"உலகெலாம்" என்னும் மெய்ம்மொழிப்பொருள் விளக்கம்
 

1. மெய்ம்மொழிப்பொருள் விளக்கம் ஆமாறு

திருச்சிற்றம்பலம்

இஃது உலகெலாம் என்னும் மெய்ம்மொழிப்பொருள் விளக்கம் என்பது எங்ஙனமெனின்:- திருவருளின்பத்தை அங்கைக்கனியிற் பெற்ற பெரியவரையும் அத் திருவருளையும் வாச்சிய லக்ஷியமாகக் கொண்ட பெரிய புராணத்தில் தெய்வத் தற்சிறப்புச் செந்தமிழ்ச் செய்யுட்கண் எல்லாம் வல்ல இறைவன் திருவருளால் எடுத்துக் கொடுக்கப்பட்ட உலகெலாம் உணர்ந்தோதற் கரியவன் என்னும் மெய்ம் மொழியினது பொருள்விளக்க மாகலின் மெய்ம்மொழிப்பொருள் விளக்க மென்றாயிற்றென்க.

இதனை மெய்ம்மொழி என்றது என்னையெனின்:- உணர்ந்தோர், இழிகுண ஆங்கார மொழியாய மனிதர் மொழியினும் சமகுண ஆங்கார மொழியாய தேவர் மொழி மெய்ம்மொழி என்பர்; அதனினும் உயர்குண ஆங்கார மொழியாய முனிவர் மொழி மெய்ம்மொழி என்பர்; அதனினும், இயல்புப் பிரகிருதி மொழியாய அரிபிரமாதியர் மொழி மெய்ம்மொழி என்பர்; அதனினும் சுத்தாசுத்தமாயா மொழியாய உருத்திராதியர் மொழி மெய்ம்மொழி என்பர். இங்ஙனமன்றி, மொழித்திறன் தெரிந்து முடிபு முற்றுணர்ந்தோர் அபரவயிந்துவப் பிரணவமொழியாய சதாசிவாதியர் மொழியே மெய்ம்மொழி என்பர் என்னின் இவ்வபரவயிந்துவப் பிரணவமொழிக்கு உபாதான உபகரண அதிகரண வியாபக சித்தமாய் சுத்த வியோமாகாரமாய் விளங்குகின்ற திருவருட் பரவயிந்துவத் துரியத் திருவாக்கான் மொழிந்த உலகெலாம் என்னு மொழியை மெய்ம்மொழி யென்றல் இறும்பூதன் றென்க. வேறு இயைபியல் அடையொன்று வழக்கின்கண் இன்மையிற் கூறியதன்றி இஃதோ ரியைபியல் அடையுமன்றென்க.

இதனைத் திருவருட் பரவயிந்துவத் துரியமொழி என்றது எங்ஙனமெனின்:- சுத்தமுதலிய மாயாகாரிய ஆகாயங்களினன்றி, நாதாதீதமாய் சிதாகாசமென்று வேதாகமங்களால் மீக்கூறப்பட்ட சிற்சபைக் கண் தோன்றிய மொழியாகலின் அங்ஙனங் கூறியதென்க.

ஆயின் இவ்வடைமொழிப் பொருட்டுணிபு என்னையெனின்:- வாச்சியப் பொருளாங்கால் மெய்ம்மையை யுடைய மொழியென்று வேற்றுமை வழியான் விரித்து அபரவயிந்துவப் பிரணவமொழிக்கும், லக்ஷியப் பொருளாங்கால் மெய்ம்மையாகிய மொழியென்று அல்வழியான் விரித்து திருவருட் பரவயிந்துவத் துரியமொழிக்கும் இயைபு கோடல் துணிபென்க.

இங்ஙனம் வாச்சிய லக்ஷியமொழி வரலாறென்னை யெனின்:- மனிதர், தேவர், முனிவர், அரிபிரமர், உருத்திராதியர் மொழியாய ஆங்காரமொழி, பிரகிருதிமொழி, மாயைமொழி என்பவை அசுத்தமும் சுத்தாசுத்தமுமாகிய சத்தார்த்தப் பிரபஞ்ச காரண வைகரியாதி நான்கு வாக்கின் காரியமொழி யாகலின் மெய்ம்மொழியன் றென்க. சதாசிவாதி மொழியாகிய பிரணவமொழி சுத்தசத்தார்த்தப் பிரபஞ்ச காரணமாகிய அபரவயிந்துவ காரியமொழி யாகலின் வாச்சிய மெய்ம்மொழி யாயிற் றென்க. பரசிவ மொழியாய திருவருள் துரிய மொழி, துரிய சத்தார்த்தப் பிரபஞ்ச காரணமாய்ச் சிற்சத்தி பரவிந்துவிற் பதிதலான் நாதமாத்திரத்தினுண்டாய மொழியாகலின், லக்ஷிய மெய்ம்மொழி யாயிற்றென்க.

