல்காப்பியம் பாணிநீயம் - முதலியவைகளில் சொல்லியிருக்கின்ற இலக்கணங்கள் முழுவதுங் குற்றமே. அவைகளில் குற்றமே சொல்லியிருக்கிறார்கள்" என்ற இருசொற்பொருள் தொடர்கள் காண்கின்றன. இந்தப்படி அடிகளார் சொல்லியிருப்பார்கள் என்று எவரும் நம்ப மாட்டார்கள். அடிகளார், ஒரு கால் தென்மொழி வடமொழி வியாகரண நூல்களிலும் குற்றம் குறைகள் உண்டென்று சொல்லி அவற்றிற்காக எடுத்துக்காட்டுகள் காட்டியிருந்திருக்கலாம். அதை மேலே திரித்துக் கூறியபடி கேட்டதாகத் தவறுதலாகக் கருதி அன்பர்கள் எழுதியிருப்பார்கள். அடிகளார், தொண்டமண்டல சதகம் சார்பாகத் தொல்காப்பியத்தையும் வடமொழி தென்மொழி இலக்கணங்களில் காணப்பெறாத சிற்சில நுண் இசை இயல்புகளையும் மிகமிக நுட்பமாகக் கையாண்டிருக்கிறார்கள். தவிர, அகரஉயிரின் இலக்கண நியாய விசார வினாக்கள் என்றெடுத்து, 45 வினாவினை எழுப்பிய பின்,"என்பன முதலாக இவ்வகர உயிர் ஒன்றற்கே இன்னும் பற்பல இலக்கண நியாய விசார வினாக்கள் உள" என்று எழுதுகிறார்கள். மேலும் இலக்கணப் பத்திரிகை என்றொரு திருமுகமும், அடிகளார் முதலெடுத்துக் கொடுத்தபடி, அவர்கள் முதல் மாணாக்கர் தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களால் இலக்கணச் சொற்கள் கொண்டே இயற்றப் பட்டிருக்கிறது. இவற்றை எல்லாம் திருவருட்பா, வியாக்கியானப் பகுதியில் பரக்கக் காணலாம். ஆகலான் அடிகளார் சொன்னதாக அன்பர்கள் எழுதியிருப்பதை நாம் நேர் நேரே கொள்ளக் கூடாது. இங்ஙனம் "எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு", "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" என்னும் அறிவினைக் கொண்டு ஆராய்ந்தே அவற்றைக் கொள்ளுதல் வேண்டும். அதாவது, அடிகளார் தெய்வத் திருக்கரத்தால் எழுதியிருக்கும் நூல்களுக்குப் பொருத்தமானவற்றைப் பொருத்தமான அளவு கொள்ளுதலும், அல்லது பொருத்தப்படும் அளவே கொள்ளுதலும் கடனாம். இக்கருத்தினை இந்நூலில் சிற்சில அடிக்குறிப்புகளிலும் வற்புறுத்தியிருப்பது காண்க. இந்நூலினைப் பயில்பவர் இதை நன்குணர்ந்து கடைப் பிடிப்பார்களாக." இவ்வாறு முன்னுரையில் எழுதும் பாலகிருஷ்ண பிள்ளை, பேருபதேசத்திற்கு (மஹோபதேசத்திற்கு) எழுதியுள்ள அடிக்குறிப்பு வருமாறு. "இந்த வாய்மொழி உபதேசத்திற்காகக் கிடைத்தவை நம் இராமலிங்க அடிகளார்க்கு அட்பட்டு வதிந்த அன்பர்கள் இருவரின் படிகளாகும். அடிகளார் திருவாய்மலர்ந்த செஞ்சொற்களை அங்ஙனமே - சொல் சிதைவுறாது பொருள் வேறுபடாது - எழுதி வைத்தல் எவர்க்கும் இயலாது, ஆதலால் இதன்கண் காணப்பெறும் சொற்பொருள்களை நேர் நேரே கொள்ளாது. அடிகளாருடைய முடிவான நூல்களொடு முழுவதும் இயைந்து பொருந்துவனவற்றை மட்டும் கொள்ளுதல் அன்பர்களின் ஒன்றான தனிக்கடன் ஆகும். இப்பகுதியில் உள்ள சொற்பொருள்கள் அனைத்திற்கும் இந்நன்னெறி முற்றிலும் அமையும் என்க."

