தொண்டமண்டல சதகம்
 

1. நூற்பெயர் இலக்கணம்

தொண்டமண்டல சதகம் - ஒருவாறிதனிலக்கணம் விரிக்கின்றார்.

இஃது மூவகைமொழி, இருவகைச்சந்தி, முத்திறத்தொகை, ஒரு தலைநோக்க முந்நிலை யிலக்கணைச் செந்நிலைத் தொடர்.

முற்பாட்டுயர்பொருட் டலைமை யுடையதி னிலைமை, இடைப்பாட்டுடைய துரிமை யுடைமை நிலைமை, பிற்பாட்டுடைமை யுரிமையுடைய துடைமையாய இத் தொடரைச் சொற்றிறந் தோன்றத் தொடர்பின்மை செயின், தொண்டன்-மண்டலம்-சதகம் என்று செய்க.

இதனுள், தொண்டனென்பது வழக்கியற்பாடு, ஒற்றுமைச்செறிவு, வேற்றியற்கரணம், குறிப்புயர்நோக்கம், பொருள்விரியாக்கம் குற்றியல் வண்ணம், இடைப்பல் வயிற்றொகை முதலிய சொல்லியற் பாகுபாட்டி னமைந்த முதற்றொகைச் சிறப்புயர்திணைக் காரணப் பொருட்பெயர். மண்டலமென்பது வடசொன் னோக்கியற் காரணப் பண்புகோ ளிடப் பெயர். சதகமென்பது வடசொற் பாட்டியற் காரண எண்ணிலைக் குழூ உக்கோட்பெயர்.

இத்தொடர்க்கண் இயைபின்மையிற் பொருள் கொளின்:- தொண்டன் - ஆதொண்டன், மண்டலம் - வட்டம், சதகம் - நூற்றினாலாய கூட்டம் என்று கொள்க. இயைபுண்மையிற் பொருள் கொளின்:- தொண்டன் - ஆதொண்ட னென்னுமோர் அரையன், மண்டலம் - இருபதின்காத எல்லை வட்டமாய நாடு, சதகம் - நூறு செய்யுட்களாலாய கூட்டம் என்று கொள்க. பொருத்த இயைபிற் பொருள் முடிபு கொளின்:- ஆதொண்ட னென்னும் அரையனால் ஆளப்பட்ட இருபதின் காத எல்லை வட்டமாய நாட்டின் வண்மையைக் குறித்த நூறு செய்யுட் கூட்டத்தானாய ஓர்வகை யாப்பென்று கொள்க. இங்ஙனம் வழங்கல் சொற்சுருங்கியல், பொருளாழ்பியல், குறிக்கோளியல், தொகையின்பம், அளவிசைப்பாடு, பல்வயின் வழக்கு, ஒருங்கியலுடைமை முதலிய தோன்றக் காரணம் பற்றிய பெயர்க்கோள்களை வழங்குவிக்குங் கலைவல்லோர் கண்ணியநிலை யென்றுணர்க. இஃதின்னும் விரிக்கிற் பெருகும்.

இதனுள் தொண்டமண்டல மென்பத னியலை விளங்க வகுத்துணர்த்துக வெனின்:- ஆதொண்டந் தழைவயிற் கிடத்தப்பட்டதனால் ஆதொண்டன் எனக் காரணக்குறிப்பெய ரேற்று, இரவி மரபின் கண் ஓர் இறைமகனால் ஆளப்பட்ட எதிரிலாட்சி யுடைமையின் இம்மண்டலத்திற்குத் தொண்டமண்டலமெனப் பெயர் வழங்கிற்று.

இனி, ஆதொண்டந் தழையானும் மலரானும் இயற்றிய தொங்கலணிந்தமையின் ஆதொண்டனெனப் பெயர் வழங்கிற்று என்பாரும் உளராலோ எனின் அங்ஙனங் கூறினும் இங்ஙனம் வழங்கல் ஒத்த நிலையென்க.

அற்றேல், ஆதொண்டந் தழைவயிற் கிடத்தப் பட்டவனை ஆதொண்ட னென்று குறியீடு செய்தல் எங்ஙனமெனின்:- மேற் கலை வல்லோர் கண்ணியநிலை யென்றாம், அதனாலுணர்க வென்க. அன்றி, கடப்பந்தழைவயிற் கிடத்தப்பட்டவனைக் கடம்பனென்றும், வேப்பந் தழையானும் மலரானுந் தொடுத்த தொங்கலணிந்தோனை வேம்பனென்றும் இங்ஙனம் பலபட வழங்குங் காரணக் குறிப் பெயர்கள் பலஉள. அவற்றாற் றேர்ந்து தெளிக வென்க.

அற்றேல், ஆதொண்டன் மண்டலமெனல் வேண்டும்: தொண்டமண்டல மெனல் எங்ஙன மெனின்:- நிறுத்த மொழிக்கண்ணீற்றுச் சிறப்புயர்திணை ஆண்பாற் படர்க்கை விகுதியாய அன் னென்பதன் னகரமெய் குறித்துவரு கிளவியோடந் நிறுத்தமொழி பிளவு பட்டிரு சொன்னீர்மையிற் பொருந்தாப் புணர்ச்சியாய்ப் புணர்ச்சியின்பம் பெறாமை நோக்கி, அவை யொன்றுபட் டொருசொன்னீர்மையிற் பொருத்தப் புணர்ச்சியாய்ப் புணர்ச்சியின்பம் பெறற்பொருட்டு ஒத்த கிழத்திக்கும் கிழவோற்கும் புணர்ச்சியின்பந் தோன்றற் பொருட்டகன்று நிற்கு முயிர்ப்பாங்கிபோன்று அகன்று நிற்பவும், நிறுத்தமொழிக் கண் முதனிலை வேற்றுமை யொற்றுமை விரவுறுப்பாகாரம் பல்வயின் வழக்குத் தொகையின்ப முதலிய நோக்கித் தொகுக்கப்பட்டுந் தொகாவியலின் ஞாபக விடய வுருவி னருகிக் கண்ணுற்று நிற்பவும் தொண்ட மண்டல மென்று வழங்கிற்றென்க.

இஃது இருவயிற்றோற்றம், சிறப்பாட்சியுடைமை, பொருளடைச் சேர்பு, ஒற்றுமைச்செறிவு, ஒத்திசைப்பேறு, நுனித்துணர்புணர்வு, முதலிய நோக்கியலைப் பெற்றுத் தேயவழக்குச் சிறப்புடைச் சொற்றொடரிற் போந்த காரணக் குறிப்பெய ரென்க.

தொண்டமண்டல மெனிற் காரணக்குறி விளங்கப் புலப்படலின்றாலோ வெனின்:- மேற் சொற்சுருங்கியன் முதலிய குறித்து வழங்குவித்தல் கவிஞர் கண்ணிய நிலை யென்றால் ஆதலிற் கூர்ந்தறிக வென்க.

கூர்ந்தறிதற் றன்மையது செய்யுள் வழக்கே யன்றிப் பாடை வழக்குத் தேயவழக்கு முதலிய வன்றாலெனின்:- இத் தொண்ட மண்டலமென்பது செய்யுள் வழக்கு முதற் பல்வகைவழக்கிலும் பயின்று வரலானும் முற்காலத்ததன்றிப் பிற்காலத்துக் காரணக்குறியாக்கப் பெயராய் வழங்கலானும் புறப்பாட்டிற் பொருண்முடிபு வல்லுநரல்லார்க்கும் விளங்கப் புலப்படுதலானு மதனகப் பாட்டிற் செய்கை முடிபு முதலிய இயன்மாத்திரையே கூர்ந்தறிக வென்றாமென்க.

