1. சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம்
 
1. சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம்.

இயற்கை உண்மையரென்றும்,

இயற்கை அறிவினரென்றும்,

இயற்கை இன்பினரென்றும்,

நிர்க்குணரென்றும்,

சிற்குணரென்றும்,

நித்தியெரென்றும்,

சத்தியரென்றும்,

ஏகரென்றும்,

அநேகரென்றும்,

ஆதியரென்றும்,

அமலரென்றும்,

அருட்பெருஞ்ஜோதியரென்றும்,

அற்புதரென்றும்,

நிரதிசயரென்றும்,

எல்லாமான வரென்றும்,

எல்லாமுடைய வரென்றும்,

எல்லாம் வல்லவரென்றும்,

குறிக்கப்படுதல் முதலிய அளவு கடந்த

"திருக்குறிப்பு திருவார்த்தைகளாற் சுத்த சன்மார்க்க ஞானிகள்"

துதித்தும்,

நினைத்தும்,

உணர்ந்தும்,

புணர்ந்தும்,

அனுபவிக்க விளங்குகின்ற "தனித்தலைமை பெரும் பதியாகிய பெருங்கருணை கடவுளே!"

தேவரீரது திருவருட் சமூகத்தில் துரும்பினும் சிறியோமாகிய யாங்கள் சிற்றறிவாற் செய்து கொள்ளும் சிறு விண்ணப்பங்களைத் திருச்செவிக்கேற் பித்தருளி யெங்களை இரஷித்தருளல் வேண்டும்.

எல்லாச் சத்திகளும், எல்லாச் சத்தர்களும், எல்லாத் தலைவர்களும் அறிந்து கொள்வதற்கு மிகவு மரியதாய், எல்லாத் தத்துவங்களுக்கும், எல்லாத் தத்துவிகளுக்கும் அப்பால் அப்பாலாய் விளங்கும் ஓர் சுத்த ஞான வெளியில் தமக்கு ஒரு விதத்தாலும் ஒப்புயர்வு சிறிதுங் குறிக்கப்படாத தனிப்பெருந் தலைமை அருட்பெருஞ்ஜோதியராகி விளங்குகின்ற தேவரீரது தனிப்பெருந் தன்மைக்கு மெய்யறிவுடையோரால் விதிக்கப்பட்ட வேதாகமங்களும் பெருந்தகை வாசகத்தைப் பெறாது சிறுதகை வாசகங்களைப் பெற்றுத் திகைப்படைகின்றன என்றால், மலத்திற் புழுத்த புழுவினுஞ் சிறியேமாகிய யாங்கள் திருச்சமூகத்தில் விண்ணப்பித்தற் குரிய பெருந்தகை வாசகத்தை எவ்வாறறிவோம்! எங்ஙனஞ் செய்வோம்! ஆகலில், கருணாநிதியாகிய கடவுளே! யாங்கள் விண்ணப்பிக்கின்ற அற்ப வாசகத்தில் உரிமை நோக்காது அங்கீகரித்தருளி யெங்களைக் காத்தருளல் வேண்டும்.

அஞ்ஞானத்திற் பயின்று:

தாயினுஞ் சிறந்த தயவுடைக் கடவுளே! இயற்கையே அஞ்ஞான விருளில் அஞ்ஞான வுருவில் அஞ்ஞானிகளாய் அஞ்ஞானத்திற் பயின்று ஏதுந் தெரியாது கிடந்த எங்களைத் தேவரீர் பெருங்கருணையாற் பவுதீக உடம்பிற் சிறிதளவு தோற்றி விடுத்த அஞ்ஞான்று தொட்டு இஞ்ஞான்று வரையும், அது கொண்டு அறிவே வடிவாய், அறிவே யுருவாய், அறிவே பொறியாய், அறிவே மனமாய், அறிவே யறிவாய், அறிவே யனுபவமாய் அனுபவிக்க தெரிந்து கொள்ளாது, குற்றமே வடிவாய்க், குற்றமே யுருவாய்க், குற்றமே பொறியாய்க், குற்றமே மனமாய்க், குற்றமே அறிவாய், குற்றமே அனுபவமாய் அனுபவிக்கின்ற சிறியேங்கள் திருச்சமூகத்தில் விண்ணப்பிக்கின்ற விண்ணப்பமும் குற்றமே வடிவாய் குற்றமே குறிக்குமென் றறிந்தோமாயினும், குற்றங்குறியாத வகை விண்ணப்பஞ் செய்வதற்கு ஒருவாற்றானு முணர்ச்சி யில்லோ மாதலிற் றுணிவு கொண்டு விண்ணப்பிக்கிறோம். குற்றங்களையே குணங்களாகக் கொள்ளுதல் தேவரீர் திருவருட் பெருமைக்கியற்கையாதலின் இவ்விண்ணப்பங்களிற் குற்றங்குறியாது கடைக்கணித்தருளிக் கருணை செய்தல் வேண்டும்.