இஃது மெய்ம்மொழி என்பதைப் பெரியபுராணத்துள்

அருளி னீர்மைத் திருத்தொண் டறிவருந்

தெருளி னீரிது செப்புதற் காமெனின்

மருளின் மெய்ம்மொழி வானிழல் கூறிய

பொருளி னாகு மெனப்புகல் வாமன்றே

என்ற செய்யுளுள்ளுங் காண்கவென்க.

இஃது அபரவாக்கிய விவகாரமன்றாகலின் விசேட இலக்கணம் இயற்பட விரித்தலிலம் என்க.

இம் மெய்ம்மொழிப்பொருள் விளக்கத்தின் எல்லை எங்ஙனமெனின்:- யோகாந்த கலாந்த நாதாந்த போதாந்த வேதாந்த சித்தாந்த மென்னும் சடாந்தானுபவ சாத்தியர்களும் அவற்றை விரும்பி அவ்வழிக்கண் நின்ற சாதகர்களும் அந்தரானுபவ திட்டாந்தமாக உபாசிக்க விளங்குகின்ற சிதம்பர ராசியத்தைக் குறிக்குஞ் சிற்சபைக் கண்ணே, சேக்கிழா ரென்னுந் தெய்வப் புலவர் பொருட்டு இறைவர் பரமாகாய வாக்கான் மொழியப்பட்டுச் சமரசானுபவ சாட்சாத்காரமாய் ஆறந்தத்தினு நடிக்கின்ற சிதம்பர நடனத் திருவருட் பதத்தை வாச்சிய லக்ஷியமாகக் கொள்ளப்பட்டதாகலின், சடாந்த சமரச லக்ஷியப் பொருளெல்லையை யுடையதென்க.

இனி உலகெலாம் என்பதன் மட்டன்றி, உணர்ந்தோதற் கரியவன் என்ற தொடர்காறும் அத்திருவருட் பரவயிந்துவத் துரியத் திருவாக்கின் எழுந்த மெய்ம் மொழி என்று ஐயமறக் கொள்க வென்க. எங்ஙனமெனின்:- திருவருட் புலமைசான்ற சேக்கிழாரென்னும் பெரியர் செயற்கரிய என்று அரையன் பணித்தவாறு அடுத்த கருவிகள் முறைப்பட ஒன்றேனுமின்றி முடித்தற்கு எங்ஙனங் கூடுமென்று ஐயுற்று அழுங்கிய உள்ளத்தோடு அருட்பொதுவின்கண் போந்து பணிந்து பழிச்சித் திருவருட் பெருமையைச் சிந்தித்து நிற்ப, ஆண்டு இறைவர் அவர் கருதிய பெருஞ்செயல் முடித்தற் பொருட்டு உளங்கொண்டு சிற்சபைக்கண் புறத்து உல கெலாம் என்றும் அவரகத்து அந்நிலைக்கண் உணர்ந்தோதற்கரியவன் என்றும் மொழிந்தருளியவா றென்க.

அங்ஙனமொழிதற்கு இயைபு எங்ஙனமெனின்:- உலகெலாம் என்பது பல நோக்குடைப் பெருமொழி யாகலின் எந்நோக்கங் கருதி மொழிந்தனர் இறைவர் அந்நோக்கம் அவரறிந்தே முடித்தல் வேண்டும். மற்றையர் முடித்தற்கு அணுத்துணையுங் கூடா. அன்றித் திருவருள் துரியத் திருவாக்கில் எழுந்த பயனிலைமுற்றாக் குறைமொழியை மற்ற வாக்கான் முடித்தற்கு இயைபு எவ்வாற்றானும் இறைத்தனையு மின்று. அன்றி, சிவசுதந்தரச் செயற் குறையைச் சீவ சுதந்தரத்தான் முடித்தலுங் கூடா. அன்றி இதுகாறும் இறைவர் அருள் வடிவாற் பக்குவர்கட்கு உபதேச முதலிய திருவாக்களித்தவற்றுள் இங்ஙனம் குறை மொழியளித்ததின்று. அங்ஙனம் அளித்தல் அத்திருவருட்டுரியத் திருவாக்கின் இயலுமன்று. ஆகலினென்க.