இஃது செய்யுண் முதலிய பல்வகை வழக்கினும் பயின்று வருதன் முதலிய இச்சதக யாப்பின்கண்ணும் காஞ்சிமான்மியத்தைக் குறித்த காப்பிய முதலியவற்றின் கண்ணும் பாடை வழக்குத் தேயவழக்கு நகர்வழக்கு முதலிய வழக்கியற்கண்ணும் பல்வகைப் பெயர்க்கு மிலக்கணம் புலப்படுத்தற் கருவியாய முந்துநூன் முதலிய நூன்முடிபின்கண்ணும் வழக்குணர்ச்சிக்கண்ணுங் காண்க வென்க.

அற்றேல் கூர்ந்தறிக என்ற அகப்பாட்டிற் செய்கை முடிபு முதலிய விளங்கப் புலப்படுத்துக வெனின்:- பயன்றரூஉந் தொழிலது புடை பெயர்ச்சிக்கண் உரிமைதோற்றி உரிமையுடைமைக்கு முதலாய முதற்பொரு ளெஞ்சிநிற்ப அம்முதலாய முதற்பொருட் டொழின் முடிபிடனேற்ற தன் றொழிற்பயனுறுதற் கிடனாய செய்பொரு ளாம்முதற்பொரு நோக்கிய லொருபுடை யொப்பத் தொழிற்பயன் றோற்றற் கிடனாயதாப் பொருள் வேற்றுரிமை யேற்றுத் தன்றொழின் முடிபின் முற்றிப் புடைபெயர்ச்சியி னுரிமை பெற்ற முதற் பொருண்மையி னொப்புமை பெற்றுந் தன் புடை பெயர்ச்சியி னுரிமை யேற்று வேற்றுரிமை முதற் பொருட் கரணத் தொழிற்பய னுறப்படூஉஞ் செய்பொருளைத் தன் கருமத் தொழிற் பயனுறப்படூஉஞ் செய்பொருளாப் புடை பெயர்ந் ததனுரிமை யேற்ற முதலாய முதற்பொருட்பாடு பெற்றும் வந்த விரி சொற் றெரிநிலை வினைமுற்றா னணைந்த பெயர்க்கோணிலை நோக்காய, ஆதொண்டந் தழையிற் கிடத்தப்பட்டவன், ஆதொண்டந் தழையானு மலரானு மியற்றப்பட்ட மாலையைத் தரித்தவன் என்பன தன் வினை முதற்றொழிற்பயன் றோற்றுமிடனுந் தன்றொழிற்பய னுறப்படூஉஞ் செய் பொருளு மிடனாக ஆதொண்டந் தழையன் ஆதொண்டைத் தழையன் என விரி சொற்குறிப்பு வினைமுற்றானணைந்த பெயர்க்கோணிலை நோக்காய்ப் பின்னர் இடப்பொரு ளவயவியுங் கருவிப்பொரு ளவயவியு மிடனாகப் பெற்று, ஆதொண்டை யென்பதனீற்றைகாரங்கெட் டஃதூர்ந்த மெய்ம்மேல் விகுதிஅன்னூர்ந்து ஆதொண்டன் எனக் குறுந்தடியுஞ் செம்பட்டு மாயவாறு போற் றொகைநிலை யேற்றுப் பெயரேயாய் நின்றது.

அல்லதூஉம் ஆசிரியர் தொல்காப்பியர் கூறிய

பனையு மரையு மாவிரைக் கிளவியு

நினையுங் காலை யம்மொடு சிவணு

மையெ னிறுதி யரைவரைந்து கெடுமே

மெய்யவ ணொழிய வென்மனார் புலவர்1

என்னுஞ் சூத்திரத்துள் 'நினையுங்காலை' யென்பதனாற் றழை யென்னுஞ் சொல்வந்துழி தொண்டை யென்னுஞ்சொல் இறுதி ஐகாரங் கெட்டஃதூர்ந்த மெய்ம்மேல் அம்முச்சாரியை யூர்ந்து நின்றதன்றே; அங்ஙனம் உயர்திணை ஆண்பாற் படர்க்கை விகுதியாய அன்னென்பதனை யேற்குமிடத் தத்தழையென்ப தெஞ்சி யத்தழையிற் கிடத்தப்பட்டவனென் றறிந்துகோடற் குறியாத் தழையாற் போந்த அம்முச்சாரியையின் மகரவொற்றுநீங்க நின்ற அகரத்தின் பின்னர் அவ்வுயர் திணை ஆண்பால் விகுதி அன்னென்பதி னகர நீங்க நின்ற னகரவொற்றடுத்து ஆதொண்டன் என்றாயது எனினு மமையும். இதனை, முன்னிலை இறுதிநிலை, இடைநிலை முதலிய பல்வகை யுறுப்புக்களிற் பல்வகை நோக்குடைப் பல்வகைப் பெயரும் செறிப்பிற் றிறப்பட நெறிப்படூஉம் வழக்கிற் பல்வகை விகாரத்தாற் செந்நிலைபெறூஉமென விதித்த வுணர்வுடையோ ருயர்நெறி வழக்கா லுய்த்துணர்க.

இங்ஙனம், ஆதொண்டனென்னும் பெயர் முதற்பொருண் முடிபு தன்முடிபிற் பெற்ற தன்றொழிற் பயனுறப்படூஉஞ் செய்பொருட்டன்மை யகப்பாட்டிலும், உடைப்பொருட் பிறிதி னுரிமையுடைமைத் தன்மை புறப்பாட்டினும், உயர் பொருளடைச் சிறப்பிடப் பெயர் அவ்விருவயினும் பொருந்தநின்ற மண்டல மென்பதனோடு மருவும்வழி, மேல் வகுத்த வண்ணந் தன்னீறும் முதலுந் தொகுத்தலைப் பெற்றதென்க. அல்லதூஉம், முதலெஞ்சிநின்ற இப்பெயர் மண்டலத்தோ டணைந்த வழி விகுதி அன் எஞ்சி அம்முச்சாரியை பெற்று வருமொழி நோக்கி மகரமொழியத் தொண்ட மண்டலமென் றாயதெனினு மமையும். இதனை ஆசிரியர் தொல்காப்பியர் கூறிய,

1. தொல்காப்பியம், எழுத்ததிகாரம், உயிர்மயங்கியல், 81

அப்பெயர் மெய்கெடுத் தன்கெடு வழியு

நிற்றலு முரித்தே யம்மென் சாரியை

மக்கண் முறைதொகூஉ மருங்கி னான2

என்னுஞ் சூத்திர நோக்கத்தாற் காண்கவென்க.

ஆதொண்ட னென்பது தென்சொன்னோக்கு மண்டல மென்பது வட சொன்னோக்கு தம்முட் செறிவா னொத்தவேனும் பாடையா னொவ்வாமை பெறலின் அங்ஙனம் பெறாமை நோக்கியும், முன்னிலையாய அந் நிலைக்கும் பின்னிலையாய இந்நிலைக்கும் இலச்சினை யாதல் நோக்கியும், விசேடண விசேடியச் செந்நிலை மரபு நோக்கியும் இங்ஙன முதலு மீறுந் தொகுத்தலைப் பெற்ற தெனினும்; முதனிலை வண்ணவொற்றுமை, இசை யொற்றுமை, உரு பொற்றுமை நோக்கியும், இறுதிநிலை சிறப்புநிலை இனவொற்றுமை நோக்கியுந் தொகுத்தலைப் பெற்றதெனினு மமையும். இஃதின்னுங் கூறிற் பெருகும், ஆகலின் ஆசிரியர் தொல்காப்பியர் கூறிய

உணரக் கூறிய புணரியன் மருங்கிற்

கண்டுசெயற் குரியவை கண்ணினர் கொளலே3

என்னுஞ் சூத்திரக் கருத்தா னமைக வென்க.

