குறட்பா:
மூன்றி லொருமூன்று மூவிரண்டு முந்நான்குந்
தோன்றத் தொலையுந் துயர்.
உரை:
(1. பௌராணிக மத சித்தாந்தம்)
மூன்றில் - பறவையில், கருடனில்.
ஒரு மூன்று - திரிமூர்த்தி சொரூபராகிய எம்பெருமான், விண்டு.
மூவிரண்டு - 6: ஷட்குணம், ஷாட்குண்ணிய பரிபூரணராய் - கன்னி, திருமகளென்னும்
பிராட்டியாரோடு.
முந்நான்கு - 12, துவாதச அடியார்களாகிய ஆழ்வாராதிகள் சூழ.
(முன்னான்கு) - 5, ஸ்ரீமத் பஞ்சாயுதபாணியாக.
தோன்ற - சேவை சாதிக்க.
தொலையுந் துயர் - துன்பம் நீங்கும்.
இதன் கருத்து - பறவை யென்னும் கருடாழ்வான் மீது, திரிமூர்த்தி திருமகளென்னும்
பிராட்டியாரோடு, துவாதச அடியார்களாகிய ஆழ்வாராதிகள் சூழ ஸ்ரீமத்
பஞ்சாயுதபாணியாக, எழுந்தருளி கல்யாண குணத்துடன் சேவை சாதிக்க, நமது
துன்பங்கள் தொலையும்.
அன்றி
(2. அத்துவைதம்)
மூன்றில் - காரணம் சூக்குமம் தூலம் என்கின்ற மூன்று தேகத்தினுள் காரண தேகத்தில்.
ஒரு மூன்று - மேற்படி தேகத்திற்குரிய மூன்று தத்துவங்களின் சொரூப ரூப சுபாவங்களும்.
மூவிரண்டு - சூக்கும தேகத்திற்குரிய ஆறு தத்துவங்களின் சொரூப ரூப சுபாவங்களும்.
முந்நான்கு - ஸ்தூலதேகத்திற்குரிய பன்னிரண்டு தத்துவங்களின் சொரூப ரூப சுபாவங்களும்.
தோன்ற - ஐயந் திரிபு மயக்க மின்றித் தோன்ற - அத்தருணத்தே.
துயர் - பிறவித் துன்பம்.
தொலையும் - நீங்கும்.
அன்றி
(3. சிவாத்துவைதம்)
ஒருமூன்று மூவிரண்டு முந்நான்கு - 3, 6, 12: இருபத்தொன்றினை.
மூன்றில் - மூன்றில் கொடுக்க வந்த தொகையாகிய 7, காலம் நியதி, கலை, புருடன், மாயை,
ராகம், வித்தை யென்னும் ஏழு தத்துவங்களின் சொரூப ரூப சுபாவங்களும்.
தோன்ற - சந்தேகம் விபரீதம் அஞ்ஞானம் அறத்தோன்ற.
தொலையுந் துயர் - துயர் தொலையும்.
அன்றி
(4. வசிஷ்டாத்துவைதம்)
மூன்றில் - சித்து அசித்து சிதசித்து என்கின்ற தத்துவத் திரயங்களில்.
ஒரு மூன்று - சித்தினிடத்து இச்சை அறிவு தொழில் என்கின்ற மூன்று குணங்களும்.
மூவிரண்டு - அசித்தினிடத்து மயக்கமின்மை, திரிபின்மை, ஐயமின்மை, விசித்திரமின்மை,
அசுத்தமின்மை, விகாரமின்மை என்கின்ற ஆறு குணங்களும்.
முந்நான்கு - சிதசித்தினிடத்து அறிவு, கருணை, அன்பு, வாய்மை, நிராசை, தூய்மை, நிறைவு,
ஒழுக்கம், பொறை, செப்பம், சால்பு, மறதியின்மை என்கின்ற பன்னிரண்டு
குணங்களும்.
(ஆகக்கூடி சித்து அசித்து சிதசித்து என்னும் மூன்றின் குணங்களாகிய
இருபத்தொன்றின் சொரூப ரூப சுபாவங்கள் ஐந்திரிபு மயக்க மின்றி)
தோன்ற - விளங்க.
துயர் தொலையும் - துன்பமாகிய சகல கேவலங்கள் நீங்கும். சுத்த னாவோம்.