3. மற்றைய அன்பர்களுக்கு வரைந்த திருமுகங்கள்
திருமுகம் 1
சிவஞான விருப்பினர்
2 - 8 - 1866
உ
சுபம் உண்டாக. சுபம்
அன்பு அறிவு ஒழுக்கம் கருணை முதலிய நன்மைகளாற் சிறந்து சிவத்தைப் பொருளென் றுணர்ந்து சன்மார்க்கத்தில் விளங்குகின்ற தங்கட்கு வந்தனம் வந்தனம்.
தங்கள் சுபசரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க விருப்பமுடையவனாக விருக்கிறேன்.
அன்புள்ள ஐயா - சுமார் இருபத்தைந்து தினத்திற்கு முன் இவ்விடத்திலிருந்து சிவஞான விருப்பினராகிய ராமலிங்க மூர்த்திகளும் சண்முகப் பிள்ளை என்பவரும் தங்களிடம் போய் வருவதாகக் குறித்து வந்தார்கள். அவர்கள் அவ்விடம் வந்திருப்பதும் வேறிடம் போயிருப்பதுந் தெரியவில்லை. தங்களிடத்தில் அவர்கள் இருந்தால், தற்காலம் அவ்விடத்தில் மழை யில்லாமையால் மிகவும் நிற்பந்தமாக விருப்பதாய் கேள்விப்படுகிறேன். ஆதலால், தாங்கள் அவர்களை இவ்விடம் வரும்படி செய்யவேண்டும். அவர்கள் தங்களிடத்தில் இல்லாமல் வேறிடத்தி லிருந்தால், அவ்விடம் இவ்விடமென்று எனக்குத் தெரிவிக்கவேண்டும். தாங்களும் சிவத்தியான சகிதர்களாய் தேக விஷயத்திலு மற்றைக் குடும்ப விஷயத்திலும் சர்வ சாக்கிரதையோடு இருக்க வேண்டும். நற்குணத்திலும் சிவபத்தியிலும் சிறந்த தங்கள் தம்பியார்க்கும் தங்கள் புத்திர சிகாமணிக்கும் என் க்ஷேமம் குறிக்க வேண்டும். நான் தற்காலம் கூடலூரி லிருக்கின்றேன். வந்தனம். நமது ராமலிங்க மூர்த்திகளுக்கும் வந்தனம்.
அக்ஷய வருடம் ஆடி மாதம் இங்ஙனம்
19ஆம் நாள் சிதம்பரம்
இராமலிங்கம்
பதில் உத்தரம் தபால் மார்க்கமாகத் தெரிவிக்க வேண்டும்.
இஃது
திருநறுங்குன்றம் மஹாராஜராஜஸ்ரீ நயினார் ராமசாமி
நயினாரவர்கள் திவ்விய சமுகத்திற்கு
* * *
திருமுகம் 2
ஆறாதாரத்தில் அனாகதம்
சத்குரவே நம:
கல்வி கேள்விகளிற் சிறந்து அருளறி வொழுக்கங்களி னியைந்து விளங்குகின்ற தங்கட்கு அனந்த முறை வந்தனம் வந்தனம். தங்கள் சுப சரித்திர விபவங்களை அடிக்கடி கேட்க விருப்ப முள்ளவனாக விருக்கிறேன். தாங்கள் கொத்தன் வசம் அனுப்புவித்த கடிதமும் நாகவல்லியும் சம்பீர பலங்களும் வரப்பெற்றோம். இவ்விடம் கடிதம் அனுப்புந் தோறும் இந்தப் பிரகாரம் அனுப்புவது பிரயாசம் என்று என் மனம் என்னை வருத்துகின்றது. இது நிற்க. இனி தங்கள் கடிதத்துக்கு உத்தரம் எழுதுகிறேன்.
அதாவது தங்கள் தமயனார் விஷயத்தில் தாங்கள் எத்தன்மையுடையவர்களாக இருக்கின்றீர்களோ அத்தன்மை நானும் உடையவனாக விருக்கின்றேன்.
