1. இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
 
1. இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்

திருமுகம் 1

நட்பின் ஆர்வம்

சிவமயம்

அருளறிவொழுக்க முதலிய சுபகுணங்களிற் சிறந்த சிரஞ்சீவி ரத்தின முதலியார்க்கு சிவ கடாக்ஷத்தால் தீர்க்காயுளஞ் சகல சம்பத்தும் உண்டாவனவாக. தமது சுபசரித்திர விபரங்களை அடிக்கடி கேட்க விரும்புகின்றேன்.

மகா ராஜ ராஜ ஸ்ரீ நாயக்கரவர்களுக்கு தற்காலமிருக்கின்ற தேக பக்குவத்தை தெரிந்துகொள்ள வேண்டுமென்கிற விசாரம் மிகவும் உடையவனாக விருக்கின்றேன். நான் அவசியம் இரண்டு அல்லது நான்கு மாதத்திற்குள் அவ்விடம் வருவேன். அதை நாயக்கரவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அவசியம் வருவேன். தாங்களும் சாக்கிரதையோடிருக்க வேண்டும்.

சிரஞ்சீவி நமசிவாயப் பிள்ளை அவ்விடம் படிக்க வேண்டுமென்று வருகின்றான். அவனை படிப்பின் விஷயத்தில் மாத்திரம் அடிக்கடி விசாரிக்க வேண்டும். தங்களுடையவும் நாயக்கருடையவும் க்ஷேம சரித்திரங்களை விரைவில் தெரிந்துக் கொள்ள வேண்டும். மனம் அவலங் கொள்ளுகின்றது. ஆகலில் தெரிவிக்க வேண்டும்.

சிரஞ்சீவி சிரஞ்சீவி

இங்ஙனம்

சிதம்பரம்

இராமலிங்கம்

இஃது

சிரஞ்சீவி இரத்தின முதலியாரவர்களுக்கு

கொடுப்பது.

* * *


திருமுகம் 2

இல்வாழ்வான் இயல்பு

31-5-1858

சிவமயம்

சிரஞ்சீவி இரத்தின முதலியாருக்கு தீர்க்காயுளும் சகல சம்பத்தும் மேன்மேலுண்டாவதாக. இந்தக் கடிதம் கொண்டு வருகிற சி. குமாரசாமி பிள்ளை படிக்க வேண்டுமென்று விரும்பியிருக்கிறபடியால், அவனுக்கு எந்த விதத்தில் படிப்பித்தால் படிப்பு வருமோ அந்த விதத்தில் படிப்பிக்க வேண்டும். சிரஞ்சீவி நமசிவாயத்துக்கும் இதுவே. இது விஷயத்தில் உனக்கு விரித்து எழுதுவதிலுனக்கு மனம் சலிக்கும் என்று இந்த மட்டில் நிறுத்தினேன். உன்னுடையவும் மகாராஜ ராஜ திருவேங்கட முதலியார் முதலானவர்களுடையவுமான விபவ க்ஷேமங்களை தெரிவிக்க வேண்டும். மேலும் தெ.வீட்டுக்கார அம்மாளுக்கு என் வந்தனத்தைக் குறிப்பிக்க வேண்டும். மற்ற சங்கதிகளைப் பின்பு தெரிவிக்கிறேன். நானும் இன்னும் இரண்டு மாசத்தில் வருகிறேன். வேணும் சிரஞ்சீவி.சிவமயம்

சிரஞ்சீவி முருகப்பிள்ளை மாப்பிள்ளைக்கு சகலபாக்கியமும் புத்திர சம்பத்தும் தீர்க்காயுளும் மென்மேலுண்டாவதாக. சிரஞ்சீவி குமாரசாமி அவ்விடம் வருகிறபடியால் அவனுக்கு படிப்பும் முயற்சியும் ஊதியமும் உண்டாகின்ற வகை எவ்வகை - அவ்வகை ஆராய்ந்து கூட்ட வேண்டும். இதுவன்றி உனக்கு முக்கியம் தெரிவிக்க வேண்டுவது ஒன்று என்னென்றால் - பழமை பாராட்டலும் கண்ணோட்டம் செய்தலும் சுற்றந் தழுவலும் அவசியம் சமுசாரிக்கு வேண்டும் என்பது நீ மாத்திரம் அடிக்கடி கவனிக்க வேண்டும். நீ இப்போது முன் மாப்பிள்ளையல்ல, புதுமாப்பிள்ளை. எம்போல்வார் மேல் ஞாபகமிராது ஆதலால் ஞாபகப்படுத்தினேன். நானும் சில மாதத்தில் வருகிறேன், வேணும் சிரஞ்சீவி.காளயுக்தி இங்ஙனம்
வையாசி 16ஆம் நாள் சி. இராமலிங்கம்

இது

சென்னை சி - வி. இரத்தின முதலியாருக்கு

விடுவிக்கப்பட்டது.

* * *


திருமுகம் 3

பஞ்சாக்கர உபதேசம்

சிவமயம்

இது ரகசியம்

அன்பு அறிவு இரக்கம் ஒழுக்க முதலிய நற்குணங்களாற் சிறந்து நமது கண்மணிபோல் விளங்குகின்ற அன்புள்ள தங்களுக்கு சிவபெருமான் திருவருளால் சிவஞானமும் தீர்க்காயுளும் சிந்தித மனோரத சித்தியும் மேன்மேல் உண்டாவதாக. நாளது வரையில் இவ்விடத்தில் மகா ராஜ ராஜ ஸ்ரீ நாயக்கரவர்களும் யானும் க்ஷேமம். தங்களுடைய க்ஷேம விபரங்களை அடிக்கடி தெரிவிக்கவேண்டும். எனக்கு எழுதிய கடிதம் இரண்டும் வரக்கண்டு அறிந்தேன். அந்தக் கடிதங்களில் குறித்தபடி இதன் அடியில் சில சிவசந்நிதான சாட்சியாகத் தெரிவிக்கிறேன்.

பிர்ம விஷ்ணு ருத்திராதிகளுடைய பதங்களும் அந்தக் கர்த்தாக்களும் அவர்களால் சிருட்டி திதி சங்காரம் செய்யப்பட்டு வருகிற தேகாதி பிரபஞ்சங்களும் அனித்தியம் - ஆகலில் - நித்தியமாகியும் என்றும் ஒரு தன்மை யுள்ளதாகியும் சச்சிதானந்த வடிவமாகியும் அகண்ட பரிபூரண வஸ்துவாகியும் விளங்கிய சிவமே நமக்குப்பொருள். அன்றியும், தாய் தந்தை குரு தெய்வம் சிநேகர் உறவினர் முதலியவர்களும் மேற்குறித்த சிவத்தின் திருவருளேயல்லது வேறில்லை. நாம் பல சனனங்களையுந் தப்பி மேலான இந்த மனிதப் பிறவி யெடுத்தது சிவத்தின் திருவருளைப் பெறுவதற்கே. எவ்வகைப் பிராயாசத்தினாலாவது அந்த அருளை அடைய வேண்டும். அந்த அருள் எவ்வகையால் வருமென்றால் - எல்லாவுயிர்களிடத்திலும் தயவும் பிரபஞ்சத்தில் வெறுப்பும் சிவத்தினிடத்தில் அன்பும் மாறாது நம்மிடத்திருந்தால் அவ்வருள் நம்மையடையும். நாமும் அதனையடைந்து எதிரற்ற சுகத்திலிருப்போம். இது சத்தியம் இனி மேற்குறித்த சாதனத்தை நாம் பெறுவதற்கு சிவபஞ்சாக்ஷரத் தியானமே முக்கிய காரணமாக இருக்கிறது. ஆகலில், இடைவிடாது நல்ல மனத்தோடு அதனை தியானிக்க வேண்டும். அதனையிதனடியில் குறிக்கின்றேன்.

- ஓம் சிவாயநம -

"நானேயோ தவஞ் செய்தேன் சிவாயநம வெனப் பெற்றேன்".1

"சிவாய நமவென்று சிந்தித்திருப்பார்க் கபாய மொருநாளு மில்லை"2

"நான் செய்த புண்ணியம் யாதோ சிவாயநம வெனவே ஊன் செய்த நாவைக்கொண்டோதப்பெற்றேன்"3

இதனைக் கண்டு தியானித்து வந்தால் பின்பு எல்லாம் விளங்கும்.

தை மாதம் 7ஆம் நாள் சி. இராமலிங்கம்

இதை மற்றவர்களுக்கு வாசித்துக் காட்டப்படாது

இது

சிரஞ்சீவி மகா ராஜ ராஜ ஸ்ரீ இரத்தின முதலியார்

அவர்களுக்கு கொடுப்பது

சிவானுக்கிரகம் விளங்க.

* * *

1. நானேயோ தவம்செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன்
தேனாய் இன் னமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான்
தானேவந்து எனதுள்ளம் புகுந்து அடியேற்கு அருள்செய்தான்
ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே.
- திருவாசகம் 553.2. சிவாய நமவென்று சிந்தித் திருப்பார்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம்
விதியே மதியாய் விடும். - நல்வழி 15 (ஔவையார்)

3. நான்செய்த புண்ணியம் யாதோ சிவாய நமவெனவே
ஊன்செய்த நாவைக்கொண் டோதப்பெற் றேன்எனை ஒப்பவரார்
வான்செய்த நான்முகத் தோனும் திருநெடு மாலுமற்றைத்
தேன்செய்த கற்பகத் தேவனும் தேவருஞ் செய்யரிதே.
__ திருஅருட்பா 2260

******************

திருமுகம் 4

அருள் அறம்

27-5-1860சிவமயம்

சிரஞ்சீவி நமது ரத்ந முதலியாருக்கு சிவ கடாக்ஷத்தினால் தீர்க்காயுளும் சகல சம்பத்தும் மேன்மேல் உண்டாவதாக. தாம் எழுதிய கடிதம் வரக்கண்டு அதிலுள்ளவைகளை அறிந்து கொண்டேன். பரம சிவத்தினிடத்தே மாறாது மனத்தை வைத்துக்கொண்டு புறத்தே ஆயிரம் பெண்களை விவாகஞ் செய்துக் கொள்ளலாம். அன்றியும், விவாகஞ் செய்துக்கொண்டாலும் அதனால் வருத்தப்பட நம்மை சிவபெருமான் செய்விக்க மாட்டார். ஆதலால் சந்தோஷமாக விவாகத்துக்குச் சம்மதிக்கலாம். தாம் தடை செய்ய வேண்டாம். எந்தக் காலத்தில் - எந்த இடத்தில் - எந்தவிதமாக - எந்த மட்டில் - எதை அனுபவிக்க வேண்டுமோ அதை அந்தக் காலம் - அந்த இடம் - அந்த விதம் - அந்த மட்டு - பொருந்தப் பொசிப்பிக்கின்றது திருவருட் சத்தியாயிருந்தால், நமக்கென்ன சுதந்தரமிருக்கின்றது. எல்லாம் திருவருட்சத்தி காரியமென்று அதைத் தியானித்திருக்க வேண்டும். உண்மை இது. இதைக் கொண்டு தெளிந்திருக்கவேண்டும்.

சிரஞ்சீவி சுந்தரப்பிள்ளை தமக்குக் கொடுக்க வேண்டிய ரூ.10-ம் இன்னம் இரண்டு மூன்று மாசத்தில் கொடுப்பார். அவ்வளவு காலமும் சகித்திருந்து வாங்கிக்கொள்ள வேண்டும்.

தாம் சிவத்தியானத்தை விடாது, செய்ய வேண்டிய காரியங்களைச் செய்து வரவேண்டும். வாழ்க வாழ்க.

சிதம்பரம் இராமலிங்கம்

ரவுத்திரி வருஷம் வையாசி மாதம் 16ஆம் நாள்

இஃது

மகா ராஜ ராஜ ஸ்ரீ இரத்ந முதலியார் அவர்களுக்கு

* * *

திருமுகம் 5

இறை எண்ணம் எஞ்சாத உலகியல்சிவமயம்

சிரஞ்சீவி ரத்ன முதலியாரவர்களுக்கு நடராஜானுக்கிரகத்தால் சிவக்கியானமும் தீர்க்காயுளும் சகல சம்பத்தும் மேன்மேல் உண்டாவதாக. தங்கள் மணக்கோலத்தை காணக் கொடுத்து வையாதவனாகவிருந்தாலும் கேட்டு மகிழும்படி பெற்றேன். தங்கள் சுபசரித்திர விபரங்களை அடிக்கடி தெரிவிக்க வேண்டும். தாங்கள் சிவசிந்தனையை விடாமல் சர்வ சாக்கிரதையோடு லௌகீகத்தை நடத்தி வரவேண்டும். அசலார் யாராவது இவ்விடம் வருகின்றவர்களிடத்தில் ஒன்று அல்லது இரண்டு லாங்கிளாத்து பீசு வாங்கி அனுப்பினால் அதன் கிரயத்தை பின்பு செலுத்திவிடலாம். இதற்கு பிரயாசம் வேண்டாம். இதற்குள் வைத்த கடிதங்களில் ஒன்று மகா ராஜ ராஜ ஸ்ரீ சூரி செட்டியார் சோமு செட்டியார் வசம் கொடுக்க வேண்டும். தாங்களே போய்க்கொடுக்க வேண்டும். கேட்டால் மனிதர் மூலியமாக வந்ததாகச் சொல்ல வேண்டும். மற்றொன்று நாயக்கர்வாள் தாயார் இருக்கிற ராணிப்பேட்டைக்கு தபால் மூலமாக அனுப்பவேண்டும். நான் இன்னும் சில நாள் பொறுத்து வருகிறேன். வேணும்.

இது ரகசியம்

ஆடி மாதம் 16ஆம் நாள்

இங்ஙனம்
சி. ராமலிங்கம்.

ஆறுமுகப் பிள்ளை அத்தான் கடிதம் - கிஷ்ணப்ப நாய்க்கன் அக்கிராரம் ராமாஞ்சு கட்டடத் தெருவு கீழண்டை வாடை செல்லப்ப முதலியார் கடிதம் சேர்க்கவேண்டும்.

இஃது
நல்லண்ண முதலியார் தெருவு சுப்பராய பிள்ளை
வீட்டுக் கெதிர்வீடு மஹாராஜஸ்ரீ
ரத்தன முதலியாரவர்களுக்கு
* * *


திருமுகம் 6
ஆயிரம் பணக்காரர்களை அரை நிமிடத்தில் அதிட்டிக்கலாம்சிவமயம்

சிரஞ்சீவி இரத்தின முதலியாருக்கு அம்பலவாணர் அனுக்கிரகத்தினால் தீர்க்காயுளுஞ் சிவக்கியானமும் சகல சம்பத்து மேன்மேலுண்டாவதாக. தமது சுப விபவங்களும், ராஜராஜ ஸ்ரீ திருவேங்கட முதலியார் முதலியவர்களது சுப சரித்திரங்களும் அடிக்கடி கேட்க விரும்புகிறேன். இங்ஙனம் யானும் ராஜ ராஜ ஸ்ரீ நாயக்கரவர்களும் க்ஷேமம். தாம் முன்னர் எழுதிய கடிதமும் பின்னர் எழுதிய கடிதமும் அதன் பின்னர் பங்கியில் வரவிடுத்த வத்திரமும் அது அது வரத்தக்க காலங்களில் வரக் கண்டு கொண்டேன். வருத்தம் பாராது வரவிடுத்த ஒரு பீசும் ஒன்பது லக்ஷம் பீசுகளாகக் கொண்டேன். இதுவே அமையும். இனி வருத்தம் எடுத்துக்கொள்ள வேண்டாம். பின்பு பார்த்துக் கொள்ளலாம். இது வன்றி என் பொருட்டு வேறு வகைகளாலும் பிரயாசமெடுத்துக் கொள்ள வேண்டாம். தாமாத்திரம் க்ஷேமமாக சிவானுக் கிரகத்தால் சலிப்பற நெடுங்காலம் வாழ்வுற நான் கண்டு களிப்பதே எனக்குப் போதுமான திர்ப்த்தி. இது உண்மை உண்மை. நான் சிலகாலஞ் சென்று அவ்விடம் வருவதற்கு எண்ணங் கொண்டிருக்கிறேன்.

