வழிபடு கடவுள் வணக்கப் பாட்டுரை
 


வழிபடு கடவுள் வணக்கம்
ஆசிரிய விருத்தம்

கொண்டலை நிகர்க்கும் வேளாண் குடியொடு தழீஇய தொண்ட
மண்டல சதகந் தன்னை வளமையான் வகுப்ப தற்குப்
புண்டர நுதலி ரண்டு புயமிசை யிருந்தி ரண்டு
குண்டல நிகரி ரண்டு குமரரை வணக்கஞ் செய்வாம்.

கொ...ம்: இச் செய்யுள் - வியனுறுமெதிரதூஉம், வீழாக்கொடையும், பயனுறூஉந்தொழிலும், பழியாப்பண்பும், வாய்மையும், அறிவும், மாஅண்பும், ஆண்மையும், தூய்மையும், பொறையும், தோஒற்றமும், அன்பும், உளங்கொள் இரக்கமும், ஒழுக்கமும் முதலா விளங்கு விழுக்குடி வேளாண்குடியே இத் தொண்டமண்டலத்திற் பெரும்பாலும் இறைகொளப்பட்டுத் தம் வளமையான் ஈண்டுறூஉம் மற்றைக் குடிகட்கும் இம்மண்டலத்திற்கும் வளமை தோற்றிற்று. அஃது நெறிப்பானுஞ் செறிப்பானுந் தோன்ற வழிபடு கடவுட் பராஅய்ப் புலப்படுத்துவ லென்று புகுந்தமை யுணர்த்துகின்ற தென்க.

எங்ஙனமெனில், "கொண்டலை நிகர்க்கும் வேளாண் குடியொடு தழீஇய தொண்டமண்டல சதகந்தன்னை வளமையான் வகுப்பதற்குக் குமரரை வணங்குவாம்" என்றது உய்த்துணர்க வென்க. இஃது வற்புறுத்தற்கு வேளாண்குடியை அளவை முகத்தான் வெளிப்படையின் விளங்கவைத்து மற்றைக்குடிகளை வேற்றுரு பொடுவிற் பராமுகத்தாற் குறிப்பின்கட் சார்த்தி வைத்ததே யமையுமென்க. விளங்கு விழுக்குடி வேளாண்குடி யென்றதனாலன்றே அங்கையிற்கனி போன்றிங்ஙனம் பெற்றாம்.

அஃதீண்டு எற்றாற் பெறுதுமெனின், கொண்டலை நிகர்க்கும் வேளாண்குடி என்றதனாற் பெறுது மென்க. எங்ஙன மெனின், கொண்டலை - பருவப்புயலை, நிகர்க்கும் - ஒக்கும், வேளாண்குடி - வேளாண்குடிப் பிறப்பினர் எனவே: வேளாண்குடிப் பிறப்பினர் கைம்மாறு கனவினுங் கருதலின்றி வரையாது வழங்கும் வள்ளற்றன்மையுடையாரென்றும்; எவ்வாற்றான் உயர்ந்தோர்கட்குந் தம்மையன்றி உலகியல் நடத்தப்படாச் சிறப்புடைக் கருவியாந் தன்மை யுடைய ரென்றும்; இங்ஙனம் வையகத்தார்க் கன்றி வானகத்தார்க்குங் குன்றா நன்றி குயிற்றுநரென்றும்; தம்மானே யன்றித் தங் கருவியானுங் கருமத்தானும் எவ்வெவ் வளாகத்து எவ்வெவ் வுயிர்கட்கும் இன்பந் தரூஉம் இயலினரென்றும், ஆன்ற கல்வி, ஊன்றுகேள்வி, சான்றவுணர்ச்சி, ஏன்ற ஒழுக்கம் முதலிய உயர்நெறிக் குன்றத் தும்பரிம்பர் பல்காற்பயிலுறும் பாங்கினரென்றும்; தொன்னெறி யரையர்க்குத் துணைவராகிப் பகைப் புல னடுங்கிய படர்ந்தெதிருறீ இவாய்விட்டார்த்து வாள்புடை பெயர்த்து விற்புடைத்தழீஇ இப்பொற்பொடு பெய்யு மாண்மைய ரென்றும்; தண்ணளி யுருக் கொடு தாங்கிச் செங்கோ னிலைபெறச் செய்யுந் தலைமைய ரென்றும்; எத்திறத்தவரும் எதிர்கொடு பராஅய்ப் பற்பலதிறப்படூஉம் பரிசிற்பழிச்ச உயரிடத் தோங்கிய பெயருளரென்றும், கடவுளாணையிற் கடவாச்செறிவும், யாவரு மதிக்கும் ஏஎருடைமையும், புலவராற் புனையும் புகழின் ஈட்டமும், களக்கறும் ஒண்மையும், விளக்குறு பசுமையும், பொய்யாமாற்றமும், போக்கறு தோற்றமும், இன்சுவை நிறைவும், எத்திற நலனும் உடையரென்றும் உவமைக் குறிப்பாற் பெறப்படுதலின் இங்ஙனமென்க. ஈண்டு வகுத்தவை கொண்டலின்கண்ணும் உய்த்துணர்ந்துகொள்க. இஃது வகுத்தன்றி விரிப்பிற் பெருகும்.

