3. சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம்
 
3. சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம்

திருச்சிற்றம்பலம்

இயற்கை விளக்கம் என்கின்ற சத்திய ஞானசபைக் கண்ணே, இயற்கை உண்மை என்கின்ற சத்தியத் திருவுருவினராய், இயற்கை உண்மை என்கின்ற சத்தியத் திருவுருவினராய், இயற்கை இன்பம் என்கின்ற சத்தியத் திருநடஞ் செய்தருள்கின்ற இயற்கைத் தனிப்பெருங்கருணைத் தனிப்பெரும்பதியாய தனித் தலைமைக் கடவுளே!

தேவரீர் திருவருட் சமூகத்தை அடைந்த உண்மை ஞானிகளின் சித்தி வல்லப தரத்தை வகுத்தறிந்து வாழ்த்துதும் என்று அளவிகந்த முகங்களை கொண்டு அளவு கடந்த நெடுங்காலம் தத்தம் அளவைகளால் தனித்தனி அளந்தளந்தும் ஒருமித்து அளந்தளந்தும் ஒருவாற்றினும் முடிவு தோற்றாமையின் வேதாகமங்கள் அனைத்தும் ஆங்காங்கு கோடித்து அதிசயிக்கின்றன என்றும், அண்ட சராசரங்கள் எல்லாவற்றையும் படைத்தல் காத்தல் துரிசு நீக்கல் முதலிய தொழில்களால் நிகழ்த்துகின்ற அதிகாரத் தலைவர்களும் எவ்வகைத் தத்துவங்களையும் காரண காரிய திறத்தால் நடத்துகின்ற சத்தி சத்தர்களும் உணர்ந்துணர்ந்தும் உணர்ச்சி செல்லாமையின் முயற்சி பற்றாது மயங்குகின்றன ரென்றும், பேரறிவாற் சிறந்த பெரியர்களெல்லாம் வியந்து வியந்து விளம்புகின்றனர். அதனால் திருவருட் சமூகத்தை யடைந்த உண்மை ஞானிகளின் சித்தி வல்லப தரத்தை ஒருவராலும் ஒருவாற்றானும் உணர்ந்து கொள்ளுதல் கூடா வென்று ஐயுறவின்றி அறிந்து கொண்டேன். இங்ஙனம் அறிந்துகொண்ட சிறியேன் அவ்வுண்மை ஞானிகளுக்கு சித்தி வல்லப தரத்தைக் கொடுத்தருளிய திருவருட் சமூகத்தின் இயற்கை உண்மை விளக்கத் தரத்தை எங்ஙனம் அறியத் தொடங்குவேன்!

மலத்திற் புழுத்த புழுவினுஞ் சிறியேன் பொய்யறிவாற் புனைந்து உரைத்த பொய்யுரைகளையும் மெய்யுரைகளாகத் கருணையினாற் கடைக்கணித்தருளிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே! தேவரீரது திருவருட் சமூகத்தின் இயற்கைப் பெருங் கருணைப் பெருந்தன்மையைக் கருதுதற்கு விரும்பிய ஐந்தொழிற் கருத்தர் முதலியோர் தூய்மையுடைமை அன்புடைமை முதலிய சுபகுணங்களைக் கருதுதற் கருவியாய தமது கரணங்கள் முற்றப் பெற்றிலவென்று கருதுதலின்றி எண்ணி எண்ணி இரங்குகின்றனர் என்று அறிவுடையோர் வியந்துரைத்தலைப் பலகாற் பயின்று கேட்டறிந்தேன்.

இங்ஙனம் கேட்டறிந்த சிறியரிற் சிறியேன் அத்திருவருட் சமூகத்தின் இயற்கைப் பெருங்கருணைப் பெருந்தன்மையைக் காமம் வெகுளி முதலிய அவகுணங்கட்கெல்லாம் வைப்பிடமாகி பராய் முருட்டன்ன கருங்கற் கரணத்தால் எங்ஙனம் கருதத் தொடங்குவேன்!

