ஒழிவிலொடுக்கப் பாயிரவிருத்தி
 

சிறப்புப் பாயிரம்

நேரிசை வெண்பா

திருச்சிற்றம்பலம்

வள்ளல் குருராயன் வாதுவென்ற சம்பந்தன்

வள்ளன்மலர்த் தாடலைமேல் வைத்துரைத்தா-னுள்ளத்

தழிவிலடுக் குந்தேனை யன்பரெலா முண்ண

வொழிவி லொடுக்கநூ லோர்ந்து.

இச்செய்யுள் கருதிற்று யாதோ எனின், இந்நூன்முகத்து ஆசிரியர் பெயர் முதலியவற்றைக் குறித்து நிற்றலின் சிறப்புப் பாயிர ஒழுக்கம் உணர்த்தல் கருதிற்று என்க.

வள்ளல் குருராயன் வாதுவென்ற சம்பந்தன் வள்ளன் மலர்த் தாடலைமேல் வைத்து என்பது:- வள்ளலார் என்னும் திருப்பெயருடையவர். ஞானாசாரிய நிருபராகிச் சமயவாதிகள் தருக்கச் செருக்குகள் பிற்பட்டொழியப் பேரருள் நெறியா வெற்றிகொண்டு சீகாழி என்னும் திருநகர்க்கண்ணே மெய்ந்நெறி விளங்க வீற்றிருந்தருளிய திருஞானசம்பந்தப் பிள்ளையாரது வள்ளற்றன்மையுடைய மலர்போலும் திருவடிகளைத் தமது நன்முடிக்கண் ஓர் பொன்முடியாக அணிந்து,

ஓர்ந்து உள்ளத் தழிவி லடுக்குந் தேனை யன்ப ரெலா முண்ண வொழிவி லொடுக்கநூ லுரைத்தான் என்பது:- அத் திருவடிகளின் அருட்டுணையால் தத்துவங்க ளனைத்தும் சடமென்று ஓர்ந்துணர்ந்து அவற்றைக் கடந்து தற்காட்சியோடு திருவருட்காட்சியும் செய்து, அங்ஙனம் வாதனையால் அசைந்தெழும் போதந்தோற்றாது அதனை அத்திருவருள் ஒளியில் அடக்கி ஆண்டு மேன்மேலும் எழாநின்ற சிவானந்தத்தேனைத் தாம் அனுபவஞ் செய்தவாறு அதன் கண் அன்புள்ள பக்குவரும் செய்தற்பொருட்டு, அச் சிவானந்தானுபவ அந்தரங்க மெல்லாம் வெளிப்பட்டு விளங்க, ஒழிவிலொடுக்கம் என்று ஓர் உபதேச முறையை உரைத்தருளினார் என்றவாறு.

வள்ளல் என்னும் பெயர் ஆசிரியர்க்குத் தாம் முன்னிருந்த கிரியா சாரிய நிலைக்கண் அவ்வாசாரிய மரபின் வழித்தாய் வந்த காரண அபிடேகச் சிறப்புப் பெயர் என்க. அல்லதூஉம், பின்னர் ஞானாசாரிய நிலைக்கண் தமது அருள்ஞான நோக்கால் இயைந்த கண்ணுடைய என்னும் காரண விசேடண மேற்கொண்டு நின்ற இவ்வள்ளலென்னும் பெயர் ஈண்டு அவ்விசேடணம் இசையெச்ச நிலையில் நிற்ப நின்றது எனினும் அமையும் என்க.

இஃது வினை பண்பு முதலிய அடுத்த தொகைநிலைச் சொற்றொடராகாது தொகாநிலையாய்த் தனைத் தொடர் பயனிலை அண்மைப் பொருளுணர்ச்சியின்றி இடையிட்டு நிற்கத் தான் செய்யுள் முதற்கண் தனித்திருந்தமையின் ஆற்றலின்றாலோ எனின், அற்றன்று. கொடை மடங்குறித்த குணங் காரணமாக வந்த இவ்வள்ளல் எனும் பெயர் தன்னுறுப்புகளுட் கொடை, குணம், புகழ், அழகு, வளம் என்னும் நால்வகை குறித்த பல்பொருட் பகுதியாய வண்மை என்னும் முதலுறுப்பான் ஆசிரியர்க் குளவாய அக்கொடை முதலிய அருட்குணங்களைக் குறிப்பிற் புலப்பட விரித்தலின் பொருளாற்றல் உண்டென்க. அல்லதூஉம், இப்பெயர் உயர்பொருட்கிடனாய் உடனிலைக்கூட்டாய் ஒருநெறியசைத்தாய் ஓரினந்தழுவிப் பல்வகைக்குறிப்பிற் படர்ந்து முற்றியைபு வண்ணப் பெருஞ் சொல்லாக நிற்றலின் சொல்லாற்றலும் உண்டென்க. ஆயின் இவ்வாசிரியர் பெயர் இச்செய்யுளின் இடை கடைகளில் ஒன்றின் நிறுத்தாது முதலடி முதற்சீர் எதுகைத் தொடைக்கண் நிறுத்ததிற் குறித்தது யாதோஎனின், ஒன்றிரண்டெனக் கொண்டுறும் மறை ஆகம நன்றிரு முடிபின் நடுநிலை நடாஅய்ப் புலம்பெறு தத்துவ நியதியிற் போந்து உண்மலந்தெறும் அறிஞர் வாழ்த்திப் பரவும் ஆசிரியர் சன்மார்க்கம் முதலிய மார்க்கம் நான்கனுள் தலைமையில் தலைமையாய உத்தம சன்மார்க்கத்தினர் என்பது குறித்த தென்க. இங்ஙனம் உத்தம சன்மார்க்கத்தினர் என்பதை ஆசிரியர் கூறிய "இது வென்ற தெல்லாம் பொய்யென்றான்"1 என்னுந் திருவெண்பாவாற் காண்க. இஃதின்னும் விரிக்கிற் பெருகும்.

குருராயன் என்பது திருஞானசம்பந்தப் பிள்ளையார்க்குச் சிறப்பிற் சிறப்பாய காரணப் பெயராய் நின்று, ஓதி உணர்ந்து பன்னாள் பலசாதனங்களில் முயன்று முயன்று ஆசாரியத்தன்மை ஒருவாறு அரிதிற் கிடைக்கப்பெற்றும் ஓரோர் காலங்களில் அவத்தை வயப்பட்டு மயங்கும் மற்றை ஆசாரியர் போலாது ஓதாமல் வேதாகமாதிகளை முற்றும் உணர்ந்து இறைப்போதும் ஓர் சாதனங்களில் முயன்றதின்றி ஞானாசாரிய அருளிலக்கணங்கள் அனைத்தும் தாமே தம்பால் நிரம்பி நிற்ப அமர்ந்தனர் என்பதூஉம், ஓதி உணர்ந்த அவ்வாசாரியர்க்கெல்லாம் அவரவர் அறிவின் கண் அருளுருவாய் நின்று அறிவித்தும் ஆசாரிய உருவாய் வெளி நின்று அனுக்கிரகித்தும் நின்றனர் என்பதூஉம், திருநோக்கஞ்செய்தல் முதலிய அறுவகைத் தீக்கையாலும் அன்றித் தமது திருவுருவைக் காண்டல் நினைத்தல் மாத்திரையே பக்குவரல்லாரும் பக்குவராய்ப் பயன் பெற நின்ற திருவருட் பெருமையர் என்பதூஉம் குறித்த தென்று உணர்க. இங்ஙனம் ஓதாமல் வேதாகமாதி உணர்ந்தமை முதலியவற்றை ஆசிரியர் கூறிய "தன்மையு முன்னிலையும்"2 என்னும் திரு வெண்பாவாற் காண்க.

