மருத்துவக் குறிப்புகள்
1. இருமலுக்கு
முசுமுசுக்கை சமூலங் கொண்டு வந்து பசும்பாலில் ஊறவைத்து உலர்த்தி இடித்துச் சூரணமாக வைத்துக்கொண்டு கியாழமாக்கிப் பாலொடு கொள்க. மேற்படி சூரணத்தில் மிளகு சர்க்கரை சிறுக சமன் சேர்த்துங் கொள்க. இவ்வாறு கரிசாலையுங் கொள்க. பின்பு பனையோலை சுட்ட சாம்பலைப் பால்விட்டு அரைத்துப் புடஞ்செய்து நெய் சர்க்கரை வெண்ணெய் தேனிலுங் கொள்க. இது போல் மேற்படி பூகாய்ந்ததை பஸ்பஞ் செய்து கொள்ளத் தீரும்.
2. தேகமெலிவு, ஈளை, சுக்கிலக்கெடுதிக்கு
2. தேகமெலிவு, ஈளை, சுக்கிலக்கெடுதிக்கு
பொன்னாங்கண்ணி ஒருபங்கு கரிசலாங்கண்ணி முக்கால்பங்கு இவை ஒருமுறை வேகவைத்து, தண்ர் வடித்து, பின்பு வேகவைக்கும் போது மிளகுப் பொடி போட்டு, நெய் விட்டு, சீரகத்தால் தாளித்துப் புரட்டிச் சாப்பிடவும்.
3. நீர்க்கோவை, வாதபித்த ஆபாசக்கெடுதி, மலபந்தம், சூலை இவற்றிற்கு
சுக்கு பலம் 12-க்கு சுண்ணாம்பில் 4 பலம் கவசித்து, மஞ்சளில் 4 பலம் கவசித்து, எருமைச் சாணத்தில் 4 பலம் கவசித்து, கவசங் கருகச் சுட்டு எடுத்துச் சீவி வைத்துக்கொண்டு, மூன்று தினுசிலும் 3 வராகனெடை எடுத்து நசுக்கி அரைப்படி சலத்தில் போட்டுக் காய்ச்சி வீசம்படியாகச் சுண்டின பின்பு, பனங்கற்கண்டு நெய் இவைகளைக் கலந்து இளஞ்சுடாகச் சாப்பிட்டு வரவேண்டும்.
4. தேகவலிவு, சரீர திடத்திற்கு
கெட்டி மிளகு பலம்20 - இதைப் பேயன் வாழைக்கிழங்குச் சாற்றில் 3 நாள், இளநீரில் 3 நாள், கரிசாலைச்சாற்றில் 3 நாள், பொன்னாங்கண்ணிச் சாற்றில் 3 நாள், பசுங்கோமயத்தில் 3 நாள், பசும்பாலில் 3 நாள், தனித்தனியாக இரவில் ஊறவைத்து, பகலில் நிழலில் காய வைத்து, தேய்த்துப் புடைத்து முன் போலவே எல்லாவற்றிலும் நனைத்து உலர்த்தித் தேய்த்துப் புடைத்து எடுத்து வைத்துக்கொண்டு, சுமார் 5 மிளகு அளவு கற்கண்டும் சேர்த்துச் சாப்பிட்டு வரவும். கற்கண்டு இல்லாமலும் கொள்ளலாம். சூடு கொண்டால் அறுகம் வேர் கஷாயத்தில் பசுவெண்ணெய் சேர்த்துச் சாப்பிடலாம். இவ்விதம் சிலதில் ஊறவைத்துக் கடுக்காயும் கொள்ளலாம்.
5. பஞ்ச கற்பம்
5. பஞ்ச கற்பம்
கஸ்தூரி மஞ்சள், வேப்பம் பருப்பு, வெள்ளை மிளகு, கடுக்காய்த் தோல், நெல்லிவற்றல் இவைகளை அரைத்துப் பாலில் காய்ச்சி நறுமணத்துடன் இறக்கித் தேய்த்துக் கொள்ளவும்.
(வேறுவகை)
(வேறுவகை)
கசகசா, பாதாம்பருப்பு, கொப்பரைத் தேங்காய், மிளகு, சீரகம் இவற்றைப் பாலில் அரைத்துக் காய்ச்சி, நறுமணத்துடன் இறக்கித் தேய்த்துக் கொள்ளவும்.
6. நீலகண்ட மணி மாத்திரை
மாந்தாளிக்கள்ளி, சதுரக்கள்ளி, வெள்ளெருக்கு வேர்ப்பட்டை, இவைகளைச் சமன் எடையால் நிழலில் உலர்த்திக் கொண்டு ஐந்து பலம் குழித்தைலம் வாங்கிக் கொண்டு, சுரைக் குடுக்கையில் வைத்துக் கொண்டு, பெருங்காயம், லிங்கம், அபினி, இந்த மூன்றும் ஒவ்வொரு பலம் கல்வத்திற் போட்டுப் பொடித்துக் கொண்டு, குங்குமப்பூ, கஸ்தூரி, கோரோசனை, பச்சைக் கற்பூரம், கூகை நீறு இந்த ஐந்தும் வகைக்கு ஒன்றேகால் வராகனெடை சேர்த்து, தைலத்தை விட்டு எட்டு ஜாமம் அரைத்து, குன்றிமணிப் பிரமாணம் மாத்திரை செய்து மூங்கில் குழாயில் அடைத்து மண்குடத்தில் வைத்து, பூமிக்குள் நாற்பது நாள் வைத்துப் பின்பு எடுத்து, விஷ்ணுவுக்குப் பூசை செய்து, தங்க டப்பியில் வைத்துக் கொண்டு வாந்தி பேதி கண்டவர்களுக்கு மணிக்கு மூன்று மாத்திரை வீதம் தேனில் கொடுத்தால் வாந்தி பேதி நிற்கும். ஜன்னி வகைகளுக்கும் பிரயோகிக்கலாம், நல்லபாம்பு முதலிய விஷ திருஷ்டிகளுக்கும், தகுந்த அனுபானங்களில் பிரயோகிக்கலாம். இந்த மாத்திரைக்கு விஷ்ணு வைத்த பெயர் பிரளய கால ருத்திர மணி மாத்திரை. சிவனிட்ட பெயர் நீலகண்ட மணி மாத்திரை. இது நாடியில் சொல்லியது.
மருத்துவக் குறிப்புகள் முற்றிற்று.
மருத்துவக் குறிப்புகள் முற்றிற்று.