திருவருண் மெய்ம்மொழி
 

திருச்சிற்றம்பலம்
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

5. திருவருண் மெய்ம்மொழி

ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்கப் பெருநெறியின் உண்மை ஒழுக்கங்களைக் குறிக்கும்
அருட்பிரகாசத்
தந்தையார் திருவருண் மெய்ம்மொழி

உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப்பெற்ற நண்பர்களனைவரும் நாமும் அறிவேண்டுவதும் ஒழுகவேண்டுவதும் யாதெனில்:

இயற்கையிற்றானே விளங்குகின்றவராய் உள்ளவரென்றும், இயற்கையிற்றானே உள்ளவராய் விளங்குகின்றவரென்றும், இரண்டு படாத பூரண இன்பமானவ ரென்றும், எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லாப் பதங்களையும், எல்லாச் சத்திகளையும், எல்லாச் சத்தர்களையும், எல்லாக் கலைகளையும், எல்லாப் பொருள்களையும், எல்லாத் தத்துவங்களையும், எல்லாத் தத்துவிகளையும், எல்லா உயிர்களையும், எல்லாச் செயல்களையும், எல்லா இச்சைகளையும், எல்லா ஞானங்களையும், எல்லாப் பயன்களையும், எல்லா அனுபவங்களையும், மற்றை எல்லாவற்றையும் தமது திருவருட் சத்தியால் தோற்றுவித்தல், வாழ்வித்தல், குற்றம் நீக்குவித்தல், பக்குவம் வருவித்தல், விளக்கஞ் செய்வித்தல் என்னும் ஐந்தொழில்கள் முதலிய பெருங் கருணைத் தொழில்களை இயற்றுவிக்கின்றவரென்றும், எல்லாம் ஆனவரென்றும், ஒன்றும் அல்லாதவ ரென்றும், சர்வ காருண்ய ரென்றும், சர்வவல்லபரென்றும், எல்லாம் உடையராய்த் தமக்கு ஒருவாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதியர் என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே, அகம், புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்தமெய்யறிவு என்னும் பூரணப் பொதுவெளியில், அறிவா ரறியும் வண்ணங்களெல்லாமாகி விளங்குகின்றார்.

அவ்வாறு விளங்குகின்ற ஒருவரேயாகிய கடவுளை இவ்வுலகினிடத்தே ஜீவர்களாகிய நாம் அறிந்து அன்புசெய்து அருளையடைந்து அழிவில்லாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல், பலவேறு கற்பனைகளாற் பலவேறு சமயங்களிலும் பலவேறு மதங்களிலும் பலவேறு மார்க்கங்களிலும் பலவேறு லக்ஷியங்களைக் கொண்டு, நெடுங்காலம் பிறந்து பிறந்து, அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவு மின்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துக்களினால் துன்பத்திலழுந்தி இறந்து இறந்து வீண் போயினோம்; வீண்போகின்றோம்.