ஆனால் எமது ஆண்டவன் திருவுள்ளம் எவ்வண்ணமோ தெரிந்ததில்லை. ஆயினும், நான் அங்ஙனம் வருவதற்குள் தாம் இங்ஙனம் வருவதற்குக் கூடுமான கால நேரிடின் தாம் வரவும் நான் காணவும் ஆவலுள்ளவனாகவே இருக்கின்றேன். கூடுமான கால நேராவிடில் வர வேண்டுவதில்லை. நான் வந்து காண்கிறேன். அன்றி தாம் சாக்கிரதையாக தமது தேகத்தை உபசரித்து வர வேண்டும். வரவுக்குத் தக்க செலவு செய்ய வேண்டும். இனி விசேடமான அலுவல் நேரிடுகிற பரியந்தம் இப்பொழுது நேரிட்டிருக்கின்ற அலுவலைப் பார்த்து வர வேண்டும். என் எண்ணத்தின்படி ஆண்டவன் விரைவில் தமக்கு விசேஷ சவுக்கியத்தை யுண்டுபண்ணுவார் என்கிற நம்பிக்கையையுடையவனாக இருக்கிறேன். தாம் இடைவிடாது பரமசிவமே பொருளெனக் கொண்டுப் பஞ்சாக்கரத்தையே சிந்தித்து வரவேண்டும். நான் ராஜராஜஸ்ரீ சோமு செட்டியார்க்குக் கடிதம் எழுதவே மாட்டேன். அவர் கல்யாணத்துக்கு எனக்கொரு கடிதம் எழுதினார். அதற்குப் பதிலாகவும், அவர் அன்பை சோதிக்கும் பொருட்டாகவுமே எழுதி தம்மாற் கண்டு கொண்டது. இவரைப்போல் ஆயிரம் பணக்காரர்களை அரை நிமிடத்தில் அதிட்டிருக்கலாம். நமக்கு இவர்களெல்லாம் ஒரு திரணமாகத் தோற்றுகின்றார்கள். இவர்கள் லக்ஷியம் வேண்டுவதில்லை. நாம் சிவபெருமான் திருவடிகளுக்கு அடிமையானோம். நமக்கு ஒரு விதத்தாலுங் குறை வில்லை. இது உண்மை.

சிரஞ்சீவி சிரஞ்சீவி.

சி. ராமலிங்கம்

இஃது
சென்னப்பட்டணம் பெத்து நாய்க்கன்பேட்டை
ஏழுகிணற்றண்டை வீராசாமிப் பிள்ளை தெருவில்
3ஆவது கதவு நெம்பர் வீட்டில் மகா ராஜ ராஜ ஸ்ரீ
முதலியார் இரத்தின முதலியாரவர்களுக்கு சேர்ப்பிக்க
வேண்டும்.
* * *


திருமுகம் 7
சாதுக்கள் சார்புசிவமயம்

நற்குணங்களிற் சிறந்து சிவானுபவ விருப்பத்திற் சித்தத்தை வைத்து நமது கண்மணிபோல் விளங்கிய சிரஞ்சீவி இரத்தின முதலியாருக்கு தீர்க்காயுளும் சிவக்கியானமும் சகல சம்பத்தும் மேல் மேல் உண்டாவனவாக.

தமது சுப சரித்திர விபவங்களையும் ராஜராஜஸ்ரீ திருவேங்கட முதலியார் முதலாகியவர்களது விபவங்களையும் கேட்க விருப்பமுள்ளவனாகவிருக்கிறேன்.

செய்யுள்

உய்வ தாமிது நங்குரு வாணையொன் றுரைப்பேன்
சைவ மாதிசித் தாந்தத்து மறைமுடித் தலத்தும்
நைவ தின்றியாங் கதுவது வாயது நமது
தெய்வ மாகிய சிவபரம் பொருளெனத் தெளிவீர்.

இங்ஙனம் சிவபரம்பொருளை அனுபவித்தற்கு முக்கியம் ஜீவ காருண்யம். பாசவைராகம், சிவபத்தி. இவை கிடைத்தற்கு முதற் கருவி சாதுக்கள் சார்வு. ஆகலின் அவசியம் சாதுக்கள் சார்பு வேண்டும். நல்லது, சாதுக்கள் சார்பு, தற்காலத்திற் கிடைப்பினுங் கிடையாவிடினும் நம்மை எழுபிறப்பென்னும் பெருங்கடலைக் கடப்பித்துப் பேரின்பமென்னும் கரையிலேற்றும் சைவப் பதியிற்றெய்வப் புணையாக வாய்த்த திருமந்திரமாகிய பஞ்சாக்கரத்தை இடைவிடாது சிந்தித்துக் கொண்டும் சிவபிரான் திருவடிகளைப் பாவித்துக் கொண்டும் வருவது முக்கியத்தினு முக்கியம். ஆகலில் நமக்கு இது அவசியம் பற்ற வேண்டிய காரியம். மற்றவைகளைக் குறித்து அறிவறிகத் தமது நன்மனத்திற்கு நான் விரிக்க வேண்டுவதில்லை. இனி - திரவிய விஷயத்தில் என்னைக் குறித்து விசேஷ முயற்சியெடுத்துக் கொள்ள வேண்டாம்.
... ... ... ...
... ... ... ...
... ... ... ...
... ... ... ...
அனுப்பும்படி நேரிட்டால் ரிஜிஸ்டர் செய்து அனுப்ப வேண்டும். நான் அவசியம் பங்குனி மாதத்திற்குள் வந்து சேருவேன். தாம் தேக முதலியவற்றை, பக்குவமாகத் திருவருள் சகாயத்தால் காத்தல் வேண்டும். இங்ஙன ராஜராஜஸ்ரீ நாயக்கர்வாள் க்ஷேமம். அவர்கள் தாயாரிடத்திலிருந்து ஏதாவது கடிதம் வரில் இங்கே அனுப்ப வேண்டும். வேணும் சிரஞ்சீவி.

சிதம்பரம்
இராமலிங்கம்

இஃது
சென்னப்பட்டணம் பெத்து நாயக்கன் பேட்டை ஏழு
கிணற்றண்டை வீராசாமிப் பிள்ளை தெருவில்
ராஜராஜஸ்ரீ சுப்பராய பிள்ளையவர்கள் வீட்டுக்கு
எதிர்வீடு மகாராஜராஜஸ்ரீ முதலியார்
இரத்தின முதலியார் அவர்களுக்கு சேர்வது.*
* இது கூடலூரில் தபாலில் சேர்க்கப்பெற்ற தேதி 3-9-1860
* * *

திருமுகம் 8
அபேத நேயம்
16-9-1860


சிவமயம்

அன்பு அறிவு முதலிய நற்குணங்களிற் சிறந்து சிவநேசத்தான் மேம்பட்டெமது கண்மணி போன்று விளங்கிய சிரஞ்சீவி ரத்தின முதலியாருக்கு சிவக்கியானமும் தீர்க்காயுளும் சகல சம்பத்தும் மேன் மேல் உண்டாவதாக. அவ்விடத்திய சுபசரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க விரும்புகிறேன். தாம் ரிஜிஸ்டர் செய்வித்து அனுப்பிய கடிதமும் அதற்குள் அடங்கிய இருபத்தைந்து ரூபாய் நோட்டும் தாமசப்படாமல் வந்து சேரப் பெற்றுக்கொண்டேன். இது விஷயத்தில் தமக்கு விசேஷம் பிரயாசம் நேரிடச் செய்கிறேன். ஆயினும் அந்தப் பிரயாசம் சிவ கடாக்ஷத்தால் நேரிட்டதாகலின் பின்பு தமக்கும் எனக்கும் தடைபடாத நிம்மதியையும் சத்துவ சந்தோடத்தையும் உண்டுபண்ணுமென்கிற நிச்சயித்தினால் நாணாது தெரிவிக்க நேரிட்டது. ஆனால் இது குறித்து விசேஷ முயற்சியும் பிரயாசமும் தமக்கு நேரிடுமே என்ன செய்வது என்கிற விசாரமும் ஒரு பக்கம் உடையவனாகவேயிருக்கிறேன். இனி வேறு வகையாற் பலவாக விரிப்பதென்ன. நானே தாமாகவும் தாமே நானாகவும் பழமை தொட்டு வந்த அபேத நேயத்தை எண்ணி, மற்ற இடங்களில் கனவிலும் லக்ஷியஞ் செய்து குறிக்கப்படாத குறிப்பை தம்மிடத்தே குறித்தேன். இது எம்பெருமானுக்கும் சம்மதமாகவிருக்கும். ஆகலில் தமக்கும் சம்மதமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். இவை தாம் வாங்குகிற இடமும் வாங்குகிற வகையும் அதற்கு எல்லையிட்டுக் கொண்ட வண்ணமும் மற்றவைகளையும் தெரிவிக்க வேண்டும். இவ்விடத்தில் மகாராஜராஜஸ்ரீ நாயக்கர் அவர்களும் யானும் மற்றவர்களும் க்ஷேமம்.

இங்ஙனம்
சிதம்பரம்
இராமலிங்கம்

புரட்டாசி மாதம் 2ஆம் நாள்

இஃது
சென்னப்பட்டணம் பெத்துநாய்க்கன் பேட்டை ஏழு
கிணற்றுக்கு அடுத்த கீழண்டை வீராசாமிப் பிள்ளைத்
தெருவில் ராஜராஜஸ்ரீ சுப்பராயப்பிள்ளையார்
வீட்டுக்கு எதிர்வீட்டில் இருக்கும் மகாராஜராஜஸ்ரீ
ரத்தன முதலியாரவர்களுக்குக் கொடுப்பது
சரூர் சரூர்.
* * *

திருமுகம் 9
அமைதி இன்மைசிவமயம்

அன்பு அறிவு தயவு முதலிய நற்குணங்களிற் சிறந்து எனது கண்மணி போன்று எனது இதயத்திருக்கும் சிரஞ்சீவி ரத்ந முதலியார்க்கு சிவக்கியானமுந் தீர்க்காயுளுஞ் சகல சம்பத்தும் மேன்மேல் உண்டாவதாக. தாம் அனுப்பிய கடிதமும் பங்கியில் அனுப்பிய புத்தகங்களும் வந்து சேர்ந்தது. சேர்ந்தவென்று தெரிவிப்பதற்கு அமைதியின்மையில் கால நீட்டித்தது. ஆதலின் அது குறித்து வேறு நினைக்க வேண்டா.

இவ்விடம் வருவதற்கு எவ்விதத்தாலும் தடையில்லாதிருந்தால் வரல் வேண்டும். அன்றி அலுவலால் - காலத்தால் - இடத்தால் - வேறு வகையால் சிறிது சிறிது தடை நேரினும் தாம் இங்கு வரல் வேண்டா. யான் அவசியம் தை மாசி அல்லது பங்குனி இவைக்குள் அங்கு ஓர் காரியம் பற்றி வருவதாக நிச்சயித்திருக்கின்றேன். ஆகலில் தடையுண்டாயின் வருதல் தவிர்க. இன்றாயின் வருக. இங்ஙனம் யானும் மகாராஜராஜஸ்ரீ நாயக்கரவர்களு மற்றவர்களும் க்ஷேமம். தமது சுப சரித்திரங்களும் மகாராஜராஜஸ்ரீ திருவேங்கட முதலியார் சுப சரித்திரங்களும் அடிக்கடி வெளிப்படுத்துக.

வேணும் சிரஞ்சீவி.

கார்த்திகை மாதம்  26ஆம் நாள் 

சிதம்பரம் இராமலிங்கம்
இஃது
சிரஞ்சீவி நமது இரத்ந முதலியார் அவர்கட்கு
* * *


திருமுகம் 10

நிர்ப்பந்த ஏற்பாடு

30-12-1860சிவமயம்

நற்குணங்களெல்லாவற்றிற்கும் இடனாகிய நன்மனக் கருவியொடு எனது இதயத்திடைவிடாது இருக்கின்ற சிரஞ்சீவி இரத்திந முதலியாரவர்கட்கு சிவானுக்கிரகத்தால் தீர்க்காயுளும் சிவஞானமும் சகல சம்பத்து மேன்மேல் உண்டாவதாக. நாளது வரையில் இவ்விடத்தில் யானும் மகாராஜராஜஸ்ரீ நாயக்கரவர்களும் க்ஷேமம். தமது சுபசரித்திரங்களை கேட்க ஆசையுள்ளவனாகவிருக்கின்றேன். எனக்கும் நாயக்கரவர்களுக்கும் தபால் மார்க்கமாகத் தாம் அனுப்பிய கடிதங்கள் வந்து சேர்ந்து சங்கதிகளை தெரிந்து கொண்டேன்.

நான் சென்னப்பட்டணம் விட்டு இவ்விடம் வந்த நாள் தொடங்கி நாளது வரையில் பாடிய பாடல்கள் பல. அவைகளை முழுதும் எழுதி வைக்க வேண்டுமென்கிற லக்ஷியம் எனக்கு இல்லாமையால் அப்படி அப்படி சிதறிக் கிடக்கின்றன. ஆயினும் அவைகளைச் சேர்ப்பிக்க சுமார் இரண்டு மாதம் பிடிக்கும். ஆகலால் நான் பங்குனி மாதம் அவசியம் வருகிறேன். வரும்போது கொண்டு வருகிறேன். இது உண்மை. எவ்விதமாவது 2 மாதத்திற்குள் தமது இடத்தில் இருக்கச் செய்கிறேன். குமாரசாமி பிள்ளை சண்முகப் பிள்ளை ரெட்டியார் இவாள் இடங்களில் தற்காலம் இருக்கின்ற பாடல்கள் சுமார் 50-க்கு உட்பட்டதாகவே இருக்கும். வெளிப்பட்ட பாடல்கள் பலபல. ஆகலால் மன்னிக்க வேண்டும்.

அன்புள்ள என் கண்மணி போன்ற தாம் இனி இதனடியில் எழுதுகின்ற வண்ணம் செய்ய - பிரார்த்திக்கிறேன். அதாவது இந்தப் பாடல்கள் பங்கியில் அனுப்பி என்னிடஞ் சேர்கின்ற பரியந்தம் நான் ஒருவேளை போசனந்தான் செய்வேன் என்று எழுதியதைப் பார்த்த பின்பு நான் சாப்பிடுகிற சாதம் உடம்பில் பொருந்தவில்லை. பட்டினி கிடந்தவனைப் போல இருக்கிறேன். ஆதலால் என்னை நிம்மதியுள்ளவனாக்க எண்ணங்கொண்டு ஒருவேளை போசனங் கொள்ளுகிற நிபந்தனை நீக்கி உடனே தபாலில் எனக்குத் தெரிவித்தால் அல்லது நான் சலிப்பைத் தவிரேன். ஒருவேளை போசனம் உள்ளவனாகவே இருப்பேன். இது சத்தியம். என் மேல் ஆணை. தாம் மேற்குறித்த நிற்பந்த ஏற்பாட்டைத் தவிர்த்து உடனே யெனக்குத் தெரியப் படுத்த வேண்டும். 2 மாதத்திற்கு பின்பு பாடல்கள் அவசியம் சேரும்.