அன்றி, ஆதிநாராயணன் புரம் - நாரணபுரம், ஆபூதன் மங்கலம் - பூதமங்கலம், பெரும்பற்றினாற் புலிப்பாதன் பூசித்தவூர் - பெரும்பற்றினாற் புலி பூசித்தவூர் - பெரும்பற்றப்புலியூர் - புலியூர் முதலிய பெயர்க் கோள்களையும், புள்ளம் பூதன் குடி - பூதங்குடி, கொற்றன் குடி - கொற்றங்குடி, சாத்தன்குடி - சாத்தங்குடி, கொற்றன் மங்கலம் - கொற்ற மங்கலம், சாத்தன் மங்கலம் - சாத்தமங்கலம், வேடன் மங்கலம் - வேட்டமங்கலம், வேடன் குடி - வேட்டங்குடி, சாத்தன் மங்கை - சாத்தமங்கை, விஜயன் மங்கை - விஜயமங்கை, கண்ணன் மங்கை - கண்ணமங்கை, கண்ணன் புரம் - கண்ணபுரம், கண்ணன் குடி - கண்ணங்குடி, சீராமன் விண்ணகரம் - சீராமவிண்ணகரம், வரகுணன் மங்கை - வரகுணமங்கை, ஐயைபுரம் - ஐயபுரம் முதலிய பெயர்க்கோள்களையும்; நந்தன் மண்டலம் - நந்தமண்டலம், சேரன் மண்டலம் - சேரமண்டலம், சோழன் மண்டலம் - சோழமண்டலம் முதலிய பெயர்க்கோள்களையும் பற்றாகக் கொண்டமை வென்க. இதனைப் பிற்காலத்து மரூஉ வழக்கென்று கொள்வாரு முளராலோ வெனின், அங்ஙனம் கொள்வது மரபன்று; கொள்கினுங் கொள்க வென்க.

இத்தொண்ட மண்டல மென்பது பல்வகைப் புணர்ச்சிக்கும் பல்வகை வழக்கியற்கும் இயற்பா டின்னோசை முதலியவற்றிற்கும் ஒத்த நிலை யென்க.

2. தொல், எழுத்து, புள்ளிமயங்கியல், 55

3. தொல், எழுத்து, புள்ளிமயங்கியல், 110


இங்ஙனமன்றி, தொண்டைமண்டல மென்பாரு முளராலோ வெனின்:- அங்ஙன மாறுபடக் கூறுவோர் நுண்ணிய அறிஞர் கண்ணிய நிலையும், மாற்றம் பொருளுறூஉ மாற்ற னிலையும், பல்வகைப் புணர்ப்பிற் செல்வகை நிலையுங், கடிபு கோணெறியின் முடிபுறூஉ நிலையும், இழுக்கறூஉம் பல்வகை வழக்கிய னிலையும், ஒருவாற்றானும் ஓர்ந்துணர்கிலராய்ப் போலியியனிலை கோலுநரென்க. என்னை? இலக்கண நுட்பங் கூர்ந்துய்த் துணர்தற்றன்மையுளரேல் அங்ஙனங் கூறற் கியையாராகலின், அவர் சில வழூஉநெறி வழக்குபற்றிக் கூறுதன் மாத்திரைய ரன்றி விவகரிக்கக் கடவ ரல்லர்.

ஆயினும், அவர்க்கும், மற்றவர்க்கும் அவ்வழக்கு அழிவழக்கே யன்றி இழிவழக்குமாம் என்றுணர்ச்சி தோன்றற்கு யாமே அத்தலைக் கண் நின்று அவர்கூற்றாக விவகரித்து அதனை மறுக்கின்றோம்:-

அவர் கூற்றாக விவகரித்தல்:- தொண்டைத் தழையானும் மலரானும் இயற்றிய மாலையணிந்தவன் ஆண்ட மண்டலமாகலின், தொண்டைமண்டல மெனல் வேண்டும்.

அதனை மறுத்தல்:- தொண்டைமண்டல மெனின், கொவ்வைத் தூற்றையுடைய மண்டலமென்றும், ஒருவாறு ஆதொண்டைத் தூற்றையுடைய மண்டலமென்றும் தெளிவின்றிக் கருதப்படுவதன்றித் தொண்டைத் தழையானும் மலரானும் இயற்றிய மாலையணிந்தவனா லாளப் பட்ட மண்டலமென்று கருதப்படுவதன்று.

அல்லதூஉம் சேரன் மண்டலம் - சேரமண்டலம், சோழன் மண்டலம் - சோழமண்டலம் என்பனபோ லிம்மண்டலத்திற்கு, முன்னர் துண்டீரனா லாளப்பட்டமையின் துண்டீரன் மண்டலம் - துண்டீர மண்டலம், துண்டீரன் புரம் - துண்டீரபுரம் என்றும்; பின்னர் தண்டகனா லாளப்பட்டமையின் தண்டகன் நாடு - தண்டகனாடு, தண்டகன் புரம் - தண்டகபுரம் என்றும் பெயர் வழங்கின. அவைபோல், அதன் பின்னர் ஆதொண்டனா லாளப்பட்டமையின், ஆதொண்டன் மண்டலம் - ஆதொண்டமண்டலம், தொண்டன் மண்டலம் - தொண்டமண்டல மென்றே மரபு வழுவாமை வழங்கல் வேண்டும். இதற்குப் பிரமாணம்

முக்கணான் கணநா தர்க்கு முதன்மைத்துண்டீர னாண்டு

மிக்கதுண் டீரனாடாய்த் தண்டக வேந்தன் றாங்கித்

தக்கதண் டகனன் னாடாய்த் தபனன்மா குலத்துச் சோழன்

றொக்கதார்த் தொண்ட மான்காத் தாயது தொண்ட னாடே

இங்ஙனம் பல்காப்பியங்களினும் பலபிரபந்தங்களினும், பிரபல வித்துவான்களாக முன்னிருந்த ஔவையார் கம்பன் ஒட்டக்கூத்தன் முதலானோர்கள் பல்வகைக் காரணங் குறித்துச் செய்த பல்வகைச் செய்யுட்களினும், ஈண்டு முன்னும் பின்னும் வகுத்தமைக்குப் பிரமாணங்க ளிருக்கின்றன. அவைகளை விரிக்கிற் பெருகும். ஆகலின் அவற்றைத் தனித்தனி காண்டொறு மாங்காங் குணர்ந்தமைக.

அங்ஙனமன்றித் தொண்டைமண்டல மெனின், சான்றோர் வழித்தாய மரபு வழுவி மயங்குவதூ உமன்றிக் "காஞ்சி விருக்க முடைமையான் அந்நகருடை வளாகத்திற்குக் காஞ்சிமண்டமென்று வழங்கிற்று; அங்ஙனமே, தொண்டைத்தூறுடைமை பற்றித் தொண்டைமண்டலமென்று வழங்கிற்று. இஃதே துணிபு" என்று திரிபு தோற்றும். அன்றித் தொண்டைத்தழையானும் மலரானும் இயற்றப்பட்ட தொங்கலணிந்த வோரரையனா லாளப்பட்ட மண்டலம் அவ்வரையனுக் குரிமை தோன்ற நிற்றலின்றிப் பரம்பரையானன்றி யிடைப்பாட்டாற் பெற்ற அத் தொண்டையை வேற்றுரிமையாகப் பெறற்கு எவ்வாற்றானும் பொருத்தமின்று. இதனைக் கல்வியிற் சாதாரணத் தன்மையுடையோரும் "வாதராயண சம்பந்தத்தி னினம் போலும்!" என்று எள்குவர்; அன்றிக் "குமரியைக் கொண்டவனை விட்டுக் கூடவந்தவனோடு கூட்டியனுப்பியது போலும்! என்றசதியாடுவர்; என்னின், கற்றுவல்லோர் முகப்பின், இஃதென்னாம்? இதன்கண் உரிமைமலைவு, பொருண்மலைவு, மரபுமலைவு, வழக்குமலைவு, தகுதிமலைவு, உணர்ச்சிமலைவு, யூகமலைவு, நியாயமலைவு, கருத்துமலைவு முதலிய மலைவின் தொகையே புலப்படுகின்றன. ஆகலின், தொண்டைமண்டல மெனல் அமைவன்று; தொண்டமண்டல மெனல் வேண்டும்.