அல்லதூஉம், குருராயன் என்பது வாதுவென்ற சம்பந்தன் என்பதற்கு மேனிற்க வைத்த விதப்புக் குறிப்பால் பிள்ளையார் இவ்வவதாரத்தின் மேனின்ற அவதாரத்திலும் குமாரசற்குருவாய் அரனார்க்கும் அகத்தியனார்க்கும் உபதேசித்தருளிய ஆசாரியத் தலைமையும் குறித்ததெனக் கொள்க. அருணகிரிநாதர்.

1. இதுவென்ற தெல்லாம்பொய் யென்றான் எனக்குப்

பொதுவன்றித் தங்குமிடம் போச்சு - அதுநாங்காண்

என்றா னதன்பேர் இரவைப் பகலாக்கும்

ஒன்றோ பரமசுக மோ. 44

2. தன்மையு முன்னிலையுந் தானாய்ப் படர்க்கையுமாய்

என்னொழிவில் இன்புமாய் இன்புமிது - என்னாத

வேதாந்த சித்தாந்த மேபிறவா வீடென்றான்

ஓதாமல் வேதமுணர்ந் தோன். 42


தென்ன வனங்கனஞ் சூழ்காத் திரிநக சூலகரத்

தென்ன வனங்கனந் தப்பத நீட்டினன் செல்வமுன்பின்

தென்ன வனங்கனன் னீற்றாற் றிருத்திய தென்னவின்னந்

தென்ன வனங்கனங் கைச்சிலைக் கூனையுந் தீர்த்தருளே.3

என்றதனால் பிள்ளையார் இவ்வவதாரத்திற்கு மேனின்ற அவதாரத்தில் குமாரசற்குரு வென்பது காண்க.

கல்லாடம்,

உழன்மதிற் சுட்ட தழனகைப் பெருமான்

வணங்கிநின் றேத்தக் குருமொழி வைத்தோய்4

குறுமுனி தேற நெடுமறை விரித்தோய்.4

சித்தியார்,

அருமறைஆ கமம்அங்கம் அருங்கலைநூல் தெரிந்த

அகத்தியனுக் கோத்துரைக்கும் அருட்குருவாங் குருளை5

என்பவைகளால் அரனார்க்கும் அகத்தியனார்க்கும் உபதேசித்த ஆசாரியத் தலைமையை உணர்க.

ஆயின், குருவேந்தன் என்னாது குருராயன் என்றது எது குறித்தற்கோ எனின், நான்கன் வேற்றமையால் அடுத்து மிக்குயர் நெறிப் பொருண்மையின் வந்த காரகச் சிறப் பொருதலைத் தொடர் மொழிப் பெயராய இக் குருராயன் என்பதன்கண் குரு என்பதன் முதனிலை யெழுத்துத் தமிழியல் விதிப்படி மொழிக்கு முதலாகியும், ராயன் என்பதன் முதனிலை யெழுத்து தமிழியல் விதியின்றி ஆரியவியல் விதிப்படி மொழிக்கு முதலாகியும் வந்து இருவகை இயலுங் கோடலின், இதனைத் தம் பெயராகவுடைய பிள்ளையாரும் தமிழ்நூல் வடநூல் என்னும் இருவகை நூற்கும் உரியார் என்பது குறித்தற்கு என்க. ஆசிரியர் "மறைப்புலவன் தமிழ்க்குரிசில் சீகாழிச் சம்பந்தன்"6 என்றதனால் இருவகை நூற்கும் உரியர் என்பது காண்க என்க. அல்லதூஉம், பொருள் வேறுபடாது சிறிதே வடிவு வேறுபட்டு நின்ற குருராயன் என்பது தன்னை உள்ளூன்றி நோக்கினர்க்கு இலைமறைக்காய்போல் ஐ என்னும் உயிர்மெய்யோடிருந்த தன் முன்வடிவ முட்கொண்டு விளங்கக்காட்டி நிற்கின்றதாகலின், இதனையுடைய பிள்ளையாரும் தமது கடவுட்டன்மை வேறுபடாது உத்தமபுருட உருவங்கொண்டு நின்ற தம்மை அன்பால் உள்ளூன்றி நோக்கினார்க்குக் குமாரசற்குரு என்னும் பெயர் கொண்டு அளவிகந்த சூரியர் உதயம் போன்று ஒளி வீசும் தம் முன்னுருவாய் தெய்த் திருவுரு வுட்கொண்டு விளங்கக் காட்டி நின்றனர் என்று குறித்தற் கென்பதுமாம் என்க. ஆளுடைய பிள்ளையார் புராணம்,

3. கந்தரந்தாதி, 56

4. முருகன் துதி.

5. பரபக்கம், முருகன் துதி.

6. சத்தியநிர் வாணத்தாற் றற்போதத் தாக்கறுத்து

வைத்துவழி காட்டு மறைப்புலவன் - சுத்தன்

றமிழ்க்குரிசிற் சீகாழிச் சம்பந்த னென்பான்

எமக்கருளிச் செய்த திது.


மறையவர் திருவே வைதிக நிலையே வளர்ஞானப்

பொறையணி முகிலே புகலியர் புகலே பொருபொன்னித்

துறைபெறு மணியே சுருதியின் ஒளியே வெளியேவந்

திறையவன் உமையா ளுடனருள் தரஎய் தினையென்பார்.7

என்று மூவாண்டிற் பிள்ளையார் திருவருள் வடிவைக் கண்டு சீகாழி யுள்ளார் வியந்து கூறிய வாறாய இச்செய்யுளால் உள்ளூன்றி நோக்கினர்க்குத் தம் முன்னுருவைக் காட்டி நின்றனர் என்பது காண்க என்க. இனி இன்றியமையாக் காட்டுளதேற் காட்டுவதன்றி மற்றைய விரிக்கிற் பெருகும் என்க.

அல்லதூஉம், குரு என்பதன் ஈற்று உயிர்மெய்யோடு ராயன் என்பதின் முதலுயிர்மெய்ப் புணராப்புணர்க்கையாய் நின்றதாகலின், இங்ஙனம் ஆனந்த வடிவராகிய பிள்ளையாரும் தாம் கொண்டருளி மானிடத் திருவுருவோடு புணராப்புணர்க்கையாய் நின்றனர் எனக் குறித்தற் கென்பதுமாம் என்க.

அல்லதூஉம், குறிலிணைக் கெதிர் நெடில் குறில் எண்­டாக நிற்பவும் ஈற்றில் அவ்வெண்­டின்றி ஒற்று நிற்பவும் தொடர்ந்த மொழியாகலின் பிள்ளையாரும் பக்குவர்க்கு மறைப்பொருளாயும் அதிபக்குவர்க்கு அனுபவப் பொருளாயும் இவ்விரண்டிலும் கலவாது அதீதப் பொருளாயும் நின்றனர் என்று குறித்தற் கென்பதுமாம் என்க. இங்ஙனம் குருராயன் என்பதில் குவ்வென்பது இருள், ரு வ்வென்பது அருள், ராயன் என்பது விளங்கச் செய்கின்றோன் என்பது பொருளாம். இதனால் கு வென்னும் அசுத்தாவத்தையில் நின்றோரை ரு வ்வென்னுஞ் சுத்தாவத்தையில் தாம் நின்றவண்ணம் நிறத்துகின்றோர் குரு ஆவர். இச்சுத்தாவத்தைக்கு ஆதாரனாகியும் அதீதனாகியும் விளங்கி இவ்வவத்தையினின்றும் அக்குருவாயினோர் தாழாத வண்ணம் அருள்செய்து நின்று அதீதப் படுத்துகின்றோன் ராயன் ஆவன் ஆகலின், இதனாலும் உணர்க என்க.

எழுத்தாதிப் பல்வகைக் குறிப்பிற் பொருள்நெறி பற்றி நின்ற நோக்கம் செறிவு நுட்பம் இங்கிதம் இன்பம் கம்பீரம் சிறப்பு உறுதி முதலிய நற்குணந் தழீஇய சொற்புணரீதென்றே, ஆசிரியரும் "சரிதாதி நான்கினுக்கும்"8 என்னும் திருவெண்பாவின் இடைக்கண் குருராயன் என்று இதன் பெருமை தோன்றவைத்தனர் என்க. இஃது இன்னும் விரிக்கிற் பெருகு மென்க.