இனி நம்முடைய கருத்து

'தொல்காப்பியம் பாணி­யம் முதலியவைகளில் சொல்லியிருக்கிற இலக்கணங்கள் முழுவதும் குற்றமே; அவைகளில் குற்றமே சொல்லியிருக்கின்றார்கள்' என்று அடிகள் கூறியிருப்பரோ? 'முழுவதும் குற்றமே என்று கூறியிரார்?' 'குற்றங் குறைகளும் உள்ளன' என்று கூறித் தொண்ணூறு தொள்ளாயிரத்தின் புணர்ச்சி விதிகளின் பொருந்தாமையை எடுத்துக் காட்டியிருக்கக் கூடும். தொண்ணூறு தொள்ளாயிரம் என்பவற்றிற்குத் தொல்காப்பியர் கூறும் புணர்ச்சி விதிகள் பொருந்தாதனவே. இப்பொருந்தாமையை டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் மொழியியற்கட்டுரைகள் என்னும் நூலில் பெரியோர் சிறு பிழை என்ற கட்டுரையில் விரிவாக ஆராய்ந்து விளக்கியுள்ளார். தொல்காப்பியம், எழுத்ததிகாரம், நச்சினார்க்கினியருரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பதிப்பில் பதிப்பாசிரியர் தேவநேயப் பாவாண ரவர்களும் இப்பொருந்தாமையை 445 ஆம் சூத்திரத்திற்கு எழுதிய நீண்ட அடிக்குறிப்பால் விளக்குகிறார். புதுச்சேரி புலவர் சுந்தரசண்முகனார் தொண்ணூறும், தொள்ளாயிரமும் என்று ஒரு சிறு நூலே (30 பக்கங்கள்) எழுதியுள்ளார். 1971 ஜூன் மாதம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் மூன்றாவது கருத்தரங்கிற் படிக்கப் பெற்ற ஆராய்ச்சிக் கட்டுரையின் விரிவே அந்நூல். தொல்காப்பியர் கூறும் புணர்ச்சி விதியின் பொருந்தாமையை ஆசிரியர் அந்நூலுள் விளக்குகிறார். மேலும் அவர் எழுதிய "தமிழ் இலத்தீன் பாலம்" என்னும் நூலிலும் இதனை ஆராய்ந்துள்ளார். இவ்வாறு தொல்காப்பியத்திற் சில குறைகள் காணப்படுகின்றனவென்பதால் தொல்காப்பியம் முழுவதும் குறையுடையதெனக் கூறவியலாது. அடிகளும் அவ்வாறு கூறியிரார். தொல்காப்பியம் போன்ற சிறந்த நூல்களிலும் குறைகள் உள எனக்கூறித் தொண்ணூறு தொள்ளாயிரத்தை எடுத்துக்காட்டியிருப்பார். இவற்றைக் கேட்ட அன்பர்கள் 'முழுவதும் குற்றமே' என்று சற்று அதிகப் படியாகக் குறித்து வைத்துவிட்டனர் என்றே கருத வேண்டும். 'தேவாரம் திருவாசகம் முதலிய உண்மை நூல்களிலும் சில வழுக்கள் காணப்படுகின்றனவே? தேவரீர் அருளிய வாசகத்திலும் செய்யுளிலும் விளங்காத இடங்கள் உள்ளனவே!' என்று ஆனந்த நாத சண்முக சரணாலய சுவாமிகள் கேட்டதற்கு அடிகள் கூறிய சமாதானமும் (பக்கம் 502), சமயநூல்களில் பிழை என்ற உபதேசக் குறிப்பும் (பக்கம் 274) இங்கு காணத்தக்கன.
தொல்காப்பியத்தைப் பற்றியதாவது நமக்கு விளங்கக் கூடியது. நமக்கு விளங்காத புதிய செய்தி யொன்று உபதேசக் குறிப்பில் உள்ளது. 'சமய நூல்களின் உண்மை', 'புராண ஹ’ருதயம்', 'சமயநூல் உண்மை' என்னும் தலைப்புகளில் மூன்று குறிப்புகள் உள்ளன (பக்கம் 273 காண்க). அறுபத்து மூன்று நாயன்மார்களும் மாணிக்கவாசகரும் மனிதரல்லர்; தத்துவங்களே; தேவார திருவாசகங்கள் அவர்கள் பாடியனவன்று; பிற்காலத்தில் யாரோ பாடி அவர்கள் பெயரில் ஏற்றிவிட்டார்கள் எனக் கூறப் பெற்றிருக்கிறது. அடிகள் இவ்வாறு கூறியிருப்பரோ? சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகிய நால்வர்க்கும் நான்கு மாலைகள் பாடும் அடிகள், அவற்றில் அவர்களையெல்லாம் மனிதர்களாகக் கருதியே பாடுகின்றார். தத்துவங்களாகக் கருதிப் பாடியதாகத் தோன்றவில்லை. நால்வரும் நான்கு தத்துவங்களை விளக்க வந்தவர்கள், அவர்களது வாழ்க்கை நிகழ்ச்சிகளெல்லாம் தத்துவ விளக்கங்களே என்று அடிகள் கூறியிருக்கக் கூடும். கேட்ட அன்பர்கள், நால்வரும் தத்துவங்களே என்று எழுதியிருப்பர். இன்னும் நூறு இருநூறு ஆண்டுகளுக்குப் பின், ஒருவர் 'வள்ளலார் இராமலிங்க அடிகளார் மனிதரல்லர்; அப்படி ஒருவர் இருந்ததில்லை, வள்ளலார் என்பது ஒரு தத்துவம், திருவருட்பா அவர் பாடியதன்று. வடலூரில் சத்திய தரும சாலையும், சத்திய ஞானசபையும் அவர் நிறுவியனவன்று. யாரோ இவற்றைப் பாடியும் ஏற்படுத்தியும் வள்ளலார் பேரில் ஏற்றி வழங்க விட்டுவிட்டனர்." என்று கூறப் புகுந்தால் என்னாவது?