சீரகத்தைக் கியாழஞ் செய்து, அந்த கியாழத்தில் சுக்கை யூறவைத்து, சாமம் சென்ற பின்பு எடுத்து உலர்த்தித் தூள்செய்து வைத்துக்கொண்டு, அந்தத் தூள் காசிடை, அதில், பஸ்பம் அரிசியிடைவைத்து, நெய்யில் குழைத்துச் சாப்பிடவேண்டும். பத்தியம் இச்சா பத்தியம், தலைமுழுக்கு பசு நெய்யில் முழுகவேண்டும். ஆறாதாரத்தில் அனாகதத்தில் சத்தி சிவம் பத்திதழில் இருப்பதாகவே கொள்ளவேண்டும். இரண்டிதழ் ஆசனமாகக் கொள்ளவேண்டும். அன்றியும், பன்னிரண் டிதழில் எட்டிதழ் சத்தியிருப்பு, இரண்டிதழ் சிவத்தின் இருப்பு, மற்றை யிரண்டிதழ் மேலுங் கீழும் அடையிருப்பு. இது இன்னுஞ் சிலநாள் சென்ற பின்பு தங்களுக்கு நன்றாக அனுபவப்படும். கூடலூர்க்கு மனிதனை அனுப்ப அந்த வேஷக்காரன் எவ்விடத்துக்கோ போயிருக்கிறதாக இன்னும் பத்துதினஞ் சென்ற பின்பு வருவா னென்று அவன் பெண்சாதி சொன்னதாகச் சமாச்சாரங் கொண்டு வந்தான். இனி இன்னும் சுமார் ஒரு மாதஞ் சென்ற பின்பு தங்கள் கருத்தின்படி தெரிவிக்கின்றேன். மன்னிக்கவேண்டும். தாங்கள் தங்கள் தேகத்தை பொன்போல சர்வ சாக்கிரதையோடு பாராட்டிக் கொண்டு வரவேண்டும். வந்தனம் மன்னிக்க. வந்தனம்.
ஆவணி மாதம் இங்ஙனம்
எட்டாம் நாள் தங்களிஷ்டன்
சிதம்பரம் இராமலிங்கம்
இஃது க்ஷேமம்
மஹாராஜராஜஸ்ரீ பிள்ளை பொன்னுசாமிப் பிள்ளை
யவர்கள் திவ்விய சமுகத்திற்கு. க்ஷேமம்.
* * *
திருமுகம் 3
சிவ புண்ணியத் திருவிழா
3 - 6 - 1868
உ
சிவமயம்
சத்தியக் கியானானந்த சொரூப சாக்ஷாத்கார சுத்த சிவகுல சிவாசார சிவானுபவ சிவப் பிராமணோத்தம சிவத்துவ போதக சிகாமணிகளாகிய சுவாமி யவர்கள் பரம கருணாம்பர பத்ம பாத யுகள சந்நிதிக்கு அடிமை பக்தி பூர்வகமாக அனந்த முறை தண்டனிட்டுச் செய்து கொள்ளும் விண்ணப்பம்: சுவாமிகள் கடாக்ஷித்தருளிய நிருபத்தைப் பூசித்து வாசித் தறிந்தேன். அந்த நிருபத்திற் குறித்தபடி சிவபுண்ணியத் திருவிழாவைத் தரிசிக்கும்படி பிரயாண சித்தனாயிருந்தேன். இத் தருணத்தில் இந்த பார்வதிபுரத்தில் பிராமணர் இருவர்களுக்கு இராஜாங்க விவகார வழியில் ஒரு பெரிய ஆபத்து நேரிட்டு அவர்களைப் பிடித்துக்கொண்டு போயிருக்கின்றார்கள். அவர்கள் இத்தருணத்தில் சிறிது சகாய் செய்தால் உயிர் வாழ்வோம் இல்லாவிடில் உயிரிழந்து விடுவோ மென்று பரதபித்து எழுதிய கடிதம் வந்து சேர்ந்தபின் நான் அவ்விடம் வரும் பிரயாணம் ஆலசியப்பட்டது. இங்கு கூடியவரையில் அவர்கள் விஷயத்தில் சகாய் செய்ய வேண்டுவது கருணைக்கு இலக்ஷிய மாகலில், என் மனது இவ்விடம் வருவதற்கும் அவ்விடம் போவதற்கும் துணிவு தோற்றாமல் ஊசலாடுகின்றது. இது சிறிது துணிவு பெற்றபின் நான் வருகின்றேன். தற்காலம் அடிமை வந்திருப்பதாகவே சாமிகள் திருவுளங்கொண்டு மேற்குறித்த சிவபுண்ணியத் திருவிழாவை சிறப்பாக நடத்துவிக்க வேண்டுமென்றும் சுவாமிகள் திருவடிகளைச் சிந்தித்துப் பிரார்த்திக்கின்றேன். மற்றவைகளை நான் சந்நிதியில் வந்து விண்ணப்பஞ் செய்துகொள்ளுகிறேன். அடிமையின்மேல் கருணாநிதியாகிய சாமிகள் திருவுள்ளம் வேறுபடா தென்கிற துணிவுபற்றி இங்ஙனம் விண்ணப்பம் செய்துகொண்டேன். சாஷ்டாங்க தெண்டன்.