7. 92வது திருப்பாட்டு (பெரிய புராணம் - 1995)

8. சரிதாதி நான்கினுக்குஞ் சாலோக மாதி

வருமா றெனக்களித்த வள்ளல் - குருராயன்

ஞானத்திற் பக்குவர்க ணால்வர்க் குபதேச

மானத் தையுநிகழ்த்தி னான்.


வாது வென்ற சம்பந்தன் என்பதில் பொதுவானே வாதுவென்ற என்றது என்குறித்தோ எனின், எண்வகைக் குன்றத்து எண்ணாயிரவராய பயுடுக்கைப் பறிதலைச் சமணர்கள் ஒருங்கே கூடித் தென்மதுரைக்கண் செந்தமிழ்ப் பாண்டியனை முன்னிட்டுச் செருக்காற் செய்த சுரவாதம் அனல்வாதம் புனல்வாதங்கள் பிற்படத் திருநீற்றானும் திருவாக்கானும் வென்று திறல்கொண்டமை யன்றியும், பரசமய கோளரி என்று தானே ஒலித்த திருச்சின்னத்தின் தெய்வப்பே ரொலி கேட்டு உளம்பொறாது எதிரிட்டுமறித்த போதமங்கைப் புத்தநந்தியின் பொய்த்தருக்கமும் புழுத்தலையும் பொடிபட்டழியவும், பின்னர் உள்ளது போன் றில்லதைப் பற்றிச் சாக்கியக் குழுவுள் தலைவனாய சாரிப்புத்தன் சிற்சில வகையாற் செய்த சமயவாதந் தலைதடுமாறவும், செந்தமிழ் வேதத் திருமுறை தாங்கி மேம்படும் அறிஞரான் வெற்றிகொண்டமையும், திருவோத்தூரின்கண் அரனுக்கிடுபனை ஆண்பனையாயிற்றே என்று அசதியாடிய அமணக்குழூஉக்களின் வாய்வாதங்கள் மண்பட்டொழியத் தாம் திருவாய்மலர்ந்த திருக்கடைக்காப்புள் ஓர்மொழியானே அவ்வாண்பனை பெண்பனையாகச் செய்து விறல்கொண்டமையும் குறித்ததென்க.

அல்லதூஉம், வாது என்பது இலக்கணையாகக் கொண்டு பெருமண நல்லூரின்கண் திருமண நல்விழாவைத் தரிசிப்பான் வந்த மக்கட்கெல்லாம் தொன்று தொட்டு இடைவிடாது உடல்நிழல் போல் சூழ்ந்துள பிறவிப் பெருவாதுகள் அனைத்தும் வென்றதூஉம், திருப்பாச்சில் ஆச்சிராமத்தின்கண் மழவன் மகளார்க்கு அடுத்த முயலக வாது வென்றதூஉம், மருகற்கண் ஓர் வைசியனுக்கு அடுத்த விடவாது வென்றதூஉம், இவை முதலியவும் குறித்த தெனினுமாம் என்க.

வெற்றிகொண்ட பொருட்டிறன் முதலியவற்றுள் ஒன்றேனும் தோன்றக் கூறாது இலேசானே வாது என்றது என்குறித்தோ எனின், பிறர்க்கு இங்ஙனம் வேறல் தம்மானும் துணைமையானும் பற்பல நாள் பற்பல வகையில் முயற்சி செயினும் முற்றாதெனினும், பிள்ளையார்க்குச் செந்தமிழ் பொழியும் திருவாக்கானே ஆண்டாண்டு அவ்வேறல் முற்றியதென்பது குறித்தென்க. வாது என்பது குருராயன் என்பதனோடும் சம்பந்தன் என்பதனோடும் சாராது நடுநின்றமையின், அத்துவித நெறியினும் சேராது துவிதநெறியினும் சாராதுநின்ற பதிதவாதிகளது பயனில்வாதம் எனினும் அமையும் என்க.

எதிரேற்கப்பட்டு எதிர்வினைக் கீழ்ப்பட மேற்கொள் வினையெழுச்சிப் பொருளின் வந்த வெல் என்னும் பிறவினைப் பகுதியால் அடுத்த வென்ற என்னும் பெயரெச்சம் சம்பந்தன் என்னும் பெயர் கொண்டு முடிந்து, இங்ஙனம் வெற்றி கொண்ட பருவம் பிள்ளையார்க்கு இளங்குமாரப்பருவம் எனக் குறித்ததென்க. என்னை? எச்சம் என்பது இளஞ்சேய் மேற்றாகலின்.

சம்பந்தன் என்பது பிள்ளையார்க்கு மூவகைக்கண் மூவுலகம் புகழப் பொற் பொடு புணர்ந்த அற்புதத் திருப்பெயராகலின் ஆண்டுப் பெருமான் அருளப் பிராட்டியார் அளித்த சிவஞானத் தெள்ளமுதருந்தி அச்சிவஞானத்திற்கு உரிமை பூண்டமை குறித்ததென்று உணர்க. ஆயின் சிவஞானசம்பந்தன் என்னாது சம்பந்தன் என வைத்தது என்கொலோ எனின்:- சிவஞானமுமன்றிச் சிவானந்தம் ஆனந்தாதீதம் என்பவைக்கும் உரிமை பூண்ட தலைமை பற்றியும் அவற்றை உலகுயிர்க்கு இங்ஙனமென் றுணர்த்தி உரிமை செய்விக்கும் மாட்சி பற்றியும் அங்ஙனம் வைத்த தென்க.

அல்லதூஉம், சுருங்கச் சொல்லுதல் வனப்பினால் சம்பந்தன் எனவே சிவஞானசம்பந்தன் என உரிமைச்சிறப்பு வழக்கால்தானே தோன்றும் என வைத்த தெனினுமாம் என்க. எங்ஙனம் எனின், இந்திரன் என்பது இறைமைச் சிறப்பு வழக்கால் தேவேந்திரனையும், உடையானென்பது பொருட்சிறப்பு வழக்கால் பொன்னுடையானையும் குறிக்குமாகலின் என்க.

வள்ளல் மலர்த்தாள் என்னும் ஒருவகைவனப்பு இருவகைச் சந்தி மூவகை மொழித்தொகைச் சொற்றொடர்க்கண் வள்ளல் என்னும் குணப் பெயர் வினைமுதற்றொழிற் பயனறப்படு முடைமைக் குணப்பெயராய் நின்று பிள்ளையாரது திருவடிகள் தம்மை அடைந்தோர்க்கு வரையாது ஆனந்தப் பேற்றை அளித்து அவரைத் தாங்கிக்கோடலைக் குறித்த தென்று உணர்க. அஃதேல் ஆனந்தப்பேற்றைத் தருதற்குந் தாங்கிக் கோடற்குங் கருத்தர் பிள்ளையாரன்றோ? அங்ஙனம் இருப்பத் திருவடிகட்கு இங்ஙனங்கூறல் எங்ஙனமெனில்:- திருவடிகள் தம்மை வழிபடுவோர்க்கு இரங்கி இன்பமீதற் பொருட்டு எழுந்தருளும் பிள்ளையாரது படர்ச்சி நிகழ்ச்சிக் கருவியாய் நின்று அவரை அவ்வழிபடுவோர்பால் வருவித்தலானும், ஞானதீக்கை பண்ணுங்கால் அவர் சென்னியிற் சூட்டப்பட்டு ஐக்கியம் வருவித்தலானும், நித்தியானந்தப் பேறுவாய்க்கு மாகலின் இங்ஙனமென்க.