ஆயின் ஓரிடத்தே மொழியாது அகத்தும் புறத்தும் மொழிந்தது என்னை யெனின்:- அக்காலை அருட்பொதுவின்கண் நின்ற அந்தணர் அறவோர் முதலிய பலரும் அவர்வழி மற்றையோரும் சேக்கிழாரென்னும் பேரிற் சிறந்த பேரறிவுடைய பெரியர் திருவருட்டுணையால் இப்பெருங் காப்பிய முடித்தனர். இஃது மாயைத் துணையால் தேவர் முனிவர் மனிதர் இயற்றிய மற்றைக் காப்பியங்கள் போல் எளிதன்று என்று அன்புகொண்டு அனுபவித்து உய்தற்பொருட்டும் அம் மெய்ம் மொழியைக் கேட்டுச் சேக்கிழாரது புறக்கரணங்கள் சுத்தியாதற் பொருட்டும், புறத்தே உலகெலாம் என்றெழுந்து தத்துவ படலத்தால் மயங்கிய அவரது ஆன்மதிருட்டியைப் படல நீக்கி அறிவு விளக்கிச் சுத்தி செய்தற் பொருட்டு அகத்தே உணர்ந்தோதற் கரியவன் என்று முடிந்த தென்க.

ஆயின் அகத்தும் புறத்தும் மொழிதற்கு அளவை எங்ஙனமெனின்:- திருவருட் பரவயிந்துவத் துரியமொழி புறத்தே எழுந்து அகத்தே நிறைந்தது சுத்திசெய்தற் கருணையான் வாயுப்போல என்னுஞ் சுதன்மியமாகிய இக்கருதல் வியாத்தியால் அறிகவென்க. என்னையெனின்:- பொருட்புலப்பாட்டின்கண் சிற்சத்தியானது பரவிந்துவிற் பதிதலும் அதனால் அதன்கண் நாதமுண்டாதலும் உண்மையாதலின் பக்கமும் பக்கத் தன்மையும் பெறப்பட்டன. வரலாற்றுப் புலப்பாட்டின்கண் அகத்தும் புறத்தும் சுத்திசெய்தற் கருணையானன்றி அம்மொழி தோன்றாதாகலின் சிதைக்கப்படா அளவைத்திறன் பெறப்பட்டது. உறழ்ச்சிப் புலப்பாட்டின்கண் நேர்ச்சிப்பொருள் வான்புறத்தெழுந்து அகத்து நிரம்புதல் எங்ஙனம் அங்ஙனந் திருவருட் பரவயிந்துவப் புறத்தெழுந்து வாக் ககத்து நிரம்புதல் கூடுமாகலின் அளக்கப்படுகை மாறுபடாமை பெறப்பட்டது. ஆகலில் அசம்பவம் அவ்வியாத்தி அதிவியாத்திகளு மின்று. இதனால் வியாத்திமுறை காண்கவென்க. இனி இம் மெய்ம்மொழிக்குப் பொருள் விளக்கஞ் செய்யுமிடத்துக் காட்சியும் கருதலும் இன்றியும் உரையளவையும் வேண்டுங்கால் வேதாகம முதலிய குறித்தல் வேண்டுமா லெனின், குறித்தல் வேண்டா. என்னை யெனின்:-

