வள்ளலார் இராமலிங்க அடிகள் - "தமிழ்" என்னும் சொல்லுக்கிட்ட உரை
 
4. "தமிழ்" என்னும்

சொல்லுக்கிட்ட உரை

திருச்சிற்றம்பலம்

தமிழ் என்பது த்-அ-ம்-இ-ழ் என்னும் ஐந்து அலகு நிலையுடைத்து. த், ம், ழ்: ஜடசித் கலை. அ, இ: சித்கலை
அ அகண்டாகார சித்தை விளக்கும் ஓங்கார பஞ்சாக்கரத்துள் பதிநிலை அக்கரமாம்.

இ பதியை விட்டு நீங்காத சித்தை விளக்கும் வியவகாரத்தால் அனந்தாகார வியஷ்டி பேதங் காட்டும் ஜீவசித்கலை அக்கரமாம்.

பதி சிதாத்ம கலைகளுக் காதாரமாகி உயிரினுக்குடலையொத்துக் குறிக்கப்படும் த், ம், ழ் எழுத்துக்களுக் குரை:

த் ஏழாவது மெய்;

ம் பத்தாவதாகும்;

ழ் 15-வது இயற்கை உண்மைச் சிறப்பியல் அக்கரமாம்.

ஐந் தலகுநிலையும் உபய கலைநிலையும் மூன்று மெய்நிலையும் அமைந்துள்ளதும், சம்புபக்ஷத்தாரால் அனாதியாய் - சுத்த சித்தாந்த ஆரிஷ ரீதிப்படி கடவுள் அருளாணையால் - கற்பிக்கப்பட்டதும், எப்பாஷைகளுக்கும் பிதுர்பாஷை யென்று ஆன்றோர்களால் கொண்டாடப்பட்டதும், இனிமை என்று நிருத்தம் சித்திக்கப் பெற்றுள்ளதுமான தமிழ் என்னும் இயற்கை உண்மைச் சிறப்பியல் மொழிக்குச் சுத்த சித்தாந்த பதஉரை:-

த் - அ:- தத்வரூபாதி சிவபோகாந்தமான தசகாரிய இயற்கை உண்மைக் கட்டளை நிலையில், முன் அலகு நிலைப்பொருள் கூறியவிடத்துக் குறித்த ஏழாவது நிலையாகிய த் என்பது சிவரூப இயற்கையுண்மைக் கட்டளையாம். அ - அகண்டாகார சித்கலா ரூப ஓங்காரத் துட்பொருட் பிரதம விலக்கிய வியக்தி அக்கரம். பன்னீருயிர் நிலையிற்றலையாய முதலக்கர மாதலில், அதுவே பிரமாதி பரசிவாந்த நவநிலைக்கும் அனாதியாதி காரணமாயுள்ள இயற்கையுண்மைப் பரிபூரணப் பொருளிலக்காம். என்னவே, சிவரூபமாகும் தகராகாசத்தில் சுத்த சிவமாகும் அருட்ஜோதியிணைந்துள்ள பூரணானந்த ஸ்வரூப பரபதி வியக்தமாயிற்று.

ம் - இ:- சங்கார ப்ரணவமாகிய மகாரம் முக்தான்மாக்களுக்கு ஒளிவண்ணச் சதானந்தமாயும் பெத்தான்மாக்களுக்கு இருள் வண்ணமலரூபமாயும் இருந்து கற்பாந்தப் பிரளய முடிவின் சிருஷ்டி திதியாதிகளில் சிதான்ம சக்தியாகிய ஜீவனுக்கு அதிகரணமாகவும், முற்குறித்த பத்தாவது நிலயமாகிய ஆன்மாதாரமாகியும் உள்ளதெனப் பொருளாம்.

இ - பன்னீருயிர்நிலைகளில் மூன்றாம் நிலை உயிராகிய இகாரம் திரிகலா ஆன்மவருக்கத்தில் அபரமாகிய சகலாகலரையும் பரமாகிய பிரளயாகலரையும் கீழ்ப்படுத்தி அவ்விரு கூட்டத்தாருக்கும் மேற்பட்டு நின்ற சுத்த விஞ்ஞானகலராகிய சிதாத்மாக்களைச் சுட்டுகின்றதாம். என்னவே, ஆதார ஆதேயக் கூட்டுறவால் என்றுந் தோன்றி விளங்கும் சிதான்ம வருக்கங்கள் பரபதி லக்ஷியமாகிய பூரணானந்தத்திற்கு அனுபவிகளாக உரியவர்களெனக் குறிக்கொள்ளல் வேண்டும்.