அவர் கூற்றாக விவகரித்தல்:- அஃதேல், அற்றன்று; பாண்டியன் மண்டலம் பாண்டிமண்டல மென்றாயது போலத் தொண்டையன் மண்டலம் என்பது விகுதி அன்கெட்டுத் தொண்டை மண்டலமென்றாயது; ஆகலின் தொண்டைமண்டல மெனல் வேண்டும்.

அதனை மறுத்தல்:- பாண்டியன் மண்டலம் பாண்டி மண்டலமென்றாயது மரூஉவழக்கு. இஃதங்ஙனமன்று. மரூஉவழக்காயினும் பாண்டியென்பது குடிப் பெயர்க்கோளாய் அவ்வரையனையும் ஒற்றுமையுரிமையால் அம்மண்டலத்தையு மன்றி வேறு குறித்தலின்றி நிற்றலின் அறிஞரா லமைத்துக் கொள்ளப்பட்டது. தொண்டை மண்டல மென்பதை மரூஉவழக்கி னமைத்துக் கொள்வோமெனின், இங்ஙனங் குறித்தலின்றிப் பல்வகையானும் வேறு குறித்து வழூஉநிலையைப் பெறுகின்றது. என்னை? தொண்டைத் தழையானு மலரானுந் தொடுத்த தொங்க லணிந்தோனைத் தொண்டையன் எனின், பிற்காலத்தின் மக்கள் வரலாறுணராமையின் "பெருந் தொண்டையனைத் தொண்டையனென்று வழங்கினர் கொல்? அன்றிப் புழைக்கை யுடைமையாற் றும்பி முகத்தவன் கொல்?" என்றையுறுதற்கும், தொண்டு ஐயனென்று பிரித்து ஏற்றபெற்றி கோடற்கும், ஒருவாற்றாற் கேள்வி யுடையோருங் "கொவ்வைத் தழையிற்புனைந்த மாலை யுடையன்கொல்? ஆதொண்டைத் தழையிற் கிடத்தப்பட்டவன் கொல்?" என்றையுற்று மயங்குதற்கும் இடனாய்ச் சொல்லி பொருள்வலி இன்னிசை வண்ண முதலிய சிதைவுற நின்று வழூஉநிலையைப் பெற்று மண்டலத்தோடணைந்து ஐயம் மயக்கம் கவர்கோண் முதலிய இழுக்கினையேற்று வழுவினும் வழுவாய் நிற்றலானும்; இங்ஙனம் வழங்கல் அறிஞர் வழக்கன்றாகலானும் இதனை வழூஉநிலை யென்றாம். இஃது "உடற்றூய்மை கருதி நீராட்டுவந்து சென்று ஆண்டு அளற்றின் அழுந்திய தொக்கு" மென்று எள்குதற்கிடனன்றிச் சிறிது மமைத்துக்கோடற் கிடனன்று. ஆகலின், தொண்டைமண்டலமெனல் அமைவன்று; தொண்டமண்டல மெனல் வேண்டும்.

அவர் கூற்றாக விவகரித்தல்:- அற்றேல், தொண்டையென்பது ஆகுபெயராய் நின்று அரையனை யுணர்த்தி யுரிமைதோற்றி மண்டலத்தொடு புணர்ந்து தொண்டைமண்டல மென் றாயிற்று; அதனால் தொண்டை மண்டல மெனல் வேண்டும்.

அதனை மறுத்தல்:- இடைப்பாட்டி னியதி யியைபின்றி வந்த கடம்பூர் என்பது கடம்ப விருக்கத்தையுடைய ஊரென்று தன்னளவே புலப்படுத்துமன்றி ஆகுபெயராய்க் கடப்பமாலையைத் தரித்தவனூரென்று பிறிதளவு புலப்படுத்துவதின்று. என்னை? ஆகுபெயர் ஒன்றன்பெயரா னதற்கியை பிறிதைத் தொன்முறை யுரைப்பதாகலின். அங்ஙனமே பரம்பரையானன்றி இடைப்பாட்டினியதி யியைபின்றிவந்த தொண்டைமண்டலத்தோடு புணர்ந்துழி தொண்டையையுடைய மண்டலமென்று தன்னளவுணர்த்து மன்றித் தொண்டையையுடையான் மண்டலமென்று பிறிதினள வுணர்த்தற் கோர்வகையானும் வலியின்று. இஃது "யூகமின்றி ஒன்றுகுறித் தொன்றுவரைய வொன்றுபட்ட' தென்னு முலக வழக்கி னினம்போலும்!" என் றெள்குதற் கிடனாம். ஆதலில் தொண்டைமண்டலமென லமைவன்று; தொண்டமண்டல மெனல் வேண்டும்.

அவர் கூற்றாக விவகரித்தல்:- அற்றேல், தொண்டை யுடையனாலாளப்பட்டது தொண்டையென்று ஈறுகெட்டு ஐ விகுதி யேற்றுச் சிறப்புப் பெயராய் மண்டலத் தொடு புணர்ந்து அங்ஙனமாயிற்று. ஆகலில் தொண்டைமண்டல மெனல் வேண்டும்.

அதனை மறுத்தல்:- ஐயீற்றின் ஐகாரவிகுதி போந்து கெட்டுப் புணரிற் குறியீடின்மையிற் சிறப்பன்று; இங்ஙனம் புணர்த்தல் இயற்பாடுமன்று; அறிஞர் மரபுமன்று. அங்ஙனமாயினும் தொண்டையை யுடையதென் றாகுமன்றித் தொண்டை யுடையனா லாளப்பட்டதென் றொருவாற்றானு மாவதன்று. அன்றிச் சோழமண்டல முதலியவற்றோடு முரணும். அங்ஙன மமைதியின்றிக் கூறினுஞ் சந்தியின்பத்தான் நாகை பட்டினம் நாகபட்டின மென்றாயதுபோல், தொண்டை மண்டலம் தொண்ட மண்டலமென் றாதலே வேண்டும். இதனை முன்னர் விலக்கியவற்றுட் காண்க. இஃது பலவகை யிழுக்கினுஞ் செல்வகைத்து. "இரும்பொற் பூண்டுரீஇச் சென்று கரும் பொற்றளைகை புகுத்தியதி னினம்!" என்றெள்குதற் கிடனாம். ஆகலில் தொண்டைமண்டல மெனல் அமைவன்று; தொண்டமண்டல மெனல் வேண்டும்.

அல்லதூஉம், இங்ஙனம் தொண்டை யென்பது பல்வகைப் பொருட்கிடனாய பெயர்த் திரிசொல். ஆதொண்டை யென்பது தன்னளவே யுணர்த்தும் பெயரியற் சொல். இங்ஙனம் திரிசொல்லாற் சிறப்புப் பெயர்க் காரணக் குறிசெய்தல் வழக்கறிந்தோர் மரபன்று. இயற்சொல்லாற் காரணக் குறிப்பெய ரமைத்தலே யவரது மரபு. இஃது ஆதொண்டச் சக்ரவர்த்தி யென்று வழங்கும் அறிஞர் வழக்காலறியப்படும்.