சிதம்பரம் இராமலிங்கம்

மார்கழி மாதம்  18ஆம் நாள் 

இஃது
சென்னப்பட்டணம் பெத்து நாய்க்கன்பேட்டை ஏழு
கிணத்துக்கு அடுத்த வீராசாமிப் பிள்ளைத் தெருவில்
கலக்டர் கச்சேரி ராஜ ராஜ ஸ்ரீ சுப்பராயப்
பிள்ளையவர்கள் வீட்டிற்கு எதிர்வீட்டில் ராஜ ராஜ
ஸ்ரீ ரத்தின முதலியார் அவர்களுக்கு வருவது
* * *


திருமுகம் 11
தற்காலத்தில் சிதம்பரம்
20-3-1861சிவமயம்

அன்பறிவொழுக்கத்தாற் சிறந்து நமது கண்கள் போன்று விளங்கிய சிரஞ்சீவி ரத்ன முதலியார்க்கு சிவானுக்கிரகத்தால் தீர்க்காயுளும் சகல சம்பத்தும் சிவக்கியானமும் மேன்மேல் உண்டாவனவாக. இங்கு மகாராஜராஜஸ்ரீ நாயக்கரவர்களும் யானும் க்ஷேமம். அங்கு தமது சுபசரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க விரும்புகின்றேன்.

தாம் மாசி மாதம் 20ஆம் தேதி வரைந்து விடுத்த கடிதம் பங்குனி மாதம் உஆம் தேதி காணப்பட்டது. அக் கடிதத்திற் குறித்த வண்ணம் சிதம்பரத்தில் வசிப்பது சம்மதமானாலும் இது விஷயத்தில் வசிப்பது சம்மதமின்று. ஏனெனில் சிதம்பரத்தில் பச்சையப்ப முதலியார் இஸ்கூல் கிரமமல்லாததாகத் தற்காலத்தில் காணப்படுகிறது. அன்றியும் அவ்வலுவல் இராஜாங்க சம்பந்த அலுவலாகவிருந்தால் நன்றாகவிருக்கும். அவ்வாறின்றி ஒருமையில்லாத சில இந்துக்கள் சம்பந்தமானதாக விருக்கின்றது. சிதம்பரம் தற்காலத்தில் நமது உயிர்த் துணைவராகிய நடராஜப் பெருமானைப் பற்றி நாம் போவதற்கும் இரண்டொரு தினம் இருப்பதற்கும் தக்கதேயன்றி வேறொரு வகையாலுந் தக்கதாகத் தோன்றவில்லை. ஆயின் அது கலிகால வண்ணம். ஆகலின் இதனடியில் எழுதுஞ் சில வரிகளிற் குறித்த வண்ணத்தை முழுதும் நம்ப வேண்டும். அதாவது நான் இந்த மாசக் கடையிலாவது சித்திரை மாச முதலிடை கடையிலாவது அவ்விடம் வருவேன்.

வந்த பின்பு என் கருத்தை வெளிப்படுத்துகிறேன். எந்த விதத்தாலும் தாம் என் சமீபத்திலிருக்க வேண்டு மென்றே இரவும் பகலும் எம்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன். என் பிரார்த்தனைப் பிரகாரம் இன்னஞ் சில காலத்துள் கூட்டுவிப்பார். இதற்குச் சந்தேகமிராது. ஆதலின் அங்கு நான் வருமளவும் சகித்திருக்க வேண்டும். சிவ பஞ்சாக்கரத்தை சதா கருத்தில் வைத்துக் கொண்டே காரியங்களை நடத்த வேண்டும். எவ்வகையிலும் என் தேகம் இருந்தால் சமீபத்திலிருக்கும்படி சிவானுக்கிரகத்தால் செய்துக்கொள்ளுவேன். தாம் இது குறித்து சலனப்பட வேண்டாம். தேக முதலான கருவிகளைப் பக்குவமாகப் பாராட்டிக் கொண்டு வரவேண்டும். மேற்குறித்தபடி வருகிறேன். விண்ணப்பக் கலிவெண்பா, நெஞ்சறிவுறுத்தல் இவைகளை அங்கிருந்து இங்கு வந்திருந்து பிரயாணப்பட்டங்கு வருகின்ற பெரிய தமக்கையார் வசத்தில் சுமார் ஒரு மாதமாயிற்று, கொடுத்தனுப்பினேன். அவாள் மத்தியில் கருங்களவால் கையில் மெய்யில் உள்ளவைகளெல்லாம் இழந்து விட்டதாகக் கேள்விப்பட்டேன். அவாள் இன்னு மத்தியில் பந்துக்களிடமாக இருக்கின்றார்கள் போலக் காணுகின்றது. ஆகலின் அவர்கள் அவ்விடம் வந்தவுடன் மேற்படி புத்தகங்களைச் சேர்ப்பிப்பதும் அல்லாததும் உடனே அவசியம் எனக்குத் தெரியப்படுத்த வேண்டும். மற்ற சங்கதிகளெல்லாம் நான் அவ்விடம் வந்த பின்பு பேசிக் கொள்ளலாம். சிரஞ்சீவி சிரஞ்சீவி.

பங்குனி மாதம் 6ஆம் நாள் இங்ஙனம்

சிதம்பரம் இராமலிங்கம்.

இஃது
சென்னப்பட்டணம் பெத்து நாய்க்கன்பேட்டை
ஏழுகிணற்றுக்குக் கீழண்டை வீராசாமிப்பிள்ளை
வீதியில் மகா ராஜ ராஜஸ்ரீ சுப்பராயப்
பிள்ளையவர்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் மகா ராஜ
ராஜஸ்ரீ இரத்தின முதலியார் அவர்களுக்கு.
ஜரூர் ஜரூர்
* * *

திருமுகம் 12
பாலும் நீரும் போலும் பார்ப்பன சினேகம்
7-5-1861


என் மனத்தில் இடைவிடாது விளங்குகின்ற குணமணியாகிய சீரஞ்சீவி ரத்ன முதலியாருக்கு சிவானுக்கிரகத்தால் தீர்க்காயுளுஞ் சிவக்கியானமுஞ் சகல சம்பத்தும் மென்மேல் உண்டாவதாக. தமது சுப சரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க விருப்பமுள்ளவனாக விருக்கிறேன். நான் வையாசி மாசம் 30ஆம் தேதிக்குள்ளே அவ்விடம் வருவேன். அவசியம் தியாகராஜப் பெருமானையும் உன்னையும் காண வேண்டும் என்கிற விருப்பம் விசேக்ஷமுள்ளவனாக விருக்கிறேன். ஆதலால் வருவது நிச்சயம் நிச்சயம். இது அன்றி பகவத் பத்தியிற் சிறந்தவராகிய வரதாசாரிய சுவாமிகள் திருவையிந்திர புரத்துக்கு வந்ததாகக் கேள்விப்பட்டேன். அந்த சுவாமிகளைச் சென்னப்பட்டணத்தில் தாம் கண்டால் ஒன்று சொல்ல வேண்டுவது.

அதென்ன வெனில்பாலு நீரும்* போலும் பார்ப்பன சிநேகம்
என்று நான் தெரிவித்ததாகத் தெரிவிக்க வேண்டும்.

வேணும் சிரஞ்சீவி

இங்ஙனம்
சிதம்பரம்
சித்திரை மாதம் 27ஆம் நாள் இராமலிங்கம்

இஃது

சென்னப்பட்டணம் பெத்து நாய்க்கன் பேட்டை
ஏழுகிணற்றண்டை வீராசாமிப் பிள்ளை தெருவு,
கலக்டர் கச்சேரி சுப்பராயப் பிள்ளை அவர்கள்
வீட்டிற்கு எதிர்வீடு மகாராஜராஜஸ்ரீ முதலியார்
ரத்தின முதலியார் அவர்கட்கு

**************
* பேயும் அஞ்சுறும் பேதை யார்களைப் பேணும் இப்பெரும் பேய னேற்கொரு
தாயும் அப்பனும் தமரும் நட்பும்ஆய்த்
தண்அ ருட்கடல் தந்த வள்ளலே
நீயும் நானும்ஓர் பாலும் நீருமாய்
நிற்க வேண்டினேன் நீதி ஆகுமோ
சாயும் வன்பவம் தன்னை நீக்கிடும்
சாமி யேதிருத் தணிகை நாதனே.
மாலின் வாழ்க்கையின் மயங்கி நின்பதம்
மறந்து ழன்றிடும் வஞ்ச நெஞ்சினேன்
பாலின் நீர்என நின்அ டிக்கணே
பற்றி வாழ்ந்திடப் பண்ணு வாய்கொலோ
சேலின் வாட்கணார் தீய மாயையில்
தியங்கி நின்றிடச் செய்கு வாய்கொலோ
சால நின்உளம் தான்எவ் வண்ணமோ
சாற்றி டாய்திருத் தணிகை நாதனே.
- திருஅருட்பா 138;140
* * *********

திருமுகம் 13

அருந்தல் பொருந்தல் அளவு

10-6-1861சிவமயம்

அன்பு அறிவு தயவு சிவநேய முதலிய நற்குணங்களிற் சிறந்து என்னிரு கண்மணி போன்றென் னிதயத் திருக்கும் சிரஞ்சீவி சிரஞ்சீவி ரத்தன முதலியாரவர்கட்கு சிவானுக்கிரகத்தால் தீர்க்காயுளும் சிவக்கியானமும் சௌக்கிய தேகமும் சகல சம்பத்து மேன்மேலுண்டாவனவாக. தமது சுப சரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க விரும்புகிறேன். தாம் வைகாசி மாதம் 19ஆம் தேதியில் வரைந்துவிடுத்த கடிதம் மேற்படி மாதம் 30 ஆந்தேதியில் என்னிடம் வரப்பெற்றேன். அவ்வளவு காலம் கடிதம் தாமசப்பட்டதற்குக் காரணம் கடிதம் மேல் விலாசத்தில் கூடலூர் ஜில்லா தபால் ரயிட்டர் என்று குறித்திருந்தது பற்றி. ஆகலில் இனி வரைந்தனுப்பும்போது பரங்கிப்பேட்டை தபால் ரயிட்டர் பார்வையிட்டு புவனகிரியைச் சார்ந்த கருங்குழி என்று வரையவும். அன்றி, கூடலூர் ஜில்லா தபால் ரயிட்டர் மேல்விலாசம் பார்வையிட்டு மேற்படி துக்குடியைச் சார்ந்த கருங்குழியிலிருக்கும் என்றாவது வரையவும். இவ்விருவகையுமில்லாமல் கூடலூர் ஜில்லா தபால் ரயிட்டர் மேல் விலாசம் பார்வையிட்டு புவனகிரியைச் சார்ந்த கருங்குழி என்று வரைந்தால் நாட் செல்வதுமன்றி தபால் கூலியும் இரட்டிக்கும். இது அறிக.

இனி, தாம் தம்முடைய தேகத்தை சாக்கிரதையாக உபசரித்து வர வேண்டும். சாக்கிரதை என்பது அருந்தல் பொருந்தல்களில் மிதபோசனம் மிதபோகம். மித போஜனமாவது - கோபம் - விராகம் - அலக்ஷியம் - முயற்சி - விரைவு இவை முதலிய ஏதுக்களால் குறைத்தல் - விருந்து சுவை விருப்ப முதலிய ஏதுக்களால் ஏற்றல் இல்லாமல் சமமாகப் பொசித்தலாம். மித போகமாவது அதிபரிச்சயம் அதிஞாபக முதலிய ஏதுக்களால் இரவு பகல் தோற்றாது பொருந்தல். விராகம் அலக்ஷிய முதலிய ஏதுக்களால் பொருந்தாதிருத்தல். இவை இரண்டுமின்றி மாதத் திரண்டுவிசை மாதரைப்புல்குவது என்றபடி பொருந்தலாம். ஆகலின் இவ்வாறு நடத்த வேண்டும். இனி மருந்து கொள்ளும்போது நெய் நல்லதாகக்கொண்டு சாப்பிட வேண்டும். பாலும் அவ்வாறே. நான் தம்முடைய தேகத்திற்கு விசேஷம் திடம் உண்டாகத்தக்க அவுஷதங்கொண்டு வருவேன். அது பரியந்தம் முன் குறித்தபடி சாக்கிரதையாக இருக்க வேண்டும். நமக்கு எவ்விதத்தாலும் சிவபெருமான் திருவடியும் சிவபஞ்சாட்சரியும் அன்றி வேறு சகாயில்லை. ஆகலில் அவைகளை இடைவிடாது சிந்திக்க வேண்டும். மகாராஜராஜஸ்ரீ நாயக்க ரவர்களுடைய சம்மதமும் இது. வேணும்.

சிரஞ்சீவி
சிதம்பரம் இராமலிங்கம்
வையாசி மாதம்  30ஆம் நாள்

இஃது
சென்னப்பட்டணம் பெத்துநாயக்கன் பேட்டை ஏழு
கிணற்றுக்கு அடுத்த வீராசாமிப் பிள்ளைத் தெருவு
கலக்டர் கச்சேரி மகாராஜராஜஸ்ரீ சுப்பராயப் பிள்ளை
அவர்கள் வீட்டிற்கு எதிர்வீடு மகாராஜராஜஸ்ரீ
இரத்தின முதலியார் அவர்கட்கு
சரூர் சரூர் சரூர்
* கையொப்பமிட்டிருக்கக் கூடிய இடம் வழிபாட்டிற்காகக் கத்தரித்து எடுக்கப்பட்டிருக்கிறது. கையெழுத்தைத்
தனியாகக் கத்தரித்து எடுத்துத் தாயத்துக்குள் வைத்து அணிந்து கொண்டனர் என்றும் கேள்வி.
* * *


திருமுகம் 14

சிவபஞ்சாக்ஷரத் தியானம்

5-9-1861சிவமயம்

அன்பு அறிவு தயவு முதலிய சுபகுணங்களைப் பூண்டு எமது கருத்தினுங் கண்ணினும் உவந்து உலாவுகின்ற சி. இரத்ந முதலியார் அவர்கட்கு சிவானுக்கிரகத்தால் தீர்க்காயுளும் சிவக்கியானமும் சகல சம்பத்தும் மேன்மேல் உண்டாவதாக. தமது சுப சரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க விரும்புகின்றேன்.