ஆதலால் இனிமேலும் ஜீவர்களாகிய நாம் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல் உண்மை அறிவு, உண்மை அன்பு, உண்மை இரக்கம் முதலிய சுபகுணங்களைப் பெற்று, நற்செய்கை உடையவர்களாய், எல்லாச் சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி விளங்கும் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப் பேரின்பசித்திப் பெருவாழ்வில் பெருஞ் சுகத்தையும் பெருங்களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு - மேற்குறித்த உண்மைக்கடவுள் தாமே திருவுள்ளங்கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லக்ஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ஓர் ஞானசபையைச் சித்திவளாகம் என்னும் இச்சந்நிதானத்திற் கடுத்த உத்தரஞானசிதம்பரம் அல்லது ஞானசித்திபுரம் என்று குறிக்கப் படுகின்ற வடலூர் பார்வதிபுரத்தில் தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து, "இக்காலந்தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்தருளித் திருவிளையாடல் செய்தருள்கின்றோம்" என்னும் திருக்குறிப்பை இவ்விடத்தே தாயினுஞ் சிறந்த பெருந்தயவுடைய நமது கருணையங் கடலாராகிய அருமைத் தந்தையார் அருட்பிரகாச வள்ளலார் முன்னிலையாகப் பலவாற்றானும் பிரசித்தப்பட வெளிப்படுத்தி, அருட் பெருஞ்ஜோதி சொரூபராய் அப்பெருங்கருணை வள்ளலாரது உடல் பொருள் ஆவிகளைக் கொண்டு பொற்சபை சிற்சபைப் பிரவேசஞ் செய்வித் தருளி, அரிய அவரது திருமேனியில் தாம் கனிவுறக் கலந்தருளிய எல்லாம் வல்லசித்தத் திருக்கோலங்கொண்டு, அருளர சாட்சித் திருமுடி பொறுத்து அருள் விளையாடல் செய்தருளு நிமித்தம், ஈரேழு பதினான்கு உலகங்களிலுள்ளவர்கள் யாவரும் ஒருங்கே, இஃது என்னை! இஃது என்னை! என்று அதிசயிக்கும்படி வெளிப்பட எழுந்தருளும் தருணம் அடுத்த அதிசமீபித்த தருணமாயிருத்தலினால் - அங்ஙனம் வெளிப்படுந் திருவரவுபற்றி எதிர்பார்த்தலாகிய விரதங் காத்தலில் நிற்கும் அல்லது நிற்க வேண்டிய நாம் எல்லவரும் மேற்குறித்த அசிந்திய அற்புதத் திருவரவு நேரிட்ட கணத்திற்றானே, சுத்தசன்மார்க்க அரும்புருஷார்த்தங்களின் பெரும் பயன்களாகிய எக்காலத்தும் நாசமடையாத சுத்த அல்லது சுவர்ணதேகம், பிரணவ தேகம், ஞானதேகம் என்னும் சாகாக்கலானுபவ சொரூப சித்தித் தேகங்களும் தன் சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிப்பெரு வல்லபமும், கடவுள் ஒருவரே என்றறிகின்ற உண்மை ஞானமும், கருமசித்தி, யோகசித்தி, ஞானசித்தி முதலிய எல்லாச் சித்திகளும் பெறுகின்ற அருட்பேறும் பெற்று வாழ்கின்ற பேரின்பசித்திப் பெருவாழ்வை அடைவதற்கான சுத்தசன்மார்க்கத் தனிப்பெரு நெறியைப் பற்றுவதற்குரிய உண்மை ஒழுக்கங்களில் நாமெல்லவரும் தனித்தனி ஒழுக வேண்டுவது அவசியமாகலில், அவ்வொழுக்கங்கள் இவை என உணரவேண்டுவது.

சன்மார்க்கப் பெருநெறியின் ஒழுக்கங்கள் இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என நான்கு வகைப்படும்.

அவற்றுள் இந்திரிய ஒழுக்கம் என்பது - நாத முதலிய ஸ்தோத்திரங்களை உற்றுக் கேட்டல், மற்றவை கேளாதிருத்தல், கொடுஞ்சொல் முதலியவை செவிபுகாமல் நிற்றல், அசுத்தங்களைத் தீண்டாதிருத்தல், கொடூரமாகப் பாராதிருத்தல், ருசியின்மீது விருப்பமின்றியிருத்தல், சுகந்தம் விரும்பாதிருத்தல், என்னும் ஞானேந்திரிய ஒழுக்கமும்; இனிய வார்தையாடுதல், பொய் சொல்லாதிருத்தல், ஜீவஹ’ம்சை நேரிடுங்கால் எவ்விதத் தந்திரத்திலாவது தடைசெய்தல், பெரியோரிடத்திற் செல்லுதல் - என்றால் - சாதுக்களிடம் பரிச்சயம் பண்ணுதல் உயிர்க்கு உபகரிக்கு நிமித்தம் சஞ்சரித்தல், உயிர்க்கு உபகார நிமித்தம் கையால் உபகரித்தல், மலஜல பாதைகள் அளவு மீறாமலும் கிரமங் குறையாமலும் அளவைபோல் தந்திர ஓஷதிகளாலும் ஆகாரப் பக்குவத்தாலும் பவுதிகப் பக்குவத்தாலும் செய்வித்தல் என்னும் கருமேந்திரிய ஒழுக்கமும் ஆகும்.