அவர் கூற்றாக விவகரித்தல்:- அற்றேல், ஆதொண்டையன் என்பது மண்டலத்தோடு புணர்ந்துழி முதலுமீறுங்கெட்டு அங்ஙனமாயிற்று; ஆகலின் தொண்டை மண்டல மெனல்வேண்டும்.

அதனை மறுத்தல்:- ஆதொண்டையன் எனின், தொகையின்பமும் இசையின்பமும் செறிவுகோளு மின்றிப் புல்லென்கையானும், சுருங்கியற் பேரின்பங் குறித்து முன்னும் பின்னும் தொகைசெய்தமைத்த சான்றோர் ஓரெழுத்தா னீட்டியற் பெயர்ப்பாற்படுத்தி முடிபுவழூஉச் செயற் கியையாராகலினும், இங்ஙனம் தொகுக்கப்படின் பொருளாட்சி முதலிய குன்றலின்றிச் செந்நெறியிற் பெரும்பயன்றரலானும், அங்ஙனமமைத்தல் வழுவேயாம். இஃது ஆதொண்டையன் சக்ரவர்த்தி ஆதொண்டயச் சக்ரவர்த்தி யென்னாது, ஆதொண்டன் சக்ரவர்த்தி ஆதொண்டச் சக்ரவர்த்தியென்று வழங்கும் அறிஞர் வழக்காலறியப்படும்.

அவர் கூற்றாக விவகரித்தல்:- ஆண்டு ஆதொண்டைச் சக்ரவர்த்தி யெனின் வழுவென்னெனின்.

அதனை மறுத்தல்:- அங்ஙனம் பெறின், அவ்வரையற்கு ஆதொண்டையாற் காரணக் குறிப்பெயரமைப்பான் கருதியவன்றே கருதியதாதல் வேண்டும். அங்ஙனமின்றிப் பின்னர் செங்கோன்மை ஆண்மை முதலிய வண்மையுடைமை பற்றி முகமனா வமைக்கப்பட்டது. ஆகலின், வழூஉ இங்ஙனமென்க. ஈண்டு ஆதொண்டன் சக்ரவர்த்தி ஆதொண்டச் சக்ரவர்த்தி யென்பது 'புடைப்புள கன்னிப் பொற்குலைக்கண்ணே இடைப்பிள வியையா விரட்டைப்பழம்போன்' றொரு பொருட் கிருவயி னெழுந் திடைப்பிளவறியாச் சிறப்பினப் பெயர். ஆதொண்டன் சோழன் ஆதொண்டச்சோழ னென்பதுமது. இதனை, தசரதன் சக்ரவர்த்தி - தசரதச்சக்ரவர்த்தி, நளன் சக்ரவர்த்தி - நளச்சக்ரவர்த்தி, புரூரன் சக்ரவர்த்தி - புரூரச்சக்ரவர்த்தி, சோழன் ராஜன் - சோழராஜன், சேரன் ராஜன் - சேரராஜன், பாண்டியன் ராஜன் - பாண்டியராஜன், சோழன் மஹாராஜன் - சோழமஹாராஜன், சைவன் சோழன் - சைவச்சோழன், குலோத்துங்கன் பாண்டியன் - குலோத்துங்கப் பாண்டியன், சோழன் மன்னன் - சோழமன்னன், சேரன் மன்னன் - சேரமன்னன் என வழங்கும் பல்வகை முடிபு வழக்குகளாற்றெளிந்தமையப்படும்; ஆகலின் ஆதொண்ட னெனல் வேண்டும்; ஆதொண்டையனெனல் இழுக்கு. இங்ஙனம் இழுக்காய ஆதொண்டையனென்பது முதலுமீறுங்கெட்டு மண்டலத்தொடு புணர்ந்து தொண்டைமண்டலமென் றாயிற் றெனினும், மேற்குறித்த பல்வகை வழூஉக்கட்கும் பேரிடனாகத் தக்கது. "'இடனறிந்து பிறாண்டாத் தினவுண்ணி எரிவிற் புழுங்கிற்று' என்பதற்கும், 'கருத்தறியாமற் கலப்பான் புகுந்து அருத்த மிழுக்குமா' லென்பதற்கு மினம்!" என்று எள்குதற் கிடனாம். ஆகலில் தொண்டைமண்டல மெனல் வழூஉ; தொண்டமண்டல மெனல் வேண்டும்.

அவர் கூற்றாக விவகரித்தல்:- தொண்டைக்கா டுடைமையால் தொண்டை மண்டல மெனல் வேண்டும்.

அதனை மறுத்தல்:- இங்ஙனம் தொண்ட மண்டல வரலாற்றை வகுக்குங் காப்பியத்திற் கண்டதேயன்று; இவ்வாறுண்டென்றறிஞரா னிதுகாறியாங் கேட்டதுமின்று; ஆகலின் வழுவாம். இஃது 'வழியறியாக் கன்று குழிவழியாச் சென்' றென்பதற்கினம். இங்ஙனம் வழியறியாது மொழியினும், பொய்கூறினும் பொருந்தக்கூறுக வென்னுமிழிந்தோர் வழக்கின்கண்ணு மேற்புடைத்தன்று. என்னையெனின் காஞ்சி தில்லை என்னு மரபுப்பெயர்கள் ஒற்றுமை யுரிமை குறித்து காஞ்சியைக் கண்டு தில்லையை யடைந்தானென்று வழங்கப்படுகின்றன. அங்ஙனம் தொண்டையைக் கண்டு என்று எவ்வகை வழக்கினும் வழங்கப்பட்ட தின்றாகலி னென்க. இதனாலுந் தொண்டமண்டல மெனல் வேண்டும்.

அவர் கூற்றாக விவகரித்தல்:- தொண்டைமான் என்னும் பெயருள் வேற்றோரரைய னிருந் ததிகரித்தமையின் தொண்டைமான் மண்டலமென்பது மான் கெட்டு அங்ஙனமாயிற்று; ஆகலில் தொண்டைமண்டல மெனல் வேண்டும்.

அதனை மறுத்தல்:- இங்ஙனம் புணரினும், மேற்குறித்த வழூஉ நிலைகட்கிடனாம்.

அன்றித் தொண்டைமா னென்பதே வழு. என்னை? தொண்டைமானென்பது தனிமொழி தொடர்மொழி என்பவற்றுள் எம்மொழி? விடை:- தனிமொழி, வினா:- தனிமொழியாயின் இதற்கு முதனிலை இறுதிநிலை இடைநிலை என்னை? விடை:- தொண்டை - முதனிலை, ஆன் - கடைநிலை, மகரம் - இடைநிலையாம்.

அதனை மறுத்தல்:- என்னின் முதனிலைக்கும் இறுதிநிலைக்கும் இடைப்பா டொத்து நிற்பது இங்ஙனம் வரூஉம் பெயர்கட்கு இடைநிலை. ஈண்டு முதனிலையீற்று ஐகாரக் குறுக்கம் விலங்கிப் பொறுத்திசைப்ப இடைப்பாடின்றி இறுதிநிலையோடு இணைந்து வேறு குறித்தலில் இடைநிலையி லமைவின்று. அன்னீறன்றி ஆனீறு ஆறிறந்தன்றி ஐந்திறந்தியையுந் தொடர்மொழிப் பெயர்க்கன்றி இங்ஙனம் உரித்தாவதன்று. நயப்பாடின்மையின் ஆகலின் இறுதிநிலையியலும் அமைவின்று. விகாரத்தால் வேறு குறித்தலின் முதனிலையியலும் அமைவின்று.