அல்லதூஉம், வாட்டமில் அருளும், கோட்டமில் குணனும், அசையா நிலையும், நசையா மனனும், வெகுளாப் பண்பும், விடாப் பேரன்பும் செவ்வியின்மரீஇ எவ்வௌர் எவ்வகை வேட்டனர் அவ்வகை விருப்பொடு குறிப்பின் வரையாதீதல் வள்ளற்றன்மை என்பவாகலின், இவ்வள்ளற் றன்மையைத் தம்பால் அடைந்தோரிடை அடைவித்தருளும் கருணைபற்றி அங்ஙனங் கூறியதெனினும் அமையும் என்க. அஃதேல் வள்ளற் றன்மை வழங்கு மலர்போலுந் திருவடி யென்றன்றோ உரை விரித்தல் வேண்டும், அங்ஙனமன்றி வள்ளற்றன்மை யுடைய மலர்போலுந் தாளென விரித்திருக்கின்றதே எனின்; அங்ஙன மடைவித்தலும் வள்ளற் றன்மையே யாகலினும் உடைய தொன்றன்றே உதவப்படு மாகலினும் இங்ஙனம் விரித்தல் அங்ஙனம் கூறற்கும் அமைதியாம் என்க.

அல்லதூஉம், அருளின்றி அமையாத வள்ளற் றன்மைக்கு அவ்வருளே முதற்காரணமா மாகலின், ஆனந்த வடிவராகிய பிள்ளையார் அவ்வானந்தப் பேற்றை அளிக்கும் வள்ளற் றன்மைக்கு முதற் காரணமாகிய திருவருட்சத்தியே திருவடி என்று குறித்தற்குக் காரணத்தைக் காரியமாக ஈண்டு உபசரித்த தெனினும் அமையுமென்க.

அல்லதூஉம், எமது திருவடிகளை வழிபடின் வீட்டின்பம் எளிதில் தருவேம் என்று பிள்ளையார் விதித்தருளிய அருள் விதிப்படி அறிந்து வழிபடின், அவ்வழிபட்டால் அவ்வீட்டின்பந்தரப் பெறுதல் உண்மையாகலின், அவ்வுண்மை நோக்கி ஈண்டுக் கூறியதெனினும், பிள்ளையார் திருமேனி முற்றுந் தெய்வத்தன்மை பூரணமாகலின் அதனை யறிவிக்க ஈண்டுக் கூறியதெனினும் அமையுமென்க. திருவடிகட்கு அடையாய வள்ளல் என்பதூஉம் ஆசிரியர் பெயராய வள்ளல் என்பதூஉம், அடிஇணை எதுகைத் தொடையாய் எழுத்து அசை சீர் ஒலி பொருளாதிகளால் ஒற்றுமை கொண்டு நின்று பிள்ளையாரது திருவடித் தீக்கைக்கும் ஆசிரியர் அதிபக்குவத் தன்மைக்கும் உள்ள ஒற்றுமைப் பொருத்தம் விளக்கின என்க.

வள்ளல் என்பது பிள்ளையார்க்குக் காரணச் சிறப்புப் பெயராகக் கொண்டு பொருள் கூறுவாரும் உளர். அங்ஙனங் கூறின், இத்துணைச் சிறப்பின்று என்று மறுக்க, என்னெனின், அவயவச் சிறப்பால் அவயவிக் குணம் வெளிப்படுத்தலே பெரும்பாலும் இன்பமாகலில் என்க. இதனைப் "போற்றிமா னான்முகனுங் காணாத புண்டரிகம்"9 என்பதனாற் காண்க என்க. வள்ள மலர்த்தாளெனப் பாடமோதி வள்ளம் போலுங் குவிந்த வாய்மலரென மலர்க்கடையாக உரை விரிப்பாரும் உளர். அங்ஙனம் விரித்தலின் இத்துணைப் பெரும்பயனின்றென மறுக்க. இங்ஙனம் இன்னும் விரிக்கிற் பெருகும் என்க.

மலர் என்பது வள்ளற் றன்மையின் அருகு வைத்தமையின், ஈண்டு நிறைதலுங் குறைதலுமாய் உள்ள நீர்நிலைக்கண் தோன்றியும் அழிந்தும் விரிந்தும் குவிந்தும் வாடியும் நின்று, வண்ணமும் நறையும் வாசமும் சிறிதே சிறுபோது கொண்டு பறித்தலாதிய சிறு தொழிற்படும் மலர்களை நீக்கி, ஆண்டுத் திரிபிலாத் தெய்வத் தெண்­ர் நிலைக்கண் ஒழியாமலர்ச்சியும் அழியாமணமும் பொன்னிறப்பொலிவும் இன்னறவொழுக்கும் மென்மையுந் தண்மையும் வியப்புறுமுருவும் கண்டோர் கண்கவர்காட்சியும் மாட்சியுங் கொண்டு முக்காலமுங் குன்றா மலரைக் குறித்தமை காண்க. என்னெனில் பிள்ளையார் திருவடிகள் மெய்ஞ்ஞான விளக்கமாய் அருண்மணம் வீசிப் பொன்னிறம்பொலிந்து ஆனந்தமொழுக்கி மெல்லெனவுற்றுத் தண்ணெனக் குளிர்ந்து தரிசிக்கின்றோர் வியப்புறுமுருவாய் அவரது விருப்பநோக்கம் பரவ என்றும் ஒரு தன்மையவாய் இருக்கின்றமையின் என்க. ஆயின் மலர் போலுந் தாளென்று உவமை விரிந்தபடி நிற்றற்கு இடங்கொடாது மலர்த்தாளென்றது என் னென்னின், அத்தெய்வத் திருமலர்தனைக் கண்டோர்க்குச் சிறிய விடயானந்தந் தருதலேயன்றித் திருவடிபோற் சிவானந்தந் தரமாட்டாச் சிறுமை நோக்கி என்க.

அல்லதூஉம், சுபவடிவாய் எவ்வகைச் சுபங்கட்கும் முன்னின்று அதனை விளங்குறச் செய்வதாய் மகிழ்வுடையோர் யாரும் மேற்கொண்டணியப்படுவதாய் நிற்கும் நன்மலர் போலும் எனக் கூறினும் அமையும்; என்னெனின் திருவடிகள் அருள் வடிவாய் ஆனந்தப் பேற்றிற்கு முன்னின் றளிப்பதாய் அளிவுடையோர் தம் தலைமேற்கொண்டு அணியப்படுவதாய் நிற்றலின் என்க.

அல்லதூஉம் மலரை அடைந்த வண்டுகள் அதனது தேனுண்டு களி கொள்ளுதல் போல் திருவடிகளை அடைந்தோரும் அருளானந்தம் பெற்று இறுமாத்தலின் இங்ஙனம் கூறிய தெனினும் அமையும் என்க. இதனைத் தொகையுவமை அணியாகக் கூறலின்றி வள்ளன் மலர்த்தாளெனக் கூட்டி அற்புதத் தொகையுவமை யணியாகக் கொண்டு பொருள் கூறுவாரும் உளர். அவர் கூறுங் கூற்றிற் பெரும் பயனின்றென மறுக்க. இஃதின்னும் விரிக்கிற் பெருகு மென்க.

தாள் என்பது அடிகட்கன்றியும் முயலுதற்கும் உண்ணின்ற பொருள் வெளிப்படாமைக்கும் அதனை வெளிநின்றோர் உட்சென்று கவரப்படாமைக்கும் காப்பாகக் காப்பினிற்குங் கருவிக்கும் அணிதற்கணியின் இருகடையும் இணைத்து நிற்கும் இடைப்பூட்டிற்கும் இடனாகி வந்த பலபொரு ளொரு சொல் லாகலின், திருவடிகள் தம்மை அடைந்தோரை ஆனந்த நிலையுட் சேர்த்தலும் அங்ஙனஞ்

9. திருவாசகம், திருவெம்பாவை, 20.