அஞ்ஞான விருளில் ஒன்றுந் தெரியா துணர்ச்சி யின்றிக்கிடந்த காலம் போக, அவ்விருளை விட்டு நீங்கிய காலத்தே,

தாவரயோனி வர்க்கம்:

இவ்வுளகினடத்தே புல், நெல், மரம், செடி, பூடு முதலியவாகவும் கல், மலை, குன்று முதலியவாகவும் பிறந்து பிறந்து, களையுண்டல், வெட்டுண்டல், அறுப்புண்டல், கிள்ளுண்டல், உலர்ப்புண்டல், உடைப்புண்டல், வெடிப்புண்டல் முதலிய பலவேறு அவத்தைகளால் இறந்து இறந்து அத்தாவரயோனி வர்க்கங்களெல்லாஞ் சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தேம்,

ஊர்வன நீர் வாழ்வன யோனிவர்க்கம்:

பின்னர் எறும்பு, செல், புழு, பாம்பு, உடும்பு, பல்லி முதலியவாகவும் தவளை, சிறுமீன், முதலை, சுறா, திமிங்கிலம் முதலியவாகவும் பிறந்து பிறந்து, தேய்ப்புண்டல், நசுக்குண்டல், அடியுண்டல், பிடியுண்டல் முதலிய பல வேறு அவத்தைகளால் இறந்து இறந்து அவ்வூர்வன நீர் வாழ்வன யோனிவர்க்கங்க ளெல்லாஞ் சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தேம்,

பறவையோனி வர்க்கம்:

பின்னர் ஈ, வண்டு, தும்பி, குருவி, காக்கை, பருந்து, கழுகு முதலியவாகப் பிறந்து பிறந்து, அடியுண்டல், பிடியுண்டல், அலைப்புண்டல், உலைப்புண்டல் முதலிய பலவேறு அவத்தைகளால் இறந்திறந்து அப்பறவையோனி வர்க்கங் களெல்லாஞ் சென்று சென்று உழன் றுழன்று அலுப்படைந்தேம்;

விலங்குயோனி வர்க்கம்:

பின்னர் அணில், குரங்கு, நாய், பன்றி, பூனை, ஆடு, மாடு, யானை, குதிரை, புலி, கரடி முதலியவாகப் பிறந்து பிறந்து பிடியுண்டல், அடியுண்டல், குத்துண்டல், வெட்டுண்டல், தாக்குண்டல், கட்டுண்டல், தட்டுண்டல், முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்திறந்து அவ்விலங்குயோனி வர்க்கங்க ளெல்லாம் சென்று சென்று, உழன்றுழன்று அலுப்படைந்ததேம்;

தேவயோனி வர்க்கம்:

பின்னர் பைசாசர், பூதர், இராக்கதர், அசுரர், சுரர் முதலியராகப் பிறந்து பிறந்து, அலைப்படுதல், அகப்படுதல், அகங்கரித்தல், அதிகரித்தல், மறந்து நிற்றல், நினைந்து நிற்றல், மயக்குறுதல், திகைப்புறுதல், போரிடுதல், கொலைபடுதல் முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்து இறந்து அத்தேவயோனி வர்க்கங்க ளெல்லாஞ் சென்று சென்று, உழன் றுழன்று அலுப்படைந்தோம்;

நரகயோனி வர்க்கம்:

பின்னர் காட்ட கத்தார், கரவு செய்வார், கொலை செய்வார் முதலியராக பிறந்து பிறந்து பயப்படல், சிறைப்படல், சிதைபடல் முதலிய அவத்தைகளால் இறந்திறந்து அந்நரகயோனி வர்க்கங்களெல்லாஞ் சென்று சென்று, உழன்றுழன்று அலுப்படந்ததேம்.(1)

கைமாறு:

அங்ஙனம் யாங்கள் அப்பிறவிகள் தோறும் அடைந்த அலுப்பும் அச்சமும் களைப்பும் துன்பமும், திருவுளத் தடைத்து இரங்கியருளி அழியாப் பெருவாழ்வைப் பெருதற்குரிய உயரறிவுடைய இம்மனித தேகத்தில் செலுத்தியருளிய தேவரீரது பெருங்கருணைக்கு யாங்கள் செய்யுங் கைமாறு ஒன்றுந் தெரிந்தோமில்லை.

உயிர்களின் அகத்தும் புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் நீக்கமின்றி நிறைந்து விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே!

வீண்போது:

இம்மனித தேகத்திற் செலுத்திய காலத்திலும் தாய் வயிற்றிலும் சிசுப் பருவத்திலும் குமாரப் பருவத்திலும் பல வேறு அவத்தைகளால் அறிவின்றி யிருந்தோமாகலில், தேவரீர் பெருங்கருணை திறத்தை அறிந்து கொள்ளாமல் வீண்போது கழித்தோம்.