தாம் இவ்விடம் விட்டுப் பிரயாணப் பட்ட நாள் தொடங்கி நாளது வரையில் தமது சுபசரித்திர வண்ணம் இவ்வண்ணமென்று விசேஷம் தெரிந்து கொள்ளாதவனாக விருக்கிறேன். ஆதலால் அதை தெரிவிக்க வேண்டும். நான் புரட்டாசி மாதம் அவ்விடம் பிரயாணப்பட்டு வருவதாக ஓர் காரியம் பற்றி நிச்சயித்திருந்தேன். அந்த நிச்சயத்துக்கு ஓர் தடை நேரிட்டது. என்னெனில் நான் புசித்து வருகின்ற கிரகத்தில் யோக்கியராகவும் தலைவராகவும் இருந்த ரெட்டியார் நாளது மாதம் 20ஆம் நாள் பதவியடைந்தார். ஆதலால் உடனே வருவது ஓர் வகை நிந்தைக்கிடமாக இருக்கின்றது. அதனால் மார்கழி மாதம் பிரயாணப்படுவதாக எண்ணுகின்றேன். எம்பெருமான் எண்ணம் எப்படியோ தெரிந்ததில்லை. இவ்விடத்தில் மழையில்லாமல் அதிக வெப்பமாக இருக்கின்றது. அவ்விடத்திலெப்படி யிருக்கின்றதோ தெரிந்ததில்லை. தாம் சிவபஞ்சாக்ஷர தியான பரராகி சதா சந்தோஷ சகிதராக இருக்கவேண்டுவதே என் வேண்டுகோளாக விருக்கின்றது. தேக முதலிய கருவிகளைத் தக்க வண்ண நடத்தி வரவேண்டுகிறேன். மகாராஜராஜஸ்ரீ திருவேங்கட முதலியார் முதலானவர்களுக்கும் வந்தனம் குறிப்பிக்க வேண்டும். சிரஞ்சீவி சிரஞ்சீவி. இங்கு மகாராஜராஜஸ்ரீ நாயக்கரவர்கள் க்ஷேமம்.

துன்மதிஸ்ரீ
ஆவணி மாதம் 22ஆம் நாள்

சிதம்பரம் இராமலிங்கம்

இஃது
சென்னப்பட்டணம் பெத்துநாய்க்கன்பேட்டை ஏழு
கிணற்றுக்கு அடுத்த வீராசாமிப் பிள்ளை தெருவு
கலக்டர் கச்சேரி மகாராஜராஜஸ்ரீ சுப்பராயப் பிள்ளை
வீட்டுக்கு எதிர்வீடு மகாராஜராஜஸ்ரீ இரத்ந
முதலியாரவர்களுக்கு இருந்துவருமிடம் கருங்குழி.
* * *

திருமுகம் 15
வரையாது வரைதல்

சிவமயம்

அற்புத குணாகரமாகி யெம்முள்ளத் தமர்ந்த சிரஞ்சீவி ரத்ந முதலியார்க்கு தீர்க்காயுளும் சிவஞானமும் சகல சம்பத்து மேன் மேல் உண்டாவனவாக. அவ்விடத்திய சுபசரித்திரங்களை அடிக்கடி கேட்க விருப்பமுள்ளவனாக விருக்கிறேன். இதனடியில் வரைகின்ற சில வரிகளின் கருத்து மனத்தைச் சலிப்பிக்குமென்றுணர்ச்சி தோற்றினும் வரையாது வரைகின்றேன். மகாராஜராஜஸ்ரீ நாயக்கரவர்கள் தங்கள் தாயார் பரமபத மடைந்துவிட்டதாகத் தபாலில் கடிதம் வரக்கண்டு அதனிமித்தம் ஆண்டு அடைகின்றனர். முன்போல் பிரயாசம் எடுத்துக்கொண்டு இருபது ரூபாய் கடன் வாங்கத்தக்க இடத்தில் வாங்கிக் கொடுத்தால் நான் அவ்விடம் வந்தபின் அவ்விடத்துத் தமக்க இப்படிப்பட்ட விஷயங்களில் நேரிட்டிருக்கிற நிர்ப்பந்தங்களையெல்லாம் திருவருட்டுணையால் நிவர்த்தி செய்யக்கூடும். சிரஞ்சீவி சிரஞ்சீவி.

நான் இன்னும் சிலநாளில் அவசியம் அவ்விடம் வருவேன். மகாராஜராஜஸ்ரீ திருவேங்கட முதலியார் முதலானவர்களுக்கு வந்தனம்.

இங்ஙனம்

சிதம்பரம் இராமலிங்கம்

தை மாதம்  28ஆம் நாள்
 
இஃது
மகாராஜராஜஸ்ரீ முதலியார் இரத்தின முதலியார்
அவர்கட்கு.
* * *

திருமுகம் 16

தனித்துறைதல்சிவமயம்

அன்பு அறிவு ஒழுக்கங்கள் முதலிய சுப குணங்களிற் சிறந்த தங்கட்கு சிவ கடாக்ஷத்தால் தீர்க்காயுளுஞ் சகல சம்பத்தும் மேன்மேலுண்டாவனவாக. புண்ணியப் பயனாற் பெற்ற தேகத்தை கூடிய வரையில் சாக்கிரதையோடு பக்குவ மார்க்கத்தில் நடத்த வேண்டும். நான் பங்குனி மாசக் கடையில் அவ்விடம் வருகிறேன். இதன்றியும் இந்தக் கடிதம் கொண்டு வருகிற அம்மாளுக்குத் தாங்கள் கடன் வாங்குகிற இடத்தில் இரண்டு வராகன் கடன் வாங்கிக் கொடுக்க வேண்டும். தங்களுக்கு இப்படிப்பட்ட விடயத்தில் நேரிடுகிற சல்லியங்களை கடவுள் விரைவில் நிவர்த்தி செய்விப்பார். இது நிச்சயம். தற்காலம் நான் வேறோர் நிமித்தம் தனித்து கூடலூரைச் சார்ந்த நெல்லிக்குப்பம் கரும்பாலையாடுந் தோட்டத்திலிருக்கிறேன். இந்தக் கடிதம் கொண்டு வருகின்றவர்கள் இவ்விடத்தில் வந்து தேக மெலிவைக் காட்டியபடியால் - இதே சமயத்தில் இவ்விடத்தில் எனக்கு வழக்கமாகக் கடன் கொடுக்கிறவர்கள் சமீபத்திலில்லை. இவர்கள் தேக பக்குவ நிமித்தம் அவ்விடம் போவதாகக் குறித்தபடி தங்களுக்கு இந்தப் பிரயாசம் வைத்தேன். மற்ற சங்கதிகளை நான் அவ்விடம் வந்தபோது தெரிந்து கொள்ளலாம்.

மாசி மாதம் 15ஆம் நாள்

சிதம்பரம்இராமலிங்கம்.

இஃது
சென்னையில் மஹாராஜஸ்ரீ இரத்தின
முதலியாரவர்கள் சமுகத்திற்கு
* * *

திருமுகம் 17

பல இடங்களில் உறைதல்

15-7-1862சிவமயம்

அன்பு அறிவு முதலிய நல்லொழுக்கத்திற் சிறந்து என்னுயிரையொத்து உள்ளத்திலிருந்த சிரஞ்சீவி ரத்ந முதலியார்க்கு சிவ கடாக்ஷத்தினால் தீர்க்காயுளுஞ் சகல சம்பத்தும் மேன்மேல் உண்டாவதாக. அவ்விடத்திய சுப சரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க விரும்புகிறேன்.

தமது கருத்தின் வண்ண முடிதல் வேண்டுமென்றி யானுந் திருவருளைப் பிரார்த்திக்கின்றேன். அன்றி வேறென் செயக் கடவேன். அன்றி, தமதிதயம் சிவபெருமான் திருவடிக்கண்ணேயன்றிப் பிறவொன்றினும் பொருந்தாதிருத்தல் வேண்டுமென்றும் பிரார்த்திக்கின்றேன். தாம் உலகியற்கண் ஒழுகுங்கால் கழிநடை யொருவன் கட்பார்வை போன்றெழுகல் வேண்டுமென்றும் பிரார்த்திக்கின்றேன். அன்றி உணவுறக்க முதலியவற்றாலுடம்பை மெல்லென நடத்தல் வேண்டும். இஃதென் வேண்டுகோள்.

இனி மகாராஜராஜஸ்ரீ நாயக்கரவர்கள் மகாராஜராஜஸ்ரீ வேலு முதலியாரிடமாக இருப்பதாக அவரது கடிதத்தா லறிந்தேன். தமதிடத்திலிருப்பதாகச் சிலர் சொல்லாலறிந்தேன்.

அவரெங்கு இருப்பினும் அவர்க்குத் தாம் அறிவிப்பது - நான் சென்னபட்டணம் அவசியம் வரவேண்டும். ஆதலின் நான் அவ்விடம் வருவதற்கு எவ்வளவு காலம் பிடித்தாலும் அதுபரியந்தமும் பட்டணத்தில் தானே இருக்க வேண்டும். நான் வந்த பின்பு உடன் கூடிக்கொண்டு ஆண்டவன் திருவுள்ளப்படி சஞ்சரிக்கலாம். இதனைத் தெரிவிக்க வேண்டும். தற்காலத்தில் யான் வசிக்குமிடம் இதுவென்று குறிப்பதற்குக் கூடாத பலவிடங்களாக இருத்தலில் இருக்குமிடம் இதுவென்று குறிக்கவில்லை. மன்னிக்கவேண்டும். சிரஞ்சீவி சிரஞ்சீவி சிரஞ்சீவி.
ஆடி மாதம் ... நாள்

இராமலிங்கம்

இஃது
சென்னபட்டணம் பெத்து நாயக்கன்பேட்டை
ஏழுகிணற்றுத்தெருவுக்கு அடுத்த கீழண்டை வீராசாமிப்பிள்ளை தெருவு கலக்டர் கச்சேரி
சுப்பராயப் பிள்ளை வீட்டுக்கு எதிர்வீடு மகாராஜராஜஸ்ரீ இரத்தின முதலியாரவர்கட்கு.
* * *

திருமுகம் 18
கூடலு‘ரில் உறைதல்சிவமயம்

அன்பு அறிவு செறிவு கல்வி கேள்வி முதலியவற்றினிறைந்து சிவபெருமான்றிருவடி நேயத்திற் சிறந்து என்னன்பிற் கியைந்து விளங்கிய சிரஞ்சீவி இரத்திந முதலியாருக்கு சிவ கடாக்ஷத்தால் சிவக்கியானமும் தீர்க்காயுளும் சகல சம்பத்து மேன்மேலுண்டாவதாக. தமது சுப சரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க விரும்புகிறேன். நான் ஆடி மாதம் 5ஆம் தேதி புறப்பட்டு கூடலூர்க்குப் போய் ஐப்பசி மாதம் 14ஆம் தேதி கருங்குழிக்கு மீட்டும் வந்தேன். வரினும் இன்னும் இருபது தினத்தில் வடமேற்கே ஓர் ஊர்க்குப் போய் அங்கிருந்து திருவொற்றியூர்க்கு வருவதாக நிச்சயித்திருக்கிறேன். நான் வடமேற்கே போகக் கருதிய ஊர்க்குப்போய் அவ்விடத்தே முடிக்க வேண்டிய காரியத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்படுவதற்கு சுமார் 3 மாசம் பிடிக்கும் போல் தோற்றுகிறது.

ஆகலால், தாம் தேக முதலிய கருவிகளை செவ்வனிறுத்தி நடத்த வேண்டுமென்று எழுதுவது தவிர வேறொன்றும் எழுதுவது அவசியமாகத் தோற்றவில்லை நமது சிவபெருமான் திருவடிகளையும் சிவ பஞ்சாக்ஷரியையும் இடைவிடாமல் தியானஞ் செய்து வரவேண்டுமென்பது ஒன்றே முக்கியம் என்று தமது குறிப்பிற் காணப்பட்டது ஆதலிற் குறித்தேனில்லை. சாக்கிரதையோடு இருக்கவேண்டும். மகாராஜராஜஸ்ரீ திருவேங்கட முதலியார் முதலானவர்களுக்கும் என் வந்தனம் குறிப்பிக்க வேண்டும். சிரஞ்சீவி சிரஞ்சீவி.


ஐப்பசி 23ஆம் நாள்

சிதம்பரம் இராமலிங்கம்.

இஃது
சென்னபட்டணம் ஏழுகிணற்றுக்கடுத்த வீராசாமி
முதலியார் வீதி மஹாராஜராஜஸ்ரீ முதலியார்
இரத்தின முதலியார் அவர்கள் திவ்ய சமுகத்திற்கு.
* * *

திருமுகம் 19

நிர்ப்பந்த நிவர்த்திசிவமயம்

சுப குணங்களிற் றலைமை பெற்றுயர்ந்து எமது கண்மணி போன்று விளங்கிய தங்கட்கு சிவானுக்கிரகத்தால் தீர்க்காயுளும் சிந்தித மனோரத சித்தியு மேன்மேலும் உண்டாவனவாக. இவ்விடத்தில் நாளது பங்குனி மாதம் 27ஆம் நாள் புதவாரம் இரவில் நான் பொசிக்கின்ற கிரகத்தில் தற்காலம் எசமானனாக விருந்த ராமகிருஷ்ண ரெட்டியா ரென்பவர் வானுலகு அடைந்தார். அவர் சம்மதப்படி அவர் தேகம் சமாதியில் வைக்கப்பட்டது. இந்த சங்கதி தாங்கள் அறிய வேண்டுவது. அன்றியும், நமது நாயக்கரவர்களுக்கும் சுந்தரம்மாளுக்கும் தெரியப்படுத்த வேண்டும். அன்றியும், நமது வேலு முதலியார் அவர்களுக்கும் நேரிட்டபோது தெரியப்படுத்த வேண்டும். இதுவன்றியும் சுந்தரம்மாளுக்கும் அத்தானுக்கும் நமது நாயக்கருக்கும் நமது வேலு முதலியாருக்கும் தாங்கள் அவசியம் அறிவிக்கவேண்டுவது ஒன்று. அதாவது சித்திரை வைகாசி இவ்விரண்டு மாதமும் போக ஆனி மாதம் இருபது தேதிக்குமேல் என் தேகம் இருந்தால் அவசியம் சென்னபட்டணம் வருவேன். இது தவறாது. ஆகலில் அதுபரியந்தம் மனம் பொறுத்திருக்க வேண்டுமென்றும் இவர்களுள் சுந்தரம்மாள் அத்தான் இவர்களுக்கு முக்கியம் தெரிவிக்க வேண்டுவது ஒன்று, என்னெனில் மேற்குறித்த ஆனி இருபது தேதி பரியந்தம் பட்டபாட்டை பட்டுக்கொண்டு இருந்தால் அதன்பின் அவர்களுக்கு எந்த எந்த விஷயத்தில் நிற்பந்தங்களோ அவைகளை யெல்லாம் நிவர்த்தி செய்து பிரயாசம் தோன்றாதபடி செய்விக்கலாம் என்று உறுதியாகச் சொல்ல வேண்டும். நமது நாயக்கரவர்களுக்கு சொல்லவேண்டுவது தேகத்தைப் பக்குவமாக அதிக முயற்சியால் வருந்தாமல் நடத்த வேண்டுமென்றும், ஆனி இருபது தேதிக்குமேல் தாங்கள் சமீபத்தில் இருக்கப் பெறலாம் என்றும் சொல்ல வேண்டும். நமது வேலு முதலியார் அவர்களுக்கு தற்காலம் தேகம் எந்த பக்குவத்திலிருக்கின்றதோ வென்கிற ஐயுறவோடிருக்கின்றேனென்று சொல்ல வேண்டும். தாங்கள் தேக முதலிய கருவிகளை சாக்கிரதை யாக வைத்திருக்க வேண்டும். அவசியம் தமக்கைக்கும் மேற்படியார்க்கும் கடிதத்தின் வண்ணம் தெரிவிப்பது மன்றி பதில் எழுத வேண்டும். சிரஞ்சீவி சிரஞ்சீவி. இங்ஙனம்

சி. இராமலிங்கம்

இஃது

சென்னபட்டணம் பெத்து நாய்க்கன்பேட்டை
ஏழுகிணற்றுத் தெருவுக்குக் கீழ் பக்கம் வீராசாமிப்
பிள்ளை வீதியில் கலக்டர் கச்சேரி மகாராஜராஜஸ்ரீ
சுப்பராயபிள்ளை வீட்டுக்கு எதிர் வீட்டில்
மகாராஜராஜஸ்ரீ இரத்தின முதலியார் அவர்களுக்கு.
* * *

திருமுகம் 20

உளத்தின் புடைபெயர்ச்சிசிவமயம்

சற்குண சிரோமணியாகி நமது கண்மணி போன்று விளங்கிய சிரஞ்சீவி இரத்ந முதலியார் அவர்கட்கு சிவானுக்கிரகத்தால் தீர்க்காயுளுஞ் சகல சம்பத்துஞ் சிவஞானமு மேன்மே லுண்டாவனவாக. சி. தருமலிங்கப் பிள்ளையின் வசத்திலனுப்புவித்த கழல்க ளீரிரண்டும் பூணப்பெற்றனம்.