சேர்ந்தோர் மீட்டும் அவ்வானந்த நிலையினின்றும் போத அசைவு தோற்றி வெளிப்படாமைக்கும் அவத்தைகளுள் சென்று தாக்கிக் கவரப்படாமைக்கும் காப்பாக அருளுருவாய் அதன் முன்னிற்றலும் சிவத்துடன் சீவனை இடைநின்று கூட்டுவித்தலும் குறித்தது காண்க. இக்குறிப்புணர்த்த வன்றே மலர்க்கால் என்னாது மலர்த்தாள் என்ற தென்றுணர்க.

தலைமேல் வைத்து என்பது ஆசிரியர் தம் ஆசாரியராகிய பிள்ளையார் திருவடி தீக்கை செய்யத் தாம் பெற்றமை குறித்தது காண்க. அஃதேல் வைக்கப்பட்டு எனச் செயப்பாட்டு வினையெச்சத்தால் இருத்தற் பாலதன்றோ எனின், ஆசிரியர்க்கு அத்திருவடிக்கண்ணே உள்ள பிரியத் தொடர்ச்சியின் பெருமை தோன்ற இங்ஙனம் நின்று அங்ஙனங் குறித்தது என்க. இதற்கு இவ்வாறன்றித் தலைமேல் பாவனையால் வைத்தெனக் குறித்ததென்று கூறுவாரும் உளராலோ எனின், அவ்வாறு கூறிற் பிள்ளையார் இந்நூலாசிரியர்க்கு ஞானாசிரியர் என்பதும் இவர் ஞானதீக்கை யுடையார் என்பதும் விளங்குதலின்றி மற்றை ஆசிரியர்போல் எடுத்த நூல் இனிது முடிதற்பொருட்டுப் பாவனையால் வழிபடு கடவுட் பழிச்சினர் என்று இலேசிற் கருதப்படுமாகலின் அங்ஙனங் கூறல் மரபன்றென்க. தலையில் வைத்து என்னாது தலைமேல் வைத்து என்றமையால், மறைமுடிக்கண்ணே வயங்காநின்ற அச்செல்வத் திருவடியின் சீர்மை தோன்றிற்று என்க.

ஓர்ந்து என்பதில் ஓர் என்னும் பிறவினை முதனிலை, அறிவு தனக்கெதிரிட்ட உணர்ச்சிப் பொருட்கண் எதிரிடுவது போன்று எதிரிடாது உள்ளாழ்ந்த அப் பொருட்டிறன் எதிரிடப் பெயரும் புடைபெயர்ச்சியும் எதிரிட்ட பின்னர் விகற்பியாது எதிர்க்குந்தொறும் எதிரிடப் பெயரும் புடைபெயர்ச்சியுங் கோடலின் கருவித்திறனும் தன்திறனும் அருட்டிறனும் உற்றுணர்ந்து அவ்வுணர்ச்சி விகற்பியாது தேறிநின்றமையைக் குறித்து காண்க. இக்குறிப்புத் தோன்றவன்றே திருவள்ளுவநாயனாரும் "ஓர்த்துள்ள முள்ளதுணரின்"10 என்றா ரென்று அறிக.

உள்ளத் தழிவில் என்பதில் உள்ளம் என்பதன் பகாப்பதவியீற்றுப் பகுபதப் பொருளின் இடவாகு பெயராய் அணுப் பொருட்கண் வந்த உள் என்னும் பகுதி உட்புறத்தும் அப்போதம் எழுஞ் சிற்றசைவும் பேரசைவுங் குறித்தது காண்க.

உள்ளம் என்பது வாதனையால் உள்ளெழும் போதத்திற்கு ஆகுபெயராயது. வள்ளலென்பது போன்று ஒழுகிசையாய் வர உள்ள வழிவில் என்னாது பொறுத்திசையாய் வர உள்ளத் தழிவில் என்றது என்கொலோ எனின்:- வேற்றுமை வழியாகலினும், போதவசைவு சார்பின்றி யமையாமை குறிக்கவேண்டு மாகலினும், சாரியையோடு புணர்த்தி அங்ஙனங் கூறியதென்க. அழிவு என்பதில் அழி என்னும் பொதுவினைப்பகுதி முன்னர்த்தோற்ற நிகழ்ச்சிப் பின்னர் ஓர் காலத்தும் ஓரிடத்துமன்றிக் கெடுதற் பெயர்ச்சிக்கண் வந்ததாகலின், அப்போத நிகழ்ச்சி பின்னரெக்காலத்தும் உட்புறமென்னு மெவ்விடத்துந் தோற்ற நிகழ்ச்சியின்றி ஒடுங்கியவாறு குறித்ததென்று உணர்க. இங்ஙனமன்றி உள்ளத்தழிவில் என்பதற்கு

10. ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்

பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

மனத்தின் அசைவற்ற இடத்தெனப் பொருள் கூறுவாரும் உளராலோ எனின், மனத்தின் அசைவு போதவசைவறில் தானேயறும் ஆகலினும் அஃதறாதவிடத்து இஃதெவ்வாற்றானும் அறாதாகலினும் அது பொருந்தாதென்க. இதனை ஆசிரியர் கூறிய "பற்றாத போதும் பதறும்"11 என்னும் திருவெண்பாவாற் காண்க என்க.

அடுக்குந் தேன் என்பதில் அடுக்கும் என்பது அடுத்தல் என்னும் தொழிற் பெயர்க்கண் தல் விகுதி தன்னொற்றுச் சந்தியொடு நீங்க எதிர்காலப் பெயரெச்ச இடைநிலை உம்மை ககரமெய்ச் சாரியை யூர்ந்து தன்னொற்றுச் சந்தி பெற்று ஆண்டு நின்று இறையும் இடைப்பாடு தோற்றாது செறிதற் பெயர்ச்சியும், அடுக்கல் என்னும் தொழிற்பெயர்க் கண் அல் விகுதி நீங்க அவ்வெதிர்காலப் பெயரெச்ச இடைநிலை உம்மை விகுதி நீங்க நின்று தன் வரவு கண்டோடிய குற்றுகரமூர்ந்த மெய்க்கண்ணேறி நின்று இறையும் இடைப்போதின்மை படாது பன்முறை மேன்மேலுறுதற் பெயர்ச்சியும் பொருளாகக் கொண்டு இருவகைப் பகுதி யொருவகை யெச்சமாக நிற்றலின், சிறிதும் இடத்தானும் காலத்தானும் பிரிவு தோன்றாது செறிந்து பன்முறை மேன்மேலெழும் ஆனந்தத் தேனென்று குறித்ததென் றுணர்க.

உள்ளத் தழிவி லடுப்பது ஆனந்த மாகலின் தேனென்பதை உவமக் குறிப்பால் சிவானந்தத்தேன் என்ற தென்று உணர்க.

தேனுண்ட வண்டு அசைவின்றி அத்தேன்மயமாயிருத்தல் போல, ஆனந்தானுபவத்தர் போத அசைவின்றி இவ்வானந்த மயமா யிருத்தலின் உவமையாகக் குறிக்கப்பட்ட தென்று உணர்க. இதனை யொப்புமைக் கூட்ட மொட்டாதிகளாகக் கூறுவாறும் உளராலோ எனின், அவ்வாறு கூறினும் பொருள் சிதையாமையின் ஒருவாறு அமையும் என்க. போத அசைவின்கண் தோற்றல் விடயானந்த மாகலில், போத ஒழிவின் கண் தோற்றல் சிவானந்த மெனக் குறித்தற்கு, உள்ளத் தழிவில் அடுக்குந் தேன் என்ற தென்று உணர்க. எங்ஙன மெனின், உள்ளத் தழியாமையின் அடாத் தேனென்று எதிர்மறுக்கப் படுதலின் என்க. மதுரம் பற்றித் தேனை ஆனந்தத்திற்கு உவமை கூறுவாரும் உளராலோ எனின் அது நா விடயமாய் இறைப்போது நிற்றலின் இத்துணைச் சிறப்பின்று என்க.