அல்லதூஉம், இஃதிடைநிலையாயின், கோமான் என்பதற்கும் அங்ஙனம் இடைநிலையாகல் வேண்டும். அங்ஙனமாயின், கோ-ம்-ஆன்:- இவற்றுள், கோ - அரையன் என்னின், ஆன்விகுதி அதிகரிப்பின்றி மூங்கைபோலும் யானையுண்டகனி போலும் பெயர்ச்சியும் பயனுமின்றி வற்றன்மரனி னின்றது. ஆகலின் இஃது இங்ஙனமன்று; ஆகலின் அஃது அங்ஙனமன்று. இஃது 'கைபடலறியான் பொய்பட லொன்றோ' என்பதற்கினம். ஈண்டு, தொடர்மொழியாய்க் கோன்மன் - கோமான் என நிலைமொழி யீறு கெட்டு வருமொழி முதனீண்டது. இதனை வழுதிமன் என்னுங் காப்பிய வழக்கானுங் கண்டுணர்க. அன்றி, கோன் மஹான் - கோமான் என நிலைமொழி யீறு கெட்டு வருமொழி வடமொழியாதலின் விகாரம் பெற்றுக் கோமான் என்றாயது. அன்றி, கோன்மான் என நிலைமொழி யீறுகெட்டுக் கோமா னென்றாயது. இங்ஙனமே தொண்டன்மன் - தொண்டன்மஹான் - தொண்டன்மான் என்பன தொண்டமானென் றாயது. மன் மஹான் மான் என்பவைக்குப் பெருமையுடையவ னென்பது பொருள். ஆகலின், தொண்டைமானெனல் வழு; தொண்டமா னெனல் வேண்டும். இங்ஙனமே சேரன்மான் - சேரமான், மலையன்மான் - மலையமான் முதலியவுங் காண்க. ஆகலின் மண்டலத்தோடு கூடிய வழி தொண்டமண்டல மெனல் வேண்டும். அன்றி, தொண்டனாடெனல் வேண்டும். தொண்டை நாடெனல் வழூஉ. என்னை? சேரன் நாடு - சேரனாடு, சோழன் நாடு - சோழனாடு, பாண்டியன் நாடு - பாண்டியனாடு, மலையன் நாடு - மலையனாடு என்பது போல், தொண்டன் நாடு - தொண்டனாடு எனல் மரபு. ஆகலின், தொண்டனாடு எனில் அடியனென்ன முதல் வேறு குறிக்குமே யெனின், அங்ஙனங் குறிப்பதில் ஆற்றலுமின்று பயனுமின்று. என்னை? ஆவென்பது கரண விடயமாக நின்று உரியானைக் குறிக்கின்ற தாகலின்; அன்றி, உடையானையன்றி உடைமைகுறித்தலின்றாகலி னென்க.

இங்ஙனம் பல்வகையாற் சொல்வகை செய்தலென்? தொண்டை மண்டல மெனின் மேற்குறித்த வண்ணம் உரிமைமலைவு, பொருண் மலைவு, மரபுமலைவு, வழக்குமலைவு, தகுதிமலைவு, உணர்ச்சிமலைவு, யூகமலைவு, நியாயமலைவு, கருத்துமலைவு, ஐயம், கவர்கோள், மயக்கம், வேற்றுக்குறிப்பு, வேற்றுரிமைநிலைமை, நியதியின்மை, இயைபின்மை, சொல்வலிச்சிதைவு, பொருள்வலிச்சிதைவு, பொய்க்கோள், அனர்த்தம், இன்னிசைவண்ணச்சிதைவு, பிளவுபாடு முதலிய பல்வகை வழுக்கட்கிடனாம்.

அன்றி, ஆதொண்டை என்பதன் ஈற்று ஐகாரக் குறுக்கம் குற்றலகே பெற்றது. தொண்டை என்பதன் ஈற்று ஐகாரக் குறுக்கம் குற்றலகோடு ஒற்றலகு பெற்றது. என்னை? ஆதொண்டை: ஆ - தொண் - டை: ஈரலகு - ஓரலகு - அரையலகு முதலிடைப்பாடு இருகலை - நடுவிடைப்பாடு காற்கலை - கடையிடைப்பாடு முக்காற்கலை ஆகலின், ஆதொண்டைஈற்று ஐகாரக்குறுக்கம் குற்றலகே பெற்றது. தொண்டை: தொண் - டை: ஓரலகு - அரையலகு - முன்னிடைப்பாடு காற்கலை - பின்னிடைப்பாடு அரைக்கலை ஆகலின், தொண்டை ஈற்று ஐகாரக்குறுக்கம் குற்றலகோடு ஒற்றலகும் பெற்றது. இங்ஙனம் தொண்டை மண்டலத்தோடு புணருங்கால், மண் - ட - ல - ம்; ஓரலகு - அரையலகு - ஓரலகு - அரையலகு - நான்கிடைப்பாடு: கால் - கால் - அரை - அரை பெற்று வேற்றிசை விரவி நிற்றலின், புணர்ச்சியிடை ஐங்கலையைப் பெற்றுப் பிரிந்து வேறு குறிக்கின்றது. ஆகலினும், தொண்டை மண்டலமெனல்வழு; தொண்ட மண்டல மெனல் வேண்டும்.

இங்ஙனம், பெயர்க்கோள்கட்கு இயற்சொற்பெயர் முதலிய, சொல்விரிப் பெயர் முதலிய, செஞ்சொற் பெயர் முதலிய, சாதிக் கூற்றுப் பெயர் முதலிய, ஒரு மொழிப் பெயர் முதலிய, உயர்திணைப் பெயர் முதலிய, பாற் பெயர் முதலிய, பொதுவியற்பொதுப் பெயர் முதலிய, தன்மைப்பெயர் முதலிய, வழக்குப்பெயர் முதலிய, வெளிப்படைப்பெயர் முதலிய, வரையியனடைப் பெயர் முதலிய, உயருரிமைப்பெயர் முதலிய, சிறப்புநிலைப்பெயர் முதலிய, சித்துப்பொருட்பெயர் முதலிய, இடுகுறிப் பெயர் முதலிய, மரபு நிலைப்பெயர் முதலிய, எழுத்துத் தொடர்ப்பெயர் முதலிய, பொருணிலைப்பகுபதப்பெயர் முதலிய, பெருஞ் சொல்லாட்சிப் பெயர் முதலிய, முதனூல்வாய்ப் பாட்டுப்பெயர் முதலிய - இவைமுதற் பெயர்ப்பாகுபாடுகளின் இலக்கணங்களும்; எழுத்துப் புணர்ச்சி, பதப்புணர்ச்சி, தொடர்புப்புணர்ச்சி, பொருட்புணர்ச்சி, வண்ணப்புணர்ச்சி, அளபுப்புணர்ச்சி, இயைபுப்புணர்ச்சி, சமநிலைப் புணர்ச்சி, கலவைப்புணர்ச்சி, தெரிநிலைப்புணர்ச்சி, குறிப்புப்புணர்ச்சி, வேற்றுமைப்புணர்ச்சி, ஒற்றுமைப்புணர்ச்சி, சிறப்புடைப்புணர்ச்சி, பொதுவுடைப்புணர்ச்சி, இருமைப்புணர்ச்சி முதலிய புணர்ச்சி இலக்கணங்களும் கூர்ந்துணரார்க்குத் தொண்டமண்டல மென்பதின் இலக்கணமும் புலப்படுவதன்று.