ழ்:- இந்தச் சிறப்பியல் அக்கரம் பதினெண் மெய்களில் பக்ஷமுடிபின் எண் குறிப்பில் நின்று, சிவயோக பூமியாகிய பரதகண்டத்தில் பௌராணிக தத்துவத்தாற் குறிக்கப்பட்ட ஐம்பத்தாறு தேசங்களுள் சுதேசந்தவிர மற்ற ஐம்பத்தைந்து தேச பாஷைகளிலும் இல்லாததாயும், பதினெண்ணிலமாகக் குறிக்கப்பட்ட செந்தமிழ் கொடுந்தமிழ் என்னும் இருமைக்கும் ஒற்றுமை யுரிமையாயும், முத்துறைத் தமிழுக்குள் முதன்மைத் துறையானதும் இருக்கு யஜுர் சாமம் என்னும் சமஸ்கிருத வேதாத்திரயப் பொருள் அனுபவத்தை எளிதில் கற்றுணர்ந்து தெளிந்து அனுபவித்ததற்குப் பரமேசுரனது திருவருளைப் பஞ்சாக்ஷர முத்தொழிற் காரியமான பஞ்சதசாக்கரியால் பிரத்தியக்ஷானுபவம் சித்திக்கச் செய்யும் நிலயமானதும், ஸ்ரீமாணிக்கவாசகர், சம்பந்தர், நாவரையர், சுந்தரர், திருமூலர் முதலிய மகாபுருஷர்களால் சாத்திர தோத்திரங்களாக அருளிச்செய்யப்பட் டிருக்கும் திருவாசகம், தேவாரம், திருமந்திரம் என்னும் பரமார்த்த ரகசியங்களை உடையதும், பலநாள் நைஷ்டிக அதிகரணம் பூண்டு போதகாசிரியர் சந்நிதியில் தாழ்ந்து சகபாடிகளோடு சூழ்ந்து சுர ஒலிபேதங்களைத் தேர்ந்து உழைப்பெடுத்து ஓதினாலும் பாடமாவதற்கு அருமையாயும், பாடமானாலும் பாஷ’யம், வியாக்கியானம், டீக்கா, டூக்கா, டிப்பணி முதலிய உரைகோள் கருவிகளைப் பொருள் கொள்ளத் தேட வேண்டியதாயும், அவ்வவைகளையும் தேடிக் கைவரினும் அக்கருவிகளால் போதகம் பெறவேண்டியதற்குப் பாஷ’யகாரர்கள் வியாக்கியானகர்த்தர்கள் டீக்காவல்லபர்கள் டூக்காசூசகர்கள் முதலிய போதக உபபோதக ஆசாரியர்கள் கிட்டுவது அருமையில் அருமையாயும் இருக்கிற ஆரியம் மகாராட்டிரம் ஆந்திரம் என்ற பற்பல பாஷைகளைப் போலாகாமல், பெரும்பாலும் கற்பதற்கு எண்ணளவு சுருக்கமாயும், ஒலி இலேசாயும், கூட்டென்னுஞ் சந்தி அதிசுலபமாயும், எழுதவும் கவிசெய்யவும் மிக நேர்மையாயும், அக்ஷர ஆரவாரம் சொல்லாடம்பரம் முதலிய பெண்மை அலங்கார மின்றி எப்பாஷையின் சந்தசுகளையும் தன் பாஷையுள் அடக்கி ஆளுகையால் ஆண்டன்மையைப் பொருந்தியதுமான தற்பாஷைக்கே அமைவுற்ற ழ், ற், ன் என்னும் முடிநடு அடி சிறப்பியல் அக்கரங்களில் முடிநிலை இன்பானுபவ சுத்த மோனா தீதத்தைச் சுட்டறச் சுட்டும் இயற்கை உண்மைத் தனித்தலைமைப் பெருமைச் சிறப்பியல் ஒலியாம்.

உரை கூறிப்போந்த சுத்தசித்தாந்த ஆரிடரீதி முப்பதவுரைப் பொழிப்பு:- மருளியற்கை மலஇருளைப் பரிபாகசத்தியால் அருளொளியாக்கி, அதற்குள்ளீடான சிதாத்ம சிற்கலாசத்தி என்னும் சுத்த ஆன்மாவானது, தகர, ககன, நடன அருட்பெருஞ்ஜோதி என்னுஞ் சுத்த சிவானந்த பூரணத்தை சுத்த மோனாதீத வியலால் அனுபவிக்கும் இயற்கை உண்மையே தமிழ் என்னும் சொற்பொருள் சுட்டினவாறு காண்க.

இதன் கருத்து யாதெனில்:- தமிழ்ப்பாஷையே அதிசுலபமாகச் சுத்தசிவானுபூதியைக் கொடுக்கு மென்பதாம்.
திருச்சிற்றம்பலம்

VallalarOrg Sanmarga Foundation - All the contents and mp3 songs on this website are copyrighted and belongs to respective owners. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the audio or documents without our permission is prohibited.
First Launched on Apr-16-1998. Last updated:Aug.04.2013