கரண ஒழுக்கம் என்பது - சிற்சபையின் கண் மனதைச் செலுத்துவது தவிர மற்றெந்தவகை ஆபாசத்திலும் செலுத்தாமல் இழுத்து மேற்குறித்த இடத்தில் நிறுத்துதல், பிறர் குற்றம் விசாரியாதிருத்தல், தன்னை மதியாதிருத்தல், செயற்கைக் குணங்களாலுண்டாகிய கெடுதிகளை நீக்கி இயற்கையாகிய சத்துவ மயமாயிருத்தல், பிறர்மேற் கோபியா திருத்தல், தனது சத்துருக்களாகிய தத்துவங்களைக் கோபித்தல், அக்கிரம அதிக்கிரமப் புணர்ச்சி செய்யாதிருத்தல் முதலியவாம்.

ஜீவ ஒழுக்கம் என்பது - எல்லா மனிதரிடத்தும் ஜாதி, சமயம், குலம், கோத்திரம், சூத்திரம், சாத்திரம், தேசம், மார்க்கம், உயர்வு, தாழ்வு முதலிய பேதமற்றுத் தானாக நிற்றல் முதலியவாம்.

ஆன்ம ஒழுக்கம் என்பது - எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதங்களிடத்து முள்ள ஆன்மாக்களிடத்து மிரங்கி, ஆன்மாவே சபையாகவும் அதனுள்ளொளியே பதியாகவும் கண்டு கலந்து பூரணமாக நிற்றல் முதலியவாம்.

இங்ஙனம் கூறிய ஒழுக்கங்களுள்ளே இந்திரிய ஒழுக்கம் கரண ஒழுக்கம் என்னு மிவற்றை நாம் ஒவ்வொருவரும் உண்மை யுணர்ச்சியுடன் மேற்கொண்டு ஒழுகவேண்டும்; ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் என்னும் இரு வகையான அரிய ஒழுக்கங்களை திருவருட்டுணை பெற்ற பின்னரன்றிக் கைகூடா. ஆதலால், அவ்வொழுக்கங்களைப் பெற்று ஒழுகவேண்டுவதற்கும் ஆன நன்முயற்சிகளில் பழக வேண்டும். அன்றியும்-

இவ் வண்ணமான ஒழுக்கங்களில் இயன்ற மட்டில் ஒழுகப் பெற்று, இடந் தனித்திருத்தல், இச்சையின்றி நுகர்தல், தெய்வம் பராவல், பிறவுயிர்க்கிரங்கல், பெருங்குணம் பற்றல், பாடிப்பணிதல், பத்தி செய்திருத்தல் முதலிய நற்செய்கைகளில் பலகால் முயன்று முயன்று பழகிப்பழகி இருத்தல் வேண்டும். அன்றியும்-

சைவம், வைணவம், சமணம், பவுத்தம் முதலாகப் பல பெயர்கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும் அச்சமயங்களிற் குறித்த சாதனங்களும் தெய்வங்களும் கதிகளும் தத்துவசித்தி விகற்ப பேதங்களென்றும், அவ்வச் சமயங்களிற் பலபட விரிந்த வேதங்கள், ஆகமங்கள், சாத்திரங்கள், புராணங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவசித்திக் கற்பனைக் கலைகளென்றும், வேதாந்தம் சித்தாந்தம் முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த மதங்களும் மார்க்கங்களும் சுத்த சன்மார்க்கானுபவ லேசசித்தி பேதங்க ளென்றும் கேள்விப்பட்டிருக்கின்றனம். ஆகலின், அத் திருவார்த்தைகளில் உண்மையான நம்பிக்கை கொண்டு, அவ்வவற்றின் உண்மைகளை உள்ளபடியே உணர்த்தப்பெற்று அவைகளின் அனுபவங்களை அடைதல் வேண்டுவது பற்றி, அவ்வச் சமய மதாசாரங்களைச் சிறிதும் அனுட்டியாது நிற்றலும், அவற்றில் சத்தியவுணர்ச்சி கொள்ளாமல் விடுதலும் வேண்டும். அன்றியும்-

