அணிந்துரை: சுவாமி சரவணானந்தா
 
அணிந்துரை: சுவாமி சரவணானந்தா


திருஅருட்பா மூன்று பகுதிகளாக இருக்கின்றன. முதல் பகுதி திருஅருட்பா பாடல்களில் முதல் ஐந்து திருமுறைகளைக் கொண்டது. இரண்டாவது பகுதி ஆறாம் திருமுறைப் பாடல்களை உடையது. மூன்றாம் பகுதி உரைநடைப் பகுதி. திருஅருட்பா ஆறு திருமுறைப் பாடல்களையும் விளங்கிக்கொள்வதற்கு வேண்டிய சன்மார்க்க விளக்கங்கள் திருஅருட்பா உரைநடைப் பகுதியில் இருக்கின்றன. திருஅருட்பா பாடல்களின் பொருள்கள், உபாயப் பொருள், உண்மைப் பொருள், அனுபவப் பொருள் என்று மூன்று வகைப்படும். உபாயப் பொருள் என்பது திருஅருட்பா பாடலில் எல்லாராலும் அறியக்கூடிய உபாயப் பொருள் - அதாவது பொது அறிவுப் பொருள்.

உண்மைப் பொருள் என்பது திருஅருட்பா பாடல்களின் சிறப்புப் பொருள்; அதாவது நுட்பமான சத்தியப் பொருள். அனுபவப் பொருள் என்பது திருஅருட்பா பாடல்களில் இருக்கும் கடவுள் அனுபவத்தை அறிவிக்கும் பொருள். இந்த அனுபவப் பொருளை விளங்கிக்கொள்ள திருஅருட்பா பாடலில் ஈடுபாடு உள்ளவர்களும், இறை நம்பிக்கை உள்ளவர்களும், ஜீவகாருண்ய ஒழுக்கம் உள்ளவர்களும் அமர்ந்து சத்விசாரம் செய்யவேண்டும். அதாவது தங்கள் தங்கள் அனுபவங்களை ஒப்பிட்டு விவாதித்து முழு அனுபவ உண்மையை அறிந்துகொள்ள வேண்டும். அனுபவப் பொருள் இது என்ற உண்மையைத் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. அந்தப் பொருளோடு ஒன்றவேண்டும். அதை வாழ்க்கையிலும் மேற்கொள்ளப் பழகவேண்டும். இப்படி வாழும் வாழ்வுதான் அனுபவப் பொருளுடன் இணைந்து வாழும் முழு வாழ்க்கை ஆகும்.

ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறைகண்ட வாசகம், விண்ணப்பங்கள், வியாக்யானங்கள், குறிப்பு விளக்கங்கள், திருமுகங்கள் அதாவது கடிதங்கள், உபதேசப் பகுதிகள் முதலிய திருஅருட்பா உரைநடைப் பகுதிகளை ஒரு முறைக்குப் பலமுறை படிக்கவேண்டும். படித்து அதன் அனுபவ உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். புரிந்துகொண்ட அனுபவ உண்மைகளை வாழ்க்கையிலும் கடைப்பிடித்து ஒழுக முயல வேண்டும்; தொடர்ந்து முயலவேண்டும். திருஅருட்பா உரைநடைப் பகுதியைப் படித்துப் புரிந்துகொண்டு வாழ்க்கையில் மேற்கொள்வதற்கு ஒரு உறுதிப்பாடுவேண்டும். சுத்த சன்மார்க்க லட்சியத்தோடு திருஅருட்பா உரைநடையைப் பயில வேண்டும்.