நாயிற் கடையேன் செய்த குற்றங்களை எல்லாம் குணங்களாகக் கொண்டு என்னுள்ளகத்தே அமர்ந்து உயிரிற் கலந்த பெருங்கருணைப் பெருமானே! தேவரீரது திருவருட்சமூகத்தின் இயற்கைப் பெருங்குணப் புகழைத் துதித்தற்கு விரும்பிய மூர்த்திகள் முதலியோர் துதித்தற் கருவியாய தத்தஞ் செந்நா உறுப்புகள் வாய்மைகூறல் இன்சொற்புகறல் முதலிய ஒழுக்கங்களிற் சான்றில என்று துதித்தலின்றி அச்சுற்று நிற்கின்றனர் என்று அறிஞர் உண்மை வாசகத்தால் அறிந்தேன்.

இங்ஙனம் அறிந்த கடையேன் பொய்யுரைத்தல் பயனிலகூறல் முதலிய தீமைக்கட் பயின்று தடித்த எனது நாவினால் தேவரீர் திருவருட் சமூகத்தின் இயற்கைப் பெருங்குணப் பெரும்புகழை எங்ஙனம் துதிக்கத் தொடங்குவேன்!

அண்ட பிண்ட முதலிய எல்லாவற்றிற்கும் அகத்தும் புறத்தும் நிறைந்து விளங்கின்ற அருட்பெருஞ்ஜோதித் தனிப்பெரும் பதியாய பூரணரே! தேவரீர் திருவருட் சமூகத்தின் இயற்கை உண்மைத் தரத்தை அறிதல் வேண்டு மென்றும், இயற்கைப் பெருங் கருணைப் பெருந் தன்மையைக் கருதுதல் வேண்டுமென்றும், இயற்கைப் பெருங்குணப் பெரும்புகழைத் துதித்தல் வேண்டுமென்றும், எனது உள்ளகத்தே ஓவாதுறைந்து ஊற்றெழுந்து விரைந்து விரைந்து மேன்மேற் பெருகின்ற பேராசைப் பெருவெள்ளம் அணைகடந்து செல்கின்றதாகலின், "அறிவார் அறிகின்ற வண்ணங்களும் கருதுவார் கருதுகின்ற வண்ணங்களும் துதிப்பார் துதிக்கின்ற வண்ணங்களும் ஆகிய எல்லா வண்ணங்களையும் உடையவர் அருட்பெருஞ்ஜோதித் தனிப்பெருங்கடவுள்" என்ற சத்தியஞானிகளது உண்மை வாசகத்தைப் பற்றுக்கோடாகக் கொண்டு, தன்மைசாலாத் தமியேன் அறிதற்கும் கருதுதற்கும் துதித்தற்கும் தொடங்கினேன்.

இங்ஙனந் தொடங்குதற்கு முன்னர், எனது அறிவிற்கும் கருத்திற்கும் நாவிற்கும் இயல்வனவாகத் தோற்றிய வண்ணங்களுள் ஒன்றேனும் ஈண்டு இயற்படத் தோற்றாமையின், அருட்பெருஞ்ஜோதித் தனிப்பெருங் கடவுளே!

தேவரீர் திருவருட் சமூகத்தின் இயற்கை வண்ணங்கள் எத்தன்மையவோ! எத்தன்மையவோ! என்று உணர்ந்து உணர்ந்து கருதிக்கருதி உரைத்து உரைத்து அதிசயிக்கின்றவனானேன்.

