2. கணபதி பூஜா விதி
திருச்சிற்றம்பலம்
நித்திய கர்மானுஷ்டானம் முடித்துக்கொண்டு, தத்துவத்திரய மந்திரத்தால் ஆசமித்து, ஹ’ருதயத்தால் தொடுமிடந் தொட்டு, பஞ்சாக்ஷரத் தியானஞ் செய்து, கணபதியைப் பீடத்தை விட்டு அபிஷேகஸ்தான பாத்திரத்தி லெழுந்தருளப் பண்ணி, பீடத்தைச் சுத்தி செய்து, திருமஞ்சனஞ் செய்ய வைத்திருக்கின்ற தீர்த்த கும்பத்தைக் கந்த புஷ்பங்களால் சூழவும் "சிவாய நம, கவசாய நம" என்று சார்த்தி, பின்பு பஞ்சாக்ஷரத்தால் பதினொரு விசை அர்ச்சித்து, அஸ்திராய படு வென்று மணியசைத்து, அஸ்திராய நம வென்று அர்க்கிய வட்டகையில் ஜலம் பூரித்து, பிரணவத்தா லேழு விசை கந்தாதிகளால் அர்ச்சித்து, பின்பு கணேசருக்கு ஆசன மூர்த்தி மந்திரத்தால் புஷ்பஞ்சாத்தி, தேவாரம், திருவாசகம் முதலியவைகளோதி அபிடேகஞ் செய்தல்.
விசேட தினத்தில் ஆகம விதிப்படி தைல க்ஷீர பல முதலியவற்றால் அபிடேகித்து, இடையே ஒவ்வொன்றுக்கும் ஜலத்தால் அபிடேகித்து, பின்பு சந்தனாதி கும்பஜலாபிஷேகஞ் செய்து, ஒற்றாடை சாத்தி யீரம் புலர்த்தி, வத்திரபூடணாதிக ளணிந்து, சிவாய நம வென்று வெண்றும், கந்தகுரவே நம வென்று சந்தனமும், ஆசனமூர்த்தி மந்திரத்தால் புஷ்பமும், பஞ்சாக்ஷரத்தால் மூன்று விசை தூர்வாக்ஷதையும், தத்துவத்திரயத்தா லர்க்கியமுங் கொடுத்து, சாமான்னிய நிவேதனஞ்செய்து, தூபதீபங் கொடுத்து, பின்பு சுமுகாதி சிவாத்மஜாய நம ஈறாகவுள்ள சோடச மந்திரத்தால் அர்ச்சித்து, அர்க்கியங் கொடுத்து, கிரமப்படி விசேஷ நிவேதனாதி தூப தீபாராதனை செய்து, பத்திரஞ் சாத்தி, தோத்தரித்து, பிரதக்ஷிணாதி புஷ்பஞ் சாத்தி நமஸ்கரித்து, மனத்தால் ஹ’ருதயத்தி லெழுந்தருளப் பண்ணிக் கொண்டதாகச் சிந்தித்து, முன் சொன்னபடி ஆசமனஞ் செய்து, பஞ்சாக்ஷர ஜபஞ்செய்து, திருவெண்று தரித்துக்கொண்டு, போஜன விதிப்படி போஜனஞ் செய்யவும்.
மேலும், மேற் குறித்தபடி பூஜையை மானசிகமாகச் சுப்பிரமண்ணியம், சிவம், தக்ஷிணாமூர்த்தி, நடராஜமூர்த்தி இவற்றிற்கும் செய்யலாம். இவ்வணஞ் செய்திருந்தால் பரமாசாரியர் கிடைப்பர். மேற்படி பரமாசாரியரை மானசிகத்தா லர்ச்சித்து உண்மை யறிந்து நிராசை மயமானால் சிவானுபவம் பெறலாம்.
திருச்சிற்றம்பலம்