சுமார் பதினைந்து தினத்திற்குமுன் யாம் விடுத்த கடிதம் அங்ஙனம் வரப்பெற்றதும் பெறாததும் புலப்பட்டேமின்று. புலப்படுதற்கு அவாவுகின்றோம்.

இனி ஈராண்டு பலவகைக் கருவிகளால் பதப்படுத்தி யேழைகள் பலர்க்கும் உபயோகிக்கும் பொருட்டு நம்மாட்டிருந்த ஓர் பேருழப்பு-ஓர் அசாக்கிரதையால் தன்மை கெடப்பெற்றது. இங்ஙனம் பெறினும் நம் பெருமான் றிருவுளக் குறிப்பு அங்ஙன மிருந்த தென்று கருதி அமைதி பெற்றாமாயினும், பிணிகளாற் பிணிப்புண்ட ஏழைகளைக் கருதும்போதெல்லாம் ஒரு சிறிது உளம் புடைபெயர்கின்றாம். ஆகலின் அப் புடைப்பெயர்ச்சியை இன்னும் இரண்டு மூன்று திங்களி னீக்கப் பெற்று ஆண்டு அவசியம் வருவேம். யாம் வருமளவும் தேக முதலிய கருவிகளைக் கடைக்கணித்து வருக. சிவபிரான் றிருவடித்துணை யன்றி வேறு துணை நமக்கு இன்மையின் அவற்றை இடைவிடாது நினைக. வாழ்க வாழ்க. சிரஞ்சீவி. சிவபெருமான் திருவருட்டுணை மேன்மேலுண்டாக.*

* கையொப்பம் தேதி, முகவரி எழுதப்பெற்ற இடங்கள் கிழிந்துவிட்டன.
* * *

திருமுகம் 21

ஆரவாரப் பிரயாணம்

19-5-1864

சிவமயம்

கல்வியிற் கேள்வியிற் கடலினுஞ் சிறந்து
அன்பறி வொழுக்கம் அமைந்தென் னிரண்டு
கண்போன் றென்பாற் கனிவுகொண் டமர்ந்த
குணரத் தினநீ குடும்பத் துடனே
தீர்க்க ஆயுளும் செல்வப் பெருக்கும்
நோயற்ற வாழ்வும் நுவலரும் கீர்த்தியும்
சிவந்திகழ் ஞானமும் சித்தியும் பெற்று
வாழ்க வாழ்க மகிழ்ந்தருட் டுணையால்
வாழ்க வாழ்க வளம்பெற வாழ்க.

தங்கள் சுப சரித்திர விபவங்களை அடிக்கடி தெரிந்துகொள்ள விரும்புகிறேன். தாங்கள் வரவிடுத்த கடிதத்தை கண்ணுற்றுக் களித்தேன். அந்தக் கடிதத்தில் தாங்கள் குறித்தபடி இன்னுஞ் சிலகாலத்துக்குள் திருவருள் கூட்டுவிக்கும். இது உண்மை. சந்தேகிக்க வேண்டாம். தங்களுக்குப் புத்திரப் பேறு உண்டாயிற்றென்று கேள்விப்பட்டு அளவு கடந்த சந்தோஷத்தை யடைந்தேன். குழந்தையை நன்றாகப் பாராட்டி... சகல விஷயத்திலுஞ் சாக்கிரதையா இருக்க வேண்டும். நான் சுமார் அறுபது தினத்துக்குள் அவ்விடம் வருகிறேன். அல்லது பத்து தினம் அதிகப்பட்டாலும் அவசியம் வருவேன். நமது அன்பராகிய மகாராஜராஜஸ்ரீ ஸ்ரீவேலு முதலியார்...தற்கு ஆனிமாசம் பிரயாணப்படுவதாக எழுதியிருக்கிறார்கள். அவர்கள் வந்தால் என் பிரயாணம் எல்லவர்க்கும் வெளிப்படும். வெளிப்பட்டால் அநேகர் என்னுடன் கூடி வர பிரயாணப்படுவார்கள். ஆரவாரப் பிரயாணமாக முடியும். ஆகலில் தாங்களும் அவர்களுக்கு இது விஷயத்தில் தெரிவிக்க வேண்டும். நான் மாத்திரம் ரகசியமாக வரும்படி நிச்சயித்திருக்கிறேன். அவசியம் வருவேன். தங்கள் மாமனார் மகாராஜராஜஸ்ரீ ஸ்ரீதிருவேங்கட முதலியாரவர்களுக்கு....அவர்கள் எழுதின கடிதங்களுக்குப் பதில் நான் அவ்விடம் வந்த பின்பு தெரிவிப்பதாக சொலல் வேண்டும். நமது நாயக்கரவர்களுக்கும் என் வந்தனம் குறிப்பிக்கவேண்டும். வாழ்க.

இங்ஙனம்
சி. இராமலிங்கம்

வைகாசி 8ஆம் நாள் 

இஃது
சென்ன பட்டணம் ராயல் ஓட்டல் மகா ராஜராஜஸ்ரீ
வேலு முதலியா ரவர்கள் மேல் விலாசம் பார்வை
யிட்டு ஏழுகிணற்றுக்கடுத்த வீராசாமிப் பிள்ளை
வீதியில் தங்கள் இஷ்டராகிய ரத்தின முதலியார்
அவர்களிடம் சேர்ப்பிக்கப் பிரார்த்திக்கிறேன்.
* * *


திருமுகம் 22

அரிபிரமாதிகளுக்கும் உள்ள காரியம்சிவமயம்

மருவாணைப் பெண்ணாக்கி யொருகணத்திற்
கண்விழித்து வயங்கு மப்பெண்
உருவாணை யுருவாக்கி யிறந்தவரை
எழுப்புகின்ற வுறுவ னேனும்
கருவாணை யுறவிரங்கா துயிருடம்பைக்
கடிந்துண்ணும் கருத்த னேலெங்
குருவாணை யெமதுசிவக் கொழுந்தாணை
ஞானியெனக் கூறொ ணாதே. -

வாழ்க சிரஞ்சீவி

அன்பு அறிவு முதலிய சுபகுணங்களிற் சிறந்த தங்கட்கு சிவானுக்கிரகத்தால் தீர்க்காயுளும் சகலசம்பத்தும் மேன்மேல் உண்டாவனவாக. அவ்விடம் இன்னுஞ் சில தினத்தில் அவசியம் நான் வருவேன். வந்த பின்பு தங்கள் வருத்த மெல்லாம் சிவபெருமான் திருவருளால் நிவர்த்தியாய் விசேஷ சௌக்கிய நேரிடும் என்று துணிந்திருங்கள். மகாராஜராஜஸ்ரீ திருவேங்கட முதலியார் காலஞ் சென்றதைக் குறித்து விசாரப்படுகின்றேன். ஆயினும் அது அரிபிரமாதிகளுக்கும் உள்ள காரியம். ஆதலால் புதிதல்ல வென்று துணிந்தேன். சிவபஞ்சாக்ஷர தியானத்தோடு சாக்கிரதையாக இருங்கள். அஞ்சவேண்டாம். சிரஞ்சீவி.

இங்ஙனம்
சி. இராமலிங்கம்

மனைவி புத்திரர் முதலானவர்களது க்ஷேமங்களை தெரிவிக்கவேண்டும். தேகத்தைப் பக்குவமாகப் பாராட்டி வரவேண்டும்.

இஃது
சிரஞ்சீவி இரத்தின முதலியாரவர்கள் சமுகத்திற்கு.
வாழ்க வாழ்க.
* * *

திருமுகம் 23

சிவாயநம என்பார்க்கு அபாயம் இல்லை

20 - 9 - 1864

அன்பு அறிவு ஒழுக்க முதலிய நற்குணங்கள் வாய்ந்து நம்மிடத்து உள்ளன்பு வைத்த சிரஞ்சீவி இரத்தின முதலியார்க்கு சிவகடாக்ஷத்தினால் தீர்க்காயுளும் திடதேகமும் சகல சம்பத்து மேன் மேலுண்டாவனவாக. தங்கள் சுபசரித்திரங்களை அடிக்கடி கேட்க விரும்புகிறேன். தங்களுக்கு இருமலால் தேகம் அபக்குவமாக விருக்கிறதாகத் தபாலில் எனக்குத் தெரிவித்தார். அவர் தெரிவித்தது தொடங்கி என் நினைப்பெல்லாம் தங்களிடமாகவே யிருக்கிறது. நித்திரை பிடிக்கிறதுமில்லை. நான் தொடங்கிய காரியங்கள் ஒன்றும் நடக்கிறதுமில்லை. மனம் அலை பாய்ந்து கொண்டே யிருக்கிறது. உடனே புறப்படுவேன். இவ்விடத்தில் ஒரு பெரிய தடை நேரிட்டிருக்கின்றது. அது இன்னும் பதினைந்து தினத்தில் விடும். அதற்கு மேல் பிரயாணப்படுகிறேன். எவ்விதத்தினும் ஐப்பசி மாதம் 12ஆம் தேதியில் பிரயாணப் பட்டு வருகிறேன். தாங்கள் நமது சாமி அவர்களைக் கொண்டு உபசாந்தி செய்துகொண்டு அதிக உழப்பெடுத்துக் கொள்ளாமல் சாக்கிரதையாக வர வேண்டும். கடினமான அவுஷதங்களைக் கொள்ள வேண்டாம்.

முசுமுசுக்கை சமூலங் கொண்டு வந்து பசும்பாலி லூற வைத்து உலர்த்தி இடித்துச் சூரணமாக வைத்துக்கொண்டு நித்தியம் காலையில் தேயிலைத் தண்­ர் காய்ச்சி சாப்பிடுவது போல சலத்தில் போட்டு சுண்ட வைத்து பசும்பால் சர்க்கரை மிளகுப்பொடி கலந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டு வரவேண்டும். இதை சாமிகளுக்குத் தெரிவித்து அவாளைக் கொண்டு செய்வித்து சாப்பிட்டுக் கொண்டு வரவேண்டும். உத்தியோகம் தடையாயிருந்தால் அதை விடுத்துத் தேகத்தைப் பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள். தேகம் பக்குவமான பின்பு சிவானுக்கிரகத்தால் உத்தியோகம் சம்பாதித்துக் கொள்ளலாம். அது பரியந்தம் கடன் பட்டாவது ஜீவனம் செய்யலாம். அது குறித்து அஞ்ச வேண்டாம். மேற்குறித்தபடி நான் அவசியம் வருகிறேன். நமது மெய்யன்பர் வேலு முதலியார்க்கும் நான் வருவது நிச்சயமென்று குறிக்க வேண்டும். நமது நாயக்கரவர்களுக்கும் அப்படியே. இந்தக் கடிதம் கண்டவுடன் தங்கள் தேக நிலையை தபாலில் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் என் மனம் சஞ்சலித்துக் கொண்டே யிருக்கும். ஆகலில் தெரிவிக்க வேண்டும். தாங்கள் 'சிவாயநம வென்று சிந்தித்திருப்பார்க் கபாய மொருநாளு மில்லை' என்பதை சத்தியமாகத் கடைப்பிடிக்க வேண்டும்.

புரட்டாசி மாதம் 6ஆம் நாள் 

தங்கள் அன்பன்
சி. ராமலிங்கன்

இஃது
சென்னப்பட்டண ராயல் ஓட்டல் மகாராஜராஜஸ்ரீ
முதலியார் வேலு முதலியா ரவர்கள் மேல் விலாசம்
பார்வையிட்டு பெத்து நாயக்கன் பேட்டை வீராசாமிப்
பிள்ளை தெருவில் மகாராஜராஜஸ்ரீ இரத்தன
முதலியாரவர்களுக்கு சேர்ப்பிக்க வேண்டும்.
தங்களுக்கும் கடிதம் இதற்குமுன் எழுதி இதனுடன்
தபாலில் விடுத்திருக்கிறேன்.
* * *


திருமுகம் 24

சிவானந்த போக சாத்தியம்

20-4-1865திருச்சிற்றம்பலம்

சுபம் உண்டாகுக. கல்வி கேள்விகளிற் பயின்று அன்பறிவொழுக்கங்களிற் சிறந்து அருளொடு கிளர்ந்த வாக்கத்தி னுயர்ந்து குணமணியாக விளங்கிய தங்கட்கு சிவானுக்கிரகத்தால் தீர்க்காயுளுந் திடதேகமும் சகல சம்பத்தும் மேன்மேல் உண்டாகுக. தங்களுடைய சுப சரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க விரும்புகின்றேன். அரி பிரமாதிக ளெத்துணையும் பெறுதற்கு அரியதாகிய சிவ சம்பந்தத்தை முன் செய்த தவப் பயனாற் பெற்றனம். அங்ஙனம் பெற்ற நாம் சிவானந்த போக சாத்தியத்தை காலமுண்டாக அடைதல் வேண்டும்.

அதனை அடைதற்கு சிவபஞ்சாக்ஷர தியானமன்றி வேறு ஏதுக்கள் ஒன்றுமின்று. இஃது திருவருளாணை. என்னின், நாம் செல்லுங் காலமெல்லாம் சித்த சுத்தியோடு சிவபஞ்சாக்ஷர தியானத்தில் சர்வசாக்கிரதையாகப் பெற்று வரவிற்கு ஒத்த செலவோடு வாழ்தல் வேண்டும். இஃதே நமது கடமை. இனி இங்ஙனம் ஒருவர் பிணியாளர் வேறு கதியின்றி என்பாற் புகலடைந்திருக்கின்றனர். அப்பிணி சிறிது சாந்தப்பட்டவுடன் பிரயாணப்பட்டு அவ்விடம் வர நிச்சயித்திருக்கிறேன். சிவபெருமான் திருவுள்ளக் கருத்தறியேன். நமக்குரிய நேயர் முன்னவராகிய மகாராஜராஜஸ்ரீ நாயக்கர் முதலானவர்கட்கும் என் வந்தனங் குறிப்பிக்க வேண்டும். வரதாசாரியா ரவர்கள் தற்காலம் எவ்வித நிலையிலிருக்கின்றனர். அந்நிலையும் தெரிதல் வேண்டும். நேயர் மகாராஜராஜஸ்ரீ கந்தசாமி முதலியார்க்கும் என் வந்தனங் குறிப்பிக்க வேண்டும். சிரஞ்சீவி சிரஞ்சீவி.