இனி, கொண்டலை நிகர்க்கும் வேளாண்குடி என்பதற்குக் கொண்டல் - கொண்டலை நடாத்தும், ஐ - தலைவனாகிய இந்திரனை, நிகர்க்கும் - ஒத்த, வேளாண்குடி - வேளாண்குடிப்பிறப்பினர் எனினுமமையும். இங்ஙனம் பெறுங்கால், வேளாண்குடிப் பிறப்பினர் தமது நல்லொழுக்கம் என்னும் ஆணையாற் கொண்டலை ஆங்காங்குப் பெய்வித்து நடத்தலும், ஐவகைத் திணையினும் உய்வகைத் திணையாய மருதத்திணையை வளம்படுத்துக் காத்தலும், வேளாண் வேள்விக்கு வேந்தராதலும், வீழாதுதரூஉம் வேளாண்மைக்குரிய கருவியை யுடையராதலும், யாவரானும் விரும்பப்படூஉம் இயற்கையராதலுங் கொள்க. ஈண்டு வகுத்தவை இந்திரன்மாட்டும் உய்த்துணர்க. இஃதும் விரிப்பிற் பெருகும்.

அன்றி, கொண்டல் என்பது இலக்கணையால் காவற் கடவுளாய விண்டுவாகக் கொண்டு அக்கடவுளை ஒத்த வேளாண்குடி யெனினும் அமையும். இங்ஙனங் கொள்ளுங்கால், வேளாண்குடிப் பிறப்பினர் நடுநின்று எவ்வெவ்வுயிர்க்கு நுகர்ச்சி வருவித்தலும், பகைப்புலன் முருக்கிப் பாதுகாத்தலும், திருவிற் பொலிந்த சிறப்புடைய ராதலும், இன்சுவை யமுதம் இரந்தோர்க் கீதலும், பூமகட்கு உரிமை பூண்டு நிற்றலும், சத்துவத் தனிக்குணத்தானே பயிறலும், ஊக்கமுஞ் செவ்வியும் உடையராதலுங் கொள்க. ஈண்டு வகுத்தவை விண்டுவின் மாட்டும் உய்த்துணர்க. இஃதும் விரிப்பிற் பெருகும்.

கொண்டலை நிகர்க்கும் வேளாண்குடியென விரியுவமையின்கண் உவமவுருபன்றி ஐயுருபும் விரித்தது இங்ஙனம் விரிப்பதற்குக் குறியுணர்த்த வென்க. உவமைக்கும் பொருட்கும் ஒரு நோக்கத்தானன்றிப் பலபட வகுத்த தெற்றாலெனின், உவமைப் பொருள் புகழ்பொருண் மிகை குறித்தழுக்கற்று முரணுதற் குறியா நிகர்க்குமென்னுந் தடுமாறு உவமவுருபு விரித்தமையின் என்க. என்னை? ஆசிரியர் தொல்காப்பியர் உவமவுருபுகளை வகுத்து முடிபுசெய்யுமிடத்து, "கடுப்பவேய்ப்ப"4 வென்னுஞ் சூத்திரத்தா னிகர்ப்ப வென்பது மெய்யுவமருபென்று வகுத்த வண்ணம் அவ்வுருபு ஈண்டஃதேலாது தொழில் பயன் முதலிய வேற்றதாகலின், அஃதேல் இஃதுயாண்டும் வரைதலின்றோ வெனின் "தடுமா றுருபுக டாம்வரை யின்றே"5 யென்பவாகலின் விரும்புமிடத் தின்றென்க. அன்றி இஃதழுக்கற்று முரணுதற் பெயர்ச்சிக்கட் போந்த வெச்சம் போறலின் அங்ஙனங் குறிக்க வைத்த தெனினு மமையுமென்க. இவ்வுவமை நோக்கைச் "சுட்டிக்கூறா"6 வென்னுஞ் சூத்திர நோக்கத்தானுங் காண்க. உவமையும் பொருளு மொத்தல் வேண்டுமென்றவாறு ஒத்த வண்ணம் உய்த்துணர்க. அன்றி உவமப்போலி மறுக்கப்படா வாகலின் ஈண்டு அவற்றுள்ளும் ஏற்பன விருப்பினும் இழுக்கின் றென்க. இஃதின்னும் விரிக்கிற் பெருகும்.