அன்பரெலா முண்ண என்பதில், அன்பர் என்பது பொருள் புகழாதியைக் குறித்துப் பயில்வோரை நீக்கிச் சிவானந்தம் எந்நாள் அடைதும் என்று இடைவிடாது அதனையே விரும்பிப் பயில்வோரைக் குறித்ததென்று உணர்க.

எலாம் என்பது சரிதாதி கன்ம மார்க்கங்களைக் கூறும் பிற நூல்களெல்லாம் பருவம் நோக்காது சாதி சமயாசார விகற்பங்களை நோக்கிச் சிலரை நீக்கியும் சிலரை நிறுவியும் அதிகரித்தல் போலாது அச்சாதிசமயாதிகளில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் யாரேனும் பருவத்தராயின் இந்நூற்கு உரியராவர் என்பது குறித்தது என்று உணர்க.

11. பற்றாத போதும் பதறும் பழக்கமறைக்

கற்றா லென்னாகக் கலக்காது - சற்றேநீ

தீண்டிவிடிற் றான்காண் செனன மரணமது

மாண்டுவிடி னீசிவமா வை.


உட்கொள என்னும் பொருளுட்கொண்டு பொருட்டுப் பொருளிற் போந்த உண்ண என்னும் வினையெச்சம் ஆனந்தானுபவத்திற்கு விடாத இலக்கணை யாயிற்று என்று உணர்க. என்னை எனில், உண்ணலில் பசி நீங்கல் போல் ஆனந்தானுபவத்திற் பசுத்துவ நீங்கலின் என்க.

பயன் காரணம் பற்றி வந்த ஒழிவிலொடுக்கநூல் என்பது ஒழிவிலொடுக்க மென்னும் நூல் ஒழிவிலொடுக்கந் தரு நூல் என இரு வழிக்கும் பொதுவாய சந்தியால் வந்தமையில், தன்னை வேதாந்தத்திற்கும் சித்தாந்தத்திற்கும் பொது வென்று குறித்த தென்று உணர்க.

ஒழிவிலொடுக்க நூலுரைத்தான் என்பதில் வேற்றுமை சாரியை உருபு முதலிய ஒன்றும் விரியாது நிற்றலின், ஞானாசார மன்றிக் கருமாசார மொன்றும் விரியாத இந்நூலின் நின்மலத் தன்மை தோன்றிற்றென்று உணர்க, உரைத்தான் என்பது ஒருவர் மதி நுட்பத்தால் தாம் கண்டறிந்த மாற்றுயர்ந்த பொன்னின் தன்மையைப் பிறரும் அறிந்து பயன் கோடற்குக் கட்டளைக்கல்லில் உரைத்துக் காட்டல் போல், சுருதி குரு அனுபவத்தால் தாம் அனுபவித் தறிந்த சிவானந்தப் பேற்றின் தன்மையைப் பக்குவரும் அறிந்து பயன் கோடற் பொருட்டு நூற்கண் உரைத்துக் காட்டினார் என்று குறிப்புறுத்திற்று என்று உணர்க.

என்னெனில் உரை என்பது பொன்னுரையும் பொருளாகக் கோடலின் என்க. உரைத்தான் என்னும் பயனிலை செயப்படு பொருளின் இறுதியில் இயையாது செயப்படு பொருட்கும் கருவிப் பொருட்கு மேல் தாடலை மேல் வைத்து என்பதன் இறுதியில் தொடர்ந்து நின்றது என்னெனின், சிவஞானத் தீக்கையுடையராய் உரைத்தாரென்பது மன்றித் தமதாசாரியர் திருவடி சான்றாகத் தாம் கண்ட அனுபவத்தை விளங்க உரைத்தாரென்பதும் குறித்தற்கு என்க. என்னை? தாடலை மேல்வைத்து எனவே சான்றாக வைத்து என்பது தானே அமையுமாகலின்.

தலைமேல் வைத்து என்பதன்பின் நிற்கக் கடவதாய ஓர்ந்து என்பது செயப்படு பொருட்பின் இறுதி நிலையாய் நின்றது என்னெனின் இந்நூல் கற்றோர்க்குக் கருமங்குறைந்து ஞானமேலிடுதலுண்மை குறித்தற்கு என்க. எங்ஙனம் எனின், அவ்வோர்ந்து என்பது வினைக்குறையாகலின் என்க. 'உள்ளத்தழிவி லடுக்குந் தேனை யன்பரெலா முண்ண வொழிவிலொடுக்கநூ லோர்ந்துரைத்தான்' எனக் கொண்டு போத ஒழிவின்கண் அடுப்பதாய ஆனந்தத்தை அன்பரெல்லாம் அனுபவிக்கும் பொருட்டு வேதாகம முடிபான ஞானநெறியை ஆராய்ந்து ஒழிவிலொடுக்கம் என்றோர் நூலை உரைத்தார் எனப் பொருள் கூறுவாரும் உளர். அங்ஙனங் கூறின் ஆசிரியர் பரஞானமுடையா ரென்பது தோற்றாது அபரஞான முடையாராகப் பொருள்படு மாகலினும், அபரஞானத்தாற் கூறப்பட்ட நூல் மிகச் சிறவாமையானும் அது பொருந்தாதென்க.

இந்நூல் இயற்றற்கேற்ற நற்பொருளுடைமையுஞ் சிறப்புப்பாயிர இலக்கணத்துள் ஆக்கியோன் பெயரே என முதனிறுத்தப்பட்ட நிமித்த காரணச் சிறப்புடைமையும் இச்செய்யுள் முடிபுக்கு எழுவாயாந் தலைமையுடைமையும் பற்றி வள்ளல் என முதல் நிறுத்தியது என்க. இந்நூலாசிரியர்க்கு ஆசாரியர் இவரென்பது தோன்றற்கு அவ்வள்ளல் என்பதன் புடை குருராயன் என்பதை நிறுத்திய தென்க. இங்ஙனம் ஆசாரிய ரென்பவர் பிள்ளையார் என்பது தோன்றற்கு ஞானசம்பந்தனென வைத்தல் வேண்டுமாகலின் அந்த ஞானத்தைக் குறிக்கும் பாசவெற்றியாய 'வாது வென்ற' என்பது முன் கூட்டிச் சம்பந்தன் என அதன்புடை நிறுத்திய தென்க. இரண்டாம் அடிக்கண் பிள்ளையார் தாள்கள் நிறுத்தத் தொடங்கி முன்னர் அத்தாள்களின் இயற்கை அருளென்று குறிக்க வள்ளல் என்றும், அதன் வடிவம் ஆனந்த மென்று குறிக்க மலரென்றும் முறையே வைத்து வள்ளல் மலர்த்தாள் என நிறுத்தியதென்க. தாள்களன்றியும் பிள்ளையாரும் அருளியற்கையரே என்பது குறிக்கச் சம்பந்தனென்னுஞ் சத்தந் தோற்றியவுடன் வள்ளற் சத்தந் தோன்ற நிறுத்தியதென்க. இங்ஙனம் நிறுத்தியவை சொற்பொருண் முறைநிலை. தாள் என்பதற்கும் தலை என்பதற்கும் உள்ள சொற்பொருள் சம்பந்த இன்பம் பற்றித் தாடலை என்றும், தலை என்பதற்கும் மேலென்பதற்கும் உள்ள உரிமை நோக்கம் பற்றித்தலைமேலென்றும், மேலென்னும் இடப் பொருட்கு வைத்தற்றொழில் சிறந்தது பற்றி மேல்வைத்து என்றும், வைத்து என்பதற்கும் உரைத்தான் என்பதற்கும் இறுதியும் முதலும் இனமாதல் பற்றி வைத்துரைத்தான் என்றும் முறையே நிறுத்திய தென்க. இங்ஙனம் நிறுத்தியவை சொன்முறை நிலையும் சொற்பொருண்முறை நிலையுமாம். இங்ஙனம் முற்றும் முறை நிலை கூறப்புகின் மிகப் பெருகுமாகலின் ஒருவாறு காட்டினம். மற்றையவும் இவை கொண்டு உணர்க என்க.