சித்திரை மாதம் 10ஆம் நாள்

சி. இராமலிங்கம்

இஃது
சென்னப்பட்டணம் பெத்துநாயக்கன் பேட்டை
ஏழுகிணற்றுக்கு அடுத்த வீராசாமிப் பிள்ளைத்
தெருவில் மகாராஜராஜஸ்ரீ முதலியார் இரத்தின
முதலியார்அவர்கள் சமுகத்திற்கு.
* * *


திருமுகம் 25
தென்னாட்டின் சிறப்பியல்சிவமயம்

கல்வி கேள்விகளிற் சிறந்து அன்பு அறிவு ஒழுக்க முதலிய நற்குணங்களை அணியாக அணிந்த சிரஞ்சீவி இரத்ந முதலியா ரவர்களுக்கு சிவ கடாக்ஷத்தால் தீர்க்காயுளும் சகல சம்பத்தும் மேன்மேலுண்டாவனவாக. தங்கள் சுப சரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க விரும்புகிறேன். மகாராஜராஜஸ்ரீ ஸ்ரீ வேலு முதலியார்க்கும் அவர்களிடமாகத் தற்காலத்திருக்கின்ற நாயக்கரவர்களுக்கும் என் வந்தனங் குறிப்பிப்பது மன்றி இக்கடிதத்தினுள் ளடங்கிய கடிதத்தை அவர்களிடத்திற் சேர்ப்பிக்க வேண்டும். இது நிற்க. அவசியம் தெரிந்து கொள்ள வேண்டுவது ஒன்று. என்னெனில் தாங்கள் சென்னப் பட்டணத்தை விட்டு நெல்லூர்க்கு உத்தியோக விஷயமாகப் போகக் கருதி பிரயத்தினஞ் செய்வதாயும் தற்கால அலுவல் தானே நீங்கிவிடுவதாயும் கேள்விப் பட்டேன். கேட்ட நாள் தொடங்கி மனஞ் சஞ்சலித்துக் கொண்டேயிருக்கின்றது. ஆனால் என்ன செய்வது. திருவருள் நடத்த நடக்கின்றோம் என்று சமாதானஞ் செய்துக் கொண்டாலும் என் மனம் அமைதி பெறவில்லை. ஆகலில் அவ்வாறு நேரிடில் முன்னதாக எனக்குத் தெரிவிக்க வேண்டும்.

நான் கடவுளைப் பிரார்த்திருக்கிறதென்னெனில் சென்னப்பட்டணத்தை விடுத்தால் பட்டணத்துக்குத் தென்பாகத்தில் அலுவல் நேரிட வேண்டுமென்று பிரார்த்திக்கிறது தான். என் பிரார்த்தனை திருச்செவிக்கு ஏறுமோ ஏறாதோ தெரிந்ததில்லை. என்ன செய்வேன். எப்படி யானாலும் ஆகட்டும். எனக்கு உடனே பிரயாணத்தின் உண்மை இன்மை தெரிவிக்க வேண்டும். தாங்கள் எழுதிய கடிதம் நாற்பது நாளைக்குமேல் நான் காணப்பெற்றேன். நானும் அவசியம் தை-மாசி-க்குள் அவ்விடம் வரப் பிரயாணஞ் செய்கிறேன். வந்தால் ஒரு மாதம் இரண்டு மாதத்துக்குமேல் அவ்விடத்திலிருக்க சம்மதமில்லை. சிரஞ்சீவி சிரஞ்சீவி.

சி. ராமலிங்கம்

இஃது
சென்னப்பட்டணம் மஹா ராஜ ராஜ ஸ்ரீ முதலியார்
இரத்தின முதலியா ரவர்கள் திவ்விய சமுகத்திற்கு.
* * *

திருமுகம் 26

பசியில்லாதவன் பழஞ்சோறு கண்டது

சிவமயம்

அருளறி வொழுக்கங்களிற் சிறந்து கல்வி கேள்விகளிற் பயின்று எமது கட்கிமை போன்று விளங்குகின்ற சிரஞ்சீவி ரத்தின முதலியார்க்கு சிவகடாக்ஷத்தால் தீர்க்காயுளுந் திடதேகமும் சிந்தித மனோரத சித்தியு மேன்மேலுண்டாவனவாக. தங்கள் சுபசரித்திர விபவங்களும் மகாராஜராஜஸ்ரீ நாயக்கரவர்கள் சுபசரித்திர விபவங்களும் அடிக்கடி கேட்க விருப்ப முள்ளவனாக விருக்கின்றேன். தாங்கள் வரவிட்ட பங்கி தபாலிலடங்கிய புத்தகமும் - கடிதமும் முன்னும் பின்னுமாக வரப்பெற்றேன்.

இவற்றுள் பங்கி தபாலிலடங்கிய புத்தகத்தைக் கண்டபோது பசியில்லாதவன் பழஞ்சோறு கண்டாற் போலுங் குறிப்பில்லாதவனாகவிருந்தேன். ஏனெனில் திருவருள் சாக்ஷியாகத் திருவடிக் கண்ணன்றி வேறொன்றையும் என் மனம் விரும்புகிறதாகத் தோன்றவில்லை. என்றால் இந்த - பனை ஏட்டையும் அதில் வரைந்த சிறுபிள்ளை விளையாட்டையுந் தானே விரும்பும். விரும்பாது; விரும்பாது. யாரோ தங்களுக்கு வீணாக அலுப்புண்டு பண்ணினார்கள். அது குறித்து வியசனமடைந்தேன். ஆனால் அந்த வியசனத்தை உடனே தங்கள் கடிதத்தைக் கண்டு மாற்றிக் கொண்டேன். எப்படி யென்றால் தங்களுடைய க்ஷேமமும் நாயக்கரவர்களுடைய க்ஷேமமும் தெரியவில்லையேயென்று உள்ளபடி எண்ணமிட்டிருந்தேன். அந்த எண்ணத்தை மாற்றி மேற்படி இருவரது க்ஷேமங்களும் அந்தக் கடிதத்தில் குறித்திருந்த படியாலே விசேஷம் சந்தோஷம் உண்டுபண்ணியது. மகாராஜராஜஸ்ரீ நாயக்கரவர்கள் முளைமூலம் எடுத்துக்கொண்டு இப்போதுதான் உடம்பு பக்குவமாகி வருகின்றது என்றபடி இன்னும் தாங்கள் அவர் தேகம் சரியான பக்குவத்தை யடையும் வண்ணம் பாராட்டி வர வேண்டும். தங்கள் தேக முதலிய கருவிகளையும் சாக்கிரதையாகப் பார்த்துப் பாராட்டிக் கொண்டு வரவேண்டும்.

நாயக்கரவர்களுக்கு தெரிவிப்பது. எந்த விதத்திலும் இன்னும் நாலைந்து மாசத்துக்குள் சமீபத்திலிருக்கும்படி சிவகடாக்ஷ நேரிடும். சந்தேகிக்க வேண்டுவதில்லை. அது பரியந்தம் பொறுத்திருக்க வேண்டுமென்று தெரிவிப்பது தான். இதுவல்லாமலும் தங்களுக்கு நான் தெரிவிப்பது ஒன்று. என்னெனில் நான் எந்தப் பிறப்பிலும் தங்களை விடமாட்டேன். தாங்களும் இன்னும் சில நாள்களுக்குள் சமீபத்திலிருக்கும்படியாகவே சிவானுக்கிரகத்தால் பார்ப்பேன். உண்மை உண்மை. மகாராஜராஜஸ்ரீ நமது உள்ளன்பர் வேலு முதலியார்க்கும் ஸ்ரீ சிதம்பர சாமிக்கும் வந்தனம்.

வேணும் சிரஞ்சீவி

ஆடி மாதம் 23ஆம் நாள்

இங்ஙனம் 
சிதம்பரம் இராமலிங்கம்

இஃது
சென்னபட்டணம் பெத்துநாயக்கன் பேட்டை ஏழு
கிணற்றுத் தெருவுக்குக் கீழ்ப்பக்கம் வீராசாமிப்
பிள்ளை வீதியில் கலக்டர் கச்சேரி மகாராஜராஜஸ்ரீ
சுப்பராய பிள்ளை வீட்டுக்கு எதிர்வீடு
மஹாராஜராஜஸ்ரீ ரத்தின முதலியார் அவர்கள்
திவ்விய சமுகத்திற்கு சுபமுண்டாக
* * *


திருமுகம் 27

இறைவன் தம் உள்ளிருந்து பாடுவித்தவை


சிவமயம்

அன்பறி வாசாரங்களிற் சிறந்து சிவபத்தியினுஞ் ஜீவகாருண்யத்தினுந் தலைநின் றெம துள்ளத்திற் கலந்து விளங்கிய தங்கட்கு சிவானுக்கிரகத்தால் தீர்க்காயுளுஞ் சகல சம்பத்து மேன்மேலுண்டாக. 1865 நவம்பர் மாதம் 13ஆம் தேதி ரிஜிஸ்டர் செய்தனுப்பிய தங்கள் கடிதத்தைக் கண்ணுற்றறிந்து கொண்டேன்.

அக்கடிதத்திற் குறித்த விஷயம் எனக்கத்துணை யவசியமின்றாயினுந் தங்கள் கருத்தின்படி இறைவ னென்னுள்ளிருந்து பாடுவித்தவைகளை மாத்திரம் தாங்களாயினும் மகாராஜராஜஸ்ரீ செல்வராய முதலியாரவர்க ளாயினும் தாங்கள் வரைந்தபடி செய்துக்கொள்ளலாம். இனி எழுதுவதற்கு சமயமின்று. ஆகலின் இங்ஙனம் அமைதி செய்தாம்.

சுமார் இருபது தினஞ் சென்ற பின்னர் சமய முண்டாம்.

ஆண்டு வரைவன வரைதும், சிரஞ்சீவி சிரஞ்சீவி. சிவ சிவ

இங்ஙனம்
சிதம்பரம்
இராமலிங்கம்

இஃது
சென்னபட்டணம் பெத்துநாயக்கன் பேட்டை
ஏழுகிணற்றுக்கடுத்த வீராசாமி பிள்ளை வீதியில்
இங்கிலிஷ் இஸ்கூல் மாஸ்டர் மகாராஜராஜஸ்ரீ
இரத்தன முதலியாரவர்கள் சமுகத்துக்கு
* * *

திருமுகம் 28
திரு அருட்பா அச்சேறுதல்


கல்வி கேள்விகளாலும் அன்பறி வொழுக்கங்களாலுஞ் சிறந்த தங்கட்கு சிவானுக்கிரகத்தால் தீர்க்காயுளுஞ் சகல சம்பத்து மேன்மேல் உண்டாக. தாங்களனுப்பிய பங்கிக்கட்டும் தபாலும் வந்து சேர்ந்தன. தாங்கள் சிவத்தியான சகிதராய் வரவுக்குத் தக்க செலவு செய்து கொண்டு தேகத்திற்கு திடமுண்டாகும்படி உபசரித்துக்கொண்டு சாக்கிரதையோடிருக்கவேண்டும்.

படிப்பிக்கிற விஷயத்தில் அதிக அதிக்கிரம பிரயாசை எடுத்துக் கொள்ளப்படாது. தங்களுக்கு இருக்குங் கடனைக் குறித்து அணுவளவும் அஞ்சப்படாது. நான் வைகாசி மாதக் கடைசியில் அவசியம் அவ்விடம் வருகிறேன். இது நிச்சயம். இவ்விடத்தில் நாயக்கர் க்ஷேமமாக இருக்கிறார். ஆயினும் அவர்க்கு இவ்விடத்திலும் நிம்மதியில்லை, அன்றி ஒற்றியூர் பாடல்களையும் மற்றவைகளையும் அச்சிடத் தொடங்குகிறதாய்க் கேள்விப்படுகிறேன். அவைகளை தற்காலம் நிறுத்தி வைத்தால் நான் அவ்விடம் வந்தவுடன் இவ்விடத்திலிருக்கின்ற இன்னுஞ் சில பாடல்களையுஞ் சேர்த்து அச்சிட்டுக் கொள்ளலாம். பின்பு தங்களிஷ்டம். நமது சிநேகிதர் மகாராஜராஜஸ்ரீ வேலு முதலியாரவர்களுக்கு இதைத் தெரியப்படுத்துவீர்களாக. தங்கள் குடும்ப க்ஷேமமும் சுந்தரம்மாள் - புருஷர் - சுந்தரப்பிள்ளை முதலானவர்களுடைய க்ஷேமமும் மற்ற சிநேகர் முதலானோர் க்ஷேமமும் தெரிவிப்பீர்களாக. எனக்கு சாவகாசமில்லாமையால் இம்மட்டில் நிறுத்தினேன்.

சிரஞ்சீவி சிரஞ்சீவி.

சிதம்பரம்
இராமலிங்கம்

இந்தக் கடிதம் தங்கள் மட்டில் வேலு முதலியார் மட்டில் வழங்க வேண்டும். நாயக்கர் வந்த நாள் தொட்டு தேக அசவுக்கியத்தோடேயிருக்கிறார்கள்.

இஃது
சென்னபட்டணம் ராயல் ஓட்டல் மகாராஜராஜஸ்ரீ
வேலு முதலியாரவர்கள் மேல் விலாசம்
பார்வையிட்டு ஏழுகிணற்றுக் கடுத்த வீராசாமிப்
பிள்ளை தெருவில் மகாராஜராஜஸ்ரீ இரத்தின
முதலியார் அவர்களிடஞ் சேர்ப்பிக்க கோருகிறேன்.
* * *


திருமுகம் 29

ஆரவாரத்திற்கு அடுத்த பெயர்  28-3-1866


அன்புள்ள தங்கட்கு சிவகடாக்ஷத்தால் தீர்க்காயுளுந் திடதேகமும் சகல சம்பத்து மேன்மேல் உண்டாக. தாங்கள் வரைந்து விடுத்த கடிதமும் இப்பாடல்களும் இரண்டு தினத்திற்கு முன் என்னிடஞ் சேர்ந்தன. இன்று குறை நிரம்பப் பெற்றன கொள்க. அன்றி, நான் இத்திசைக்கண் வந்தபின் இங்ஙனமிருந்து தங்களிடத்திற் போந்த சில பாடல்களில் ஒன்றும் வெளிப்படாதிருத்தல் வேண்டும். என்னையெனில் நான் இங்ஙனம் வந்த பின்னர் சிதம்பர விஷயத்தில் தோத்திர மாலைகளுஞ் சாத்திர மாலைகளுமாக சுமார் 20 மாலைகள் செய்யப்பட்டிருக்கின்றன. அவைகள் வெளிப்படும்போது வெளிப்படுத்திக் கொள்ளலாம். இது நிற்க. முன்னோர் கடிதத்தினான் குறித்த பாயிரத்தை இன்னுஞ் சில தினஞ் சென்ற பின்னர் அனுப்புகிறேன், தற்காலம் என்னினைவு விரிதற்கின்மையால். தாங்கள் தேகத்தை சாக்கிரதையாகப் பாராட்டிக் கொண்டு வரவேண்டும். நமது அன்பர் மகாராஜராஜஸ்ரீ வேலு முதலியார் மகாராஜராஜஸ்ரீ செல்வராய முதலியார் முதலானவர்களுக்கும் நான் அவசியம் இரண்டு மாதத்தில் அவ்விடம் வருவதாக குறிப்பித்தல் வேண்டும். மகாராஜராஜஸ்ரீ நாயக்கர் சாமிக்கு பித்த விசேக்ஷத்தால் சிறிது குணம் விகற்பித்து அடிக்கடி சொல்லாமற் போவதும் பின்பு வருவதுமாகவிருக்கின்றார். இது நிற்க. தெ. ஆறுமுகப்பிள்ளை யவர்களுக்குஞ் சுந்தரம்மாளுக்கும் இன்னும் ஒரு மாதஞ்சென்ற பின்னர் நான் சொன்னபடி செய்விப்பதாக தெரியப்படுத்த வேண்டும். அன்றியும் சௌ. விசாலாக்ஷியம்மையும் அவர் புருஷனும் இவ்விடத்தில் நேர்ந்த சொல்ப வரும்படி போதாமை யென்று சுமார் 20 நாள்களுக்கு முன்னரே இவ்விடம் பிரயாணப்பட்டு அவ்விடம் வந்தார்கள். இது நிற்க. இராமலிங்கசாமியென்று வழங்குவிப்பது என் சம்மதமன்று. என்னை - ஆரவாரத்திற்கு அடுத்த பெயராகத் தோன்றுதலில். இனி அங்ஙனம் வழங்காமை வேண்டும்.