இனி இன்னொரு வகையாகச் சிந்திக்கவும் இடமிருக்கிறது. புராண விஷயங்கள் பலவற்றிற்குத் தத்துவப்பொருள் கூறுகின்றார் அடிகள். அவ்வாறு கூறும் அடிகள் இவ்வாறு இதனையும் கூறியிருப்பினும் வியப்பதற்கில்லை. அடிகள் போன்ற கடந்த மேல்நிலையில் உள்ளவர்களது திருவுள்ளக் கருத்தை நம்போலியர் எங்ஙனம் அறிய இயலும். சன்மார்க்க சங்கம் விளங்குங் காலம் என்னும் அறிவிப்பில் (பக்கம் 429) 'இஃது தூற்றாமல் வைக்க' என்றும், 'இது விஷயத்திற் றருக்கஞ் செய்யப்படாது, உண்மை' என்றும் அடிகள் கூறுகின்றார். நமக்கு விளங்காதனவற்றைத் தூற்றாமல் வைப்பதும் அவற்றின் விஷயத்தில் தர்க்கஞ் செய்யாதிருப்பதுமே அபசாரத்திற் கிடமில்லாததாம். விளங்காத பொருளை விளங்கவைக்க வேண்டுமென்று திருவருளிடத்து விண்ணப்பிப்பதும் செய்யத்தக்கதாம். இன்று விளங்காதன நாளையோ, மற்றோ விளங்குதல், திருவருட்டுணை யானும் நமது பக்குவ முதிர்ச்சியானும் கூடுமாதலின், "அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன், வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்."
* * *
அடிகளின் பன்முகஞானம்

சேக்கிழார் நூலாசிரியரும், உரையாசிரியரும், போதகாசிரியரும், ஞானாசிரியரும் ஆவரெனத் திரிசிரபுரம் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சேக்கிழார் பிள்ளைத்தமிழில் பாடியுள்ளார்.