இங்ஙனம் வருணாசிரம மானத்தாற் பந்தப்பட்டு எகதேசத்தான் வழங்குகின்ற வேதம், வருணாசிரம மானத்தாற் பந்தப்படாது யாண்டும் பூரணத்தான் வழங்கும் மெய்ம்மொழிக்குப் பிரமாணமாகா வென்க. அன்றியும், வேதங்கள் ஓர் காலத்தில் உருத்திரனாலும், வேறோர் காலத்தில் விண்டுவாலும், பிறிதோர் காலத்தில் பிரமனாலும், மற்றோர் காலத்தில் பராசரன் வியாசன் முதலிய முனிவராலும் தொகுத்தும், வகுத்தும் விரித்தும் பலவாறு விகாரப்படுகின்றனவாய்; தாதுக்கள், பிரத்தியயங்கள், பிராதி பத்தியங்கள் முதலிய இயலுறுப்பும், வர்ன்னம், பதம், ஜடை முதலிய இயல் விசேடவுறுப்பும், உதாத்தம், அநுதாத்தம், சுரிதக முதலிய இசையுறுப்பும், சி€க்ஷ, கற்பம், வியாகரணம், நிருத்தம், சோதிடம், சத்தம் முதலிய அங்கவுறுப்பும் ஆயுள் நூல், தநுநூல், காந்தருவ நூல் முதலிய உபவுறுப்பும் உடையனவாய்; பஞ்சப்பிரம்ம மந்திரம், தத்துவத்திரய மந்திரம் முதலிய மந்திர சாமானிய விசேடங்களும், ஸ்நாநம், சந்தி, ஜெபம், ஓமம், தர்ப்பணம், வைசுவதேவம், இட்டி, அக்கினிட்டோமம், பசுபந்தம், திரையாக்கிநியம் முதலிய நித்திய கன்மங்களும், வருடகன்மவிசேடம், அயன கன்மவிசேடம், மாதகன்ம விசேடம், பருவகன்மவிசேடம் முதலிய நைமித்திக கன்மங்களும், அசுவ மேதம், ராஜசூயம், பௌண்டரீகம் முதலிய காமிய கன்மங்களும், சுராபானம், பரதாரகமனம், அசத்திய வாசகம் முதலிய நிஷேத கன்மங்களும், அநசநம், சாந்திராயணம், கிருச்சிரம் முதலிய பிராயச்சித்த கன்மங்களும், சூரிய உபாசனை, பிரமஉபாசனை, விண்டுஉபாசனை, ருத்திர உபாசனை, பிரணவ உபாசனை முதலிய உபாசனா கன்மங்களுமாகிய கன்ம சாமானிய விசேஷங்களும், சமயத்தார் சாதியார் பலர்க்கும் ஒத்த வண்ணம் வரைதற்கும் ஓதற்கும் உணர்தற்கும் இடங்கொடாமையும், பலவாறு விகற்பித்துக் கூறும் மயக்கமும் உடையனவாய், தாம் திருவருட் பரவயிந்துவ சத்தியான அபரவிந்துவின்கண் உற்பத்தியாய் அதனிடத்தே லயமாதலில் ஆதியும் அந்தமும் உடைத்தாயிருந்தும், அங்ஙனங் கோடலின்றி உற்பத்தியின்மையும் லயமின்மையுமாகிய அநாதியென்றும் நித்தியமென்றும் தம்மைத்தாமே விபரீதத்தான் மீக்கூறுகின்ற மதமும் அகங்காரமும் பெற்றிருத்தலு மன்றியும், கருமை, கடினம், எளிதின் உருகாமை, புலால் நாற்றமுடைமை முதலிய வன்மைக் குணங்களான் வெளிப்பட்டு மண்வெட்டி, கோடரி, அரிவாள் முதலிய அற்பக் கருவியை விரும்பினோர் எளிதிற் பெறத் தான் பரிணமித்தலேயன்றி, மகுடம் குண்டலம் முதலிய விசேடக் கருவிகளை விரும்பினோர்க்குத் தன்னுண்மைக் குணமாய சுவர்ணத் தன்மையை நெடுஞ் சேய்மைக்கண் மறைத்து அரிதிற் பெறவிருந்த அயலோக நியாயம்போல் மாயாசத்தார்த்தப் பிரபஞ்ச காரிய சித்தவிருத்தியாகிய வன்மைக் குணங்களான் வெளிப்பட்டு, பூலோகபோகம் சுவர்க்கலோகபோகம் முதலிய அநித்திய போகங்களை விரும்பினோர் எளிதிற் பெறத் தாம் மந்திர தந்திரங்களாற் பரிணமித்தலேயன்றி, அருட்போகம் ஆனந்தபோகம் சிவபோகம் முதலிய நித்திய போகங்களை விரும்பினோர்க்குத் தமதுண்மைக் குணமாகிய உபதேச லக்ஷியத்தன்மையை நெடுஞ்சேய்மைக்கண் மறைத்து அரிதிற்பெற விருத்தலானும்; தன் பலத்தை விரும்பினோர்க்கு நின்று கர நீட்டித்தலினானும் வேற்றுக்கருவி முதலியவற்றானுங் கைகூடுதலின்றி, மேலிவர்ந்தரிதிற் றலைக்க நின்று தன் காய்களைக் கவர்ந்தும் அந்நிலைக்கண் அனுபவித்தற்கும் வேறோர் கருவி வேண்ட நின்ற இலாங்கலி விருக்ஷ* நியாயம் போல், உபதேச லக்ஷியத் தன்மையைப் பெறத் தொடங்கிய சாதகர்க்குத் தத்தம் பருவத்திற் கடுத்த உணர்வானும் பல்வகைச் சாதகத்தானுங் கைகூடுதலின்றித் தெய்வகதியான் முடிபுநோக்கி அத்தலைக்கண் அமைந்த பொருளைக் கவர்ந்தும் அந்நிலைக்கண் அனுபவித்தற்கும் வேதாந்தவிசார முதலிய வேறோர் கருவி வேண்ட விருத்தலானும், மனிதர்மொழி, தேவர்மொழி, முனிவர்மொழி, அரிபிரமாதியர்மொழி, உருத்திராதியர்மொழி என்பவைக்குப் பெரும்பாலும் பிரமாணமாகி நிற்பனவன்றித் திருவருட் பரவயிந்துவத் துரியமொழிக்கு ஒருவாற்றானும் பிரமாணமாகா வென்க.