விபவ வருடம் இங்ஙனம்
வைகாசி மாதம் சிதம்பரம்
23ஆம் நாள் இராமலிங்கம்
இஃது
சிதம்பரம் துக்குடி ஆடூரில் சத்குணாகர தயாம்பர
சாமிகள் சபாபதி சிவாசாரிய சாமியவர்கள் சுபகுண
நடன விபவ சந்நிதிக்குப் பார்வதிபுரத்தி லிருந்து
வருவது.
* * *
திருமுகம் 4
இலக்கண நுண்மாண்இயல்
உ
உணர்ந்தோரா னியல்வகைய வின்ன வென்றவற்றிற் பின்மொழி மதிக்கு முன்மொழி மறைக்கு முதலீறு விளங்க முடிப்பதாய பின்மொழி யடைசார் முன்மொழி ஞாங்கர் விளங்கிய ஞானிகட்கு.
பொய்யற் கெதிர்சார்புற்ற மூலீயொன்று வளைத்து வணக்கஞ் செய்த ககந நீரெழி லென்றும் வான் வழங்கு பண்ணிகார மென்றும் நாகச்சுட்டு மீ னென்றும் வேறு குறிப்ப தொன்று.
அண்மைச் சுட்டடுத்த வேழாவதன் பொருண்மை யும்மையடுத்த பல்லோர் வினாப் பெயர்ப் பொருள் குறிஞ்சி யிறைச்சிப் பொருளொன்றனோடு புணர்ப சேய்மைச் சுட்டடுத்த வத்திறத்தியல் யாது.
இரண்டனுருபொடு புணர்ந்த தன்மைப் பன்மையாறாவதன் பொருட் டாக்கினார்க் குய்த்த கற்பிய லதிகரிப்பின் வருந் தலைமகட் பெயர விரண்டினோ டிரண் டிரண் டூகக் கழிவிலைப் பெயரவு மகார வீற்று முதனிலைத் தனிவினைச் செயவென் வாய்ப்பாட்டு வினையெச்சத்தனவாகக் கலம்பகச் செய்யுளுறுப்பாற் சிறத்தும்.
இருவகை முதற்பொரு ளொன்றன் பாகுபாட் டுறுப்பிற் குறித்த வைம் பெரும் பூதத்தோர் விசேடணத் தெதிர்மறை நடுக்குறை யியற்சொற் பெயர வுயிர்ப் பெயராக வெதிர்காலங் குறித்து நின்றது சிலவினைச் சார்பான் விலங்கு சூடிய வரைவில் வெளியாம்.
இதனோ டீரிரு வகைப்பட்ட வோர் சார் புது நிலஞ் செல வுய்த்தனம் வேண்டுழி வேண்டியாங் குய்க்க மற்றைய பின்னர் வரைதும்.
இற்றே விசும்பிற் கணைச்சலம்
இங்ஙனம்
நங்கோச்சோழன் வீரமணி
சூடியார் திருவாணைப்படிக்கு
* * *
திருமுகம் 5
திருவருள் வல்லபம்
உ
சுவாமிகளுக்கு வந்தனம்
தங்கட்குத் தற்காலம் நேரிட்டிருக்கிற ஆபத்தைக் குறித்து அஞ்ச வேண்டாம். அஞ்சவேண்டாம். இந்த ஆபத்தால் தேக ஆனி நேரிடாது. கால பேதத்தால் நேரிடினும் நான் தங்களை எவ்விதத்தாலாயினும் திருவருள் வல்லபத்தைக் கொண்டு திரும்பவும் பார்ப்பேன், பேசிக் களிப்பேன். இது சத்தியம். இது சத்தியம். இந்த வார்த்தை யென்வார்த்தை யன்று. திருச்சிற்றம்பல முடையார் செல்வப்பிள்ளை வார்த்தை. தேகத்திற்கு ஆனி வருவதாகக் கண்டாலும் அஞ்சவேண்டாம். வந்தால் வரட்டும். திரும்பவும் உடனே மிகுந்த விரைவில் என்னைப் பார்த்துப் பேசிக் களிப்பீர்கள். திருவருளாணை யிது. சற்றுங் கலங்கவேண்டாம். திருச்சிற்றம்பலம்.
மற்றைய அன்பர்களுக்கு எழுதிய திருமுகங்கள் முற்றுப்பெற்றன
* * *