இங்ஙனம் உணரமாட்டாதார், ஆதொண்டச் சக்ரவர்த்தி என்பவர் தாம் அரசு செய்யுங் காலத்தில் தம்மாற் கட்டுவித்த ஆலயங்களில் தம் பெயரிலச்சினை சிலையின்கண் பொறிப்பித்தனர். ஆண்டும் ஆதொண்ட என்றே இலக்கண அமைதி பெற்றிருக்கின்றது. இதனை, திருவலிதாயம் திருமுல்லைவாயில் முதலிய சிவதலங்களிற் சென்றேனுங் கண்டு தெளியக் கடவர். இஃதின்னுங் கூறிற் பெருகும்.

தொண்டமண்டல மென்பதைத் தொண்டை மண்டலமென்று இச்சென்னை நகரிலிருக்கின்ற வித்துவான்களிற் சிலர் மாறாக வழங்க, அது குறித்துச் சில பிரபுக்களும் வித்துவான்களும் உபாத்தியாயார்களும் "இவ்விரண்டில் இலக்கணவமைதியும் உலகவழக்குமுள்ளது யாது? அதனை யொருவாறு தெரிவிக்கவேண்டும்" என்று கேட்டுக்கொண்ட படி, சிதம்பரம் இராமலிங்கபிள்ளை யவர்களாற் றெரிவிக்கப்பட்டது.

நூற்பெயர் இலக்கணம் முற்றிற்று

2. வழிபடு கடவுள் வணக்கப் பாட்டுரை

வழிபடு கடவுள் வணக்கம்

ஆசிரிய விருத்தம்

கொண்டலை நிகர்க்கும் வேளாண் குடியொடு தழீஇய தொண்ட

மண்டல சதகந் தன்னை வளமையான் வகுப்ப தற்குப்

புண்டர நுதலி ரண்டு புயமிசை யிருந்தி ரண்டு

குண்டல நிகரி ரண்டு குமரரை வணக்கஞ் செய்வாம்.

கொ...ம்: இச் செய்யுள் - வியனுறுமெதிரதூஉம், வீழாக்கொடையும், பயனுறூஉந்தொழிலும், பழியாப்பண்பும், வாய்மையும், அறிவும், மாஅண்பும், ஆண்மையும், தூய்மையும், பொறையும், தோஒற்றமும், அன்பும், உளங்கொள் இரக்கமும், ஒழுக்கமும் முதலா விளங்கு விழுக்குடி வேளாண்குடியே இத் தொண்டமண்டலத்திற் பெரும்பாலும் இறைகொளப்பட்டுத் தம் வளமையான் ஈண்டுறூஉம் மற்றைக் குடிகட்கும் இம்மண்டலத்திற்கும் வளமை தோற்றிற்று. அஃது நெறிப்பானுஞ் செறிப்பானுந் தோன்ற வழிபடு கடவுட் பராஅய்ப் புலப்படுத்துவ லென்று புகுந்தமை யுணர்த்துகின்ற தென்க.

எங்ஙனமெனில், "கொண்டலை நிகர்க்கும் வேளாண் குடியொடு தழீஇய தொண்டமண்டல சதகந்தன்னை வளமையான் வகுப்பதற்குக் குமரரை வணங்குவாம்" என்றது உய்த்துணர்க வென்க. இஃது வற்புறுத்தற்கு வேளாண்குடியை அளவை முகத்தான் வெளிப்படையின் விளங்கவைத்து மற்றைக்குடிகளை வேற்றுரு பொடுவிற் பராமுகத்தாற் குறிப்பின்கட் சார்த்தி வைத்ததே யமையுமென்க. விளங்கு விழுக்குடி வேளாண்குடி யென்றதனாலன்றே அங்கையிற்கனி போன்றிங்ஙனம் பெற்றாம்.

அஃதீண்டு எற்றாற் பெறுதுமெனின், கொண்டலை நிகர்க்கும் வேளாண்குடி என்றதனாற் பெறுது மென்க. எங்ஙன மெனின், கொண்டலை - பருவப்புயலை, நிகர்க்கும் - ஒக்கும், வேளாண்குடி - வேளாண்குடிப் பிறப்பினர் எனவே: வேளாண்குடிப் பிறப்பினர் கைம்மாறு கனவினுங் கருதலின்றி வரையாது வழங்கும் வள்ளற்றன்மையுடையாரென்றும்; எவ்வாற்றான் உயர்ந்தோர்கட்குந் தம்மையன்றி உலகியல் நடத்தப்படாச் சிறப்புடைக் கருவியாந் தன்மை யுடைய ரென்றும்; இங்ஙனம் வையகத்தார்க் கன்றி வானகத்தார்க்குங் குன்றா நன்றி குயிற்றுநரென்றும்; தம்மானே யன்றித் தங் கருவியானுங் கருமத்தானும் எவ்வெவ் வளாகத்து எவ்வெவ் வுயிர்கட்கும் இன்பந் தரூஉம் இயலினரென்றும், ஆன்ற கல்வி, ஊன்றுகேள்வி, சான்றவுணர்ச்சி, ஏன்ற ஒழுக்கம் முதலிய உயர்நெறிக் குன்றத் தும்பரிம்பர் பல்காற்பயிலுறும் பாங்கினரென்றும்; தொன்னெறி யரையர்க்குத் துணைவராகிப் பகைப் புல னடுங்கிய படர்ந்தெதிருறீ இவாய்விட்டார்த்து வாள்புடை பெயர்த்து விற்புடைத்தழீஇ இப்பொற்பொடு பெய்யு மாண்மைய ரென்றும்; தண்ணளி யுருக் கொடு தாங்கிச் செங்கோ னிலைபெறச் செய்யுந் தலைமைய ரென்றும்; எத்திறத்தவரும் எதிர்கொடு பராஅய்ப் பற்பலதிறப்படூஉம் பரிசிற்பழிச்ச உயரிடத் தோங்கிய பெயருளரென்றும், கடவுளாணையிற் கடவாச்செறிவும், யாவரு மதிக்கும் ஏஎருடைமையும், புலவராற் புனையும் புகழின் ஈட்டமும், களக்கறும் ஒண்மையும், விளக்குறு பசுமையும், பொய்யாமாற்றமும், போக்கறு தோற்றமும், இன்சுவை நிறைவும், எத்திற நலனும் உடையரென்றும் உவமைக் குறிப்பாற் பெறப்படுதலின் இங்ஙனமென்க. ஈண்டு வகுத்தவை கொண்டலின்கண்ணும் உய்த்துணர்ந்துகொள்க. இஃது வகுத்தன்றி விரிப்பிற் பெருகும்.

இனி, கொண்டலை நிகர்க்கும் வேளாண்குடி என்பதற்குக் கொண்டல் - கொண்டலை நடாத்தும், ஐ - தலைவனாகிய இந்திரனை, நிகர்க்கும் - ஒத்த, வேளாண்குடி - வேளாண்குடிப்பிறப்பினர் எனினுமமையும். இங்ஙனம் பெறுங்கால், வேளாண்குடிப் பிறப்பினர் தமது நல்லொழுக்கம் என்னும் ஆணையாற் கொண்டலை ஆங்காங்குப் பெய்வித்து நடத்தலும், ஐவகைத் திணையினும் உய்வகைத் திணையாய மருதத்திணையை வளம்படுத்துக் காத்தலும், வேளாண் வேள்விக்கு வேந்தராதலும், வீழாதுதரூஉம் வேளாண்மைக்குரிய கருவியை யுடையராதலும், யாவரானும் விரும்பப்படூஉம் இயற்கையராதலுங் கொள்க. ஈண்டு வகுத்தவை இந்திரன்மாட்டும் உய்த்துணர்க. இஃதும் விரிப்பிற் பெருகும்.