இயற்கை உண்மைத் தனிப்பெரும் பொருளாயும் இயற்கை விளக்கத் தனிப் பெரும் பதமாயும் இயற்கை இன்பத் தனிப்பெருஞ் சுகமாயும் பிரிவின்றி நிறைந்த பெருந்தன்மையராய அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே!
தேவரீர்! திருவருள் வலத்தால் பொறி புலன் கரண முதலிய தத்துவங்கள் அனைத்தையும் வென்று நின்மலராகித் தத்துவாந்தத்தில் நின்று தம் உண்மைக்கண் இயற்கை இன்பானுபவஞ் செய்கின்ற சுத்த யோகாந்தர்களும் சுத்த கலாந்தர்களும் சுத்த போதாந்தர்களும் சுத்த நாதந்தர்களும் சுத்த வேதாந்தர்களும் சுத்த சித்தாந்தர்களும் சுத்த சன்மார்க்க ஞானிகளின் திருக்கூட்டங்களை நன் முயற்சியால் தனித்தனி அடைந்து பத்தியாற் பணிந்து, 'அற்புதப் பெருஞ் செயல் புரிகின்ற ஐயர்களே!

அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் பதியாய கடவுளின் இயற்கைத் திருவருட் சமூகம் இருந்த வண்ணம் உள்ளம் உவந்துரைத் தருளல் வேண்டும்' என்று விண்ணப்பிக்கின்ற தோறும், 'எல்லா பொருள் கட்கும், எல்லாக் குணங்கட்கும் எல்லா பயன்கட்கும் எல்லா அனுபவங்கட்கும் மற்றெல்லாவற்றிற்கும் உருவ சொரூப சுபாவ முதலிய இலக்கணங்கள் அனைத்தும் தாமேயாகியும் தாமல்லாராகியும் தாக்கியும் தாக்கற்றும் அகத்தும் அகப்புறத்தும் புறத்தும் புறப்புறத்தும் நீக்கமின்றி நிறைந்து விளங்குகின்ற இயற்கை உண்மைக் கடவுளது இயற்கைத் திருவருட் சமூகம் இருந்த வண்ணம் அந்தோ! அந்தோ!! எங்ஙனம் அறிவோம்! எவ்வாறு கருதுவோம்! என்னென்று கூறுவோம்!' என்று அவ்வவ் கூட்டங்களினுந் தனித்தனி உரைத்து உரைத்து நெகிழ்ந்து நெகிழ்ந்து நெட்டுயிர்க்கின்றார்கள் என்றும்,

எல்லாத் தத்துவங்களையும் எல்லாத் தத்துவிகளையும் தோற்றுவித்தலும் இயக்குவித்தலும் அடக்குவித்தலும் மயக்குவித்தலும் தெளிவித்தலுமாகிய தொழில்களை எளிதிற் கொடுத்தற் குரிய பூரண சுதந்தரத்தவர்களாய், இயற்கைச் சத்தியஞான சுகானுபவ பூரண சொரூப சாத்தியர்களாய், எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் தடைபடாத நித்திய சுத்த ஞானதேகிகளாய், பூதசித்தி, கரணசித்தி, இந்திரிய சித்தி, குண சித்தி, பிரகிருதிசித்தி, புருடசித்தி, விந்துசித்தி, பரசித்தி, சுத்தசித்தி, காலசித்தி, கலாசித்தி, விசுவசித்தி, வியோமசித்தி, பிரமசித்தி சிவசித்தி முதலிய பிண்டசித்தி, அண்டசித்தி, பகிரண்ட சித்தி, அண்டாண்டசித்தி என்கின்ற அந்தரங்க பகிரங்க தத்துவ தத்துவி சித்திளெல்லாவற்றையும் திருக்கடைக் கணிப்பாற் செய்யவல்லவராய்,