ஜீவகாருண்ணியமும் சிவானுபவமும் அன்றி மற்றவைகளை மனத்தின்கண் மதியாதிருத்தல் வேண்டும். சிரஞ்சீவி சிரஞ்சீவி.

குரோதன வருஷம் பங்குனி மாதம் 17ஆம் நாள்

இங்ஙனம்
சிதம்பரம் இராமலிங்கம்

* * *
திருமுகம் 30

பசித்தாரது பசி நீக்கலே பேர் பெருஞ் செயல்

19-4-1866

அருட் குணங்களனைத்து மமைந்தென்னற்றுணையாய் விளங்கிய தங்கட்கு சிவகடாக்ஷத்தால் தீர்க்காயுளுந் திடதேகமும் சகல சம்பத்து மேன்மேல் விளைக. வரைந்து விடுத்த நல் வாசகத்தைக் கண்ணுற்றறிந்தனன். குடும்ப கோடம், பொது வேதம், மெய்ம் மொழிப்பொருள் விளக்கம், சன்மார்க்க விளக்கம் என்பவைகளை நூதனமாக ஏற்படுத்தக் கருதியபடி வரையாக் கடிதப் புத்தகம் மூன்றென்னிடத்திருக்கின்றன. அவை அமையும். ஆகலில் அது விடயத்திலுழத்தல் வேண்டா. நான் வருமதிக் கடையில் அங்ஙனம் போதுதற்குளங் கொண்டிருக்கின்றனன். இஃதுபாய மன்றுண்மை. அருநெறி செல்வோர்க்கு மச்சுறுத்தத் தக்க விவ்வெய்ய பருவத்தின்கண் வான் பெயலறியா வன்னெறிப்பட்டு மெய்வருத்தங் கோட லொன்றோ.

எவ்வகையானுங் களைகணின்றிப் பசித்தாரது பசி நீக்குதற் பொருட்டே திருவருளாற் கிடைக்கும் பொருட்கருவியை அங்ஙனஞ் செலுத்தலின்றி யிங்ஙனஞ் செலுத்தும் வெறுஞ் செயற்பாட்டிற் கொருப்படுங் குறைமையுங் கோடற்கிடனாம். ஆகலில் இது விடயத்திற் றுணிந்துரைத்தற்குச் சித்தமுநாவுஞ் செல்வனவல்ல. முன் குறித்தபடி வரற்குத் தடை நேரின் அன்று துணிந்து வரைவல். இஃதென் கருத்து. பின்னர் தங்கள் கருத்தின்படி செய்க. இஃதுலகியற் பிழைத்த சிலர்க்கு வரைதல்போல் வரைந்த தன்று. உள்ளமொத்து வரைந்ததென்க. இதனை நமது உள்ளன்பர் செல்வராய முதலியாரவர்கட்குங் குறிக்க. என்னையன்றித் தன்னையுங் கருதார் அன்றிப் பொன்னையுங் கருதார் என்று கருதப்படுமன்பர் வேலு முதலியார்க்கு ஓர் உத்தர கடிதம் வரைந்தனன். தாங்கள் எனக்கு இருமையும் தொடர்ந்த துணைவராக நினைக்கின்றேன். அன்றி வேறென்னை நினைப்பேன். தங்களுக் கன்றியும் நமது செல்வராய முதலியாரவர்களுக்கும் கடனிருந்தால் திருவருளால் நீங்கிவிடும்.

அது குறித்துச் சலிக்க வேண்டாவென்று குறிக்க. நாயக்கர்சாமி யென்பவர் தற்கால மிவ்வுலகிலிருக்கின்ற தான்றோன்றிச் சாமிகளிற் றலைநின்ற சாமி யென்க. என்னை - அறிய வேண்டுவனவற்றை யறிய முயலாமையோடு பித்த மயக்கான் மனஞ் சென்ற வழி சென்று பித்தச்சாமியென்னும் விசேடப் பேர் ஒன்று மிகையாகக் கொண்டிருக்கின்றனர். ஆகலில் சூழும் வண்ணஞ் சூழ்க. அன்றி சிவ சிந்தனையுஞ் ஜீவ கருணையுங் கைவிடாது ஓங்குக. வேறு விடயங்களைச் சந்தி செய்யும் பந்த சந்தி சத்தியாலே மாறாது விழித்திருக்க. சுபம் பெறுக.அக்ஷய வருடம்

இங்ஙனம்:
சிதம்பரம் இராமலிங்கம்

சித்திரை மாதம் 8ஆம் நாள் 

இஃது
சென்னபட்டணம் ராயல் ஓட்டல் மஹாராஜராஜஸ்ரீ
வேலு முதலியாரவர்கள் மேல்விலாசம் பார்வையிட்டு
ஏழுகிணற்றுக்கடுத்த வீராசாமிப் பிள்ளை வீதியில்
மகாராஜராஜஸ்ரீ இரத்தின முதலியாரவர்கள்
சமுகத்திற்கு தயவு செய்விக்க. சுபம்.
* * *

திருமுகம் 31

பலர் பலர் விவகாரம்

11-6-1866

உ*

சிவமயம்

கல்வி கேள்வி அன்பு அறிவு ஒழுக்கந் தயை முதலியவற்றாற் சிறந்து எனக்கோர் துணையாய் விளங்கிய தங்கட்கு குரு கடாக்ஷத்தால் தீர்க்காயுளுந் திடதேகமும் சகல சம்பத்து மேன்மேலுண்டாக. தங்கள் சுபசரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க விரும்புகின்றேன்.

இந்தக் கடித முன்னிலையால் தங்களைக் காணுகின்ற பெரிய புரா­கர்க்கு சுமார் 4மாத பரியந்தம் மாதம் ஒன்றுக்கு ரூபாய் 4 தாங்கள் கடன் வாங்குகின்ற இடங்களில் வாங்கி மாத மாதம் கொடு... வேண்டும். இவ்...வாங்கிக் கொடுத்தனு... அவர் கையில் பணமிருந்தால் விரைவில் செலவழிந்து போம். அது தங்களுக்குந் தெரியும். இந்தக் காலம் மிகவும் உஷ்ண காலமாக விருத்தலால் தாங்கள் தேகத்தை சாக்கிரதையாகப் பாராட்டிக் கொண்டு வரவேண்டும். இந்த பெரியபுரா­கர் தற்காலம் உடம்பு அபக்குவராக வருகின்றார். தாங்கள் கடிதம் எழுதக் குறிக்கும்போது இவர் தரத்தையுங் குறிக்க வேண்டும். எனக்குத் தற்காலம் பலர் பலர் விவகார முதலியவற்றால் உடம்பு அபக்குவமாக விருக்கின்றது. நான் கூடலூரிலிருக்கின்றேன்.

அக்ஷய வருஷம் வைகாசி மாதம் 30ஆம் நாள் 

சிதம்பரம் இராமலிங்கம்

நான் அவ்விடம் வருகின்ற காலம் சமீபத்தில் குறிக்கின்றேன்.

இஃது
சென்னப்பட்டணம் பெத்து நாயக்கன்பேட்டை ஏழு
கிணற்றுக்கு அடுத்த வீராசாமிப் பிள்ளை வீதியில்
மஹாராஜராஜஸ்ரீ முதலியார் ரத்தன முதலியார்ரவர்கள்


திவ்விய சமுகத்துக்கு நன்மை.
* உ சிவமயம் இருந்த இடமும், கையொப்பமிட்ட இடமும் வழிபாட்டிற்காகக் கத்தரித்து எடுக்கப்பட்டிருக்கின்றன.
* * *

திருமுகம் 32

கால விகற்பம்

22-7-1866சிவமயம்

அன்பு அருள் அறிவு முதலியவற்றாற் சிறந்து தங்கட்கு சிவகடாக்ஷத்தால் தீர்க்காயுளும் திடதேகமும் சகல சம்பத்து மேன்மேலுண்டாகவென்று பிரார்த்திக்கிறேன். தங்கள் தேக விஷயத்தில் அதிகமாக சாக்கிரதையாக சிவத்தியானத்தை விடாமல் வரவுக்குத் தக்கபடி நடக்கவேண்டுமென்று மிகவும் கோருகிறேன்.

முன்னர் நான் பெரிய புரா­கர் விஷயத்தில் எழுதின கடிதத்திற்குப் பதில் தாங்கள் எழுதின கடிதம் வந்து சேர்ந்தது. ஆயினும் என் மனம் இக் கால விகற்பத்தால் விகற்பித்துக் கொண்டிருப்பதால் உடனே பதில் தெரிவிப்பதற்குத் தடையாயிற்று. அது குறித்து வேறு நினைக்க வேண்டாம். நான் இன்னும் இரண்டு மாசத்திற்குள் அவசியம் அவ்விடம் வந்து சுமார் இருபது தினத்திற்குள் பிரயாணப்பட்டுத் திரும்புவதாக நினைத்திருக்கிறேன். அப்போது தங்களுக்குத் தெரிவிக்க வேண்டியவை தெரிவிக்கிறேன். தாங்கள் உடம்பு விஷயத்தில் அதிக சாக்கிரதையும் சமுசார விஷயத்தில் அதிக வண்மையுமுடையவர்களாக விருங்கள். நமது மகாராஜராஜஸ்ரீ செல்வராய முதலியாரவர்களுக்கும் இப்படியே தேக முதலியவற்றில் சாக்கிரதையும் சிவத்தியானத்தை விடாமையும் உள்ளவர்களாக வேண்டுகிறேன். அதையுங் குறிக்க வேண்டும். பெரிய புரா­கர் விஷயத்தில் முன்பு நான் குறித்தபடி இன்னுஞ் சிலகாலம் பிரயாசை எடுத்துக் கொள்ளுங்கள். நான் பின்னே அந்தப் பிரயாசையை மாற்றுகிறேன். சுந்தரம்மாள் அவர் புருஷனார் பெண்கள் முதலானவர்களுக்கும் நான் வருதலைக் குறிப்பிக்க வேண்டும். அன்றி சிரஞ்சீவி நமசிவாயப் பிள்ளை அவ்விடம் வந்திருக்கிறார். அவர்க்குந் தெரியப்படுத்துங்கள். வேலூர் மகாராஜராஜஸ்ரீ வேலு முதலியார் முதலானவர்களுக்கும் மகாராஜராஜஸ்ரீ கந்தசாமி முதலியார் முதலானவர்களுக்கும் அங்ஙனமே குறிக்க வேண்டும். எழுதுவதற்குத் தருணமல்லாத மனத்தொடும் இதை எழுதினேன்.

சிரஞ்சீவி சிரஞ்சீவி.

ஆடி மாதம் 8ஆம் நாள் 

இங்ஙனம்
சிதம்பரம் இராமலிங்கம்

சி. நமசிவாயப் பிள்ளைக்கு பதில் இன்னுஞ் சில தினத்தில் தெரிவிக்கிறதாகக் குறிக்க வேண்டும்.

இஃது
சென்னப்பட்டணம் ராயல்ஓட்டல் மகாராஜராஜஸ்ரீ
முதலியார் வேலு முதலியார் அவர்கள் மேல் விலாசம்
பார்வையிட்டு ஏழு கிணற்றுக்கடுத்த வீதியிலிருக்கும்
மகாராஜராஜஸ்ரீ இரத்தின முதலியார் அவர்களுக்கு
சேர்ப்பிக்க வேண்டும். இதனுடன் தங்களுக்கும் ஒரு
கடிதம் எழுதி தபாலில் போட்டிருக்கின்றது.
சுபம் சுபம்.
* * *


திருமுகம் 33

பெரியவர் சிவபதம் அடைவு
அன்பு அறிவு தயவு கல்வி கேள்வி முதலிய சிறந்த தங்கட்கு சிவ கடாக்ஷத்தால் தீர்க்காயுளும் சகல சம்பத்து மேன்மேல் உண்டாக. தங்கள் சுபசரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க வேண்டும். பெரியவர் சிவபதம் அடைந்த... செவ்வாய்கிழமை சாயங்காலம் தெரிந்து கொண்டேன். நான் சமீபத்திலிருக்கவும் சிதம்பரத்தில் சமாதி வைக்கவும் அவர்கள் எண்ணியபடி நேரிடாமல் ... விட்டதை... இது நிற்க.
... ... ... ...
... ... ... ...
படத் தொடங்குவார்கள். அதனால் காலமும் செலவும் நீட்டிக்கும். காலமும் வேற்றுமையாக இருக்கின்றது. ஆதலால் சிநேகர் மகாராஜராஜஸ்ரீ வேலு முதலியாருக்கு கடிதம் எழுதி... அந்தக் கடிதப்படி அவர்கள் நடத்துகின்ற பட்சத்தில், தாங்களும் அன்பர் செல்வராய முதலியார் நாயக்கர் முதலானவர்களும் உடனிருந்து நடத்துவிக்க வேண்டும். நான் ஐப்பசி மாசம் அவ்விடம் வருகிறேன். நான் வருவதற்கு முன்பே வேலு முதலியாரவர்கட்கு தெரிவித்து அவர்கள் வந்த பின்பு அவர்களுடன் வருவேன். நான் வந்த பின் அவர்களுக்கு நேரிட்டிருக்கிற கடன்...நீங்களும்...
... ... ... ...
... ... ... ...
கடன் முதலிய சல்லியங்களை ஆண்டவர் விரைவில் நிவர்த்தி செய்வார். தாங்களாவது முதலியாராவது சஞ்சலிக்க வேண்டாம்... வடிவேலுப் பிள்ளை, தாயார், சுந்தரம்மாள், புருஷன் முதலானவர்களுக்கும் இன்னும் இரண்டு மாதத்திற்குள் ஜீவனத்துக்கு இடம் ஏற்படுத்துவார் கடவுள். அவர்களிடம் திடஞ் சொல்ல வேண்டும். நமசிவாயப் பிள்ளையை நான் தெரிவிக்குமளவும் அவ்விடந்தானே இருக்கும்படி சொல்லவும். அவன்..
... ... ... ...
... ... ... ...
பிரசவமான சங்கதி தெரிவிக்கச் சொல்லவும். உடனே தாங்கள் எனக்கு கூடலூருக்கு அவ்விடத்திய சங்கதிகளை தபாலில் தெரிவிக்க வேண்டும்.