4. கடுப்ப வேய்ப்ப மருள புரைய
வொட்ட வொடுங்க வோட நிகர்ப்பவென்
றப்பா லெட்டே மெய்ப்பா லுவமம். -தொல், பொருள், உவமஇயல், 15
5. தடுமா றுவமங் கடிவரை யின்றே -தொல், பொருள், உவமஇயல், 35
6. சுட்டிக் கூறா வுவம மாயிற்
பொருளெதிர் புணர்த்துப் புணர்ந்தன கொளலே.
-தொல், பொருள், உவமஇயல், 7



கொண்ட லென்பது விரவு மிகையொலிக் காப்பிய வழக்குத் தொடரியற் பால்பகாவஃறிணைப் பல்பொருள்குறித்த வொரு பெயர்த்திரிசொல். ஈண்டுச் சிறப்புய ருரிமைக்கருவி அவயவப் பொதுநிலைப் பூதப்பொருட்டாகிய மேகத்தை யுணர்த்திற்று.

வேளாண்குடி யென்பது உயர்நிலைக் காப்பிய வழக்குச் சொன்னடைச் சிறப்பு முன்னிலைக் காரணம் பின்னிலை யிடுகுறிச் சாதிக்கூற்றுத் தொடர்நிலை கருத்துப் பொருட்புறத் துயர்திணைக் காட்சிப் பொருட் பன்மைத் தோற்றத் தன் மொழித் தொகைச் சொற்றொடர். இதனை வேளாண்மைக்குரிய குடிப்பிறப்பின ரென்று விரித்துக்கொள்க. வேளாண்மை நன்றி ஈகை வேளாண்டொழின்மை முதலிய பல்பொருள் குறித்த வொருசொல். அஃது வேளாண் டொழி லுடைமையா னன்றி ஈகை முதலிய நற்செய்கை யுடைமைக்கு முரியவோர் குடிப்பண்பாயிற்று. குடி யென்பது குலம் ஊர் முதலிய குறித்தவோர்சொல் அஃதீண்டு குலத்தின் மேனின்றது. அன்றி மருதத்திணையூ ரென்பது மொன்று. வேளாண்டொழில் என்பதில் வேள் என்பது நன்னிலம், ஆண் என்பது உரிமைத்தலைமை. தொழில் என்பது முயன்று முடித்தல். இதனால் நன்னிலந் திருத்திச் செந்நெறி பொங்கப் பைங்கூழ் விளைக்குமுரிமைத் தலைமைத் தொழில் என்பது பெறப்பட்டது. அல்லதூஉம் வேள் என்பது விரும்பப்படுகை, ஆண்டொழில் - ஆண்மைத் தொழில். இதனால் அரையரால் விரும்பப்படூஉம் மந்திரித்தலைமை சேனைத் தலைமை யென்னும் ஆண்மைத் தொழிலுடையோ ரென்பதூஉம் அமையுமென்க. இதனையுடைய குடிப்பிறப்பினர் வேளாண்குடிப் பிறப்பினர் வேளாளரென்க. இவ்வேளாண்குடிப்பிறப்பினர் ஈகை முதலிய நற்செய்கைகளின் மிக்கா ரென்பதற்கு வேறு கூறவேண்டுவதின்று. இவர் குடிப்பெயரே தக்க சான்றென்க. அன்றி அந்தணர் அரையர் வணிகர் முதலியோர் தத்தமக்குரிய ஒழுக்கங்களை நடத்தற்கு வேளாண்குடிப் பிறப்பினரது உதவி முற்றும் வேண்டுதலின், இவர் நெறி பெருநெறி யென்பதற்கு மஃதே சான்றென்க. இதனைத் தொல்காப்பியத்தில் "நாற்றமு"7 மென்னுஞ் சூத்திரத்துள் "வேளாண் பெருநெறி" யென்றதனாற் காண்க. அன்றி யிவர்க் கித்தொழிலுரிமைச் சிறப்பென்பதூஉம் இவரது மேம்பாட்டுத் தன்மையையு மரபியலிற்8 காண்க. இதனை விரிக்கிற் பெருகும்.

வழிபடு கடவுள் வணக்கப்பாட்டுரை முற்றிற்று.


7. தொல், பொருள், களவியல் 23

8. தொல், பொருள், மரபியல் 80; 81
வேளாண் மாந்தர்க் குழுதூணல்லது
இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி.
வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும்
வாய்ந்தன ரென்ப அவர்பெறும் பொருளே.



VallalarOrg Sanmarga Foundation - All the contents and mp3 songs on this website are copyrighted and belongs to respective owners. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the audio or documents without our permission is prohibited.
First Launched on Apr-16-1998. Last updated:Aug.04.2013