சடாந்த சமரச சத்தியராய் விளங்குகின்ற சமரச சுத்த சன்மார்க்க ஞானிகளது சித்விலாசத் திருச்சபைக் கண்ணே, புண்ணிய வசத்தால் புகுதப் பெற்று மனங்கனிந்து வணங்கி நின்று, 'சர்வ சுதந்தரராய சாத்தியர்களே! இயற்கை உண்மைத் தனிப்பெரும் பதியாய கடவுளின் இயற்கைத் திருவருட் சமூகம் இருந்த வண்ணம் திருவுளம் பற்றித் திருவாய் மலர்ந்து திருவார்த்தை அளித்தருளல் வேண்டும்' என்று விண்ணப்பிக்கின்ற தோறும் திருவார்தை அளித்தலின்றிப் பெருங்கருணைத் திருக்கண்களில் ஆன்நதநீர் பொழிந்து சும்மா இருக்கின்றனர் என்றும், உணர்ந்தோர் வியந்துரைப்பக் கேள்வியுற்று, 'இயற்கைத் திருவருட் சமூகம் இருந்த வண்ணம் என்னையோ!! என்று குலாவிக் குலாவிக் கூவுகின்றவனானேன்.'

அடிநிலைக் கருமஞானசித்தி அனுபவங்களினும், முடிநிலைக் கருமஞானசித்தி அனுபவங்களினும், அடிநிலை யோகஞான சித்தி அனுபவங்களினும், முடிநிலை யோகஞான சித்தி அனுபவங்களினும், அடிநிலைத் தத்துவ ஞானசித்தி அனுபவங்களினும், முடிநிலைத் தத்துவ ஞானசித்தி அனுபவங்களினும், அடிநிலைத் ஆன்ம ஞானசித்தி அனுபவங்களினும், முடிநிலை ஆன்ம ஞானசித்தி அனுபவங்களினும், சுத்த ஞானசித்தி அனுபவங்களினும், சமரச சுத்த ஞானசித்தி அனுபவங்களினும், அது அதுவாகி நிறைந்தும் அதுஅதுவாகி விளங்கியும், அதுஅதுவாகி இனித்தும், ஆங்காங்கு ஆதீதமாகிக் கலந்தும், இவை அனைத்துமாகி ஒருமித்தும், அதீதா தீதமாகித் தனித்தும் வயங்குகின்ற பெருங் கருணைப் பெரும்பதியாய கடவுளே!

எல்லாச் சத்திகளுக்கும், எல்லாச் சத்தர்களுக்கும் எல்லா மூர்த்திகளுக்கும் எல்லா மூர்த்தர்களுக்கும், எல்லாத் தேவிகளுக்கும் எல்லா தேவர்களுக்கும் எல்லாச் சாதனர்களுக்கும் எல்லாச் சாத்தியர்களுக்கும் எல்லா உயிர்களுக்கும் எல்லாத் தத்துவங்களுக்கும் எல்லா பொருட்களுக்கும் எல்லாக் குணங்களுக்கும் எல்லாச் செயல்களுக்கும் எல்லா அனுபவங்களுக்கும் மற்றெல்லாவற்றிற்கும் முதற்காரணமாயும் நிமித்த காரணமாயும் துணைக் காரணமாயும் இவை அல்லவாயும் விளங்குகின்ற திருவருட்சமூகப் பெருங்கருணைப் பெரும் பதியாய தேவரீர் இயற்கைத் திருவண்ணம் அறிந்துகொள்ளுதல் எங்ஙனமோ! எங்ஙனமோ!!

ஓ! ஒப்புயர்வின்றி விளங்குகின்ற ஒருவரே! தேவரீர் திருவண்ணமும் திருவருட் சமூகத் திருவண்ணமும் அறிதற்கும் கருதுதற்கும் துதித்தற்கும் எத்திறத்தானும் கூடாவாயினும் அடிமை அளவிற்கு இயன்றபடி அறியாது அறிந்தும் கருதாது கருதியும் துதியாது துதித்தும் எனது உரிமையை ஊற்றஞ் செய்கின்றவனானேன்.

வந்தனம்! வந்தனம்!!

இங்ஙனம்
சிதம்பரம் இராமலிங்கம்

VallalarOrg Sanmarga Foundation - All the contents and mp3 songs on this website are copyrighted and belongs to respective owners. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the audio or documents without our permission is prohibited.
First Launched on Apr-16-1998. Last updated:Aug.04.2013