உலகியற்கண் பொன் விஷய இச்சை, பெண் விஷய இச்சை, மண் விஷய இச்சை முதலிய எவ்விஷய இச்சைகளிலும் நமது அறிவை ஓர் அணுத்துணையும் பற்றுவிக்காமல், பொதுப்பட நல்லறிவு, கடவுள் பத்தி, உயிரிரக்கம், பொது நோக்கம், திரிகரண அடக்கம் முதலிய நற்குண ஒழுக்கங்களில் நின்று, உண்மையுரைத்தல், இன்சொல்லாடல், உயிர்க்குபகரித்தல் முதலியவாகக் குறித்த நற்செய்கைகளையும் உள்ளபடி பெற்று, சித்திவளாகம் என்னும் இம்மஹா சந்நிதானத்திற்றானே தரிக்கப்பெறவும்; உலகமுகப்பட்ட பராக்கினால் விலகி ஏமாந்து விடாமலும்; நமது எல்லாம் வல்ல ஆண்டவனார் அற்புதத் திருவரவு குறிக்கும் வெளிப்படுகைக்கு எதிர்பார்க்கும் நிலையினராய், எல்லா அண்ட சராசரங்களையும் தமது தனித் திருவருட் செங்கோல் கொண்டு நடாத்துவித் தருளும் பேரருட் பெருங் கருணை வாய்ந்த தனிப்பெருந் தலைவனது அரிய திருவருகைச் சம்பந்தமான வழிபடுகை அல்லது மங்கலம்புனைதல் முதலிய திருப்பணியினிடம் நமது கரணேந்திரியங்களை விடுத்துக் குதூகலத்துடன் விந்துவிளக்கம் நாதஒலி என்பவற்றால் புறக்கடையில் விலகப்படாமலும்; ஆண்டவனாரது அருளற்புத ஞானசித்தத் திருமேனியின் மங்கலத் திருக்கோலத்தைக் கண்காட்சியாக உடல் குழைய உள்ளங்குளிர ஆனந்தக் கண்­ர்கொண்டு பரவசத்துடன் தரிசிக்கப் பெறும் பெரும் புண்ணிய முடையவர்களாய் எதிர்படவாய்க்கப் பெறவும் நின்றோமே யானால்:

நாம் எல்லவரும் சுத்த சன்மார்க்கத்தினுக்கு உரிமையுடையவர்களாகி, அறிவுவந்தகால முதல் கண்டறியாத அற்புதக் காட்சிகளையும், கேட்டறியாத அற்புதக் கேள்விகளையும், அறிந்தறியாத அற்புத அறிவுகளையும், அடைந்தறியாத அற்புதக் குணங்களையும், செய்தறியாத அற்புதச் செயல்களையும், அனுபவித்தறியாத அற்புத அனுபவங்களையும் - வெளிப்படத் தரிசிக்கும் அதே கணத்தி னுள்ளே - பெற்றுப் பெருங் களிப்புடன் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் தடைபடாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வு என்னும் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழப் பெறுவோம்.

இது சத்தியம், இது சத்தியம், இது சத்தியம்.
இங்ஙனம் நமது ஆண்டவரால் விரித்து விவரிக்கப்பட்ட மலையிலக்கான பொய்யாப் பெருமொழி யென்னும் கருணா ரசத்தின் வெள்ளப் பெருக்கத்தில் ததும்பி வழிந்த மந்திரத் திருவருண் மெய்ம்மொழிகளின் சுருக்கம்.
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

திருச்சிற்றம்பலம்

திருவருண் மெய்ம்மொழி முற்றிற்று


VallalarOrg Sanmarga Foundation - All the contents and mp3 songs on this website are copyrighted and belongs to respective owners. Everything on this website is for everyone free to use, distribute, email it, educational use, view, print, present, download as many times as you want but hosting in another website or making changes to the audio or documents without our permission is prohibited.
First Launched on Apr-16-1998. Last updated:Aug.04.2013