அப்போதுதான் அதனால் உண்டாகும் பயனை அடைந்து அனுபவிக்கமுடியும். சுத்த சன்மார்க்க லட்சியம் என்பது ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை அதாவது எல்லா உயிர்களையும் நேசித்து அவைகளிடம் சகோதர உரிமை பாராட்டுவதாகும். வள்ளலாரின் உபதேசங்கள் அவர் உபதேசித்தபோது பல அன்பர்களால் அவரவர்க்கு முடிந்தவரை; புரிந்தவரை குறிப்பு எடுக்கப்பட்டவை. வள்ளலாரின் உபதேசங்களை குறிப்பு எடுத்த அன்பர்களின் கவனக் குறைவாலும், தவறாலும், தெளிவின்மையினாலும் சில இடங்கள் மாறுபட்டும் விடுபட்டும் இருக்கின்றன. இந்தக் குறைபாடுகளை எல்லாம் நீக்கி வள்ளலாரின் உபதேசங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு முதலில் இறைவன் நம்பிக்கை வேண்டும். இரண்டாவது திருஅருட்பா பாடல்களுடன் பொருத்தமாக இருக்கும் உபதேசப் பகுதிகள் எவை எவை என்று ஒப்பிட்டுப் பார்த்துப் புரிந்து கொள்ளவும் வேண்டும். இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டால் இறைவன் அதன் உண்மைப் பொருளையும் அனுபவப் பொருளையும் புரிந்துகொள்வதற்கு நமக்குத் துணைபுரிவார். இன்றைய உலகம் புலன் இன்பம் ஒன்றிலேயே அதிக நாட்டம் உள்ளதாக இருக்கிறது. இதனால்தான் மக்களிடம் துன்பமும், துயரமும் அழிவும் பெருகி வருகின்றன. இந்த வாழ்க்கைமுறை மிகத் தவறான முறையாகும்.

இதை முதலில் அடியோடு மாற்றியாக வேண்டும். அப்படி மாற்றிக்கொண்டு வாழப் பழகுவதற்குத் திருஅருட்பா பாடல்களையும் திருஅருட்பா உரைநடைப் பகுதிகளையும் துணையாகக் கொள்ளவேண்டும். வள்ளலார் எவ்வளவு இரக்கத்துடனும், தயா பண்புடனும் வாழ்ந்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வள்ளலாருக்குத்தான் எவ்வளவு எளிமை! எவ்வளவு இரக்கம்! எவ்வளவு தன்னடக்கம்! எவ்வளவு திருஅருள் நம்பிக்கை! இவற்றை நினைந்து நினைந்து; உணர்ந்து உணர்ந்து நாம் வாழ்க்கையில் தொடர்ந்து மேற்கொள்ள முயற்சி செய்யவேண்டும். பரிபூரணமாகப் பின்பற்ற முயலவும் வேண்டும். தன்னை மறைத்தல் என்ற பண்பில், தான் என்ற அகங்காரத்தை அடியோடு விடுவதைப்பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறார். தன்னைப்பற்றியோ, மற்றவர்களைப்பற்றியோ, போலி உலக விவகாரங்களைப் பற்றியோ, வள்ளலார் ஏதாவது கூறி இருக்கிறாரா? இல்லை! இதில் இருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன. இறைவன் அருளையே பெறவேண்டும் என்ற உண்மைதான்.

இறைவன் அருளைப்பெற, நாம் என்ன செய்யவேண்டும்? தயவே வடிவமாக இருந்து ஜீவகாருண்ய ஒழுக்கத்துடன் நாம் வாழ முயலவேண்டும். இப்போது நாம் அப்படி வாழவில்லை. அழியக்கூடிய, துன்பம் தரக்கூடிய, புலன் பொறி இன்ப வாழ்க்கையிலே மூழ்கிக் கிடக்கிறோம். இப்படி வாழ்வது வாழ்வு அல்ல என்கிறார் வள்ளலார்.

நம் உள்ளே நமக்கு அழியா வாழ்வைத் தருகின்ற இயற்கை உண்மையாகிய அருட்பெரும் ஜோதி இருக்கிறது. புறத்தில் அடிக்கடி மாறிக்கொண்டும் அழிந்துகொண்டும் இருக்கும் நிலை இல்லாத பொருள்கள் இருக்கின்றன. இயற்கை உண்மையாகிய நிலையான அருட்பெரும் ஜோதியை நம்பாமல், மாறிக்கொண்டும் அழிந்துகொண்டும் இருக்கும் நிலையற்ற பொருள்களை நம்பி புலன் இன்பத்துக்காகவே வாழ்கிறோம். இப்படி வாழ்வது வெறும் விலங்கு வாழ்க்கை. இந்த விலங்கு வாழ்க்கையை விட்டு, சிரநடு சிற்றம்பலத்தில் இருக்கும் அருட்பெரும் ஜோதியை உணர்ந்து, அதனுடன் ஒன்றி வாழ்வதுதான் உண்மையான மனித வாழ்க்கையாகும். அருள் அனுபவத்தில் உயரும் மாமனித வாழ்க்கையும் ஆகும்.