நாடிய விரிநூல் சொற்றிடு திறனால் நன்னூலா சிரியன்
நகுபா சுரமுத லுரைசெய் தலினால் நவிலுரை யாசிரியன்
நீடிய பரசம யக்குழி வீழ்ந்தவர் நீப்பப் போதனைசெய்
நிலையாற் போத காசிரி யன்னிவை நிகழ்தொறு
நிகழ்தொறும் ஆடிய ஞானத் திறனுற வான் ஞானாசிரி யனுநீ யென்
றான்றோர் பலரும் புகழப் படுபவ வகில மெலாஞ்
சென்று
கூடிய புகழ்சால் குன்றத் தூரன் கொட்டுக சப்பாணி
கொற்றச் சேவையர் காவல நாவல கொட்டுக சப்பாணி.
- சப்பாணிப் பருவம் 9

நம் அடிகளோ, நூலாசிரியரும், உரையாசிரியரும், போதகாசிரியரும், ஞானாசிரியரும் ஆதலொடு பதிப்பாசிரியரும், பத்திரிகாசிரியரும் ஆவார். இவ்வாறு பல்வகை ஆசிரியராய் விளங்கியதோடன்றி வியாக்கியானகர்த்தராய், சித்தமருத்துவராய், சீர்திருத்தவாதியாய், அருட்கவிஞராய், இவை அத்தனைக்கும் மேலாக அருண் ஞானியாய் அடிகள் விளங்கினார்.
நூலாசிரியர்
மனு முறைகண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற நூல்களை இயற்றியமையான் நூலாசிரியர்.

உரையாசிரியர்
ஒழிவிலொடுக்கப் பாயிர விருத்தி, தொண்ட மண்டல சதகத்தின் கடவுள் வாழ்த்துப் பாடல் உரை முதலியவற்றைச் செய்தமையான் உரையாசிரியர்.

பதிப்பாசிரியர்
ஒழிவிலொடுக்கம், தொண்டமண்டல சதகம், சின்மயதீபிகை ஆகியவற்றைப் பதிப்பித்தமையான் பதிப்பாசிரியர்.

பத்திரிகாசிரியர்
சன்மார்க்க விவேகவிருத்தி என்னும் பத்திரிகையைத் தொடங்கியமையான் பத்திரிகாசிரியர்.

போதகாசிரியர்
தொழுவூர் வேலாயுத முதலியார், இறுக்கம் இரத்தின முதலியார், நரசிங்கபுரம் வீராசாமி முதலியார், கிரியாயோக சாதகராகிய பண்டார ஆறுமுக ஐயா, பொன்னேரி சுந்தரம் பிள்ளை, காயாறு ஞானசுந்தர ஐயர் ஆகிய பலருக்குப் பாடஞ் சொன்னமையான் போதகாசிரியர்.

ஞானாசிரியர்
திருவருண் ஞானத்தை அனைவர்க்கும் வாரி வழங்கியமையான் ஞானாசிரியர்.

வியாக்கியானகர்த்தர்
உலகெலாம் என்னும் மெய்ம்மொழிப்பொருள் விளக்கம், தமிழ் என்னும் சொல்லுக்கிட்ட உரை முதலிய வியாக்கியானங்களைச் செய்தமையான் வியாக்கியானகர்த்தர்.

சித்த மருத்துவர்
தாமே பல மருந்துகளைச் செய்து பிணியாளர் பலருக்குக் கொடுத்து நோய் தீர்த்ததோடன்றிச் சிலருக்குக் கடித வாயிலாக மருந்து எழுதியது, மருந்துச் சரக்குகளின் குண அட்டவணை எழுதியது ஆகியவற்றான் சித்த

மருத்துவர்.
மருத்துவத்தோடன்றி ரசவாதத்திலும் அடிகள் வல்லவர். வைத்தியம், வாதம், யோகம், ஞானம் இவை ஒன்றுக் கொன்று தொடர்புடையவை. நம் நாட்டுச் சித்தர்கள் இவற்றில் வல்லவர்கள். அடிகளும் வல்லவர். பொன்செய்யும் வகையை இறைவன் தமக்கு உணர்த்தினான் என அடிகள் ஒரு பாடலிற் கூறுகின்றார். திருவருட்பா 3962 காண்க. இந்நூலுள் ரசவாதம் என்ற உபதேசக் குறிப்பையும் (பக்கம் 330) பொன்விளைவு என்ற திருமுகத்தையும் (பக்கம் 401) காண்க. இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த வேறொரு திருமுகத்தில் "தற்காலம் ஒருவகை முயற்சி நிமித்தம் சுமார் 30 வராகனெடை பொன் வேண்டுவது. அவை நஷ்டமாகாது, விருத்தியேயாகும். இவையும் சிவபுண்ணியம் பற்றியே" என்றெழுதியுள்ளதுமுண்டு. பொன் செய்யும் ஆற்றலை ஒரு பேறாகவே அடிகள் கூறுகின்றார். ஏமசித்தி என்னும் அப்பேற்றைச் "சாகாக்கலை ஆராய்ச்சி" பக்கம் 158-ல் காண்க.

