திருச்சிற்றம்பலம்
கட்டளைக் கலித்துறை
வேதியன் பாதம் பணிந்தேன்
பணிந்துமெய்ஞ் ஞானமென்னுஞ்
சோதியென் பாலுற வுற்றுநின்
றேற்கின்று தொட்டிதுவே
நீதியென் றான்செல்வ மாவதென்
றேன்மே னினைப்புவண்டா
ரோதிநின் போல்வகைத் தேயிரு
பாலு மொழித்ததுவே.
உரை
வேதியன் - சத்தார்த்த லக்ஷியனாகிய இறைவனது
பாதம் - திருவடிகளை
பணிந்தேன் - வணங்கினேன்
பணிந்து - பணிந்து (திருவருட் சமுகத்தில் நின்ற யான் அவனால் கடைக்கணிக்கப் பெற்றதனால்)
மெய்ஞ்ஞான மென்னுஞ் சோதி - மெய்யறி வென்னும் இயற்கை விளக்கமாகிய அவ்
விறைவனது ஆண்பால் வடிவம் (சோதி என்பது சோதிப்பாலெனக் கொளற்பாலது.)
என்பாலுற - ஆன்ம சத்தி விளக்கமாகிய எனது பெண்பாலிற் கலக்க
உற்று நின்றேன் - ஐக்கியானுபவம் பெற்று நின்றேன்.
(நின்றேற்)கு - அங்ஙனம் நின்ற என்னை இறைவன் மீட்டுங் கடைக்கணித்து
இன்று தொட்டு - இது பொழுது தொடங்கி
இதுவே - இவ்வனுபவ ஒழுக்கமே
நீதி யென்றான் - நீ அனுபவிக்கின்ற ஒழுக்கமாகுக என்று திருவாய் மலர்ந் தருளினன் (யானும்)
செல்வமாவ தென்றேன் - அடைதற்குரிய திருவருட்செல்வம் இங்ஙன மாவதென்று
அங்ஙனமே நின்றனன்.
மேல் - அதன் பின்னர்
நினைப்பு - இருவகைப் பாலினுங் கவர்பட நின்ற எனது நினைவு
வண்டாரோதி - வண்டு மொய்க்கின்ற இயற்கை மணம் வீசும் அளகத்தை உடையாய்
நின்போல் வகைத்து ஏ - இறைவனது அனுபவ விருப்பம் பற்றி வந்த தாபவிசேடத்தாற்
பெண்பாற்குரிய நாணத்தை விடுத்துப் பலருங்கேட்கத் "தூது செல்லுதி" என்று
என்னை வருந்தி ஏவுதலால் ஊக்க முதலியவுடைய ஆண்பாற்றன்மை அவையின்றிய
நின்பெண்பாற் றன்மையிற் கலக்கப்பட்டு இருபாலும் ஒழித்து நின்ற நின் வண்ணம்
போன்றதாய்
இருபாலும் - ஆண்பால் பெண்பால் என்னும் இரு பாலினிடத்துஞ் செல்லுகை
ஒழித்தது ஏ - நீங்கிற்று.
ஆகலில் நீயும் புறத்தே என்னை யொப்பாயாக.
இது சிவானந்தத்தை அகத்தே அனுபவித்த தோழி
புறத்தனுபவம் விரும்பிய தலைவியை அறிவுறுத்தியது.