* இலாங்கலி விருக்ஷம் - தென்னைமரம்.

ஆகமங்களுள் சில ருக்குவேதம் போல் மந்திரகலையைக் குறித்தும், சில தயித்திரீய வேதம் போல் தந்திரகலையைக் குறித்தும், சில சாம வேதம் போல் உபயமுங் குறித்தும், சில அதர்வண வேதம் போல் உலகியலைக் குறித்தும் வருதலின் வேத சம்மதமாகியும், சில ஏகான்ம விரோதஞ் சாதித்தலின் வேத விரோதமாகியும், உபய மாயா காரியங்களைப் பெரும்பாலும் விரித்து விளக்கலான் மயேசுர சதாசிவாதி மொழிக்குப் பெரும்பாலும் பிரமாணமாமன்றி இத்துரிய மொழிக்குப் பிரமாணமாகா வென்க.

இதனால், வேதாகமங்கள் சகளத்திற் சகுணமாகத் தோன்றிய ஈசுர வாக்கியங்கள் என்பதும் "உலகெலாம்" என்பது பூரண நிஷ்களத்தில் நிர்க்குணமாகத் தோன்றிய பரசிவ வாக்கியம் என்பதும் "உணர்ந் தோதற் கரியவன்" என்பது ஏகதேச நிஷ்களத்தில் நிர்க்குணமாகத் தோன்றிய பரசிவ வாக்கியம் என்பதும் அறிகவென்க.

ஆயின் இம்மெய்ம்மொழிக்கு உரைப்பிரமாணம் வேறின்றாலோ எனின்:- தற்சுதந்தரத்தானும் தற்புகழ்ச்சியானும் தன் மேம்பாடு வெளிப்படுத்து நிமித்தத்தானும் ஈசுராதிகளால் உபசரித்து உரைக்கப்பட்ட வேதாகமாதிகள் இங்ஙனம் மெய்ம் மொழிப் பிரமாணமாகா என்றதன்றி, சிவசுதந்தரத்தானும் நிரகங்காரத்தானும் சிற்சத்தி ஆனந்த சத்தித் துவாரமாக நாதாந்தத்திருந்து சிவஞானிகள் மோனந்ததும்ப மொழிந்தருளிய திருவருட்டுரிய மொழிகளைப் பிரமாணமாகா என்கிலம். ஆகலின் உரையளவை வேண்டுங்கால் அச்சிவஞானிகளது திருவருட்டுரிய மொழிகளுட் குறிக்க வேண்டுவன குறிக்குது மென்க.

இம் மெய்ம்மொழி நிர்க்குணலக்ஷிய முடையதாகலின்,

அறிவுரு வுடையார் குறிகுணங் குறியா

ரென்பது கருதி யன்பத னாலே

வெருவா திதன்பொருள் விளக்கமென்னப்

பெருவாய் மையர்போற் பிதற்றின னன்றி

விளக்கும் வன்மையான் விளக்கவந் தனனன்

றளக்கு நுண்ணிய வறிவி லேனே.

திருச்சிற்றம்பலம்

மெய்ம்மொழிப் பொருள் விளக்கம் ஆமாறு முற்றிற்று


VallalarOrg Sanmarga Foundation - All the contents and mp3 songs on this website are copyrighted and belongs to respective owners. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the audio or documents without our permission is prohibited.
First Launched on Apr-16-1998. Last updated:Aug.04.2013