5. அகர உயிரின் இலக்கண நியாய விசார வினாக்கள்
ஸ்ரீசுவாமிகளுக்கு ஆட்பட்ட சமரச வேத சன்மார்க்க சங்கத்து அறிஞர்களில் ஒருவராகிய ஸ்ரீ ஆனந்தநாத சண்முக சரணாலய சுவாமிகள் எழுதுயவற்றுள் கண்டது:-
... புலவர்கள் பலர் அகங்காரத்தால் தம்மை மதியாது இயலறியாது எழுதியவாறே, புலமையிற் பெரியோ மென்னுஞ் செருக்கின்றி ... அறிவறிந் தடங்கியாரிற் சிலர் எழுதியவற்றிற் சில சில விடங்களில் வழுவினர். இவ்வழுக்கள் செருக்கால் வழுவியதன்று. விசாரத்தாலுஞ் சிவானுபவ மேலீட்டாலும் வழுவியது. இவற்றைத் தேவாரந் திருவாசக முதலிய உண்மை முறைகளிற் காண்கின்றோம். இக்காலத்து எமது ஆசிரியரை வணங்கி "ஐயரே! தேவரீர் எழுதிய சில வாசகத்தினுஞ் செய்யுளினுங் கருத்துக்கு விளங்கப் புலப்படாமை மயக்குகின்ற சொற்றொடர்கள் சில வுளவென்று எமது மாட்டாமையாற் றோன்றுகின்றது; இதற்கு யாது செய்வோம்?" என்று விண்ணப்பஞ் செய்ய, அவர் "ஐய! நீர் அஞ்சற்க. யாம் எழுதிய வாசகத்தினுஞ் செய்யுளினும் அளவிறந்த குற்றங்களிருக்கின்றன; என் செய்வேம்! விசார வசத்தால் ஆங்காங்கும் தவறினேம். அதனைப் பெருங் கருணையுள்ள எமது கடவுள் மன்னிப்பர். மற்றையரு மன்னித்தல் வேண்டும். யாம் யார்? எமக்கு யாது தெரியும்? புழுவினுங் கடைய புலையரிற் சிறியேம் இதனால் நாணுதலுடையேம்" என்றனர். ஐயர் புகன்ற மாற்றம் எவ்வாறென் றெண்ணி நிற்குந் தருணத்து எம்மை ஆண்டிருக்கப் பணித்து மீட்டுஞ் சொல்லுவர்:-
"அகரவுயிர் என்பது யாது? அகரவுயிர்க்கு
1. வரி வரலாற்றின் இலக்கணம் என்னை?
2. ஒலி வரலாற்றின் இலக்கணம் என்னை?
3. தன்மை வரலாற்றின் இலக்கணம் என்னை?
4. உணர்ச்சி வரலாற்றின் இலக்கணம் என்னை?
அதன்
5. உண்மை யனுபவ விலக்கணம் என்னை?
அகரவுயிர்க்கு
6. வரி யுரு விலக்கணம் என்னை?
7. ஒலி யுரு விலக்கணம் என்னை?
8. தன்மை யுருவி னிலக்கணம் என்னை?
9. உணர்ச்சி யுருவி னிலக்கணம் என்னை?
10. உண்மை யனுபவ வுருவி னிலக்கணம் என்னை?
அகரவுயிரின்
11. வரிச் சொருப விலக்கணம் என்னை?
12. ஒலிச் சொருப விலக்கணம் என்னை?
13. தன்மைச் சொருப விலக்கணம் என்னை?
14. உணர்ச்சி சொருப விலக்கணம் என்னை?
15. உண்மை யனுபவச் சொருப விலக்கணம் என்னை?
அகரவுயிர்க்கு
16. வரிச் சுபாவ விலக்கணம் என்னை?
17. ஒலிச் சுபாவ விலக்கணம் என்னை?
18. தன்மைச் சுபாவ விலக்கணம் என்னை?
19. உணர்ச்சிச் சுபாவ விலக்கணம் என்னை?
20. உண்மை யனுபவச் சுபாவ விலக்கணம் என்னை?
அகரவுயிரின்
21. வரிச் செயற்கை யிலக்கண மென்னை?
22. ஒலிச் செயற்கை யிலக்கண மென்னை?
23. தன்மைச் செயற்கை யிலக்கண மென்னை?
24. உணர்ச்சிச் செயற்கை யிலக்கண மென்னை?
25. உண்மைச் செயற்கை யிலக்கண மென்னை?
அகரவுயிரின்
26. வரி யதிகார விலக்கணம் என்னை?
27. ஒலி யதிகார விலக்கணம் என்னை?
28. தன்மை யதிகார விலக்கணம் என்னை?
29. உணர்ச்சி யதிகார விலக்கணம் என்னை?
30. உண்மை யதிகார விலக்கணம் என்னை?
அகரவுயிரின்
31. வரி பொது விலக்கணம் என்னை?
32. ஒலிப் பொது விலக்கணம் என்னை?
33. தன்மைப் பொது விலக்கணம் என்னை?
34. உணர்ச்சிப் பொது விலக்கண மென்னை?
35. உண்மைப் பொது விலக்கண மென்னை?
அகரவுயிரின்
36. வரிச் சிறப் பிலக்கணம் என்னை?
37. ஒலிச் சிறப்பிலக்கணம் என்னை?
38. தன்மைச் சிறப் பிலக்கணம் என்னை?
39. உணர்ச்சிச் சிறப் பிலக்கணம் என்னை?
40. உண்மைச் சிறப் பிலக்கணம் என்னை?
அகரவுயிரின்
41. வரிக் குண விலக்கண மென்னை?
42. ஒலிக் குண விலக்கண மென்னை?
43. தன்மைக் குண விலக்கண மென்னை?
44. உணர்ச்சிக் குண விலக்கண மென்னை?
45. உண்மைக் குண விலக்கண மென்னை?
என்பன முதலாக இவ் வகர வுயிர் ஒன்றற்கே யின்னும் பற்பல இலக்கண நியாய விசார வினாக்கள் உளவாயின், எம்போல்வா ருணர்ச்சிக்கண் அவ் வினாக்களுக்கு விடை யெங்ஙனந் தோற்றும்? ஓரெழுத்திற்கே யிங்ஙனமானால் பற்பல வெழுத்துக்களுக்கும் அவ் வெழுத்துக்களா லாகிய சொற்களுக்குஞ் சொற்பொருள்களுக்கும் விடை கொடுப்பது எங்ஙனம்? ஆகலில் கற்றோ மென்னுஞ் செருக்கை முழுதும் விடுத்து விசார வசத்தராகிச் சிவபெருமான் திருவருளைச் சிந்தித்திருத்தல் வேண்டும்" என்று எம்மையோர் பொருளாகக் கருதி இரக்கத்தால் இசைத்தனர். ஆகலின் கல்வியிற் செருக்கடைதல் எவ்வாற்றானும் பொருந்தாது.
அகர உயிரின் இலக்கண நியாய விசார வினாக்கள் முற்றும்.
அகர உயிரின் இலக்கண நியாய விசார வினாக்கள் முற்றும்.