இங்கு ஒரு உண்மையைப் புரிந்துகொள்ளவேண்டும். உள்முகமாகவே இருந்து ஒழிந்துபோகவும்கூடாது. புற வாழ்க்கையிலேயே மிதந்து அழிந்துபோகவும்கூடாது. வேறு என்ன செய்யவேண்டும்? இறைவனின் திருவடியை இறுகப் பற்றிக்கொண்டு, உயிர்களிடம் இரக்கம் காட்டி அவைகளுக்குப் பணிபுரிந்து கொண்டு வாழவேண்டும். நடைமுறையில் இப்போது நாம் உலகில் வாழ்கிற வாழ்க்கை, உண்மையான வாழ்க்கை அல்ல. இறைவனிடம் நாம் வைத்திருக்கும் பற்று உறுதியாக இருக்கவேண்டும். அதைப் பற்றிக்கொண்டே உலக உயிர்களிடம் அன்பு செலுத்தியும் வாழவேண்டும். இப்படி வாழ்ந்தோமானால், நம் உள்ளே இருக்கும் இறைவன் அங்கிருந்து அனகமாக விரிந்து, நம் உயிரிலும், மனதிலும், உடம்பில் இருக்கும் ஒவ்வொரு உயிர் அணுவிலும், நம் சூழ்நிலையிலும் பரவி நிலைகொள்வார். நம்மையும் நிலைபெறச் செய்வார். இவ்வாறு உள் இருந்து இறைத்தன்மை விரிந்து உருவாகும் வாழ்க்கைதான் அனக வாழ்க்கை. சத்திய வாழ்க்கை. இதனால் அகத்தில் இருக்கும் இன்பம் வளர்ந்து பொங்கி எங்கும் பாயும்.

சதா ஆனந்தமயமாக நம்மை வாழவைக்கும். திருவருளின் துணையைக்கொண்டு, நம் உள் இருந்து தழைத்துப் பொங்கும் பேரின்ப வாழ்க்கையை உலக மக்கள் அனைவர் இடமும் நாம் பரப்ப முயலவேண்டும். இதற்கு இராமலிங்கர் பணிமன்றம் வெளியிட்டுவரும் அருள் நு‘ல்கள் பெரிதும் துணைபுரிகின்றன. திருஅருட்பா பாடல்கள் முதல் ஐந்து திருமுறைகளையும், ஆறாம் திருமுறையையும், திருஅருட்பா உரைநடைப் பகுதியையும் இப்போது இராமலிங்கர் பணிமன்றத் தலைவர் திரு.நா. மகாலிங்கம் அவர்கள் இந்த ஆண்டு தம் பணிமன்ற வெளியீடாக வெளியிட்டு இருக்கிறார். இவ்வாறு சன்மார்க்க சீலர் திரு. நா. மகாலிங்கம் அவர்கள் திருஅருட்பா நூல்களை முழுவதுமாக வெளியிட்டு இருப்பதும் திருவருளின் திருவுள்ளச் செயல்தான்.

உலகில் உள்ள மற்றவர்கள் இப்போது மேற்கொள்ளும் நடைமுறைகளை மாற்ற சுத்த சன்மார்க்கத்தைப் பரப்பும் நூல்களை வெளியிடுவது மிகச் சிறந்த சன்மார்க்கப் பணியாகும். இந்தப் பணியைச் செம்மையாகவும், தொடர்ந்தும் செய்துவரும் சன்மார்க்க சீலர் திரு நா. மகாலிங்கம் அவர்களுக்கு இறைவன் மேலும் மேலும் திருஅருள் புரியவேண்டுகிறேன். திருஅருட்பா நூல்களை எல்லாரும் வாங்கி, இவை உணர்த்தும் இயற்கை உண்மையின் இரகசியங்களைப் புரிந்துகொண்டு, ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் வாழ்ந்து, பேரின்பம் பெறுவார்களாக.

-தயவு- சத்திய ஞானக்கோட்டம் சரவணானந்தா திண்டுக்கல்-624001
27-9-81

VallalarOrg Sanmarga Foundation - All the contents and mp3 songs on this website are copyrighted and belongs to respective owners. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the audio or documents without our permission is prohibited.
First Launched on Apr-16-1998. Last updated:Aug.04.2013