ஓர் உண்மைக் கடவுள்:

அப்பருவங்கள் கழிய இப்பருவத்தினிடத்தே, எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும், எல்லா பொருட்களையும், மற்றை யெல்லாவற்றையும் தோற்றுவித்தும், விளக்கஞ் செய்வித்தும், துரிசு நீக்குவித்தும், பக்குவம் வருவித்தும், பலன் தருவித்தும்(2), எங்கும் பூரணராகி விளங்குகின்ற ஓர் உண்மைக் கடவுள் உண்டென்றும், அக்கடவுளை உண்மையன்பாற் கருத்திற் கருதி வழிபாடு செய்யின் அக்கடவுள் திருவருள் நமது கருத்தின்கண் வெளிப்பட்டு விளங்குமென்றும், அத்திருவருள் விளக்கத்தால் மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகளெல்லாவற்றையும் தவிர்த்து எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவுந் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வை யடைதல் கூடுமென்றும், எங்கள் அறிவில் தேவரீர் திருவருளால் உண்மைப்பட வுணர்த்தியருளப் பெற்றோம்,

எஞ்ஞான்று செய்வோம்:

அவ்வுணர்ச்சியைப் பெற்றது தொடங்கிக் கடவுள் வழிபாடு எஞ்ஞான்று செய்வோம்? கடவுள் திருவருள் விளக்கம் எந்நாளடைவோம்? மரணம், பிணி, மூப்பு, முதலிய அவத்தைகள் எப்போது நீங்கும்? என்று மழியாத பேரின்ப சித்தி எக்காலங் கிடைக்கும்? என்று எண்ணி யெண்ணி வழிதுறை தெரியாமல் வருந்தி நின்ற தருணத்தே.

ஓர் ஞான சபைக் காணுதல்:

களைப்பறிந்துதவுங் கருணைக் கடலாகிய கடவுளே! தேவரீர் நெடுங்காலம் மரண முதலாகிய அவத்தைகளால் துன்பமுற்றுக் களைப்படைந்த உங்களை அவ்வவத்தைகளினின்றும் நீக்கிக் களைப்புங் கலக்கமுந் தவித்து அழியாத பேரின்ப சித்தியை அடைவித்தற் பொருட்டாகவே பூர்வஞான சிதம்பரத்தின் வடபால் பார்வதிபுரமென்று குறிக்கப்படுகின்ற உத்திரஞான சித்திபுரத்தில் யாம் அளவுகடந்த நெடுங்காலம் சித்தியெல்லாம் விளங்கத் திருவருள் நடனம் செய்வோ மென்றும் அது தருணம் மிகவும் அடுத்த சமீபித்த தருண மென்றும், "அப்பதியினிடத்தே யாம் அருள் நடனம் புரிதற்கு அடையளாமாக ஓர் ஞான சபைக் காணுதல் வேண்டு" மென்றும் திருவருட்குறிப்பால் அறிவித்தது மன்றி, அருளுருவாகி எங்களகத்தும் புறத்தும் அமர்ந்தருளி யாதோர் தடைகளுமின்றி அத்திருஞான சபையையுந் தோன்றி விளங்கச் செய்வித்தருளிய தேவரீர் பெருங்கருணையை கருதுந்தோறும் பெருங்களிப்படைகின்றோம்.

இனி அத்திருஞான சபையை அலங்கரித்தல் வேண்டுமெனக் குறிப்பித்த வண்ணம் அலங்கரிக்க தொடங்குகின்றோம்.

அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே!

தேவரீர் அருளுருவாகி எங்கள் அகத்தும் புறத்தும் அமர்ந்தருளி யாங்கள் செய்யும் இவ்வலங்காரத்திருப்பணியில் எவ்விதத்தாலும் யாதொரு தடையும் வாராத வண்ணஞ் செய்வித்து அவ்வலங்காரத் திருப்பணியை முற்றுவித்தருளல் வேண்டும்,

சர்வ வல்லபராகிய தனித்தலைமை கடவுளே!

அத்திருவலங்காரத் திருப்பணி முற்றிய தருணத்தே தேவரீர் அமர்ந்தருளி எங்களையும் இவ்வுலகின் இத்தேகத்தை பெற்ற மற்றவர்களையும் உண்மை அடியர்களாக்கி உண்மையறிவை விளக்கி, உண்மையின்பத்தை அளித்து சமரச சுத்த சன்மார்க்க நிலையில் வைத்துச் சத்திய வாழ்வை யடைவித்து நித்தியர்களாகி வாழ்வித்தல் வேண்டும்.

எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!

இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.

எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே!

தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்!

VallalarOrg Sanmarga Foundation - All the contents and mp3 songs on this website are copyrighted and belongs to respective owners. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the audio or documents without our permission is prohibited.
First Launched on Apr-16-1998. Last updated:Aug.04.2013