இச்செய்யுட் பொருள் ஆசிரியரது அருளறிவின் மாட்சிமையை வெளிப்படையானும் குறிப்பானும் விளங்க விரித்தலின் வாகைத் திணையுள் சால்பு முல்லைப் பொருளின்பாற் பட்டதென்க. என்னை? "சால்பு முல்லைப் பொருள்; வான்றோயு மலையன்ன சான்றோர்தஞ் சால்புரைத்தன்று"12 என்பவாகலின்.

இச்செய்யுள் தன்னுள் செயப்படு பொருளாய் நின்ற நூற்சிறப்பைத் தன்னாலும் தன்னுறுப்புக்களாலும் குறிப்பாற் குறித்து நின்ற நன்னோக்குடைச் செய்யுள் என்று உணர்க. அங்ஙனம் குறித்தவை எங்ஙனமெனின்:- இச்செய்யுள் தான் கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரியப்பா என்னும் முப்பாவினும் சிறந்த வெண்பாவாகலின், இக்குறிப்பால் இந்நூல் சரியைநூல், கிரியைநூல், யோகநூல் என்னும் முந்நூலினும் சிறந்த ஞானநூல் என்று குறித்தது என்க.

தான் ஈரசையான் ஆசிட்டு இருவகைத் தளைதழீஇ ஒழுகிசைச் செப்பலோசையான் வந்ததாகலின், இக்குறிப்பால் இந்நூல் ஆகம முடிவும் வேதமுடிவும் கூறும் இருவகை நெறியும் ஒருவகை நெறியாத் தழீஇக் கொண்டிருந்தமை குறித்தது என்க.

தான் ஒன்றடுத்த இரட்டை முப்பத்தா றெழுத்துக்களைக் கொண்டு நிற்றலின், இக்குறிப்பான் இந்நூல் பாசமொன் றடுத்த தத்துவ முப்பத்தாறென்றும் முப்பத்தாறன் தன்மை இவையென்றும் பகுத்தறிதல் வகையு முணர்த்துவ தெனக் குறித்த தென்க.

தான் நான்கடுத்த முப்பத்தாறு அசைகளை அசைத்து நிற்றலின், இக்குறிப்பான் இந்நூல் அத்தத்துவ முப்பத்தாறனையும் நியதி களைதல் முறையை உணர்த்துவ தெனக் குறித்தது என்க. அஃதேல் முப்பத்தாறன் மேல் நான்கடுத்தது என்னெனின், ஆன்ம தத்துவத்தின் வன்மை தோன்றற்கு ஓரசையும், வித்தியா தத்துவத்தின் வலி தோன்றற்கு ஓரசையும், நாத தத்துவத்தின் பெருமை தோன்றற்கு ஈரசையும் மிகுந்தன என்க.

12. புறப்பொருள் வெண்பாமாலை, 185.

தான் பதினைந்து சீர் சீர்கொள நிற்றலின், இக்குறிப்பான் இந்நூல் ஆசாரியத் தன்மை, சீடத்தன்மை, பதித்தன்மை, பசுத்தன்மை, பாசத் தன்மை, உபதேசத் தன்மை, பக்குவத்தன்மை, யோகநிவர்த்தி, கிரியை நிவர்த்தி, சரியை நிவர்த்தி, விரத்தி விளக்கம், துறவுத் தன்மை, அருளவத்தைத் தன்மை, வாதனை மாண்டார் தன்மை, நிலை இயல்பு என்னும் இப் பதினைந்தையும் சீர் பெறக் கொண்ட தெனக் குறித்தது என்க.

தான் எழுவகைத் தளையின் இயைந்த தாகலின், இக்குறிப்பான் இந்நூல் ஆன்மதரிசனம், அருட்டரிசனம், பரைதரிசனம், பரையோகம், பரையோக நீக்கம், போத ஒழிவு, இன்பப் பேறு என்னும் எழுவகை நிலையும் அறிவிப்ப தெனக் குறித்தது என்க.

தான் தனிச்சொல் பெற்று நான்கடியுடன் நடந்ததாகலின், இக்குறிப்பான் இந்நூல் கூறும் ஒப்பற்ற ஞானமும் சுத்தச்சரியை, சுத்தக் கிரியை, சுத்தயோகம், சுத்த ஞானம் என நான்கு பாதத்தோடு நடப்பதெனக் குறித்தது என்க.

அல்லதூஉம், இச்செய்யுள் அடி நேரடியாய் விதித்த எழுத்தெல்லையின் இகவாது நிற்றலின், இக்குறிப்பான் இந்நூல் மெய்வீட்டின் நெறித்தாய் அவ்வீட்டின் நெறிக்கு எல்லையாய ஞானத்தின் இகவாது நின்றது எனினுமாம் என்க. எல்லை என்னெனில், "பத்தெழுத்தென்ப நேரடிக்களவே, ஒத்த நாலெழுத் தொற்றலங் கடையே"13 என்பவென்க. 'இங்ஙனங்குறித்தற் கன்றே இச்செய்யுள் ஈற்றடியில் நூற்பெயரை வேறு அடை கொடாது தனிமையில் நிறுத்தியது என்க.

இச்செய்யுள் சிறப்புப் பாயிரத்தது ஆயின் அப்பாயிரத்திலக்கணம் இதனுள் இருந்தவாறு எங்ஙனம் என்னின்:- வள்ளல் என்பதனால் ஆசிரியர் பெயரும், குருராயன் வாதுவென்ற சம்பந்தன் வள்ளன் மலர்த்தாடலைமேல் வைத்துரைத்தா னென்பதனால் ஞானாசாரியராகிய பிள்ளையார் அருளுபதேச வழித்தென உட் கொளப்படுதலின் வழியும், இந்நூற்றொடர் தமிழ்த்தொடராகலின் இத்தமிழ் வழங்கு நிலமே இந்நூல் வழங்கு நிலமெனக் கருதப்படுதலின் எல்லையும், ஒழிவிலொடுக்க நூல் என்பதனால் நூற்பெயரும், ஒழிவிலொடுக்கமென அன்மொழித் தொகைப் பெயர் மாத்திரையின் நில்லாது நூலென விரித்தமையின் இந்நூலுந் தொகை விரியுடைய தெனக் கருதப்படுதலின் யாப்பும், உள்ளத் தழிவில் என்பதனாற் கருதிய பொருளும், அன்பரெலாம் உண்ண என்பதனால் அன்பரெலா முணற்பொருட்டு இஃதியற்றுக என்று உள்ளெழுந்து எதிரிட்டு நின்றது ஆசிரியரது பெருங்கருணை எனக் கருதப்படுதலின் கேட்போரும், உள்ளத் தழிவில் அடுக்குந்தேன் என்பதனால் பயனும் புலப்படுமாகலின்; அவை இருந்தவாறு இங்ஙனம் என்க.

இப்பாயிரச் செய்யுள் முற்காலத்தது. இவ்வுரை

சி. இராமலிங்க பிள்ளை யவர்களாற் செய்யப்பட்டது

ஒழிவிலொடுக்கப் பாயிரவிருத்தி முற்றிற்று

13. தொல்காப்பியம், செய்யுளியல், 38


இந்நூல் உரைபாடத்திற் சிலசில இடங்களிலுள்ள

மறைசொற் பொருட்குத் தெளிசொற் பொருள்

1. பவுரிக்கூத்து - வலமிடமாகச் சூழ்ந்தாடுங் கூத்து.

குறுமன்னியர் - சிலரால் அறிந்து மதிக்கப்படும் பிரபுத்துவ முடையோர்.

மகாமன்னியன் - பலராலும் அறிந்து மதிக்கப்படும் பிரபுத்துவமுடையோன்.

பிரளயாகலர் - மும்மலங்களுள் ஒருமல நீத்தோர், அவர் பிரமன் முதலானோர்.