அன்றி, கொண்டல் என்பது இலக்கணையால் காவற் கடவுளாய விண்டுவாகக் கொண்டு அக்கடவுளை ஒத்த வேளாண்குடி யெனினும் அமையும். இங்ஙனங் கொள்ளுங்கால், வேளாண்குடிப் பிறப்பினர் நடுநின்று எவ்வெவ்வுயிர்க்கு நுகர்ச்சி வருவித்தலும், பகைப்புலன் முருக்கிப் பாதுகாத்தலும், திருவிற் பொலிந்த சிறப்புடைய ராதலும், இன்சுவை யமுதம் இரந்தோர்க் கீதலும், பூமகட்கு உரிமை பூண்டு நிற்றலும், சத்துவத் தனிக்குணத்தானே பயிறலும், ஊக்கமுஞ் செவ்வியும் உடையராதலுங் கொள்க. ஈண்டு வகுத்தவை விண்டுவின் மாட்டும் உய்த்துணர்க. இஃதும் விரிப்பிற் பெருகும்.

கொண்டலை நிகர்க்கும் வேளாண்குடியென விரியுவமையின்கண் உவமவுருபன்றி ஐயுருபும் விரித்தது இங்ஙனம் விரிப்பதற்குக் குறியுணர்த்த வென்க. உவமைக்கும் பொருட்கும் ஒரு நோக்கத்தானன்றிப் பலபட வகுத்த தெற்றாலெனின், உவமைப் பொருள் புகழ்பொருண் மிகை குறித்தழுக்கற்று முரணுதற் குறியா நிகர்க்குமென்னுந் தடுமாறு உவமவுருபு விரித்தமையின் என்க. என்னை? ஆசிரியர் தொல்காப்பியர் உவமவுருபுகளை வகுத்து முடிபுசெய்யுமிடத்து, "கடுப்பவேய்ப்ப"4 வென்னுஞ் சூத்திரத்தா னிகர்ப்ப வென்பது மெய்யுவமருபென்று வகுத்த வண்ணம் அவ்வுருபு ஈண்டஃதேலாது தொழில் பயன் முதலிய வேற்றதாகலின், அஃதேல் இஃதுயாண்டும் வரைதலின்றோ வெனின் "தடுமா றுருபுக டாம்வரை யின்றே"5 யென்பவாகலின் விரும்புமிடத் தின்றென்க. அன்றி இஃதழுக்கற்று முரணுதற் பெயர்ச்சிக்கட் போந்த வெச்சம் போறலின் அங்ஙனங் குறிக்க வைத்த தெனினு மமையுமென்க. இவ்வுவமை நோக்கைச் "சுட்டிக்கூறா"6 வென்னுஞ் சூத்திர நோக்கத்தானுங் காண்க. உவமையும் பொருளு மொத்தல் வேண்டுமென்றவாறு ஒத்த வண்ணம் உய்த்துணர்க. அன்றி உவமப்போலி மறுக்கப்படா வாகலின் ஈண்டு அவற்றுள்ளும் ஏற்பன விருப்பினும் இழுக்கின் றென்க. இஃதின்னும் விரிக்கிற் பெருகும்.

4. கடுப்ப வேய்ப்ப மருள புரைய

வொட்ட வொடுங்க வோட நிகர்ப்பவென்

றப்பா லெட்டே மெய்ப்பா லுவமம். -தொல், பொருள், உவமஇயல், 15

5. தடுமா றுவமங் கடிவரை யின்றே -தொல், பொருள், உவமஇயல், 35

6. சுட்டிக் கூறா வுவம மாயிற்

பொருளெதிர் புணர்த்துப் புணர்ந்தன கொளலே.

-தொல், பொருள், உவமஇயல், 7

கொண்ட லென்பது விரவு மிகையொலிக் காப்பிய வழக்குத் தொடரியற் பால்பகாவஃறிணைப் பல்பொருள்குறித்த வொரு பெயர்த்திரிசொல். ஈண்டுச் சிறப்புய ருரிமைக்கருவி அவயவப் பொதுநிலைப் பூதப்பொருட்டாகிய மேகத்தை யுணர்த்திற்று.

வேளாண்குடி யென்பது உயர்நிலைக் காப்பிய வழக்குச் சொன்னடைச் சிறப்பு முன்னிலைக் காரணம் பின்னிலை யிடுகுறிச் சாதிக்கூற்றுத் தொடர்நிலை கருத்துப் பொருட்புறத் துயர்திணைக் காட்சிப் பொருட் பன்மைத் தோற்றத் தன் மொழித் தொகைச் சொற்றொடர். இதனை வேளாண்மைக்குரிய குடிப்பிறப்பின ரென்று விரித்துக்கொள்க. வேளாண்மை நன்றி ஈகை வேளாண்டொழின்மை முதலிய பல்பொருள் குறித்த வொருசொல். அஃது வேளாண் டொழி லுடைமையா னன்றி ஈகை முதலிய நற்செய்கை யுடைமைக்கு முரியவோர் குடிப்பண்பாயிற்று. குடி யென்பது குலம் ஊர் முதலிய குறித்தவோர்சொல் அஃதீண்டு குலத்தின் மேனின்றது. அன்றி மருதத்திணையூ ரென்பது மொன்று. வேளாண்டொழில் என்பதில் வேள் என்பது நன்னிலம், ஆண் என்பது உரிமைத்தலைமை. தொழில் என்பது முயன்று முடித்தல். இதனால் நன்னிலந் திருத்திச் செந்நெறி பொங்கப் பைங்கூழ் விளைக்குமுரிமைத் தலைமைத் தொழில் என்பது பெறப்பட்டது. அல்லதூஉம் வேள் என்பது விரும்பப்படுகை, ஆண்டொழில் - ஆண்மைத் தொழில். இதனால் அரையரால் விரும்பப்படூஉம் மந்திரித்தலைமை சேனைத் தலைமை யென்னும் ஆண்மைத் தொழிலுடையோ ரென்பதூஉம் அமையுமென்க. இதனையுடைய குடிப்பிறப்பினர் வேளாண்குடிப் பிறப்பினர் வேளாளரென்க. இவ்வேளாண்குடிப்பிறப்பினர் ஈகை முதலிய நற்செய்கைகளின் மிக்கா ரென்பதற்கு வேறு கூறவேண்டுவதின்று. இவர் குடிப்பெயரே தக்க சான்றென்க. அன்றி அந்தணர் அரையர் வணிகர் முதலியோர் தத்தமக்குரிய ஒழுக்கங்களை நடத்தற்கு வேளாண்குடிப் பிறப்பினரது உதவி முற்றும் வேண்டுதலின், இவர் நெறி பெருநெறி யென்பதற்கு மஃதே சான்றென்க. இதனைத் தொல்காப்பியத்தில் "நாற்றமு"7 மென்னுஞ் சூத்திரத்துள் "வேளாண் பெருநெறி" யென்றதனாற் காண்க. அன்றி யிவர்க் கித்தொழிலுரிமைச் சிறப்பென்பதூஉம் இவரது மேம்பாட்டுத் தன்மையையு மரபியலிற்8 காண்க. இதனை விரிக்கிற் பெருகும்.

7. தொல், பொருள், களவியல் 23

8. தொல், பொருள், மரபியல் 80; 81

வேளாண் மாந்தர்க் குழுதூணல்லது

இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி.

வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும்

வாய்ந்தன ரென்ப அவர்பெறும் பொருளே.

வழிபடு கடவுள் வணக்கப்பாட்டுரை முற்றிற்று.


VallalarOrg Sanmarga Foundation - All the contents and mp3 songs on this website are copyrighted and belongs to respective owners. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the audio or documents without our permission is prohibited.
First Launched on Apr-16-1998. Last updated:Aug.04.2013