சீர்திருத்தவாதி
இன்று துறைதோறும் துறைதோறும் தோன்றியுள்ள பல சீர்த்திருத்தங்களுக்கு வித்திட்டவர் அடிகளே. அடிகளின் தோற்றத்திற்கு முன் தமிழ்நாடு இருந்த நிலை வேறு. அடிகளின் தோற்றத்திற்குப்பின் தமிழ்நாடு உள்ள நிலை வேறு.

சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இவ்விருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சைவ சமயத்தில் பல சீர்திருத்தங்கள் தோன்றின. 'சீர்திருத்தச் சைவம்' என்றொன்று தோன்றிற்று. மறைமலையடிகளும் திரு. வி. கலியாணசுந்தரனாரும் தங்களைச் சீர்திருத்தச் சைவர் எனச் சொல்லிக் கொள்வதில் பெருமையடைவர். சீர்திருத்தச் சைவம் தோன்றற்குக் காரணர் அடிகளே. அடிகளின் சமரச சுத்த சன்மார்க்கம் தோன்றிலதேல் சீர்திருத்தச்சைவம் தோன்றுவதெங்கே? சமயத் துறையில் மட்டுமின்றிச் சமூக வாழ்விலும் பெரும் மாறுதல்களும் சீர்திருத்தங்களும் அடிகளால் ஏற்பட்டன.

இதுவரை உலகில் தோன்றிய சீர்த்திருத்தவாதிகளுள் தமக்கு ஒப்பும் உயர்வும் அற்றவர் அடிகளே. சீர்திருத்தத்தில் அடிகள் யாருக்கும் பின்னிற்பவர் - இரண்டாமவர் அல்லர். அடிகள் கூறிய சீர்திருத்தங்கள் பல அதுவரை யாராலும் கூறப்பெறாதவை. பின்னும் இதுவரை யாராலும் கூறப்பெறாதவை. சீர்திருத்த வானில் அடிகள் ஒரு சூரியன். அவரை எட்டிப்பிடித்தல் இயலாது. எடுத்துக்காட்டாக ஒன்று கூறுவோம். கணவன் இறந்தால் மனைவி தாலி அறுக்க வேண்டாம் என்பது அடிகள் கூறிய சீர்திருத்தங்களுள் ஒன்று.
இத்தகைய சீர்திருத்தங்களைச் சொன்னார் வேறு யார்? அடிகள் சாதாரண சீர்திருத்தவாதி யல்லர்; சீர் திருத்தவாதிகளுக் கெல்லாம் சீர்திருத்தவாதி.

அருட்கவிஞர்
அடிகள் அருட்கவிஞர் என்பதைப் பலவாறு எடுத்துச் சொல்லவும் வேண்டுமோ? அதற்கு அவர் அருளிய 'திருவருட்பா' வொன்றும் போதாதோ?

அருண்ஞானி
அடிகள் அருள்ஞானி என்பதற்குப் பற்பல பகர்தல் வேண்டுமோ? 'திருஅருட்பிரகாச வள்ளலார்' என்று அவர் பெற்ற பேரொன்றும் போதாதோ?