2. ஞாதுரு - காண்பான், ஞானம்-காட்சி, ஞேயம்-காணப்பட்டது.

3. சூக்குமை வாக்கு - வார்த்தை தோன்றற்கு முதற்காரணமாய் உந்தியிலே நாதவடிவாய் நிற்கும் ஒரு சத்தி.

பகடிக் கூத்து - உள்ளது போன்று இல்லாததைக் காட்டும் வெளிவேடம் அல்லது அகசியக் கூத்து

4. பரஞானம் - அனுபவஞானம், அபரஞானம்-வாசகஞானம்.

5. அரிப்பாளன் - குப்பை முதலிய இடங்களில் பொன் முதலிய அரித்தெடுக்கின்றோன்.

கொழுந்தாடை - கரும்பின் நுனித்தழை

10. சாயாபுருடன் - தன் நிழலைப் பார்த்துப் பின் ஆகாயத்தை உற்று நோக்குகின்றார்க்கு அவ்வாகாயத்தின்கண் புருட வடிவம் போல் தோன்றும் அந்நிழற் காட்சி.

12. பைமறித்தல் - உள்ளிருந்த சரக்கு வெளிப்படப் பைவாய் தொட்டு உட்புறம் மேற்பட்டும் வெளிப்புறம் உட்பட்டும் மடங்க மடக்கல்.

16. கிண்கிணிவாய் செய்தலர்தல் - வட்ட வடிவாக முகங் கொண்டு மலர்தல்.

21. பஃறுளை - பலதுளை.

42. பற்ற - பார்க்கிலும்.

43. அருகித் தோற்றல் - சுருங்கித் தோற்றல்.

52. பிரேரகம் - காரியப்படுத்தல்.

54. பிரதிபலித்தல் - எதிர்பிம்பம்.

56. சகச மலம் - அனாதியாகிய மலம்.

65. கடா - வினா.

66. விட்டிசையா திசைத்தல் - நடுவே நில்லாமல் ஒலித்தல்.

67. நக்கினம் - நிருவாணம்.

80. தேறிட்ட நீர் - தேற்றாங்கொட்டையால் தெளிவிக்கப்பட்ட நீர்.

99. கவுசனை - யாதாயினும் ஓர் பொருளை உள்வைத்து மறைய மேல்மூடிக்கட்டும் மேற்கட்டு.

105. சுழல் விறிசு - கொள்ளி வட்டம்போல் சுற்றுவதாய ஒருவகை மருத்துவாணம். இத்தேயத்து இக்காலத்தில் சுழல்புறிசு என்று வழங்குகின்றது.

109. அநன்னியம் - அன்னிய மல்லாமை.

113. நெற்பொலி - தூற்றாநெல்.

114. தும்பு செறித்து - தும்பு அவிழ்த்து

121. அனுபவிக்கச் சிதைக்கும் - அனுபவிக்க வறிகின்ற போதும்.

150. அவித்தியாகதம் - அஞ்ஞானமயம்.

153. முடி களச முத்தி: முடி - சிரசு, களசம் - நீக்கம், முத்தி-வீடு.

154. வாசி யென்ற வார்த்தை - இது செய்க விடுகவென்று நியாயமாகக் கூறும் வார்த்தை.

159. வியாபகம் - கலப்பு, வியாத்தி - கலக்கப்படுவது.

160. விசர்க்கரித்தல் - விடுத்தல்.

167. வெறுவீடர் - அனுபவிப்பதற் கில்லாமையால் விட்டோர் போன்றிருப்போர்.

கறண்டல் - பற்களால் நெருக்கிப் புறண்டுதல்.

177. சேட்டித்தல் - தொழிற்படுத்தல் அல்லது குணக்கேடான தொழில் விளைத்தல்.

183. சிங்கி - விலங்கு.

194. நாங்கூழ் - நாகப்பூச்சி யென்னும் ஓர் கிருமி.

விகளம் - மௌனம்.

198. மடலெடுப்பு - பனைமடலால் குதிரைசெய்து ஏறுதல்.

207. ஐவரரசர் - பாண்டு மக்களாகிய தருமன் முதலிய ஐவர்.

227. மந்தகாசப் பிரகாசம் - புன்னகைப் பிரகாசம்.

அடிக்குறிப்புகள்

காப்பு 3:- "உள்ளவுரை நாயேற் குறச் செய்யும்" என்று பாடமோதலுமுண்டு.

காப்பு:- ஈண்டு - இத்தோத்திரச் செய்யுட்கள் உரையாசிரியரால் இந்நூற்கு உரை இனிது முடிதற் பொருட்டு இயற்றப்பட்டன.

41. பரிபூரணமே பரையாய் என்பதைப் பரிபூரணப் பரையேயாய் என்று கூட்டுக.

42. இங்ஙனம் செய்யுட்கட் டானா யென்னு மொருமையை யுரைக்கட் டாமாகி யெனப் பன்மையாகக் கூறியது என்னைஎனின், பிள்ளையார் என்னும் திருவருட் பெயரின் பெருமை நோக்கி என்க. இவ்வாறு கூறியவற்றிற்கெல்லாம் விதி யிங்ஙன மென்றுணர்க.

51. கதறல் கதற்றல் என விகாரமாயிற்று.

53. அகந்தை யென்பது அந்தையென் றிடைக்குறையாயிற்று.

76. செட்டையாற் பரிசித்தல் முதலியன அவ்வம் முட்டைகள் தத்தம் பருவமடைதற் கென்றறிக.

அமைத்துக்கொளல்

காப்பின்கண் "ஈண்டு - இத்தோத்திரச் செய்யுட்கள்" என்றவையுள் ஆனைமுக னாறுமுக னென்னுஞ் செய்யுளை யொழித்து வேறு கொள்க.

4. "இக்கதையை இப்பொருளுக்கு" என்றதை அக்கதை இப்பொருளுக் கெனக் கொள்க. இங்ஙன மின்னும் சிலவிடங்களிலுள: அவற்றையு மங்ஙனங் கொள்க.

"மாறுபாடாய்க் கருதி" என்பதில் செய்து என்னும் வாய்பாட்டு வினையெச்சமாய ஆய் என்பதை செயவென்னும் வாய்பாட்டு வினையெச்சமாய ஆகவெனக் கொள்க. இங்ஙனம் இன்னும் சில இடங்களிலுள: அவற்றையு மங்ஙனங் கொள்க.

5. 10 முதலியன வடசொற்களுள் ஞாநம் - ஞானம், ஆநந்தம் - ஆனந்தம் எனத் தமிழிற்குப் பொதுவுஞ் சிறப்புமாய நகர னகரங்கள் சிற்சில விடங்களில் விரவி நின்றன. அவற்றைத் தமிழ்ச்சிறப்பு வழக்கு நோக்கி யமைத்துக் கொள்க.

8. "இருப்பது மன்றி அங்ஙன நின்று கேட்குமொழி பிரமோபதேச மொழியாகலின்" என்பதும் சிலவுரை பாடங்களினுண்டு.

69. "ஞானத்தி லின்பை நசிப்பித்து நானதுவா மூனத்தை யாரொழிவிப்போர்" என்பதற்கு, "சுவாநுபவத்தான் ஞானா நந்தத்தைப் பெறாது அதனை விடயச் சேற்றாற் கெடுப்பித்து விடயச் சேற்றி லழுந்தி நின்று அவ்வாநந்தத்தை யடைதற் கேதுவாய்க் கூறும் ஞான சாத்திரங்களைக் கேட்டறிந்த மாத்திரத்தினால் அவ்வாநந்தமயனா னென்று கூறும்" என்பது சிலவுரை பாடங்களிலுண்டு: இது உரை வேறுபாடு.



VallalarOrg Sanmarga Foundation - All the contents and mp3 songs on this website are copyrighted and belongs to respective owners. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the audio or documents without our permission is prohibited.
First Launched on Apr-16-1998. Last updated:Aug.04.2013