சிரஞ்சீவி

சிதம்பரம் இராமலிங்கம்

இஃது
சென்னப்பட்டணம் ராயல் ஓட்டல் மகாராஜராஜஸ்ரீ
வேலு முதலியார் அவர்கள் மேல் விலாசம்
பார்வையிட்டு ஏழுகிணற்றுக்கடுத்த வீராசாமிப்
பிள்ளை தெருவில் மகாராஜராஜஸ்ரீ ரத்தின முதலியார்
அவர்களிடம் சேர்ப்பிக்கக் கோருகிறேன்.
* * *

திருமுகம் 34

விண் படைத்த பொழில் தில்லை

26-11-1866கல்வி கேள்விகளாலு மன்பறி வொழுக்கங்களாலுஞ் சிறந்த தங்கட்கு சிவகடாக்ஷத்தால் தீர்க்காயுளும் சகல சம்பத்து மேன்மேல் உண்டாக வேண்டும். தங்கள் சுபசரித்திரங்களை அடிக்கடி கேட்க விரும்புகிறேன். மகாராஜராஜஸ்ரீ அப்பாசாமி செட்டியா ரவர்கட்குத் தாங்கள் வரைந்த கடிதத்திற் குறித்த வண்ணம் சிதம்பர விஷயமான பாடல்களை தங்கள் கருத்தின்படி அச்சிட்டுக் கொள்ளுங்கள். அன்றியும் 'கண்டா யென்றோழி' என்கிற பாடல்களை வைத்திருக்கின்றவர் தற்காலம் சமீபத்திலில்லை.

அவர் வந்தவுடன் வாங்கி யனுப்புகிறேன். 'விண்படைத்த பொழிற்றில்லை யம்பலத்தா னெவர்க்கு மேலானா னன்பருள மேவுநடராஜன்' எனல் வேண்டும். இது நிற்க நான் தற்காலம் அவ்விடம் வருவதற்கு சமயமாகத் தோற்றவில்லை. ஆயினும் நமது... தலைவராகிய கடவுளது திருவுளச் சம்மதிக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். எந்த இரவில் எந்தப் பகலில் திருவுளச் சம்மத வுத்தரம் எனக்குக் கிடைக்கின்றதோ, அந்த இரவில் அந்தப் பகலில் பிரயாணப்படுவதற்கு யாதொரு தடையு மிராது. இரவும் பகலும் இதை நினைத்துக் கடவுளை தியானிக்கின்றேன். அவர் உத்தரத் தடையன்றி வேறு தடை யாதொன்றுமில்லை. தாங்கள் தேக முதலியவற்றில் சாக்கிரதையுடையவராய் சிவத்தியான சகிதராக இருங்கள்.

அன்றி இ ... லீவில் இவ்விடம் வருவதற்காவது அல்லது மற்ற எவ்விடம் போவதற்காவது எண்ணமிருந்தால் அதை முன்னதாக எனக்குத் தெரிவிப்பீர்களாக. நமது அன்பர் மகாராஜராஜஸ்ரீ செல்வராய முதலியாரவர்கட்கும் இதை குறிப்பிக்க வேண்டும். பெங்களூர் மகாராஜராஜஸ்ரீ வேலு முதலியார் தற்காலம் என்ன அலுவலில் இருக்கின்றார். தெரிவிக்க வேண்டும். சுந்தரம்மாளுக்கும் அவர் புருஷனுக்கும் வருமாதத்தில் ஜீவனோபாய விருத்தி உண்டுபண்ணுவிப்பதாகச் சொல்லுங்கள். என்னைக் குறித்த மற்றவர்களுக்கும் அங்ஙனங் குறிப்பீர்களாக. சிரஞ்சீவி சிரஞ்சீவி சிரஞ்சீவி.

இங்ஙனம்
சி. இராமலிங்கம்.

இதனடியில் எழுதுவதை தாங்கள் ஞாயிற்றுக்கிழமை..... யாவது அல்லது ஓய்வு ஏற்படும் எந்த தினத்திலாவது
மகாராஜராஜஸ்ரீ வேலு முதலியாரவர்கட்கு காண்பிப்பீர்களாக.

கல்வி கேள்விகளாலும் அன்பறி வொழுக்கங்களாலும் சிறந்த நண்பராகிய மகாராஜராஜஸ்ரீ ஸ்ரீ வேலு முதலியா ரவர்கட்கு வந்தனம்.

தங்கள் சுப சரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க விரும்புகிறேன். தாங்கள் தேக முதலிய கருவிகளை சாக்கிரதையாக நடத்திக்கொண்டு சிவத்தியான சகிதராக இருங்கள். நான் மகாராஜராஜஸ்ரீ ரத்தின முதலியார் அவர்களுக்கு வரைந்த வாசகத்தைப் பாருங்கள். எந்தத் தினத்தில் பிரயாணப் படலா மென்றே இரவும் பகலும் விரைந்து விரைந்து நினைக்கிறேன். தாங்கள் இந்தப் பக்கம் வரும்படி எண்ணங்கொண்டால் முன் எனக்குத் தெரிவிப்பீர்களாக. எழுதுவதற்கு அசந்தர்ப்பத்தால் இப்படி எழுதினேன். மன்னிப்பீர்களாக. வந்தனம்.
அக்ஷய வருடம் கார்த்திகை 12ஆம் நாள்

சிதம்பரம் இராமலிங்கம்.

இஃது

சென்னைப்பட்டணம் பெத்து நாயக்கன் பேட்டை
ஏழு கிணற்றுக்குக் கீழ்பக்கம் வீராசாமிப் பிள்ளை
தெருவில் மகாராஜராஜஸ்ரீ முதலியார் இரத்தின
முதலியாரவர்களுக்கு வருவது.
சுபம்.
* * *

திருமுகம் 35

எஞ்சி நின்ற நூல்கள்

அன்பறிவு முதலியவற்றிற் சிறந்த தங்கட்கு சிவகடாக்ஷத்தால் மேன் மேல் சுபம் உண்டாக. தாங்கள் குறித்தபடி வரைந்து அனுப்பினேன். இவை மிகவும் விரைவில் வரையப்பட்டன. ஆகலால் மிகவும் மெதுவில் பார்க்க வேண்டும்.

 
மற்றைச் சங்கதிகளைப் பின்னிட்டு தெரிவிக்கிறேன். அன்றி, இதில் குறிக்கின்றவைகளை இனி அச்சிடுவதாகக் குறிப்பீர்களாக.

அவை-
நடராஜ நிபுணம் - நடராஜ விசித்திரம் - நடராஜ மதுரம் - நடராஜ அலங்காரம் - நடராஜ ஞான நாடகம் - நடராஜ ஆனந்த நாடகம் - சிதம்பர வுபதேசம் - சிற்றம்பல நடனம் - பொன்னம்பல நடனம் - பொது நடனம் - தத்துவ நடனம் - ஆனந்த நடனம் - அதீத நிலை அருள் விளக்கம் - மெய்ம்மொழிப்பொருள் விளக்கம் - சன்மார்க்க விளக்கம் - சாதன விளக்கம் - கலாந்த விளக்கம் - யோகாந்த விளக்கம் - நாதாந்த விளக்கம் - போதாந்த விளக்கம் - வேதாந்த விளக்கம் - சித்தாந்த விளக்கம் - அண்ட விளக்கம் - பிண்ட விளக்கம் - பிரகிருதி விளக்கம் - தத்துவ விருத்தி - சுத்த சிவ ராசியம் - பரசிவராசியம் - மந்திரக் கொத்து - மகாவாக்கிய வகை - பொது வேதம் - குடும்ப கோஷம் - இயல்வகை - அளவை வகை - ஞாய வகை - இலக்கண விருத்தி - தர்க்க விருத்தி - தென்மொழி விளக்கம் - வடமொழி விளக்கம் - உலகியல் விளக்கம் - கலைமரபு.
இந்த தபால் வந்தவுடன் சேர்ந்த செய்தி தெரிவிக்கவேண்டும்.


சிதம்பரம் இராமலிங்கம்,

* * *
திருமுகம் 36

பொன் வளைவு

3 - 5 - 1868சிவமயம்

அன்பு அறிவு தயை முதலிய சுபகுணங்களிற் சிறந்த உண்மையன்பராகிய தங்கட்கு சிவகடாக்ஷத்தால் தீர்க்காயுளும் சகல சம்பத்து மேன் மேல் உண்டாக வென்று திருவருளை சிந்திக்கின்றேன். தங்கள் சுப சரித விபவங்களை அடிக்கடி கேட்க விரும்புகின்றேன். மற்ற சங்கதிகளை எனக்கு சாவகாசம் நேரிட்டபோது எழுதித் தெரிவிக்கின்றேன். தற்காலம் வேண்டுவதை இதனடியில் எழுதுகிறேன். அதாவது பொன்னுரைக்கின்ற உரைகல் ஒன்று வெள்ளியுடைக்கின்ற உரைகல் ஒன்று இவைகளையும் இவைகளுக்கு அடுத்த தராசு முதலிய கருவிகள் வைக்கின்ற பை ஒன்று இம்மூன்றும் வாங்கி பங்கியில் அனுப்பவேண்டும். சுமார் 5 பலம் 8 பலம் நிறுக்கத்தக்க தராசு நேரிட்டாலும் அதனுடன் அனுப்ப வேண்டும்.

தேகத்தை பக்குவமாகப் பாராட்டிக்கொண்டு சிவசிந்தையும் ஜீவகாருண்ணியமும் மாறாமல் சாக்கிரதையோடு இருப்பீர்களாக. இதை சமரசவேத சன்மார்க்க சங்கத்தவ ரல்லாதவர்களுக்கு வெளிப்பட வாசிக்கப்படாது. வேணும். சிரஞ்சீவி சிரஞ்சீவி.

விபவ வருஷம் சித்திரை மாதம் 23ஆம் நாள்

இங்ஙனம் 
சிதம்பரம் இராமலிங்கம்.

Stamped இஃது
சென்னப் பட்டணம் ஏழு கிணற்றுக் கடுத்த
வீராசாமிப் பிள்ளை வீதியில் கீழண்டை
வாடை நெ.38ஆவது கதவிலக்கமுள்ள
வீட்டில் இறுக்கம் மகாராஜராஜஸ்ரீ இரத்தின
முதலியா ரவர்களுக்கு
Madras
* * *

திருமுகம் 37

திருநாவலூர்

26-5-1868சிவமயம்

கல்வி கேள்விகளாலும் அன்பறி வொழுக்கங்களாலுஞ் சிறந்த தங்கட்கு திருவருள் வலத்தால் தீர்க்காயுளும் சகல சம்பத்து மேன்மேல் உண்டாக. தங்கள் சுபசரித விபவங்களை அடிக்கடி கேட்டு மகிழ விருப்பம் உள்ளவனாக இருக்கிறேன். தாங்கள் அனுப்புவித்த பங்கியில் தாங்கள் கடிதத்தில் குறித்தபடி இருக்கக்கண்டு களிப்பொடு பெற்றுக் கொண்டேன். தாங்கள் அனுப்புவித்த பங்கிவந்த தினத்திற்றானே யெனக்கு ஊர்ப்புறங்களிற் போக அவசியமான பிரயாண நேரிட்டபடியால் உடனே பங்கிவந்த செய்தியைத் தங்களுக்குத் தெரியப் படுத்துவதற்குக் கூடாமையாயிற்று. இந்தக் கடிதமும் கொள்ளடத்தின் வடகரையில் திருநாவலூரில் இருந்து எழுதினேன். என்னுடன் சுமார் 20 பெயர்கள் வந்திருக்கின்றார்கள். மற்றவர்கள் சாலையிலிருக்கின்றார்கள். நான் சாலைக்கு வந்தவுடன் மற்ற சங்கதிகளைத் தபாலில் தெரிவிக்கிறேன். தாங்கள் சாக்கிரதையோடு தேகத்தைப் பக்குவமாகப் பாராட்டிக் கொண்டு சிவசிந்தையோடிருக்க வேண்டும். தங்களுக்கும் நமக்கும் அன்பராகிய செல்வராய முதலியாரவர்களுக்கும் இங்ஙனம் தெரிவிக்கவேண்டும். வாழ்க வாழ்க வாழ்க. நான் சுமார் பத்து தினத்தில் தருமச்சாலைக்கு வந்து சேர்வேன்.

விபவ வருஷம் வைகாசி மாதம் 15ஆம்நாள்

சிதம்பரம் இராமலிங்கம்.

இஃது
சென்னப்பட்டணம் ஏழுகிணற்றுக்கு அடுத்த
வீராசாமிப் பிள்ளை வீதியில் 38ஆவது கதவிலக்க
முள்ள வீட்டில் மஹாராஜராஜஸ்ரீ முதலியார்
இரத்தின முதலியா ரவர்கள் திவ்விய சமுகத்திற்கு.
* * *


திருமுகம் 38
உலக போக உவர்ப்பு
20-8-1869என் பிரியமுள்ள ரத்தன முதலியாரவர்களுக்கு சிவானுக்கிரகத்தால் தீர்க்காயுளும் சகல சம்பத்தும் மேன்மேல் உண்டாவனவாக.

தாங்கள் எழுதிய கடிதத்தைக் கண்ணுற்றறிந்தேன். சடமும் துக்கமும் அநித்தியமு மாகிய உலகபோகத்தை விரும்புகின்ற மற்றவர்களைப்போல மயங்குதல் வேண்டாம். தங்கள் கருத்தின்படி நமது உயிர்த்துணைவனாகிய நடராஜப் பெருமான் திருவருளால் அதிசீக்கிரத்தில் கைகூடுமென்று நம்பியிருங்கள். நான் எப்போது கடிதத்தால் தெரிவிக்கிறேனோ அப்போது யாதொரு தடையுஞ் செய்யாமல் அக்கடிதத்தில் குறித்தவண்ணம் என்னிடம் வந்து சேருவதற்கு மனமுள்ளவர்களாக இருங்கள். தேகத்தை சாக்கிரதையாக பாராட்டி வாருங்கள். மற்ற சங்கதிகளை பின் தெரிவிக்கின்றேன். இதனுள் வைத்த கடிதத்தை செல்லப்ப முதலியார்க்கு சேர்ப்பியுங்கள். தாங்கள் ஒன்றுக்கும் அஞ்ச வேண்டாம், அஞ்சவேண்டாம்.

ஆவணி மாதம் 6ஆம் நாள் 

இங்ஙனம்*
சிதம்பரம் இராமலிங்கம்.
இஃது

சென்னப்பட்டணம் ராயல் ஓட்டல் மகாராஜராஜஸ்ரீ
ஸ்ரீ வேலு முதலியார் அவர்கள் மேல் விலா
சம் பார்வையிட்டு ஏழுகிணற்று வீதிக்கு
சமீபம் மகாராஜராஜஸ்ரீ இரத்தின முதலியார்
அவர்கள் திவ்விய சமுகத்திற்கு சேர்ப்பிக்க
வேண்டும்.
* இங்ஙனம் கையொப்பமிட்டிருக்கக் கூடிய இடம் வழிபாட்டிற்காகக் கத்தரித்து எடுக்கப்பட்டிருக்கிறது.
* * *

இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்
முற்றுப் பெற்றன.
 

VallalarOrg Sanmarga Foundation - All the contents and mp3 songs on this website are copyrighted and belongs to respective owners. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the audio or documents without our permission is prohibited.
First Launched on Apr-16-1998. Last updated:Aug.04.2013