பொதுவாக, நூல்செய்ய வல்லார் உரைசெய்ய வல்லாரா யிருப்பதில்லை. உரைசெய்ய வல்லார் நூல் செய்ய வல்லாரா யிருப்பதில்லை. செய்யுள் வல்லார் உரை நடை வல்லாரா யிருப்பதில்லை. உரைநடை வல்லார் செய்யுள் வல்லாரா யிருப்பதில்லை. இயல் வல்லார் இசை வல்லாரா யிருப்பதில்லை. இசைவல்லார் இயல் வல்லாரா யிருப்பதில்லை. இலக்கியம் வல்லார் இலக்கணம் வல்லாரா யிருப்பதில்லை. இலக்கணம் வல்லார் இலக்கியம் வல்லாரா யிருப்பதில்லை. சமயநூல் வல்லார் இலக்கண, இலக்கிய வல்லாரா யிருப்பதில்லை. இலக்கண இலக்கியம் வல்லாராயிருப்போர், சமயநூல் வல்லவராயிருப்போர் அவற்றைப் பாடஞ்ச் சொல்ல வல்லாரா யிருப்பதில்லை. எழுத்து வல்லார் பேச்சு வல்லாரா யிருப்பதில்லை. பேச்சு வல்லார் எழுத்து வல்லாரா யிருப்பதில்லை. அருளியல் வல்லார் உலகியல் வல்லாரா யிருப்பதில்லை. உலகியல் வல்லார் அருளியல் வல்லாரா யிருப்பதில்லை. இவ்வாறு ஒன்றில் வல்லார் பிரிதொன்றில் வல்லாரல்ல ராதலையே யாண்டும் காண்கிறோம். அன்றும் காண்கிறோம். இன்றும் காண்கிறோம். சென்ற நூற்றாண்டிலே - அடிகள் காலத்திலே - நூல் செய்தல், உரைசெய்தல், பாடஞ் சொல்லுதல், பதிப்பித்தல் என்னும் துறைகளுள் ஒவ்வொன்றில் வல்லாரே பலராக இருந்தனர். 'இயற்றமிழாசிரியர்' என்றே சிலர் வழங்கப்பெற்றதைக் காணலாம். ஒன்றின் மேற்பட்ட துறைகளில் வல்லார் மிகச்சிலரே.

அடிகள் ஒருவரே செய்யுள் நூல் செய்தல், உரைநடை செய்தல், செய்யுள் நூல்களுக்கு உரை செய்தல், பாடஞ்சொல்லல், பதிப்பித்தல் எனும் பலதுறைகளிலும் வல்லராய் மொழிப்புலமை மட்டுமே யன்றி மருத்துவம் முதலிய கலைப்புலமையும் வல்லராய் இவையனைத்தினுக்கும் மேற்பட்ட அருட்புலமையும் முற்றினராய்ப் பன் முகஞானத்தோடு ஒப்பாரும் மிக்காருமின்றி விளங்கினார்.

பலவற்றில் முதன்மையும் தனிச்சிறப்பும்

முற்கூறியவாறு நூலாசிரியராய், உரையாசிரியராய், பதிப்பாசிரியராய், பத்திரிகாசிரியராய், போதகாசிரியராய், ஞானாசிரியராய், வியாக்கியான கர்த்தராய், சித்த மருத்துவராய், சீர்திருத்தவாதியாய், அருட்கவிஞராய், அருண்ஞானியாய்ப் பன்முகஞானத்தோடு விளங்கிய அடிகள், பலவற்றில் முதல்வராயும் தனிச்சிறப்புடையராயும் திகழ்ந்தார்.

சிலவற்றில் முதன்மை

தமிழ்நாட்டில் பொது மக்களுக்கு முதன்முதலாகத் திருக்குறள் வகுப்பு நடத்தியவர் அடிகளே.
தமிழ்நாட்டில் முதன்முதலாக முதியோர் கல்வியை ஏற்படுத்தியவர் அடிகளே.
தமிழ்நாட்டில் முதன் முதலில் மும்மொழிப் பாட சாலை (தமிழ், வடமொழி, ஆங்கிலம்) நிறுவியவர் அடிகளே.
தமிழ்நாட்டின் முதல் கல்வெட்டாராய்ச்சியாளர் அடிகளே.

தனிச்சிறப்பு
தமது கொள்கைக்கென்று ஒரு தனி மார்க்கத்தைக் கண்டவர் அடிகளே.
தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனிச் சங்கத்தை நிறுவியவர் அடிகளே.
தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனிக் கொடி கண்டவர் அடிகளே.
தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனி மந்திரம் கண்டவர் அடிகளே.
தமது மார்க்கத்திற்கென்று ஒரு தனிச் சபையையும் கட்டியவர் அடிகளே.

அடிகளின் கையொப்பம்
சிதம்பரம்
இராமலிங்கம்
என இரண்டு வரிகளாகவும் கையொப்பமிடுவர்.
 

VallalarOrg Sanmarga Foundation - All the contents and mp3 songs on this website are copyrighted and belongs to respective owners. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the audio or documents without our permission is prohibited.
First Launched on Apr-16-1998. Last updated:Aug.04.2013